மகாராஷ்டிராவில் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கர்நாடகாவில் கல்புர்க்கி, கௌரி லங்கேஷ், ஆகியோரைக் கொன்று அறிவுச் சமூகத்தைப் பேரச்சம் கொள்ளச் செய்து தங்கள் ஆட்சிக்கு அடிக்கல் நாட்டினர் பா.ஜ.க.வினர். இன்றுவரை பத்திரிகையாளர்கள் மிரட்டப்பட்டும், விரட்டப்பட்டும், வருகிறார்கள். மசூதிகள், தேவாலயங்கள் குறிவைத்து இடிக்கப்படுகின்றன. எல்லா அரசு தன்னாட்சி நிறுவனங்களும் சிதைக்கப்பட்டு இருக்கின்றன.

மறுபக்கம் அம்பானி உலகின் பணக்கார வரிசையில் இடம்பிடிக்கிறார். அடையாளம் இல்லாத அதானி பேருரு எடுக்கிறார். பெருமுதலாளிகளின் வரி 33 விழுக்காட்டிலிருந்து 22 விழுக்காட்டுக்குக் குறைக்கப்பட்டிருக்கிறது.

25 லட்சம் கோடி வரை பெருமுதலாளிகளின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன.

bjp logoபாரதிய ஜனதா கட்சியின் கல்லா நிரம்பிக் கொண்டே இருக்கிறது. அடுத்த 20 ஆண்டுகளுக்குத் தேவையான பணத்தை அவர்கள், தேர்தல் பத்திரம், பி.எம்.கேர். நிதி என அரசமைப்பு விதிகளை வளைத்துச் சேர்த்தது ஒரு புறம். பெருமுதலாளிகளுக்குச் சேவகம் செய்துத் தரகுத் தொகை பெற்றது மறுபுறம். இது போக பொதுத்துறைகளை விற்பதிலும் தரகுத் தொகை எனக் கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது.

சாமான்ய மக்களுக்கு இதில் எல்லாம் கவனம் போகக் கூடாது. ‘ஜெய்ஸ்ரீராம்’அதற்கான ஒரு போதை. அது மட்டும் போதுமா? இன்னும் இவர்களை மக்கள் நம்பவேண்டும் என்றால் ஒரு போலி நம்பிக்கையிலாவது வைத்திருக்க வேண்டும். எப்படி வைத்திருப்பது? அள்ளி அள்ளிப் பொய்களை வீசினால்? அப்படித்தான் பொய்களுக்கு மேல் பொய்யாகக் கடந்த 10 ஆண்டுகளாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.

15 லட்சம் ரூபாய் கருப்புப் பண மீட்புத் தொகை எல்லா பொதுமக்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் எனத்தொடங்கிய பொய், இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கை வரை தொடர்கிறது. (கடந்த பிப்ரவரி 1 அன்று வெளியிடப்பட்ட ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் பொருளாதாரச் செய்திகளில் மானே தேனே சொற்களே அதிகம் இருந்ததாக ‘பிசினஸ் டைம்ஸ்’ நாளிதழ் சுட்டி இருந்தது.) 15 லட்சம் ரூபாய் ஒருவர் கணக்குக்கும் வரவில்லை என்பது இருக்கட்டும். ஒரு ரூபாய் கருப்புப் பணம் கூட நாட்டிற்கே வரவில்லை. பல நூற்றுக் கணக்கான குடிமக்கள் பணமதிப்பிழப்பின்போது வரிசைகளில் நின்று பட்ட துன்பம், இறந்ததுதான் மிச்சம்.

“ஜன் தன்” என்று சொல்லி இனி எல்லா மானியங்களும் வங்கிகளின் மூலம் தான் கிடைக்கும் என்றார்கள். நேரடியாக விலைக் குறைப்பாகக் கிடைத்துக்கொண்டிருந்த மானியங்களை வங்கியில் செலுத்துவதாக ஏமாற்றி, சிறுக சிறுக ஒழித்தே விட்டார்கள்.

மாநிலங்களின் வருவாயாக இருந்த விற்பனை வரியை நீக்கி இந்தியா முழுக்க சரக்கு சேவை வரியை அறிமுகப்படுத்தியது பா.ஜ.க அரசு. அப்போது சொன்னது என்ன? ஜி.எஸ்.டி வந்தால் நடுத்தர வர்க்கத்தின் வரிச்சுமை குறையும் என்று. என்ன நடந்தது? பல தொழில்கள் முன்வரி கட்டவேண்டிய நிர்ப்பந்தத்தால் படுத்து விட்டன. வரியைக் கட்டி வாங்குவதற்கு சிறு வணிகர்கள், சிறுதொழில் முனைவோர் கூட கணக்காளர்களுக்கு செலவு செய்ய வேண்டி வந்தது. நேரடி வரிகளான வருமான வரியையும், சொத்து வரியையும், பெருநிறுவன வரிகளையும் குறைத்தது ஒன்றிய அரசு. ஆனால் சரக்கு சேவை வரியை பல மடங்கு உயர்த்தியது. பெட்ரோல், டீசல் வரிகளைப் பல மடங்காக உயர்த்தியது. அதனால் சுமைகள் முழுக்க நடுத்தர வர்க்கத்தினரின் மீது விழுந்தது என்பதுதான் உண்மை.

வருவாய் வழி அடைக்கப்பட்டு, ஒன்றியத்திடம் ஒவ்வொன்றுக்கும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன மாநிலங்கள். அவர்களுடைய பாகுபாட்டு அரசியலுக்கும், கொள்ளையடிக்கும் அரசியலுக்கும் கடுமையாக உழைக்கும் மாநிலங்களின் வரி வருவாய் வீணடிக்கப் படுகிறது. குஜராத் முதல்வராக இருந்தபோது ஒன்றிய வருவாயில் 50% பங்கு கேட்ட மோடி, இன்று ஏன் இப்படி வெட்கமில்லாமல் கேட்கிறீர்கள் என மாநிலங்களைத் திருப்பிக் கேட்கிறார்.

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றார் மோடி, 2014 தேர்தல் அறிக்கையில். நடந்தது என்ன? 10 ஆண்டுகளில் 20 கோடி வேலை வாய்ப்புகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் 2013 இல் 17.3 லட்சங்கள் இருந்த அரசு ஊழியர்கள் 2022இல் 14.6 லட்சங்களாக குறைந்திருக்கிறார்கள் என்கிறது இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மய்யம் (CMIE) எனும் ஒரு தனியார் நிறுவன ஆய்வு. இளைஞர் வேலையின்மை விழுக்காடு 24 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது. இது இரான், சிரியா நாடுகளை ஒத்தது என்கிறார், பொருளாதார நிபுணர், பர்க்கலா பிரபாகர்.

2014இல் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்குவோம் என ஆட்சிக்கு வந்தார்கள். இன்று விவசாயிகளின் நிலை? குறைந்த பட்ச ஆதாரவிலை என்ற பாதுகாப்பு அம்சத்தையே தூக்கிவிட்டு, பெரு நிறுவனங்களுக்குச் சாதகமாக புதிய 3 விவசாயச் சட்டங்கள் இயற்றினார்கள். அதற்கேற்ப பெரும் கிடங்குகளை சட்டத்திற்கு முன்பே கட்டி முடித்தார்கள். 14 மாதங்களுக்கு மேல் புதுதில்லியின் சாலைகள் எங்கும் நிறைத்துக் கொண்ட விவசாயிகள் 700 பேருக்கு மேல் போராட்டத்தில் கொல்லப்பட்ட பின்னர், அவை விலக்கிக் கொள்ளப்பட்டன. குறைந்த பட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக இன்றும் அவர்கள் தலைநகரைச் சுற்றித் திரண்டிருக்கிறார்கள். களப்பலிகள் தொடங்கி விட்டன. இன்னும் என்ன பொய் சொல்லலாம் எனக் கூடி விவாதித்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க கூடாரம்.

ஒரு நாளைக்கு 30 விவசாயிகளும், 17 விவசாயக் கூலிகளும் தற்கொலை செய்துகொண்டு இருக்கிறார்கள். விவசாயிகளுக்கு 1 லட்சம் வரை வட்டியில்லாக் கடன் என்று 2019இல் அறிவித்தார்கள். இன்று வரை ஒரு பைசா கூடக் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால், அதில் கணிசமான விவசாயிகளும், விவசாயக் கூலிகளும் உயிர் தப்பி இருப்பார்கள்.

“பேட்டி பசாவோ” – (பெண்களைப் பாதுகாப்போம்) என்றார் மோடி. பில்கிஸ் பானு, உன்னாவ் சிறுமி, மணிப்பூர் பெண்கள்… யாரையுமே அவரால் காப்பாற்ற முடியவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றவாளிகளைக் கொண்டாடும் ஒருவரால் எப்படி பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கமுடியும்? தாம்சன் ராய்ட்டர் நிறுவனம் உலகிலேயே பாதுகாப்பற்ற நாடாக இந்தியாவை 2018இல் அறிவித்து விட்டது.

 நாட்டை விட்டுத் தப்பிப் போன வாராக் கடனாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து எல்லா வாராக் கடன்களையும் வசூலித்து விடுவோம் என்று சூளுரைத்தார்கள். தப்பியவர்களைப் பிடிக்கவில்லை. இவர்கள் பார்த்துப் பார்த்து வேண்டிய பெருமுதலாளிகளைத் தப்பிக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

வாராக் கடன்கள் 1.6 மடங்கு அதிகரித்துள்ளது. மோடியின் ஆட்சியில் மட்டும் 54 லட்சம் கோடி ரூபாய் கடன்கள், வாராக் கடன்களாக உள்ளன. தள்ளுபடி செய்யப்பட்ட கடன்கள், பெருமுதலாளிகளின் கடன்கள் 25 லட்சம் கோடி என ரிசர்வ் வங்கி, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் வெளியிட்டுள்ளது. இன்னும் பல்வேறு கணக்கியல் முறைகேடுகள் நடப்பதாக வங்கித் தொழிற்சங்கவாதிகள் பேசிக் கொள்கிறார்கள்.

எங்கே வளர்ந்திருக்கிறது இந்தியா? 1.8 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை 2013இல் தொட்டவர்கள், 2023இல் 3.7 ட்ரில்லியனைத் தொட்டு விட்டதாகப் பெருமை கொள்கிறார்கள். பொருளாதாரத்தைக் கணக்கிடுவதில் பண வீக்கம் பெரும் பங்கு வகிக்கிறது. இதுவும் ஒரு நீர்க்குமிழி என விரைவில் தெரிய வரும். ஏனெனில் தனிமனித வருவாய் வளரவில்லை. நாட்டின் வளங்கள் எல்லாம் ஒரு 100 பேரிடம் மட்டுமே குவிந்துள்ளதை நாடு உணர்ந்துதான் உள்ளது.

காட்சிகள் மாறும். எல்லாப் பொய்களும். அம்பலமாகும்.

சாரதாதேவி

Pin It