ஒரே நாடு, ஒரே பண்பாடு என்னும் பாசிச குரலுக்கு எதிராக, ஒரே மேடை, பல பண்பாடுகள், ஒரே மேடை, பல மதங்கள், பல மொழிகள், பல துறைகள் என அனைவரும் ஒருங்கிணைந்த மாநாடுதான், கடந்த ஒன்பதாம் தேதி, வேலூரில் நடைபெற்ற, திராவிட நட்பு கழகத்தின் மத நல்லிணக்க மாநாடு!

திறந்தவெளியில், அந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, 15 நிமிடங்கள் மழை கொட்டித் தீர்த்தது. அந்த மழைக்குப் பிறகும், கலையாமலும், மழையில் கரையாமலும் கூடி நின்ற கொள்கையாளர்களின் ஒற்றுமையும், உணர்வும் வியக்கத்தக்கனவாக இருந்தன.dravida natpu kazhagamதென்கோடியில் ஓரிக்கோட்டையில் இருந்து வந்த புத்தமத பிக்குவானாலும், வடகோடியில் சண்டிகாரில் இருந்து வந்த சீக்கிய மத குருவானாலும், இடையில் இணைந்து நின்ற இந்து, கிறித்துவ, இஸ்லாமிய மத போதகர்கள், குருக்கள் ஆனாலும், தங்களின் மதங்களை உணர்ந்து, அதே வேளையில் மனிதம் நினைந்து, மனங்களால் இணைந்து கூடி நின்றனர். பல்வேறு மதங்களைச் சார்ந்த பெருமக்களுடன், கடவுள், மத நம்பிக்கையற்ற கருப்புச் சட்டைகளும் கைகோத்து நின்றன.

நாம் ஏந்த வேண்டிய ஆயுதம் எது என்பதை நம் எதிரியே முடிவு செய்கிறான் என்று கூறுவர். இப்போது நாம் ஏந்த வேண்டிய ஆயுதம் ஒற்றுமைதான் என்பதை உணர்ந்து, வேறுபாடுகளை கடந்து, மத நல்லிணக்கத்தை இந்த மண்ணில் அந்த மாநாடு விதைத்தது. 200 ஆண்டுகளுக்கு முன்னால், எந்த மண்ணில் விடுதலைப் போராட்டம் வேர் பிடித்ததோ, அதே வேலூரில் இந்த முதல் விதை விழுந்திருக்கிறது. இது முதல் விதை, முதல் அலை, முதல் பொறி!

வீரம் செறிந்த 380 நாள் விவசாயிகள் போராட்டத்தை நடத்திய பாஞ்சால மண்ணிலிருந்து வந்த சீக்கியர்கள் பேசும்போது, தமிழ்நாட்டில் நீங்கள் தொடங்கி இருக்கிறீர்கள், இதனை அடுத்து நாங்கள் பஞ்சாபி முன்னெடுத்துச் செல்வோம் என்றார்.

அந்த மேடையில் பேசிய ஒவ்வொருவரின் பேச்சிலும் உணர்வு மட்டும் இல்லை, உண்மையும் இருந்தது. தமிழ்நாடு மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன், விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், அருட்தந்தை கஸ்பர் ஆகியோர் நிறைவரங்கத்தில் ஆற்றிய உரைகள், அரசியல் தளத்திலும் இந்த மாநாடு பெற்றுள்ள முதன்மையை, தேவையை உணர்த்தியது!

வரும் இருபதாம் தேதி தொடங்க இருக்கும் நாடாளுமன்றத் தொடரில், பொது சிவில் சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டுவரக் கூடும் என்னும் அச்சம் நாடு முழுவதும் நிலவுகிறது. அப்படிக் கொண்டு வந்தால், இந்தியா முழுவதும் பற்றி எரியப் போகும் பிரச்சனையாக அதுதான் இருக்கும் என்பதை நாம் அறிவோம். அதனை உணர்ந்து, வருமுன் காக்கத் திரண்ட கூட்டமே வேலூர் மாநாடு!

கடந்த மூன்று மாதங்களாக, இந்த மாநாட்டின் வெற்றிக்காக, இரவு பகல் பாராமல் உழைத்த திராவிட நட்புக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆ.சிங்கராயர் மற்றும் அவருடன் மதங்களைக் கடந்து தோளோடு தோள் நின்று உழைத்த அருமைத் தோழர்கள் அனைவருக்கும் நன்றியும் பாராட்டுகளும் உரியன!

மதங்களால் பிரிந்து நின்றாலும், மனிதத்தால் இணைந்து நிற்போம். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதே என்றும் நம் இலக்காய் இருக்கட்டும்!!

- சுப.வீரபாண்டியன்

Pin It