‘குடிஅரசு 1926’ தொகுப்பை வெளியிட்டு தோழர் நல்லக்கண்ணு உரை
“பெரியார் இயக்கத்துக்கும் பொதுவுடைமை இயக்கத்துக்கும் உள்ள உறவு ‘தொப்புள் கொடி’ உறவு. அந்த உறவு தொடருகிறது. புதிய உருவங்கள் எடுத்து வரும் ஆதிக்க சக்திகளை எதிர்த்து, நாம் ஒன்றுபட்டுப் போராட வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தோழர் நல்லக்கண்ணு குறிப்பிட்டார்.
திருப்பூரில் அக். 2 ஆம் தேதி ‘குடி அரசு’ 1926 இரண்டாம் தொகுப்பை வெளியிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர்.நல்லக்கண்ணு ஆற்றிய உரை :
இந்த நல்ல வாய்ப்பைத் தந்த ‘தந்தை பெரியார் திராவிடர் கழக’த்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது பெரியார் ‘குடிஅரசு’ கட்டுரைகளின் இரண்டாவது தொகுதி. ஏற்கனவே 1925 ஆம் ஆண்டுக்கான முதல் தொகுதியை தந்தை பெரியார் திராவிடர் கழகம் 2003-ல் வெளியிட்டிருக்கிறது. தந்தை பெரியாருடைய சிந்தனைகள் மனித சமூகத்துக்கு மிகவும் அடிப்படையானவை. அந்த சிந்தனைகள், தமிழகம் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும் மனித சமூகத்துக்கு வழிகாட்டும் சிந்தனைகள். அத்தகைய சிந்தனைகளினால் தந்தை பெரியார் வரலாறு படைத்தார். வரலாறு படைத்தது மட்டுமல்ல, வரலாறாகவே வாழ்ந்தார். எதிர்கால வரலாற்றுக்கும் அவர் வழிகாட்டியாக விளங்குகிறார். அதனால்தான் கட்சி வேறுபாடின்றி, நாம் அனைவரும் தந்தை பெரியாரை வணங்குகிறோம்; பாராட்டுகிறோம்; வழிகாட்டியாக ஏற்றுக் கொள்கிறோம்.
பெரியார் ‘குடிஅரசு’ பத்திரிகை நடத்திய காலங்களில் - அதில் தொடர்ந்து பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்த சிங்காரவேலர், ஜீவா, சாத்தான்குளம் ராகவன் போன்றவர்கள் அதில் தொடர்ந்து எழுதி வந்தார்கள். பகத்சிங் ஆங்கிலத்தில் எழுதிய “நான் ஏன் நாத்திகன் ஆனேன்?” என்ற நூலை - தமிழில் மொழி பெயர்த்து, தோழர் ஜீவா ‘குடிஅரசு’ பத்திரிகையில் எழுதினார். அதற்காக, அன்றைய பிரிட்டிஷ் அரசு, ஜீவாவுக்கு 9 மாத சிறைத் தண்டனை விதித்தது.
பெரியாரும், ‘குடிஅரசு’ வெளியீட்டாளருமான, பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியும் தண்டிக்கப்பட்டனர். எதற்காக, இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், பெரியார் இயக்கத்துக்கும், பொதுவுடைமை இயக்கத்துக்கும் உள்ள உறவு நீண்டகால உறவு. அது பிரிக்க முடியாத ‘தொப்புள் கொடி உறவு’. அந்த உறவு இன்று வரை நீடிக்கிறது. இது என்றென்றும் நீடிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மனித குலம் வாழ்வதற்கு தன்மானம் அவசியம். அந்தத் தன்மானத்தை உறுதிபடுத்துவதற்கு - மனித உழைப்புக்கு மரியாதையையும், உரிய அங்கீகாரத்தையும் தரக்கூடிய பொதுவுடைமைக் கொள்கை தேவை. எனவே, தன்மானமும்- பொதுவுடைமையும், நமக்கு இரு கண்கள். இந்த இரண்டுமே நமக்கு மூச்சுக் காற்று. நாம் மனிதராவதற்கு மூச்சுக் காற்றான இந்த இரண்டு கொள்கைகளுமே தேவை என்பதை, கம்யூனிஸ்ட் கட்சி அங்கீகரித்துள்ளது. இங்கே, எனக்கு முன் பேசிய தோழர் அதியமான் குறிப்பிட்டதுபோல், இரண்டு இயக்கங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகளும் உண்டு. இல்லை என்று சொல்ல முடியாது. வாழ்க்கைக்கான போராட்டத்தில், அக முரண்பாடுகளையும், புற முரண்பாடுகளையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. அவைகளைச் சந்திக்கும் அணுகுமுறையில், இயக்கங்களுக்கிடையே மாறுபாடுகள் வருகின்றன. ஆனாலும், மனித குலம் வளர வேண்டும் என்று சிந்திக்கும் இயக்கம், பகுத்தறிவு இயக்கமும் பொதுவுடைமை இயக்கங்களுமே ஆகும்.
மனிதன், இந்தப் பூமியில் வாழ்வதைப் பற்றிக் கருதாமல், எங்கேயோ இருக்கும் சொர்க்கத்துக்குப் போய் அங்கே ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வதற்காக கடவுளை நம்பிக் கொண்டு வாழ வேண்டும் என்று, சொல்லிக் கொண்டிருக்கிற, இயக்கங்கள் அல்ல. காரல்மார்க்ஸ், மதம் ஒரு அபின் என்றார். ஏழை எளிய மக்களுக்கு ஒரு ‘வடிகால்’ என்றாலும், அதுவே மனித குல வளர்ச்சிக்கான இயக்கங்கள் அல்ல. தந்தை பெரியாரும், அதைத்தான் சொன்னார். கடவுள், மதம், முட்டாள்களின் கண்டுபிடிப்பு என்றார். இந்தக் கடவுள், மத எதிர்ப்பு விஷயத்தில் பொதுவுடைமை இயக்கத்துக்கு சில வேறுபாடுகள் உண்டே தவிர, இரண்டு இயக்கங்களுமே, மனித குல முன்னேற்றத்துக்காகவே செயல்படுகின்றன. எனவே இந்த இரண்டு இயக்கங்களின் செயல்பாடுகளுமே அவசியமாகும். அந்த அடிப்படையில் தான், பெரியார் இயக்கங்களை நாங்கள் தொடர்ந்து ஆதரித்து வருகிறோம்; உதவிடுகிறோம்; நெருக்கடி வரும் நேரங்களில் துணை நிற்கிறோம்.
பெரியார் காலத்தில, சிங்காரவேலு, ஜீவா போன்றவர்கள் பெரியாரிடமிருந்து மாறுபட்டது உண்டு. ஆனால், எந்தக் காலத்திலும், பகைமை பாராட்டியதில்லை. பெரியாரே சொல்லியிருக்கிறார், என்னை விட்டுப் பிரிந்து சென்றவர்களில், பிரிந்து சென்ற பிறகும் என்னைப் பற்றிக் குறை கூறிப் பேசாதவர்களில் ஜீவாவும் ஒருவர் என்று. ஜீவாவைப் போலவே, நாங்களும் தந்தை பெரியார் மீது அத்தகைய தனி மரியாதையை வைத்திருக்கிறோம்.
எங்கள் இயக்கத்தில் இருந்த ‘ஏ.எஸ்.கே. அய்யங்கார்’ தந்தை பெரியாரோடு மிகவும் நெருக்கமாக இருந்தவர். பெரியார் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். அவர் தனது பெயருக்குப் பின்னால் இருந்த ‘அய்யங்கார்’ என்ற பெயரை சட்டப் பூர்வமாக நீக்கி, அரசுப் பதிவிதழில் (கெசட்) வெளியிட்டார். அப்போது, பெரியார் அவரை அழைத்து, “அய்யங்கார், உங்கள் பெயரில் அய்யங்கார் இருந்ததால் தான், அய்யங்காரே பெரியாரை ஆதரிக்கிறார் என்று மற்றவர்கள் கருதுவார்கள், சிந்திப்பார்கள். வெறும் ‘ஏ.எஸ்.கே.’ பெரியாரை ஆதரிக்கிறார் என்றால், மற்றவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தாது. எனவே ‘அய்யங்கார்’ என்பதை எடுக்காதீர்கள்” என்றார்.
அந்த அளவுக்கு இருவரும் நெருக்கமாக இருந்தார்கள். பெரியாரைப் பற்றி அவர் ஒரு நூலே எழுதியிருக்கிறார். அதே போல் தோழர் பாலதண்டாயுதம் அவர்கள் மறைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், பெரியாரைப் பற்றி “ஜாதியை ஒழித்த ஜாம்பவான்” என்று எழுதினார். எங்கள் கட்சியைச் சார்ந்த ‘நாடாளுமன்றத்தின் நாவலர்’ என்று அழைக்கப்பட்ட மூத்தத் தலைவர் ஹிரேன் முகர்ஜி, பெரியாரைப் பற்றிக் கூறும் போது, “அவர் ஒரு ‘ஒரிஜினல்’ சிந்தனையாளர்; அசலான சிந்தனைக்காரர். அவர் சிந்தனைகளை கடன் வாங்குவது கிடையாது.
அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று மேற்கோள் காட்டுவது அவரது வழக்கமல்ல. எங்களது வங்காளத்தில், நாங்கள் எத்தனையோ புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், பார்ப்பனர்களின் வைதீகத்தில் கை வைக்க முடியாது. ஆனால் பெரியார் பார்ப்பன வைதீகத்தை ஒழிக்கும் புரட்சிகர திருமண முறையை தமிழ் நாட்டில் அமுல்படுத்தியிருப்பது மிகப் பெரும் புரட்சி. எங்கள் மாநிலத்தில்கூட, இதைச் செய்ய முடியாது” என்று பெருமையுடன் கூறுவார். பெரியார் கொள்கைகளுக்கு, இன்றும் அவசியமும், தேவையும் இருக்கிறது என்றே நாங்கள் கருதுகிறோம்.
எங்கள் கட்சியில் பொதுச் செயலாளராகவும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமாக இருந்தவர் இந்திரஜித் குப்தா. மத்திய உள்துறை அமைச்சராகவும் இருந்தார். அவர் உள்துறை அமைச்சராக இருந்தபோதே, ஒரு கருத்தைக் கூறினார். இந்தியாவில் அரசியல் சட்டத்தின், ஆட்சிதான் சட்டப்படி நடக்கிறது என்றாலும், நடைமுறையில் ‘மனுதர்மம்’ வர்ணாஸ்ரமத்தின் ஆட்சிதான் நடக்கிறது. இதை எதிர்த்து, நீண்ட போராட்டத்தை நடத்த வேண்டும், என்றார்.
காரல் மார்க்ஸ் - உலகத் தொழிலாளர்களுக்கு அறைகூவல் விடுத்தார். ஆனால் உலகத் தொழிலாளிகளுக்கும் இந்தியத் தொழிலாளிகளுக்கும் வேறுபாடு உண்டு. இந்தியத் தொழிலாளி மீது பிறப்பின் அடிப்படையில் ‘வர்ணாஸ்ரம தர்மம்’ என்ற வேறுபாடும் திணிக்கப்பட்டிருக்கிறது. இந்த அநீதிகளை ‘ராஜதர்மம்’ என்கிறார்கள்.
குஜராத்தில் நடந்த கலவரங்களைத் தொடர்ந்து, வாஜ்பாய் குஜராத் சென்றபோது, அவரது மனசாட்சி உறுத்தியது. எனவே மோடி, ‘ராஜதர்மப்படி’ செயல்படவில்லை என்றார். ஆனால் மோடியோ, தான் ‘தர்மப்படி’யே செயல்பட்டதாகக் கூறினார். முஸ்லிம் மக்களைக் கொன்று குவிப்பதுதான், மோடியின் பார்வையில் ‘ராஜதர்மம்’. எங்கள் கட்சியில் மூத்தத் தலைவர் எஸ்.ஏ.டாங்கே காஞ்சிபுரத்தில் பெரியார் நடத்திய சுயமரியாதை மாநாட்டில் கலந்து கொண்டவர். சமஸ்கிருத அகராதிப்படி தர்மம் என்பது, மிக மோசமான கேவலமான வார்த்தை என்று அவர் கூறினார்.
1925-ம் ஆண்டு வரலாற்றில் ஒரு முக்கியமான ஆண்டு. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் உருவான காலம். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப்பட்டதும் 1925-ல் தான். இந்தக் கொள்கைகளுக்கு எல்லாம் நேர் விரோதமான வர்ணாஸ்ரமத்தை ஆதரிக்கும் ஆர்.எஸ்.எஸ்., துவக்கப்பட்டதும் அதே ஆண்டில் தான். 1924-ல் தான் தீண்டாமைக்கு எதிரான வைக்கம் போராட்டம் பெரியார் தலைமையில் நடந்தது.
காங்கிரஸ் கட்சிப் பணத்தில் நடந்த சேரன்மாதேவி குருகுலத்தில் நடந்த ‘வர்ணாஸ்ரமத்துக்கு’ எதிராக, பெரியார் போர்க்கொடி உயர்த்தியதும் அப்போது தான். பெரியார் சாதி, மத, கடவுள் நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடினார். பெண்ணடிமைக்கு எதிராகப் போராடினார். தமிழில் எழுத்துச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தினார்.
1944-ம் ஆண்டிலேயே ‘இனி வரும் எதிர்காலம்’ என்று அவர் எழுதிய நூலை நான் படித்தேன். சோதனைக் குழாய்கள் மூலம் - ஆண் பெண் உறவு இன்றியே குழந்தை பிறக்கும் காலம் வரும் என்றார். இப்போது இருக்கும் ‘செல்’ போன்கள் பற்றி அப்போதே சிந்தித்திருக்கிறார். விஞ்ஞானச் சிந்தனைகள் பரவ வேண்டும்; அதற்கு மூடநம்பிக்கைகள் மறைய வேண்டும் என்று பெரியார் விரும்பினார்.
கொடிய மனித உரிமைகளுக்கு எதிரான தன்மானத்தை மறுக்கக் கூடிய சமத்துவத்துக்கு எதிரான கருத்துக்களைப் பரப்ப புதிய உருவங்கள் எடுத்து வரும் சூழ்ச்சிகளை உடைத்து எறிவதில், நமது இரு இயக்கங்களும் ஒன்றுபட்டுப் போராட வேண்டும்.
1923-ல் வகுப்புவாரி உரிமை அமுலுக்கு வந்தது இந்தத் தமிழ்நாட்டில் தான். இப்போது 2005-ல் தனியார் பொறியியல் கல்லூரிகளில் இடஒதுக்கீடுகளே செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. தகுதி அடிப்படையில், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கீடுகள் கூடாதாம். ஆனால், வெளிநாட்டில் வாழும் வசதி படைத்த இந்தியர்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துப் பெறும் இடஒதுக்கீடு மட்டும் இருக்க வேண்டும் என்கிறது உச்சநீதிமன்றம். கல்வியில் அரசு தலையிடக் கூடாது, மருத்துவத் துறையில் அரசு தலையிடக் கூடாது என்றால், பிறகு அரசுக்கு என்னதான் வேலை? எதற்கு மக்கள் வாக்களித்து ஒரு அரசைத் தேர்வு செய்ய வேண்டும்?
ஒரு காலத்தில் பிள்ளையாரை, சாணியால் அல்லது களிமண்ணால் சிறிதாக செய்து, கிணற்றிலோ, ஆற்றிலோ கரைத்து ‘விநாயக’ சதுர்த்தி கொண்டாடியது போய் இப்போது, பிளாஸ்டிக்கில், உயர உயரமான சிலைகளை செய்து, தெரு தெருவாக ஊர்வலம் போகிறார்கள். பெரியார் பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் நடத்திய தமிழ்நாட்டில், இந்த நிலை வந்துவிட்டது. முற்போக்காளர்கள் நிறைந்த சூலூரில் - அங்கே பிளாஸ்டிக் சிலைகளைக் கரைக்க தடை வாங்கிவிட்டார்கள்.
ஜெயமோகன் என்ற எழுத்தாளர் ‘தினமணி’யில் அம்பேத்கர் - ஒரு “பார்ப்பனப்” பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். பெரியார், மணியம்மையைப் பொருந்தாத வயதில் திருமணம் செய்து கொண்டார் என்று கொச்சைப்படுத்தி எழுதினார். இதைக் கண்டித்து நான் ‘தினமணி’யில் எழுதினேன். பெரியார் மறைந்தவுடன், நானும் திரு.கல்யாணசுந்தரம் அவர்களும், மணியம்மையாரை சந்திக்கச் சென்றோம். அப்போது அவர், “இன்னும் 4 ஆண்டுகள் பெரியார் உயிருடன் இருந்திருந்தால், நூறு வயது வரை வாழ்ந்திருப்பார். அவரை 100 ஆண்டுகள் வரை வாழ வைத்தேன் என்ற பெருமை எனக்குக் கிடைத்திருக்கும்” என்று கூறினார். அத்தகைய பெருந்தன்மையான சிந்தனை ஜெயமோகனுக்கு இல்லை. அவரது புத்தி சின்னபுத்தியாகவே இருக்கிறது.
பெரியார் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத்தான் பாடுபட்டார். தலித் மக்களுக்காகப் பாடுபடவில்லை என்று சிலர் பேசுகிறார்கள். இது தவறு. அவர் தேங்கிப் போய்க் கிடந்த சமூகத்தை உடைத்தவர்; அணையைத் தகர்த்து தண்ணீரைப் பாய்ச்சியவர்; ஒரு முறை வல்லம் கல்லூரிக்கு நானும் மூப்பனாரும் சென்ற போது,
“பெரியார் மட்டும் இல்லாவிட்டால் நீங்களும் நானும் அருவாள், கம்பைத் தூக்கிக் கொண்டுதான் திரிந்திருப்போம்” என்று மூப்பனார் என்னிடம் கூறினார். நான் சிந்தித்தபோது அதுதான் உண்மை என்று எனக்குப் புரிந்தது. அந்த அளவுக்கு நம்மை சிந்திக்க வைத்தவர் பெரியார். நமது முந்தைய தலைமுறையைச் சேர்ந்த பெரியாரும், சிங்கார வேலரும் நல்ல கருத்துகளை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
நாம் அவைகளைப் பேசுவது மட்டும் போதாது, செயல்படுத்த வேண்டும். இன்று தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறவர்கள், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் தான். இந்த நிலையில் நாம் தலித் மக்கள் பக்கம் அவர்களுக்கு பாதுகாப்பாக நிற்க வேண்டும். இன்றைக்குத் தேவை, தத்துவங்களோ, விளக்க உரைகளோ அல்ல. செயலாற்றல்தான் தேவை. செயல்பட வேண்டிய காலத்தில் நாம் வாழ்கிறோம். நமக்கிடையே உள்ள சிறுசிறு வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, நாம் இணைந்து செயல்படுவோம்; போராடுவோம்! ;