மலக்குழிகளுக்குள்ளும், பாதாள சாக்கடைகளுக்குள்ளும் மனிதர்கள் இறங்கித் துப்புரவுப் பணி செய்வதற்கு, தமிழகம் முழுவதும் தடைவிதித்து, நல்ல தீர்ப்பொன்றை கடந்த வருடம் அளித்திருந்தது சென்னை உயர்நீதிமன்றம். இந்த நீதிமன்றத் தடையை அரசு நிர்வாகங்கள் ஒரு சில இடங்களில் மீறி அதனால் தொழிலாளர்கள் இறக்க நேரிட்டதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றும் சமீபத்தில் தொடரப்பட்டது.

இவ்வழக்கில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று, திடப் பொருட்களையும், பிளாஸ்டிக் குப்பைகளையும், பாதாளச் சாக்கடைகளுக்குள் பொது மக்களும், வணிகர்களும் போடும் பழக்கத்தை மாற்றும் விதமாக ஒரு விழிப்புணர்வு பிரச்சாரக் குழு (கமிட்டி) ஒன்றை உயர்நீதிமன்றம் அமைத்துள்ளது. அதோடு, பாதாளச் சாக்கடைக்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை முன் வைக்கவும், உள்ளாட்சித்துறை மற்றும் சென்னைக் குடிநீர் வாரிய பொறியியல் வல்லுனர்கள், மத்திய சுற்றுச் சூழல் பொறியியல் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி.) ஆகியோர் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவையும் அமைக்க நீதிமன்றம் முயற்சித்தது. ஆனால், இருமுறை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியும் சென்னை ஐ.ஐ.டி. இக்குழுவில் பங்கு கொள்ள மறுத்துவிட்டது.

இதற்கு முந்தைய வாரம்தான், ஜூலை 31 ஆம் தேதியன்று ஐ.ஐ.டி.யின் 46வது பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்கிப் பேசிய பொருளாதார மேதை பேராசிரியர் ஜகதீஷ் பகவதி, “ஐ.ஐ.டி. இனி ஏழ்மைக் குறைப்பிற்கும், சமுதாயப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் தங்களது அறிவையும், ஆராய்ச்சித் திறனையும் பயன்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

நீதிமன்றம் அமைக்க இருந்த குழுவில் ஐ.ஐ.டி. இடம் பெற மறுத்துவிட்டதால், மிகவும் புண்பட்டுப் போன சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், “ஐ.ஐ.டி. - ஒரு பளிங்கு மாளிகையின் (ஐவரி டவர்) உச்சியில் உட்கார்ந்து கொண்டு வர மறுக்கிறது, அவர்கள் மெத்தப் படித்தவர்கள். சமுதாயமும், உயர் நீதி மன்றமும், ஐ.ஐ.டி.யைப் பொருத்தவரை அவர்களது தகுதிக்கு மிகக் கீழே உள்ள இடங்கள். தொழில் நுட்பக் குழுவில் இடம் பெற வேண்டும் என்று நாங்கள் ஆணை பிறப்பித்தாலும், அவர்கள் மனமுவந்து ஒத்துழைக்க மறுத்து, குழுவின் முயற்சிக்குத் தடையாகவே இருப்பார்கள். இக்குழுவில் இடம் பெறுவோர் தன்னார்வத்துடன் கலந்து கொள்ள வேண்டியவர்கள். ஒரு வேளை, இக்குழுவில் கலந்து கொள்வதால், சுயலாபம் ஏதேனும் இருக்கும் எனில் முன்வந்திருப்பார்கள். ஆகவே, ஐ.ஐ.டி.யிடம் நாம் பிச்சையெடுக்க வேண்டி யதில்லை” என்று வேதனையுடன் குறிப்பிட்டனர்.

மக்கள் வரிப்பணத்தில், மிக அதிகபட்ச மானியத்தினாலும் குப்பைகொட்டி வரும் ஐ.ஐ.டி. போன்ற பொதுத் துறை ஆராய்ச்சி நிலையங்களும், வயிறு வளர்த்துவரும் அங்குள்ள விஞ்ஞானிகளும், இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிப்படையாக வேண்டிய தேவைகளிலிருந்து எவ்வாறு அன்னியப்பட்டு இருக்கிறார்கள் என்பதை தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது இந்நிகழ்ச்சி.

ஐ.ஐ.டி., 21 ஆம் நூற்றாண்டு இந்தியாவின் புதிய வடிவிலான அக்கிரகாரம் தானே? வெட்கக் கேடு.

(‘பாடம்’ இதழிலிருந்து பொள்ளாச்சி பிரகாசு) 

Pin It