உலக இயற்கை, உயிர் இயற்கை - ‘காதல்‘. திருமணம் என்கிற அமைப்பு கட்டமைக்கப்பட்ட பின்னர் இணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைக் குடும்ப அமைப்பு பெற்றுவிட்டது. உயிரினங்களில் மனித இனத்திற்கு மட்டும்தான் இந்த உரிமை மறுக்கப்பட்டு வருகிறது.
மதங்கள், திருமணம் குடும்பம் ஆகிய அமைப்புகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றன. எந்த மதமும் காதலை அங்கீகரிப்பதில்லை. இதில் பெரிதும் உரிமைகள் பறிக்கப்படுவது பெண்ணிற்குத்தான். ஆண்களால் உருவாக்கப்பட்ட மதங்கள் பெண்ணுக்கான வாழ்வுரிமையை மறுக்கின்றன.
அடிப்படையில் காதல் உரிமை பெற்றாலெ பெண்களுக்கான சமஉரிமை கிடைத்துவிடும். இந்தியாவில் பார்ப்பனீயம் வர்ணாசிரம தர்மத்தை சாதிய அமைப்பை நிலைநிறுத்தத் தொடர்ந்து காதலுக்கு எதிராக காதலர்களுக்கு எதிராக வன்முறை செய்து வருகிறது.
அண்மைக் காலங்களில் காதலுக்கு எதிரான சட்டங்களையும் நிறைவேற்றி இருக்கிறது. கலாச்சாரக் காவலர்கள் என்கிற பெயரில் மதவாதிகள், உலா வரும் காதலர்களை விரட்டியடிக்கிறார்கள்.
‘‘யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’’
என்கிற குறுந்தொகைப்பாடல் இனம், மொழி, மதம், ஜாதி, பாலினம் என்கிற வேறுபாடுகளையெல்லாம் கடந்து மலரும் காதலை உலகிற்கு உரைக்கிறது. மேலை நாடுகளில் காதல் என்பது கொண்டாட்டத்திற்கு உரியதாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் காதல் தண்டனைக்குரியதாக இருக்கிறது.
காதல் அடிப்படை மனித உரிமை. மனித உரிமை மறுக்கப்படும் சமூகம் மனிதத் தன்மை அற்றதாக மாறிவிடும். காதல் நிறைந்த உலகத்தில் அன்பும் மனித நேயமும் மலர்ந்திருக்கும்.
வன்முறையும் கலவரமும் உலர்ந்திருக்கும். காதலைப் போற்றுவதற்கு நேரமும் நாளும் பார்க்கவேண்டிய தேவை இல்லை என்றாலும் தடைகள் நிறைந்திருக்கும் சமூகத்தில் காதலர் தினத்தை அனைவரும் கொண்டாடுவோம்.
- கருஞ்சட்டைத் தமிழர்