இடஒதுக்கீடு என்பது இது வரை எந்த சமூக நீதி அடிப்படையில் வாய்ப்பு மறுக்கப்பட்டதோ அதே சமூக நீதி அடிப்படையில், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்க இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளித்த ஒரு ஏற்பாடு ஆகும். அன்றே பொருளாதார அடிப்படையிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது பண்டிதர் ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களும், அரசியலுக்கு அப்பாற்பட்டு சமுக ஆர்வலர்களும், அறிவுத்துறையினரும் இது குறித்து விரிவாகவும், ஆழமாகவும் விவாதித்து இறுதியாக பொருளாதார நிலையை ஒரு அளவுகோலாகக் கருதக்கூடாது, சமூக அந்தஸ்தை அளவுகோலாகக் கருதுவதே உண்மையான ஜனநாயகம் என்ற முடிவுக்கு வந்தனர். அரசியலமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீடு அவ்வாறே உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவில் ஒருவருடைய பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாகுபாடு அவருக்குச் சமுகம், அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் போன்ற அனைத்து நிலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக நாட்டின் குடியரசுத் தலைவர் பொறுப்பு வகித்த போது மாண்புமிகு இராம்நாத் கோவிந்த் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதும், இன்று புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் நடப்பதும் நாம் அறிந்ததே. இவ்வாறாக பாதிக்கப்பட்டப் பல சமூகங்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கான நீதியை உறுதி செய்வதே சமூக நீதிக் கொள்கையின் அடிப்படை. பாதிக்கப்பட்ட இம்மக்கள் கல்வி, தொழில், அரசியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நன்கு உயர்ந்திட, இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதுதான் சமூகநீதியின் சித்தாந்தம்.சமூகநீதியின் அடிப்படையைத் தகர்த்திடும் வகையில், பா.ஜ.க அரசால் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான (EWS) இடஒதுக்கீடு 10% அளிக்க ஏதுவாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 103வது திருத்தம், 2019 ஜனவரியில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிராக தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் நீதிபதிகள் ரவீந்திரா பட், தினேஷ் மகேஷ்வரி, எஸ்.பி.பர்திவாலா, பெல்லா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, எஸ்.பி.பர்திவாலா, பெல்லா திரிவேதி ஆகியோர் EWS இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாகவும், தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திரா பட் ஆகியோர் EWS இடஒதுக்கீட்டிற்கு எதிராகவும் தீர்ப்பளித்தது.
மேலோட்டமாக பார்க்கும் போது, EWS இடஒதுக்கீடு இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. இதுவரை இவர்களுக்கு ஒன்றிய அளவில் 49.5% இடஒதுக்கீடும், தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடும் அமலில் உள்ளது. எஞ்சியவை பொதுப்போட்டி இடங்கள். தகுதி அடிப்படையில் இடஒதுக்கீடு பிரிவினர் இதில் இடங்களை பெறலாம். ஆனால் 10% EWS இடஒதுக்கீடு அமலான பிறகு பொதுப் போட்டி இடங்கள் குறைந்துள்ளது. ஏற்கனவே பொதுப் போட்டியில் உள்ள பெரும்பான்மை இடங்களை உயர் ஜாதி யினர்தான் பெறுகின்றனர். தப்பித் தவறி பொதுப் போட்டிக்குள் மற்ற இடஒதுக்கீடு பிரிவினர் பெறும் இடங்களை EWS கபளீகரம் செய்கிறது.
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு பெரும் போராட்டங்களினால் தான் சாத்தியமானது. ஆனால் EWS இடஒதுக்கீடு எவ்வித போராட்டமும் இன்றி அவர்களுக்கு தங்கத் தாம்பலத்தில் வைத்து தரப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக சொல்லப்படும் சின்ஹோ ஆணையம் குறிப்பிட்டுள்ள “NSSO” (National Sample Survey Organisation) புள்ளி விவரம் ஏற்புடையது அல்ல. 2004ஆம் ஆண்டு இந்தியா போன்ற பெரிய நாட்டில் வெறும் 1,25,000 குடும்பங்களை மட்டுமே NSSO சந்தித்து ஆய்வு செய்தது என்பதால் அது உண்மை நிலவரத்தை பிரதிபலிக்க வாய்ப்பு இல்லை.
EWS இடஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் அனைத்து ஜாதியினருக்கும் வாய்ப்பளிக்காமல் பார்ப்பன உயர்ஜாதியினருக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த பிரிவினை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று தலைமை நீதிபதி யு.யு.லலித் - நீதிபதி ரவீந்திரா பட் தங்களது தீர்ப்பில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. EWS பிரிவில் பல்வேறு ஜாதியினர் இருப்பதாக சொல்லப்பட்டாலும் மக்கள் தொகையில் அவர்கள் 7% மட்டுமே. அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 10% இடஒதுக்கீடு என்பது மிக அதிகம். இதன் மூலம் இறுதியில் பார்ப்பனர்கள் மட்டுமே பயன் பெறுவார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
நாள் ஒன்றுக்கு கிராமப்புறத்தில் ரூ.27 சம்பளம் மற்றும் நகர்ப்புறத்தில் ரூ.33 சம்பளம் வாங்குபவர்கள் மட்டுமே வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என்று ஒன்றிய அரசின் நிதித் துறை சொல்கிறது. ஆனால் நாள் ஒன்றுக்கு ரூ.2000க்கும் மேல் சம்பளம் (EWS இடஒதுக்கீட்டிற்கான வருமான வரம்பு -
ரூ. 8 லட்சம் ஆண்டு வருமானம், 5 ஏக்கர் நிலம், 1000 சதுர அடி வீடு) வாங்கும் உயர் ஜாதி (பார்ப்பன) ஏழைகள் என்று பா.ஜ.க அரசு சொல்வது வியப்பிற்குரியது.
இவை அனைத்திற்கும் மேலாக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மற்ற இடஒதுக்கீடு பிரிவினருக்கான கட் ஆப் மதிப்பெண்களை விட EWS பிரிவினரின் கட்ஆப் குறைவாக இருப்பதை வைத்தே பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு ஏற்படும் பாதிப்பை நாம் உணர்ந்து கொள்ள முடியும். இரயில்வே துறையின் டி குரூப் பணி நியமனம் தொடர்பாக தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பு இதற்கான எடுத்துக்காட்டு ஆகும்.
இந்துக்களின் பாதுகாவலராக தன்னை காட்டிக் கொள்ளும் பா.ஜ.க உண்மையில் பார்ப்பனர்களுக்கு மட்டுமே ஆதரவானவர்கள். பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு அவர்கள் விரோதமானவர்கள் என்பதை அவர்கள் கொண்டு வந்துள்ள EWS இடஒதுக்கீடு மூலம் அறிந்து கொள்ளலாம்.
EWS இடஒதுக்கீடு மூலம் பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை அவர்களுக்கு உணர்த்தி நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்கள் மன்றத்தில் இதற்கான தீர்ப்பு திருத்தி எழுதப்பட வேண்டும்.
EWS இடஒதுக்கீடு ஒழிக்கப்படும் நாள் எந்நாளோ அந்நாளே பொன்னாள்!
- வழக்கறிஞர் இராம.வைரமுத்து