நீட் தேர்வு காரணமாகத் தமிழ்நாட்டில் தொடர்ந்து உயிர்கள் பலியாகிக் கொண்டே இருக்கின்றன. அண்மையில், தந்தையும் மகனுமாய் இருவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து போன செய்தி நம் நெஞ்சைப் பிழிகிறது!
நீட் தேர்வு மட்டுமில்லை, எந்த ஒரு நுழைவுத் தேர்வும் அதற்கு முன்னால் நடைபெற்ற, மாணவர்கள் தேர்வு பெற்ற அந்தத் தேர்வுகளை அவமதிப்பதாகவே இருக்கின்றன. ஒரு மாணவி அல்லது மாணவன் 12 ஆண்டுகள் கடுமையாய் உழைத்துப் படித்துப் பெற்ற மதிப்பெண்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்று சொன்னால், எதற்காக 12 ஆண்டுகளை நாம் வீணடிக்க வேண்டும்? நேரடியாக நீட் தேர்வு என்பதை மட்டுமே வைத்து விடலாமே!எனவே மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு, நீட் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்னும் நிபந்தனையை அடியோடு நீக்கிவிட இன்றைய ஆளும் கட்சியான திமுக உறுதியாக இருக்கிறது. அதற்காகவே நீதிபதி ஏ.கே. ராசன் தலைமையில் ஒரு குழு அமைத்து, அந்தக் குழுவின் பரிந்துரைகளைச் சுட்டிக்காட்டி, நீட் தேர்வை நீக்கக் கோரியுள்ளது. ஆனால் ஒன்றிய அரசு நீட் தேர்வை விலக்க முடியாது என்பதில் தேவையற்ற பிடிவாதம் காட்டி வருகிறது!
இந்த நிலையில் வேறு வழியின்றி, போராட்டக் களத்திற்கு வர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அந்தத தேவையை மிகச் சரியாக, தி.மு. கழகம் தொடங்கியிருக்கிறது. வரும் 20 ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதும் தி.மு. கழகத்தின் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி ஆகியன ஒருங்கிணைந்து பட்டினிப் போராட்டத்தை நடத்த இருக்கிறார்கள்! அந்தப் போராட்டம் வெல்வதற்கும், அல்லது அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்வதற்கு அனைவரும் உடன் இருக்க வேண்டும் என்பது இன்றைய உடனடித் தேவையாக இருக்கிறது.
வேண்டாம் என்று நாம் தடுக்கும் நீட் தேர்வைக் கொண்டு வந்தே தீருவோம் என்று கூறும் ஒன்றிய அரசு, வேண்டும் என்று நாம் கேட்கிற எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டி முடிப்பதில் மிகப்பெரிய காலத்தாழ்வைக் காட்டுகிறது!
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்னும் அறிவிப்பை, 2015 பிப்ரவரியில் ஒன்றிய அரசு வெளியிட்டது. ஆனால் அதற்குப் பிறகு எந்த ஓர் அசைவும் இல்லை. 2019 ஆம் ஆண்டு, தேர்தல் வர இருந்த காரணத்தால், 2018 ஜூன் மாதம் அதற்கு அடிக்கல் நாட்டினார்கள். அந்த அடிக்கல், ஒற்றைச் செங்கலோடு நின்று போய் விட்டது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அடுத்த ஆண்டு தேர்தல் வர இருப்பதால், இப்போது கட்டிடம் கட்டுவதற்கான ஒப்பந்தப் புள்ளியை (டெண்டர்) வெளியிட்டு இருக்கிறார்கள்.
இது அடுத்த கட்டத்திற்குப் போக வேண்டுமானால், இன்னொரு தேர்தல் வர வேண்டி இருக்கும் என்பது நமக்குப் புரிகிறது.
கேட்பதை மறுப்பதும், மறுப்பதைத் திணிப்பதும் ஒன்றிய அரசின் போக்காகத் தொடர்ந்து இருந்து வருகிறது! இந்தப் போக்கை அடியோடு அகற்ற வேண்டுமானால், இது ஒரு கட்சியின் போராட்டமாக மட்டும் இல்லாமல், ஒருங்கிணைந்த தமிழ்நாடு மக்களின் போராட்டமாக மாற வேண்டும்! மாறும்!
- சுப.வீரபாண்டியன்