கீற்றில் தேட...

நுழைவுத் தேர்வு என்ற நரித்தனத்தின் மூலம் நாட்டின், குறிப்பாகத் தமிழ்நாட்டின் பார்பனர் அல்லாத, ஏழை நடுத்தர, பட்டியலின, கிராமப்புற மாணவர்களின் கல்வியை ஒழித்துக்கட்டும் வேலையைச் செய்து கொண்டு இருக்கிறது பா.ஜ.கவின் ஒன்றிய மக்கள் விரோத அரசு.

ஒன்றிய அரசின் பல்கலைக்கழகங்களில் இனி இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்புகளில் சேர வேண்டுமானால் “CUET” ( சென்ட்ரல் யுனிவர்சிட்டி எலிஜிபி லிட்டி டெஸ்ட்) எனப்படும் நுழைவுத் தேர்வு எழுதவேண்டும் என்று யுஜிசி தலைவர் ஜெகதீஷ்குமார் கூறியிருக்கிறார்.

இந்த நுழைவுத் தேர்வின் மூலம் பட்டப் படிப்பிற்குப் போகும் மாணவர்களின் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

நுழைவுத் தேர்வு மூலம் ஏழை நடுத்தர, பட்டியலின, கிராமப்புற மாணவர்களை வடிகட்டி, பார்ப்பன மாணவர்களுக்கான கல்வித் திட்டம் இது. மூன்று ஆண்டு பட்டப் படிப்பு இதன் மூலம் நான்கு ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பட்டயச் சான்று போன்றவைகளைக் கொடுத்து மாணவர்கள் படிப்பை இடைநிறுத்தும் சூழ்ச்சியும் இந்நுழைவுத் தேர்வில் இருக்கிறது.

2022- 23ஆம் கல்வியாண்டிற்கான நுழைவுத் தேர்வை நடத்தும் இதே ‘தேசிய தேர்வுகள் முகமை’தான் மாநில வாரியாக கிராமப்புறங்களில் இருந்து நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்கள் தம்மிடம் எதுவும் இல்லை என்று கைவிரித்திருக்கிறது.

பார்ப்பனியக் குலக்கல்வி திட்டத்தை மீண்டும் கொண்டுவர வழி வகுக்கும் இது போன்ற நுழைவுத் தேர்வுகளை அனுமதிக்கக் கூடாது. அதற்கு ஒரே வழி மாநிலப் பட்டியலுக்குக் கல்வியை மாற்றுவதுதான். இது மாநில சுயாட்சியின் உரிமைக்கு உள்பட்டது.

சட்டப்பேரவையில் கல்வியமைச்சர் பொன்முடி எந்த நுழைவுத் தேர்வையும் தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார்.

இதில் மாணவர்களின் எதிர்காலம் பற்றிய அச்சம் இருப்பதால், அவர்களும் நுழைவுத் தேர்வு குறித்த ஒரு முடிவுக்கு வரவேண்டிய காலம் இது.

- கருஞ்சட்டைத் தமிழர்