2019 ஆம் ஆண்டில் நரேந்திர மோடி அரசு கொண்டு வந்த 10% EWS இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் செல்லும் எனத் தீர்ப்பளித்துள்ளது. இந்த இட ஒதுக்கீடு முழுக்க முழுக்க பொது பட்டியலில் இருப்பவர்களுக்காக கொண்டு வரப்பட்டது. இதில் பட்டியலின (SC) பழங்குடியின (ST), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) வர மாட்டார்கள். இது அரசு வேலைகள், தனியார், அரசு கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தும். சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்பு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான வடிகாலாகவே இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது என்ற அடிப்படையில் EWS இட ஒதுக்கீடு எதிர்க்கப்படுகிறது. அதனால் பொருளாதாரத்தை மட்டுமே இட ஒதுக்கீட்டிற்கு அடிப்படையாக எடுத்துக்கொள்ள முடியாது. மேலும் SC, ST, OBC வகுப்பினரை விலக்கி வைத்திருப்பது பாகுபாட்டை காட்டுவதாகும். 

1992 ஆம் ஆண்டில் இந்திரா சஹானி வழக்கில் 50 விழுக்காட்டைத் தாண்டி இட ஒதுக்கீடு தரக்கூடாது என உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை இந்த இட ஒதுக்கீடு மீறுகிறது. இடஒதுக்கீட்டின் நோக்கம் சமுகத்தில் நிலவும் சமத்துவமின்மையை குறைப்பதாகும் என்றும் சமத்துவமின்மை வறுமையால் உருவானவை என்றும் கூறி இந்த தீர்ப்பிற்கு நியாயம் கற்பிக்கிறார்கள். இந்த வாதம் தவறானது.

ஏனென்றால், இட ஒதுக்கீடு சமமின்மையை குறைப்பதற்காக கொண்டு வரப்பட்டதல்ல. சமுக, பொருளாதார பின்னடைவை சரிசெய்யும் தீர்வை கண்டடைய கோட்டாவிற்கும் (Quota) இட ஒதுக்கீட்டிற்கும் Affirmative Action) உள்ள வேறுபாட்டை தெரிந்து கொள்ள வேண்டும்.

சரியான பிரதிநிதித்துவம் இல்லாத சமுகங்களின் கல்வி, பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்க எடுக்கும் முயற்சி தான் இட ஒதுக்கீடு. அரசின் கீழ் உள்ள பல்வேறு துறைகளில் பன்முகத் தன்மையை கொண்டு வருவது கோட்டா முறை. போதுமான பிரதிநிதித்துவம் இல்லாத சமுகங்களின் சமூக, பொருளாதார பின்தங்கிய நிலையை முன்னேற்றுவதற்காக, அவர்களுக்கு கல்வி, பொருளாதார வாய்ப்புகளை அதிகப்படுத்த இட ஒதுக்கீடு கொடுப்பதில் அறம் இருக்கிறது. ஆனாலும் அத்தகைய சமூகங்கள் பாகுபாடுகளை சந்திக்குமேயானால் இட ஒதுக்கீட்டுக் கொள்கைகள் அவற்றை சரி செய்யும் சரியான தீர்வாக இருக்காது. சமமான தகுதி உடையவர்கள் என்பதாலேயே இந்த சமூகத்தினருக்கு சமவாய்ப்பு கிடைப்பதில்லை. இந்த சூழ்நிலையில் இட ஒதுக்கீடு இன்றியமையாததாகிறது. 

இட ஒதுக்கீடை பொறுத்தவரை யாருக்கு அதன் பலன்கள் செல்ல வேண்டும் என்ற விவாதம் தான் முதன்மையாக இருக்கிறது. இங்கே எழும் கேள்வி, ஏழைகள் எல்லாம் ஓரினமாக இருக்கிறார்களா என்பதே. அனுபவபூர்வமான வைத்து பார்த்தால் ஏழைகள் அனைவரும் ஓரினமாக இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை. அதாவது, சாதிகளைக் கடந்து, அவர்களுக்கு ஒற்றுமை இல்லை. ஒவ்வொரு சாதி ஏழையும் ஒவ்வொரு விதமாக உள்ளனர்.

கல்வி, வேலை வாய்ப்புகளை குறியீடுகளாக வைத்து பார்த்தால், வெவ்வேறு சாதி, மதத்தை சார்ந்த ஏழைகள் சமமில்லாத வெவ்வேறு படிநிலையில் இருக்கிறார்கள் என்பது விளங்கும். 

கல்வியை பொறுத்த வரை, மக்கள் தொகையை 5 பிரிவுகளாக பிரிக்கலாம். ஒவ்வொரு பிரிவிலும் மொத்த மக்கள் தொகையில் 20 விழுக்காட்டினர் உள்ளனர். மாதாந்திர தனிநபர் நுகர்வுச் செலவு (Monthly Per Capita Consumer Expenditure - MPCE) அடிப்படையில் கீழிருந்து மேலாக வரிசை படுத்தி, 5 பிரிவுகளாக பிரித்து, கல்வி, வேலை வாய்ப்புகளில் வெவ்வேறு பொருளாதார பின்புலத்தை கொண்டவர்கள் எப்படி முன்னேறுகிறார்கள் என்பதை கண்டறிய முடியும். 

உயர் கல்வி:

மக்கள் தொகையில் உயர்கல்வி படித்தவர்களின் விகிதாச்சாரத்தை குறியீடாக கொண்டு ஓவ்வொரு பிரிவிலும் வெவ்வேறு குழுக்களின் நிலை என்ன என்பதை கண்டறியலாம்.

இந்திய மக்கள் தொகையில் 8% பேர் உயர் கல்வி பெற்றிருக்கிறார்கள். அதில் தனி நபர் நுகர்வுச் செலவுப் பட்டியலில் கீழிருக்கும் 20% மக்கள் தொகையில் 2.5 விழுக்காட்டினரும், மேல் உள்ள 20% மக்கள் தொகையில் 27 விழுக்காட்டினரும் உயர் கல்வி பெற்றிருக்கிறார்கள். அதாவது குறைந்த தனி நபர் நுகர்வுச் செலவு செய்யும் ஏழைகளில் 2.5% மட்டுமே உயர்கல்வி கற்கிறார்கள். அதே வேளையில், அதிக தனி நபர் நுகர்வுச் செலவு செய்யும் பணக்காரர்களில் 27% உயர்கல்வி கற்கிறார்கள்.tn medical college studentsஒவ்வொரு பிரிவிலும் இந்து உயர் ஜாதிப் பிரிவினர்களே அதிக அளவில் உயர்கல்வி படித்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதே சமயம் SC, ST, இஸ்லாமியர்கள் ஒவ்வொரு பிரிவிலும் அடிமட்டத்தில் இருக்கிறார்கள். 

குறைந்த வருமானம் உள்ள பிரிவுகளில், அதாவது தனிநபர் செலவு ரூ 83.3 இருந்து ரூ 1250 வரையில் இருக்கும் மக்கள் தொகையில், 0.92% ST, 1.9% SC, 1.3% இஸ்லாமியர், 2.8% OBC வகுப்பினர் உயர் கல்வி பெற்றிருக்கிறார்கள்.

ஆனால் இந்து உயர் சாதிகளில் 6.8% உயர்கல்வி படித்தவர்களாக இருக்கிறார்கள். அதாவது ஏழைகளாக இருந்தாலும் ஏழை உயர் சாதி இந்துக்கள் உயர்கல்வி கற்பதில், SC, ST, OBC, இஸ்லாமியர்களை விட முண்ணனி வகிக்கிறார்கள்.

அட்டவணை 1: உயர்கல்வி பட்டம் பெற்ற மக்கள் தொகை சதவீதம்

தனி நபர் செலவுத்
தொகை ரூபாயில்

83.3-1250

1250-1692

1692.5-2200

2276-3333

3333.4-80200

மொத்தம்

ST

0.92

2.5

3.3

8.2

27

3.7

SC

1.9

3

4.3

7.7

19.7

4.7

OBC

2.8

3.8

5.8

9.8

23.8

7.1

உயர் சாதி இந்துக்கள்

6.8

7

9.9

16.3

34.4

17.4

இஸ்லாமியர்கள்

1.3

2

2.8

6.4

9

4

மொத்தம்

2.5

3.7

5.7

10.5

27

8

ஆதாரம்: 75 ஆவது தேசிய மாதிரி சர்வே - 75th National Sample Survey 2017-2018

மொத்த வருகை விகிதம் Gross Attendance Ratio

உயர்கல்வியில் மொத்த வருகை விகிதத்திலும் ஏழைகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை காணலாம். அதாவது 18 முதல் 23 வயது வரை உள்ள உயர்கல்வி பயிலும் மாணவர்களை அடிப்படையாக கொண்ட கணக்கெடுப்பிலும் (Gross Attendance Ratio in Higher Education) உயர்கல்வி கற்றோர் தரவில் கிடைத்த முடிவுகளை ஒத்துள்ளதை கண்டறிய இயலுகிறது.

வழக்கம் போல், பழங்குடியினரும், இஸ்லாமியர்களும் கீழே இருக்கிறார்கள். அவர்களை விட தலித்கள் கொஞ்சம் மேலே இருக்கிறார்கள். இதில் ஒரே ஒரு விதிவிலக்கு, அதிக வருமானம் இருக்கும் பழங்குடியினர் மொத்த வருகை விகிதத்தில் ஹிந்து உயர் ஜாதியினரை விட அதிகமாக இருக்கிறார்கள். SC, OBC வகுப்பினர் ஒரே அளவில் தான் இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் இதிலும் மற்ற எல்லா பிரிவினர்களையும் விட பின்தங்கி இருக்கிறார்கள்.

கீழே இருக்கும் 80% மக்கள் தொகையில், வழக்கமான படிநிலையை போலவே SC, ST , இஸ்லாமியர்களே கீழே இருக்கிறார்கள்.

அட்டவணை 2: உயர்கல்வியில் மொத்த வருகை விகிதம்

தனி நபர் செலவுத்
தொகை ரூபாயில்

83.3-1250

1250-1692

1692.5-2200

2276-3333

3333.4-80200

மொத்தம்

ST

7

12.8

16.9

24.6

63.4

15.8

SC

12.3

17.3

22.7

32.3

50.2

21.1

OBC

16.9

20.7

29.4

38.3

50

28.2

உயர் சாதி இந்துக்கள்

24.6

30

34.3

40

59.1

40.7

இஸ்லாமியர்கள்

7.3

11

15.9

27

38.7

16.4

மற்றவர்கள்

16.6

40.4

28.1

39.5

57.2

43.3

மொத்தம்

13.4

18.8

25.7

35.3

53.1

26.3

ஆதாரம்: 2019-20 ஆண்டுக்கான தொழிலாளர் கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் கட்டுரை ஆசிரியரின் கணக்கீடு (Periodic Labour Force Survey Data, 2019-20)

வேலைத்தரம் (Quality of jobs)

ஒவ்வொரு பிரிவிலும் தரமான வேலை வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பதை பார்க்க, மொத்த வேலை பார்ப்பவர்களுக்கும், நிரந்தரமான வேலைக்கு செல்பவர்களுக்கும் இருக்கும் விகிதாச்சாரத்தை கொண்டு பார்க்கலாம். சமூக, மதப் பிரிவுகளுக்கு இடையே இருக்கும் வேலை வாய்ப்பு பங்கீட்டையும் இதில் பார்க்கலாம். 

நாடு தழுவிய அளவில், ஏறக்குறைய 23% பேர் நிரந்தர வேலையில் இருக்கிறார்கள். அதில், கீழிருக்கும் 20% பேர் 8.5% ஆகவும் , மேலே இருக்கும் 20% பேர் 46.9% ஆகவும் இருக்கிறார்கள். சமூக, மத பிரிவுகளிலும் ஹிந்து உயர் ஜாதி பிரிவினர்களே அதிகமான நிரந்தர வேலை வாய்ப்பை பெறுகிறார்கள்.

கீழிருக்கும் 20 விழுக்காட்டில், 6% ST பிரிவினரும், 8% SC, 8.2% OBC பிரிவினரும், 11% இஸ்லாமியர்களும் நிரந்தர வேலை வாய்ப்பு பெறுகிறார்கள். உயர் ஜாதி ஹிந்துக்களில் 13% நிரந்தர வேலை வாய்ப்பு பெறுகிறார்கள்.

உயர் ஜாதி ஹிந்துக்களுக்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் இந்த வேலைத்தர இடைவெளியை எல்லா வருமானப் பிரிவுகளிலும் காணலாம். இஸ்லாமியர்களுக்கும் உயர் ஜாதி ஹிந்துக்களுக்கும் இந்த இடைவெளி அதிகரிப்பதை ஐந்து வருமானப் பிரிவுகளிலும் பார்க்கலாம். 

அட்டவணை 3: மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் நிரந்தர ஊழியர்களின் பங்கு, 2019-20

தனி நபர் செலவுத்
தொகை ரூபாயில்

0-1160

1160-1500

1500-2000

2000-2850

2850-105000

மொத்தம்

ST

5.7

8

14.5

24.8

44.5

13.4

SC

8

11.9

19.3

28.8

48

20.5

OBC

8.2

10.2

17

22.9

43.4

20.2

உயர் சாதி இந்துக்கள்

13.4

17.3

25.4

32.2

52.3

34.9

இஸ்லாமியர்கள்

10.9

14.3

20.3

24.8

41.6

21.5

இந்திய அளவில்

8.5

11.8

19.3

26.6

46.9

22.9

ஆதாரம்: 2019-20 ஆண்டுக்கான தொழிலாளர் கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் கட்டுரை ஆசிரியரின் கணக்கீடு (Periodic Labour Force Survey Data, 2019-20)

ஆதாரப்பூர்வ தரவுகளின் அடிப்படையில் தரங்குறைந்த வேலைகளில் SC, ST வகுப்பினரே அமர்த்தப்படுகிறார்கள். மேலும் அவர்களுக்கு ஒப்பந்த வேலைகளே அதிக அளவில் கிடைக்கிறது. அரசுத்துறை வேலை வாய்ப்புகளில் SC , ST களின் பங்கு கீழிருக்கும் 20% மக்கள் தொகையில் தங்களின் பங்கை விட அதிகமாகவும், மேலிருக்கும் 20% மக்கள் தொகையில் தங்கள் பங்கை விட குறைவாகவும் இருக்கிறார்கள். 

தரம் தாழ்ந்த வேலை வாய்ப்புகளில் SC, ST மக்களே அதிகம் பணியமர்த்தப்படுவதும், உயர் பதவிகளில் மிக குறைந்த அளவே பணியமர்த்தப்படுவதும் தெரியவருகிறது.

ஏறக்குறைய, கீழிருக்கும் 20% மக்கள் தொகையில், 73% ST அரசு பணியாளர்களுக்கும், 77% SC, OBC அரசு பணியாளர்களுக்கும் 1 வருடத்திற்கோ அல்லது அதற்கும் மேலோ பணி செய்வதற்கான எழுத்து பூர்வமான ஒப்பந்தம் எதுவுமேயில்லை.

இஸ்லாமியர்களோ இரண்டு நிலைகளிலும் மிக பின்தங்கி இருக்கிறார்கள். அவர்களின் மக்கள் தொகையை விட பாதிக்கும் குறைந்த அளவிலேயே அரசு வேலை வாய்ப்புகளில் இருக்கிறார்கள். OBC வகுப்பினரின் பங்கு இரண்டு நிலைகளிலும் ஒரே மாதிரியாய் இருக்கிறது.

மற்றொரு புறம், உயர் ஜாதியினரோ, கீழ் மட்ட வேலைகளில் குறைந்த அளவிலும், மேல் மட்ட வேலையில் கூடுதலாகவும் இருக்கிறார்கள். அதாவது உயர் பதவிகளில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். தரம் தாழ்ந்த பணிகளில் கூட SC, ST, OBC பிரிவினரை விட குறைந்த அளவிலேயே இருக்கிறார்கள்.

அட்டவணை 4: 2019-20 அரசுத் துறையில் உள்ள மொத்த ஊழியர்களில் நிரந்தர ஊழியர்களின் பங்கு

தனி நபர் செலவுத்
தொகை ரூபாயில்

0-1160

2850-105000

ST

18

6.7

SC

31.6

15.7

OBC

30.3

30.4

உயர் சாதி இந்துக்கள்

13.6

37.4

இஸ்லாமியர்கள்

6

5.3

மற்றவர்கள்

0.41

4.57

மொத்தம்

100

100

ஆதாரம்: 2019-20 ஆண்டுக்கான தொழிலாளர் கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் கட்டுரை ஆசிரியரின் கணக்கீடு (Periodic Labour Force Survey Data, 2019-20)

மேற்கண்ட தரவுகளின் படி, வெவ்வேறு சமூக, மத பிரிவுகளில் இருக்கும் ஏழைகள் அனைவரும் ஒரே மாதிரி இல்லை என்பதே இதில் இருந்து தெரிகிறது. வறுமையை எம்முறையில் கணக்கிட்டாலும், SC, ST, இஸ்லாமியர்கள் தான் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் மிகவும் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள்.

தலித் மக்களை விட உயர் ஜாதி ஹிந்துக்கள் நல்ல நிலையில் இருப்பதால், அவர்களுக்கு எந்த விதமான இட ஒதுக்கீடு திட்டத்தை கொண்டு வந்தாலும், அது சமமின்மையை குறைப்பதற்கு பதில் அதிகப்படுத்தி கொண்டே தான் போகும். மேலும், இந்த தகவல்கள் சொல்வது எல்லாம், இந்த சமயத்தில் இட ஒதுக்கீடு யாருக்காவது தர வேண்டும் என்றால், அது நிச்சயமாக இஸ்லாமியர்களுக்கே கொடுக்க வேண்டும். அவர்கள் தான் கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் மிகவும் பின் தங்கி இருக்கிறார்கள்.

மேலும் மத அடிப்படையிலும், கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும், இஸ்லாமியர்கள் கடும் ஒடுக்கு முறைக்கு ஆளாகி இருப்பது பற்றி, மிக குறைந்த அளவில் நடத்தப்பட்டிருப்பினும், அறிவியல் பூர்வமான ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. 

Oxfam India உதவியோடு இக்கட்டுரை ஆசிரியர் காலித் கானும், பேராசிரியர் அமிதாப் குண்டுவும் இணைந்து நடத்திய ஒரு ஆய்வில் (India Discrimination Report 2022), SC, ST, இஸ்லாமியர்கள், பெண்கள் வேலை வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.

இரண்டாம் நிலை தகவல்களை கொண்டு மறைமுக முறையைப் பயன்படுத்தி கட்டுரை ஆசிரியர் காலித் கானின் மற்றொரு கல்வியை பற்றிய ஆய்வில், வெறும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் ஒரு குடும்பத்தை முன்னேற்றுவதன் மூலம் சாதி, இனம், மதச் சமமின்மையை இந்த சமூகத்தில் இருந்து நீக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.

இஸ்லாமிய ஏழைகளுக்கு EWS இட ஒதுக்கீட்டின் மூலம் பயன் கிடைப்பது மிகக் கடினமான ஒன்றாக இருக்கும். ஏனென்றால், அவர்கள் மற்ற சமூக ஏழைகளை விட மிக மிகப் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள். மற்ற சமூக ஏழைகளோடு, இஸ்லாமிய ஏழைகளால் போட்டியிடவே இயலாது.

மேற்கண்ட தரவுகள் நமக்கு விளக்கும் செய்தி என்னவெனில், இட ஒதுக்கீட்டில் ஒருவரின் சமூக மத அடையாளத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பொருளாதாரத்தை இட ஒதுக்கீட்டின் அடிப்படையாக எடுத்துக்கொள்ள கூடாது. அதை வறுமை ஒழிப்பு திட்டமாக வேண்டுமானால் எடுத்து கொள்ளலாம். ஏனென்றால் வெவ்வேறு ஜாதியில் இருக்கும் ஏழைகள் எல்லோரும் ஒரே நிலையில் இருப்பதில்லை. சமுதாயத்தில் உயர் ஜாதியில் இருக்கும் ஏழைகள் மற்ற ஏழைகளை விட நல்ல நிலையிலேயே இருக்கிறார்கள்.

மேற்கண்ட தரவுகளின் அடிப்படையில் SC, ST வகுப்பினரை ஒதுக்குவது சரியான நடைமுறை அல்ல. இஸ்லாமியர்களுக்கும் EWS இட ஒதுக்கீடு உண்டு எனச் சொல்லப்பட்டாலும் இணைந்திருப்பதால் EWS இட ஒதுக்கீட்டால் அவர்களின் பிரச்சனைகளுக்கு எந்த தீர்வும் கிடைக்க போவதில்லை. ஏனென்றால் அவர்கள் உயர் சாதி ஹிந்துக்களை விட மிக மிகப் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்கள். EWS இட ஒதுக்கீடு சமமின்மையை குறைப்பதற்கு பதில் அதை பல்கிப் பெருக்கவே வழிவகுக்கும்.

- காலித் கான் (இந்திய தலித் ஆய்வுக் கழகத்தில் (Indian Institute of Dalit Studies) உதவிப் பேராசிரியராக உள்ளார், புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.)

நன்றி: thewire.in இணையதளம் (2022, நவம்பர் 18 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: சுமதி, ஆஸ்திரேலியா

Pin It