16 ஆண்டுகளுக்குப் பிறகு சேலத்தில் கூடுகிறது திமுக இளைஞரணி மாநாடு! இது ஒரு நீண்ட இடைவெளிதான் என்றாலும், தேவையான நேரத்தில், சரியான இலக்கோடு பயணிக்கும் மாநாடு இது என்று சொல்லலாம்!

udhayanithi stalin with dmk flagஅது என்ன சரியான இலக்கு?

சமூக நீதி என்பது இன்றைக்கும் என்றைக்கும் நம்முடைய கொள்கை. ஆனால் அரசியலில் மாநில சுயாட்சியே நம் முதன்மை இலக்கு. இன்றைக்கு அந்த மாநில சுயாட்சிக்கு மிகப் பெரும் கேடு விளைந்து கொண்டிருக்கிறது. அதனால் இந்த இளைஞர் அணி மாநாட்டிற்கு மாநில சுயாட்சி மீட்பு மாநாடு என்று பெயர் சூட்டப்பட்டு இருப்பதுதான் சரியான இலக்கை நோக்கியதாகும்!

இரு மொழிக் கொள்கை, இந்தி எதிர்ப்பு, பெண்களுக்கான சொத்துரிமை போன்ற பலவற்றில் தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே முன்னணி வகித்த மாநிலம் என்பதை எல்லோரும் அறிவோம்! அதேபோல 1974 ஆம் ஆண்டு மாநில சுயாட்சிக்காக, நீதிபதி ராஜமன்னார் குழுவை அமைத்ததும் தமிழ்நாடுதான்!

 அன்றைக்கு அந்தக் குழுவை எதிர்த்துப் பலரும் பேசினர். ஆனால், பிறகு ஒன்றிய அரசே அப்படி ஒரு குழுவை அமைத்தது என்பதையும் நாம் அறிவோம்.

இந்தியா விடுதலை பெற்ற போது இருந்ததை விடவும், இப்போது ஒன்றிய அரசின் அதிகாரங்கள் கூடியிருக்கின்றன. இது ஓர் எதிர் நிலைப் பரிணாமம்!

 இன்றைக்கு ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே மதம் என்ற ஒற்றைச் சர்வாதிகார ஆட்சியை நோக்கி இப்போதைய ஆளுங்கட்சியான பாஜக நகர்ந்து கொண்டு இருக்கிறது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தப்பித் தவறி அவர்களுக்கு மீண்டும் வெற்றி வாய்ப்பு வந்துவிடுமானால், இந்தியா அடுத்த சில தலைமுறைகளுக்குத் தேர்தலைச் சந்திக்க வாய்ப்பு இல்லை என்பதுதான் களநிலை!

எனவே இந்தச் சிக்கலான தருணத்தில். இந்தியாவைச் சரியான பாதையில் வழி நடத்தும் வகையில் இளைஞர் அணி மாநாடு, மாநில சுயாட்சி மீட்பு மாநாடாகக் கூடுகிறது!

சேலத்தில் மாநாடு சிறக்கட்டும்! இந்தியா முழுவதும் மாநில சுயாட்சிக் கொடி பறக்கட்டும்!!

- சுப.வீரபாண்டியன்

Pin It