இந்தியப் பொருளாதாரம் என்றும் இல்லாத அளவிற்குப் பெரும் சரிவினைச் சந்தித்து வருகிறது. ஒரு நாட்டினுடைய பொருள் உற்பத்தியின் அடிப்படையில் தான், அந்நாட்டினுடைய வளமும் வேலை வாய்ப்புகளும் பணச் சுழற்சியும் சார்ந்து நிற்கின்றன. பொதுவாக பொருளாதார இயலில் பணவீக்கத்தைப் பலப் படிநிலைகளில் விளக்கியுள்ளனர். பணத்தினுடைய மதிப்பு இழத்தலும், விலைவாசி உயர்வும் பணவீக்கத்தின் இரு கூறுகளாக அடையாளப் படுத்தப்படுகின்றன. முதலாளித்துவ நாடுகளில் பணவீக்கமும் பண மதிப்பிழப்பால் ஏற்படும் பணவாட்டமும் இயற்கையாகவே சுழற்சி முறையில் நிகழ்கின்றன.
1930இல் பொருளாதாரப் பெரும் வீழ்ச்சி அமெரிக்காவில் ஏற்பட்டபோது, அதனுடைய பாதிப்பு பெருமளவில் ஐரோப்பிய நாடுகளிலும் காணப்பட்டது. ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரமும் வீழ்ச்சியடையத் தொடங்கின. ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் வெவ்வேறு விதமான பணவீக்கங்கள் ஏற்பட்டன. நடைவேகத்தில் செயல்படும் பணவீக்கம், தவழ்ந்து செல்லும் பணவீக்கம், ஓடும் பணவீக்கம், பாய்ந்து செல்லும் பணவீக்கம், தேவை இழுப்பு பணவீக்கம், செலவு உந்து பணவீக்கம் எனப் பணவீக்கம் பல வகைகளில் பொருளாதாரத்தை வீழ்த்தின. பணவீக்கத்தால் பெரும்பான்மையான நடுத்தர ஏழை மக்கள்தான் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
முதல் உலகப் போரில் அன்றைய ஏகாதிபத்திய நாடாகக் கருதப்பட்ட ஜெர்மனியும், அதனுடன் இணைந்து ஆஸ்திரியா, ஹங்கேரி போன்ற நாடுகள் ஒரு பக்கமும் பிரான்சு ரஷ்யா பிரிட்டன் போன்ற நாடுகள் எதிர்ப்பக்கமும் நின்று போரிட்டன. இந்தப் போரில் இராணுவப் படைவீரர்களும் பொது மக்களும் இரண்டு கோடிக்கு மேல் உயிரிழந்தனர். பல கோடிப் பேர் காயமடைந்தனர். இவ்வாறு பல நிலைகளில் ஏற்பட்ட பாதிப்புகள், பொருளாதார இழப்புகள், பல இலட்சம் கோடிகளைக் கடந்தன. பொருளாதாரத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அப்போது ஜெர்மனி நாட்டில் பாய்ந்து செல்லும் பணவீக்கம் இருந்தது. பொருளாதார நூல்களில் பாய்ந்து செல்லும் பணவீக்கத்தைப் பற்றி விளக்கமளிப்பதற்கு ஒரு கதை சொல்வார்கள்.
ஜெர்மனி நாட்டின் ஒரு பணக்காரர் தனது சொத்தையும் வீட்டையும் தனது இரு மகன்களுக்கு எழுதி வைத்தார். ஒரு மகன் எந்தச் செலவும் செய்யாமல் தந்தை அளித்த பணத்தை வங்கியில் சேர்த்தும், சொத்தைப் பாதுகாத்து வந்தான். மற்றொரு மகன் பெரும் குடிகாரனாக இருந்தான். வீட்டை விற்றும் வங்கியில் இருந்த பணத்தை எடுத்தும் தினமும் வகை வகையான மதுப் புட்டிகளை வாங்கிக் குடித்தான். அவன் வாடகைக்கு இருந்த வீட்டில் குடித்துவிட்டு காலியான கண்ணாடிப் புட்டிகளை அடுக்கி வைத்திருந்தான். சிக்கனமாகப் பணத்தைச் சேர்த்து வைத்து வாழ்ந்த முதல் மகனின் பணத் தொகை பணவீக்கத்தால் பெருமளவிற்கு மதிப்பை இழந்தது. முழு நேரக் குடிகாரனாக இருந்த இரண்டாம் மகன் வைத்திருந்த கண்ணாடிப் புட்டிகளின் மதிப்பு பெருமளவிற்குப் பணத்தின் மதிப்பைவிட உயர்ந்தது. போர் முடிந்தவுடன் காலிக் கண்ணாடிப் புட்டிகளை விற்று, குடிகாரன் பெரும் பணக்காரன் ஆனான். இந்தக் கதை ஒரு பொருளாதார உண்மையைச் சுட்டுகிறது.
பண மதிப்பிழப்பாலும் விலைவாசி உயர்வாலும் சாதாரண சாமானிய மக்கள் ஒழுக்கமாகப் பணச் சேமிப்பைச் செய்து வாழ்பவர்கள் எவ்வளவு நெருக்கடிக்கு உள்ளாவர்கள் என்பதை இந்த விளக்கம் தெளிவாக்குகிறது.
இரண்டாம் உலகப் போரின் பாதிப்பு உலகின் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்தைச் சீர்குலையச் செய்தது. இரண்டு கோடி இராணுவத்தினரும், நான்கு கோடி பொது மக்களும் இப்போரின்போது கொல்லப் பட்டனர்.
முதல் சோசலிச நாடான சோவியத் ஒன்றியத்தில் 1917இல் புரட்சி ஏற்பட்ட காலத்திலிருந்து 1987 வரை ரொட்டி உட்பட மக்கள் நுகரும் உணவுப் பொருட்களின் விலை ஒரே நிலையில் இருந்தது. இன்றைக்கும் சோசலிச நாடுகளான கியூபா நாட்டிலும் வடகொரியாவிலும் பணவீக்கத்தின் தாக்கம் குறைவாகவே உள்ளது. மக்கள் சீனத்திலும் வியட்நாமிலும் பணவீக்கத்தின் தாக்கம் இருந்த போதிலும், அரசு எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளால் சந்தைப் பொருளாதாரத்தில் மக்களுக்குத் தேவையான நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தி வைப்பதாலும் முதலாளித்துவ நாடுகளில் இருப்பது போன்ற பணவீக்கத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதில்லை.
1991ஆம் ஆண்டில் உலகமயமாதல் கொள்கையைப் பல நாடுகள் பின்பற்றிய பிறகு, பணவீக்கத்தினுடைய பாதிப்பு ஏழை மக்களையும், நடுத்தர மக்களையும் நிலை குலைய செய்தது. சோசலிசக் கொள்கையைப் பின்பற்றிய கிழக்கு ஐரோப்பிய நாடான ஹங்கேரியிலும், போலந்திலும் 1991 ஆம் ஆண்டிற்குப் பிறகு பாய்ந்து செல்லும் பணவீக்கம் மக்களை ஏழைகளாக்கியது என்பதை, 1995ஆம் ஆண்டு ஐரோப்பியப் பயணத்தில் இக்கட்டுரை ஆசிரியர் நேரில் கண்டார். காரணம் சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பிறகு, இந்த நாடுகள் சந்தைப் பொருளாதாரத்திற்கு மாறியதே ஆகும்.
மேலே குறிப்பிட்ட பலவகையான பணவீக்கங்களின் தன்மைகள் ஒரேவிதமாக இல்லாவிட்டாலும் வெவ்வேறு பொருள்களில் வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன. அமெரிக்காவில் ஒரு விழுக்காடு மக்கள் தொகை ஏறக்குறைய 70 விழுக்காட்டு செல்வத்தையும் வருமானத்தையும் பெற்று வருகிறார்கள். அதே போன்று 70 விழுக்காட்டு மக்கள் 10 விழுக்காட்டிற்கும் குறைவான வருமானத்தையும் செல்வதையும் பெற்று வருகின்றனர் என்பதை அமெரிக்காவின் பொருளாதார அறிஞர்கள் பலர் குறிப்பிட்டு வருகின்றனர். இதன் காரணமாகத்தான் அமெரிக்கா அதிபர் டிரம்ப், ஈரான் மீது ஒரு போரினைத் தொடுப்பாரானால் அமெரிக்காவில் பெருமளவிற்குப் பொருளாதாரச் சரிவும், விலைவாசி உயர்வும் பண மதிப்பிழப்பும் ஏற்படும் என்று அஞ்சுகின்றனர்.
ஏற்கெனவே ஈராக்கில் ஒராண்டு ஏற்பட்ட போர்ச் செலவைக் கணக்கிட்டு, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பேராசிரியர் ஜோசப் ஸ்டிக்லி, லின்டா பிலிம்சு ஆகியோர் இணைந்து 2009 ஆம் ஆண்டில் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அமெரிக்கப் போர் என்ற நூலைப் படைத்துள்ளனர். மேற்கூறிய தொகையை 2005 வரை அமெரிக்கா ஈராக்கில் செலவிட்டுள்ளது என்று இந்த அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தப் போர்ச் செலவின் விளைவு இன்றளவும் அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பாதித்து வருவதால்தான், ஈரான் மீது அமெரிக்கா தற்போது போர் தொடுக்கக் கூடாது என அமெரிக்காவின் பல மாநிலங்களின் தலைநகரங்களில் மக்கள் போராட்டங்கள் நடத்துகின்றனர். அமெரிக்காவின் செனட் சபை குடியரசுத் தலைவரின் போர் தொடுக்கும் அதிகாரத்தை ஒரு தீர்மானத்தின் வழியாக 2020 ஜனவரித் திங்களில் தடுத்து நிறுத்தியது. மேற்கூறிய கருத்துகளும் செயல் நடவடிக்கைகளும் உலக நாடுகள் பலவற்றிற்கு அமெரிக்க செனட் சபை கூறிய அறிவுரையாகவும் எச்சரிக்கையாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் பணவீக்கம் தற்போது 7.2 விழுக்காட்டு அளவிற்கு உயர்ந்து விட்டதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பொருளாதாரச் சரிவும் உற்பத்தித் துறைகளில் வீழ்ச்சியும் பணத்தின் மதிப்பு குறைந்தும் விலைவாசி உயர்ந்தும் வருவது இந்தியப் பொருளாரதாரம் தேக்க நிலைப் பணவீக்கத்தில் செல்கிறது என்பதையே எடுத்துரைக்கிறது. இந்தத் தேக்க நிலை பணவீக்கம் மெல்ல உடலில் செலுத்தும் நஞ்சைப் போன்றது. எல்லா நிலைகளிலும் பொருளாதாரத் தேக்க நிலையை ஏற்படுத்தி மக்களின் பணம் சொத்தின் மதிப்பைக் கீழே வீழ்த்திவிடும். தேக்க நிலை பொருளாதாரத்தின் அறிகுறிகள் 2014 ஆம் ஆண்டிலேயே தென்பட்டன. இந்த அடிப்படையை உணராமல் பாசக தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசியது.
2014இல் மோடி ஆட்சிக்கு வந்த போது ஆண்டிற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவேன் என்று கூறினார். ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் பதினைந்து இலட்சங்களைச் செலுத்துவேன் என்றார். ஆனால் வங்கிகள்தான் தொடர்ச்சியாக இழப்பைச் சந்தித்து வருகின்றன. 2019இல் எவ்வளவுதான் மறைத்தாலும், வேலைவாய்ப்பு கடந்த 47 ஆண்டுகளாக இல்லாத அளவிற்குக் குறைந்துள்ளது என்று குறிப்பிடுகின்றனர். மேலும் ஊரகப் பகுதிகளில் வாழும் விவசாயக் கூலிகளும் நகர்ப்புறங்களில் வாழ்கின்ற கூலித் தொழிலாளர்களும் வேலையிழந்து வருகின்றனர். ஒரு பக்கம் வருமானம் இழப்பு; ஒரு பக்கம் விலை உயர்வு. இந்த மோசமான-அபாயகரமான போக்கினைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மாறாக நாள் தோறும் பிரதமரும், உள்துறை அமைச்சரும் இந்த மோசமான சூழ்நிலையை மறைப்பதற்கும் திசை திருப்பவும் குடியுரிமைத் திருத்தச் சட்டம், குடிமக்கள் பதிவேடுச் சட்டம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்துகின்றனர்.
11 மாநிலங்கள் இந்தச் சட்டத்தை நடை முறைப்படுத்த முடியாது என அறிவித்த பிறகும், இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியே தீருவேன் என்று ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகிறார். இந்தியப் பொருளாதாரம் 2014ஆம் ஆண்டிலேயே, கண்ட சரிவு நிலையைக் கண்டது. அதைச் சரி செய்வதற்குப் பதிலாக ரூ.1000 ரூ.500 பணத்தாள்கள் செல்லாது என அறிவித்து, திசை திருப்பினர். ஜி.எஸ்.டீ வரியை நடைமுறைப்படுத்தி, பொருளாதாரச் சரிவை விரைவுபடுத்தியது. 2020 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் இந்து நாளேட்டில் பணவீக்கத்தை ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்பதைப் புள்ளி விவரங்களோடு பி.பாலகிருஷ்ணன் என்பவர் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். இக்கட்டுரையில் ரிசர்வ் வங்கியே பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு மிகப்பெரும் துன்பங்களை சாதாரண மக்களுக்கு இழைத்தது என்பதை விரிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு புதிதாக ரூ.2000 தாள்களை அறிமுகப்படுத்தியது பெரும் தவறு என்று சுட்டிக் காட்டியுள்ளார். காரணம் இந்தியாவில் சாராசரியாக உழைப்பவர்களின் கூலி நாளொன்றுக்கு ரூ.500க்கு குறைவாகவே உள்ளது. இந்த 2000 பணத்தாள்களை அதிக சுழற்சியில் விட்டதனாலும், ரூ.500, ரூ.100 தாள்கள் குறைந்த அளவில் சுழற்சியில் இருந்ததாலும் இந்தப் பணமதிப்பிழப்பின் தாக்கம் ஏழைகளைக் கொடுமையான முறையில் தாக்கியுள்ளது. இதற்கு ஆட்சியாளர்களும், ரிசர்வ் வங்கியும் காரணமாக உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முதன்மையான காரணம் இந்தியாவினுடைய பொருளாதாரக் கூறுகளை, உற்பத்தியில் ஈடுபடும் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளை அறிந்து கொள்ளாத செயலற்ற மதவாத அரசாக ஒன்றிய அரசு உள்ளது.
இந்து நாளேடு 15 ஜனவரி 2020 அன்று 'ஓடுகின்ற தந்திரங்கள்' என்ற தலைப்பில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் சட்டப்பல்கலைக் கழகத்தில் ஆய்வாளராக உள்ள ஆர்.ஜோ` என்பவர், "ஒன்றிய அரசு நேர்மையான பார்வையும் பொருளாதாரத் தீர்வுக்கான ஒரு பெரும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவில்லை. மாறாக. பிரதமர் மோடியும் அமித்ஷாவும் பொய்யையும் புனைந்துரையையும் கூறி வருகின்றனர்" எனச் சுட்டியுள்ளார். இந்த ஆய்வாளர் மொழியில் கூற வேண்டுமென்றால், மோடியும் அமித்ஷாவும் அதிகாரத்தைக் கைப்பற்றவும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளவும் முரட்டுத்தனமான சத்தங்களையே நம்பி வருகின்றனர் என்கிறார்.
இத்தகையப் போக்கினாலும், மிரட்டி வரும் பணவீக்கத்தினாலும் பாதிக்கப்படுவது பெரும்பாலான ஏழை சாதாரண உழைக்கும் மக்களே என்பதை ஊடகங்கள் மாறி மாறி மறைக்கின்றன. வட இந்தியாவில் இருந்து வெளிவரும் “தி காரவன்” என்கிற ஆங்கில மாத இதழில் காஷ்மீர் பிரச்சினையைத் திசை திருப்பி ஒன்றிய அரசு எடுத்த தவறான நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் ஒளி அச்சு ஊடகவியலாளர்கள் பெரும்பான்மையோர் காஷ்மீர் பார்ப்பனர்களே என்று தோலுரித்துக் காட்டுகின்றது.
இன்றைய பொருளாதாரச் சூழலில், ஏழைகள் பரம ஏழைகளாகவும் பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாகவும், நடுத்தர, பிரிவினர் ஏழைகளாக தள்ளப்படுகின்ற நிலையும் உள்ளது. சிறு, குறு தொழிலகங்களில் வேலையின்மை ஏற்பட்டு வருகிறது. பெருந்தொழில்களும் நசிந்து வருகின்றன. இச்சூழலில் பணவீக்கத்தின் தாக்கம் இந்தியப் பொருளாதாரத்தையே சீரழித்து வருகிறது. குறும்பு பார்ப்பனரான சுப்ரமணிய சாமி பணத்தாள்களில் லட்சுமி படத்தை அச்சிட்டால் பொருளாதாரம் பெருகும் என்று துணிந்து நச்சைக் கக்குகிறார். அவர் பணத்தாளில் காந்தி படத்தை எடுத்துவிட்டு லட்சுமியை அச்சிட வேண்டும் என்று மோடிக்கு வழிகாட்டுகிறார். ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்களும், ஜவகர்லால் பல்கலைக் கழகம், ஜாமியா மிலியா பல்கலைகழக மாணவர்களை முகமூடி அணிந்து தாக்கியுள்ளனர். முப்படைகளின் தளபதியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள ராவத் காஷ்மீரில் அரசு நடத்திய வன்முறைகள் சரி என வாதாடுகிறார்.
ஏன் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் பேசினீர்கள் என்று இந்து ஏட்டின் நிருபர் கேட்ட கேள்விக்கு, "பெரும்பாலும் அறிவியல் துறை சார்ந்தே கருத்துகளையே நான் விவாதிப்பேன். ஆனால் தற்போதைய நிலை என்னைப் பாதித்ததால் அரசியல் பற்றிப் பேசினேன்" என்று அறிவியலில் நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராம ராமகிருஷ்ணன் பதிலளித்துள்ளார் (18 ஜனவரி 2020 இந்து ஆங்கில நாளேடு).
"இந்தியா ஒரு மதச்சார்பற்ற அரசமைப்புச் சட்டத்தைக் கொண்டுள்ளது. மதச்சார்பான ஒரு சட்டத்தை நீதிமன்றங்கள் ஏற்குமா என எனக்குத் தெரியவில்லை" என்று குறிப்பிட்டு, "இந்தியாவில் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி செல்வாக்குப் பெற வேண்டுமென்றால், அமைதியான சூழலும் அரவணைத்துச் செல்கின்ற போக்கும் ஆட்சியாளருக்கு ஏற்பட வேண்டும்" என்கிறார். மேலும் பாசிச ஜெர்மனியில் அறிவியலை குறுகிய நோக்குடன் பார்த்ததனால் இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளைப் பாதித்தது என்கிறார். இந்த நிலையில் இருந்து மீள்வதற்கு ஜெர்மனிக்கு 50 ஆண்டுகள் ஆயிற்று என்றும் கூறுகிறார்.
சமூகங்களைப் புறந்தள்ளுகிற - சகிப்புத் தன்மையற்ற எவ்விதச் சூழலும் அறிவியல் வளர்ச்சிக்கு உகந்ததன்று என்றும் குறிப்பிட்டுள்ளார். பழங்கால ஏடுகளில் அறிவியல் கண்டுபிடிப்புகள் இருந்தன என்று கூறுவதும், அணுகுண்டு இருந்தது என்று கூறுவதும், மரபணுக்கள் பற்றிய கருத்துகள் இருந்தன என்று கூறுவதும் மூடநம்பிக்கையைச் சார்ந்த கருத்துகளாகும். இவ்வாறான போலி அறிவியல் கருத்துகள், இந்தியாவை உலகளவில் கேலிக்குரியதாக ஆக்குகிறது.
இந்தியாவில் பல கல்வியாளர்கள் அறிவியல் அறிஞர்கள் இருந்தும்கூட ஒருவிதப் பிற்போக்கான மூடநம்பிக்கை சார்ந்த நாடு என்று கருதப்படுகிறது. இது போன்ற முற்போக்கு அறிவியல் அறிஞர்களின் கருத்துகளையும், உண்மையான வல்லுநர்களின் கருத்துகளையும் கேட்காமலும் ஏற்காமலும், இந்துத்துவா வெறியர்களின் மேற்பார்வையில் ஆட்சியை நகர்த்தும் இந்தியா, மிகவும் சிக்கலான பணவீக்கத்திற்கும் விலைவாசி உயர்வுக்கும் பொருளாதாரத் தேக்க நிலைக்கும் தீர்வு காணுமா? அல்லது இந்தியப் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியுறுமா? என்பவையே தற்போதுள்ள முதன்மையான வினாக்களாகும்.