“India for reserved and USA for deserved” என்று நக்கலடித்து இட ஒதுக்கீடு காரணமாக தகுதி, திறமைக்கு மரியாதை இல்லாமல் போய் விட்டதாக புலம்பிக் கொண்டிருந்த உயர் ஜாதியினர் பொருளாதார அடிப்படையில் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தினர். அதன் படி ஒன்றிய அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த இடஒதுக்கீட்டை பெறுவதற்கான வருமான உச்ச வரம்பு ரூ.8 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக அரசியல் சாசனத்தில் 103 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது.

பொருளாதாரத்தால் நலிந்த பிரிவினர் (Economically Weaker Section) இட ஒதுக்கீடு இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இதற்கான வருமான உச்ச வரம்பை பார்க்கும்போது பின்தங்கிய, நலிவுற்ற பிரிவினருக்காக வழங்கப்பட்ட இடஒதுக்கீடாக தெரியவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்காகப் புதிதாக உருவாக்கப்பட்ட இடஒதுக்கீடு என்று கூறினால் எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினர் இந்த பிரிவில் ஏன் சேர்க்கப்படவில்லை போன்ற காரணங்களின் அடிப்படையில் தி.மு.க உள்ளிட்ட திராவிட இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட போது தி.மு.கழக உறுப்பினர் மு.க.கனிமொழி பலத்த கண்டனக் குரலை எழுப்பினார்.

அதைத் தொடர்ந்து EWS இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தி.மு.க, வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் நீதிபதி ரவிந்திரா பட், தினேஷ் மகேஷ்வரி, எஸ்.பி.பர்திவாலா, பெல்லா த்ரிவேதி ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. 7 நாட்களாக தொடர்ந்த விசாரணைக்கு பிறகு 27.09.2022 அன்று தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தி.மு.க சார்பாக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் உச்ச நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்தார். அதில் “முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கான 10% இட ஒதுக்கீடு என்பது அசாதாரண சூழலில் கொண்டு வரப்பட்டுள்ளது என்கிறது ஒன்றிய அரசு. இதை எப்படி ஏற்க முடியும்? வறுமை என்பது அனைவருக்கும் சமமானது. ஒரு வகுப்பினருக்கு மட்டும் வறுமையின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது எப்படி அசாதாரணமான சூழலாகும்?” என்றும்,

“தமிழ்நாடு பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இன்னமும் முழுமையாக மத்திய அரசின் பட்டியலில் சேர்க்கப்படவே இல்லை. அவர்களுக்கு மத்திய அரசு பணிகள் கிடைப்பதும் இல்லை. முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு என்பது இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட- பழங்குடியினர் சமூகங்களை அரசியல் சாசனம் உருவாகிய காலத்துக்கு முந்தைய நிலைமைக்கு கொண்டு சென்றுவிடும் அபாயம் உள்ளது. அத்துடன் முன்னேறிய வகுப்பினரில் 31.2% பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பதாக மத்திய அரசு தரப்பு முன்வைத்துள்ள வாதம் ஏற்கக் கூடியது அல்ல” என்றும்,“சமத்துவத்தைப் பின்பற்றச்சொல்லும் ஒரு அம்சமாக விளங்குகிறது இந்திய அரசியல் சாசனத்தின் 14 ஆவது பிரிவு. ஆனால், பொருளாதார அளவுகோலின் கீழ் இட ஒதுக்கீடுகளைக் கொண்டு வருவது என்பது பிரிவு 14 ஐ அப்பட்டமாக மீறும் வகையிலும், அதன் அடிப்படைத் தன்மையையே கேள்விக்கு உள்ளாக்குவதாகவும், இந்திரா சாஹானி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவும் இருக்கிறது. ஏற்கெனவே, சமூக பின்தங்கிய நிலையை வரையறுக்க பொருளாதார அம்சத்தை கருத்தில் கொள்ள முடியாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றும்,

“பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் 103 ஆவது சட்டத் திருத்தம் அரசியலமைப்பு சாசனத்தை மீறக்கூடியது. முன்னேறியப் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை சமத்துவத்துக்கான கொள்கைகளுக்குள் கொண்டு வர இயலாது. பட்டியல், பழங்குடியினர் கல்வியிலும், சமூகத்திலும் மிகவும் நலிவுற்ற நிலையில், எளிதில் சுரண்டலுக்குள்ளாகும் நிலையில் இருக்கின்றனர். ஏன், நாட்டின் குடியரசுத் தலைவரே கோயிலுக்குள் நுழைய முடியாத நிலை நிலவுகிறது. தீண்டாமையை ஒழிக்கும் சட்டம் இருந்தாலும் சமூகத்தில் தீண்டாமை நிலவுகிறது” என்றும்,

இந்தக் காரணங்களால் அரசியலமைப்பு சாசனத்தின் 46 ஆவது பிரிவு மிகவும் நலிவுற்ற நிலையில் இருக்கும் பட்டியல், பழங்குடி மக்களின் கல்வி, பொருளாதார நலன்களில் சிறப்பு கவனம் மேற்கொண்டு அவர்களை மேம்படுத்த வேண்டும். அனைத்து வகையான சுரண்டல்களிலிருந்தும் அவர்களை பாதுகாக்க வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு சட்டம் சமூக நீதி, சமத்துவத்தைப் பாதிக்கிறது. எனவே, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறியப் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு சட்டம் நியாயமானதாகவும் இல்லை, ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இல்லை. அவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது நியாயமற்றது” என்று தன்வாதத்தை முன்வைத்தார்.

தி.மு.க முன்வைத்துள்ள வலுவான வாதங்கள் வட இந்தியாவிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. பத்திரிக்கையாளர் திலீப் மண்டல் “EWS இட ஒதுக்கீட்டிற்கு எதிரான அரசியலமைப்பு மற்றும் நீதிக்கான போரில் போராடும் ஒரே வெகு மக்கள் கட்சி தி.மு.க தான், தி.மு.க தலைவர் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில் வழக்கறிஞர் பி.வில்சன் உச்சநீதிமன்றத்தில் முன் வைத்த அறிவார்ந்த வாதங்கள் உயர்ஜாதியினரின் வாதங்களை தவிடுபொடியாக்கி உள்ளது” என்று பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரத்தால் நலிந்த பிரிவினர் (EWS ) இட ஒதுக்கீடை அகற்றிச் சமூக நீதி காப்போம்!!

வழக்கறிஞர் இராம.வைரமுத்து

Pin It