பின்னால் வரும் யானையை முன்கூட்டியே அறிவிக்கும் மணியோசை போல, வரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, குதிரை பேரங்கள், அமலாக்கத்துறை மிரட்டல்கள் எல்லாம் தொடங்கி விட்டன!

இதோ, பாஜகவில் சேர போகிறார்.... இன்னும் கொஞ்ச நேரம்தான் சேர்ந்து விடுவார்.... எல்.முருகன் முன்னிலையில் சேர்ந்தே விட்டார் என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி குறித்த செய்திகள் ஒரு புறம்! அதிமுகவிலிருந்து கொத்துக் கொத்தாகக் கட்சியின் முக்கியமான உறுப்பினர்களை அண்ணாமலை அள்ளிக் கொண்டு போய் விட்டார் என்னும் செய்தி மறுபுறம்! இவற்றுக்கிடையே, ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் சத்திய பால் மாலிக் உள்பட, பலர் அமலாக்கத் துறையின் மிரட்டல்களுக்கு ஆளாகிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதும் இன்றைய அன்றாடச் செய்திகள்!vijayatharani joins bjpமுன்னாள் ஆளுநர் சத்திய பால் மாலிக், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் இருக்கிறார். கடந்த 22 ஆம் தேதி அவருடைய வீடு, உறவினர்கள் வீடு, நண்பர்களின் அலுவலகங்கள் என்று 29 இடங்களில், நூற்றுக்கணக்கான அதிகாரிகள் புகுந்து சோதனைகள் நடத்தினர். இன்று வரை எந்த ஒரு பத்திரத்தையோ, கோடிக்கணக்கான பணத்தையோ எடுத்ததாகத் தகவல் இல்லை!

“என் வீட்டில் துணிகளைத் தவிர வேறொன்றுமில்லை. என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன ? “என்று அதிகாரிகளைச் சொல்லச் சொல்லுங்கள் என்று கூறும் சத்தியபால், நான் ஒரு விவசாயியின் மகன். இந்த மிரட்டல்களுக் கெல்லாம் அஞ்ச மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார்!

அதிமுகவில் இருந்து பலரை அண்ணாமலை கைப்பற்றி விட்டாரே என்று ஒரு நிருபர் கேள்வி கேட்க, அவர்களில் ஐந்து பேர் அல்லது மூன்று பேர்களின் பெயர்களையாவது சொல்லுங்கள் என்று திருப்பிக் கேட்க, விடை தெரியாமல் நிருபர் விழிக்கிறார். இதுதான் அவர்கள் ஆள் பிடிக்கும் பட்டியலின் லட்சணம்!

இப்போது விஜயதாரணியைக் கட்சிக்கு அழைத்து வந்து விட்டோம் என்று வெற்றிப் பேரிகை கொட்டுகிறார்கள். பாஜகவை நினைத்தால் கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருக்கிறது! நாடாளுமன்றத் தேர்தலில் அவர்தான் பாஜகவின் வேட்பாளர் என்றும் சொல்கிறார்கள். அப்படிச் செய்வது நல்லதுதான்! அப்போதுதான் பாஜகவின் முகம் மக்களுக்குப் பளிச்சென்று தெரியும்!

கடந்த 10 ஆண்டுகளில் தாங்கள் மக்களுக்குச் செய்த நன்மைகளை, சாதனைகளை எடுத்துச் சொல்லாமல், ஏன் இப்படி ஆள் பிடிக்கும் வேலையில் அலைகிறது பாஜக என்று கேட்கத் தோன்றும்! கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் செய்திருப்பவைகளை எல்லாம் சொன்னால், வருகிற வாக்குகளும் வராமல் போய்விடுமே என்கிற கவலைதான் காரணமாக இருக்க முடியும்!

அடுத்து வரும் இரண்டு மாதங்களில் இன்னும் என்னென்ன தில்லுமுல்லுகள் அரங்கேறப் போகின்றன என்பதை யார் அறிவார்?

- சுப.வீரபாண்டியன்

Pin It