கடந்த ஜூன் மாதம் இலங்கை தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்மந்தமாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோவை போத்தனூரில் உள்ள சதாம், அக்பர், அக்ரம் ஜிந்தா, உக்கடம் அன்புநகர் அசாருதீன், குனியமுத்தூர் அபுபக்கர் சித்திக், அல்அமீன் காலனியைச் சேர்ந்த இதயதுல்லா, சாகிம்ஷா ஆகிய 7 பேரின் வீட்டில் சோதனை நடத்தினர். மே மாதம் சேலத்தில், தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்புடையவர் எனக் கூறி, அம்மாபேட்டை சேர்மன் ராமலிங்கம் தெருவைச் சேர்ந்த சதயத்துல்லா மகன் லியாகத் அலி வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 4 மணி நேரம் சோதனை நடத்தி, லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக ஜூலை மாதம் கோவை, நெல்லை, மதுரை உள்ளிட்ட பல ஊர்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி, தேனி மாவட்டம் கோம்பையைச் சேர்ந்த முகமதுகனி என்பவரின் மகன்கள் மீரான்கனி, முகமது அப்சல் உட்பட 14 பேரைக் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். அதே போல இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்த அன்சருல்லா அமைப்பு திட்டமிட்டிருப்பதாகக் கருதப்பட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 பேரை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள்.
இவை எல்லாம் கடந்த சில மாதங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர்களின் சிறு பட்டியல். இந்தக் கைதுகளை எல்லாம் உற்று நோக்கும் எந்த ஒரு ஜனநாயகவாதியும் தேசிய புலனாய்வு முகமை என்பதை மதச்சார்பற்ற அமைப்பு என்று நிச்சயம் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இதற்காக கைது செய்யப்பட்ட அனைவருமே உத்தமர்கள் என்ற முடிவுக்கு நாம் வரவில்லை. ஆனால் ஏன் கைது செய்யப்பட்ட அனைவருமே இஸ்லாமியர்களாக மட்டுமே இருக்கின்றார்கள்? அப்படி என்றால் இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும்தான் மிக எழுச்சியாக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றதா? நிச்சயம் இல்லை என்று சொல்லிவிட முடியும்.
தபோல்கர், பான்சரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ், போன்ற சமூக செயல்பாட்டாளர்கள் படுகொலையையும், தினம் தினம் மாட்டின் பெயரால் அடித்துக் கொல்லப்படும் அப்பாவி முஸ்லிம் மற்றும் தலித்துகளையும் பார்த்தவர்கள் அப்படியான ஒரு முடிவுக்கு நிச்சயம் வந்துவிட மாட்டார்கள். ஆனாலும் இஸ்லாமிய தீவிரவாதம் இந்தியாவில் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் இந்திய மக்களின் மனங்களில் இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி பீதியூட்டி, தன்னைச் சுற்றி இருக்கும் இஸ்லாமியர்கள் அனைவருமே தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும்; இதன் மூலம் இஸ்லாமிய தீவிரவாதத்தில் இருந்து இந்து மக்களைக் காப்பாற்ற மோடி அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் மோடி அரசின் திட்டம்.
ஆர்.எஸ்.எஸ் – பிஜேபியின் இந்த அழிவு அரசியலை முன்னெடுக்கவே அதன் கூலிப்படையாக தேசிய புலனாய்வு முகமை தற்போது செயல்பட்டு வருகின்றது. உண்மையில் இந்திய மக்களை தீவிரவாதத்தின் பிடியில் இருந்து காப்பதுதான் தேசிய புலனாய்வு முகமையின் வேலை என்றால், சம்ஜெளதா விரைவு வண்டி குண்டுவைப்பு, மெக்கா மசூதி குண்டுவெடிப்பு , ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் தர்க்கா குண்டு வெடிப்பு , மலேகானில் நடந்த இரு குண்டு வெடிப்புகள் என ஐந்து குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி 119 பேர் மரணத்திற்குக் காரணமாக இருந்த பிரக்யா சிங் தாகூர், அசீமானந்தா போன்ற இந்து தீவிரவாதிகள் எப்படி தேசிய புலனாய்வு முகமையின் ஒத்துழைப்புடன் விடுதலை செய்யப்பட்டிருக்க முடியும்? இந்தக் குண்டு வெடிப்புகளில் இவர்களுக்குத் தொடர்பில்லை என்றால் இந்தக் குண்டுவெடிப்புகளை உண்மையில் நிகழ்த்தியவர்கள் யார் என்பதை தேசிய புலனாய்வு முகமை தெரிவித்திருக்க வேண்டும், ஆனால் தெரிவிக்கவில்லை. அதுதான் தேசிய புலனாய்வு முகமையின் யோக்கியதை. இது ஒன்றே போதாதா, இது ஆர்.எஸ்.எஸ் பிஜேபியின் கூலிப்படை அமைப்பு என்பதற்கு.
மேலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தன்னை அணுகி குற்றவாளிகளை விடுவிக்க ஒத்துழைக்குமாறு மறைமுகமாக மிரட்டியதாக மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆஜராகி, பின்பு விலகிய அரசுத் தரப்பு வழக்கறிஞரான ரோஹினி சாலியன் குற்றம் சாட்டினாரே, அதன் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?. தேசிய புலனாய்வு முகமை சட்ட திருத்தத்தைப் பற்றி நாடாளுமன்றத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, "இஸ்லாமியர்களை அச்சுறுத்தவே இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்துத்துவத் தீவிரவாதிகள் இந்த அமைப்பால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டபோது, அவர்களின் விடுதலையை எதிர்த்து என்.ஐ.ஏ ஏன் மேல்முறையீடு செய்யவில்லை?" என்றும், “மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அரசு வக்கீலாக ஆஜராகியிருந்த ரோகிணி சாலியன், ‘இந்த வழக்கில் அமைதியாகப் போகும்படி என்னை என்.ஐ.ஏ அதிகாரிகள் வற்புறுத்தினர்’ என்று சொல்லிவிட்டு வெளியேறியிருக்கிறாரே?" என்றும் கேள்வி எழுப்பி இருக்கின்றார். ஆனால் இதற்கு இந்தச் சட்ட திருத்தத்தின் சூத்திரதாரியான அமித்ஷா ஒழுங்கான எந்த பதிலையும் சொல்லவில்லை.
நாடு மிகப்பெரும் காவி தீவிரவாதத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றது. அரசு உறுப்புகள் அனைத்தும் காவி மயமாக்கப்பட்டுவிட்டது. இப்படிப்பட்ட அசாதாரண சூழ்நிலையில் தேசிய புலனாய்வு முகமை என்பது உண்மையில் இந்தியாவை தீவிரவாதத்தின் பிடியில் இருந்து காப்பாற்றத்தான் வேலை செய்து கொண்டிருக்கின்றது என்று நம்பி, அதை ஆதரிப்பவன் நிச்சயம் மாட்டு மூத்திரம் குடிப்பவனாக மட்டுமே இருக்க முடியும். வரலாற்றில் அரசின் பாத்திரம் பற்றிய எந்தவித அறிவும் இல்லாத அரசியல் தற்குறிகள் தான் இதுபோன்ற அப்பட்டமான பாசிச அமைப்பிற்கு ஆதரவாக வக்காலத்து வாங்குவார்கள்.
இணையக் குற்றங்களை விசாரிப்பதற்கான உரிமையையும், வெளிநாடுகளில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிரான குற்றச்செயல்களை மேற்கொள்வோரைக் கைது செய்யவும், மாநில காவல் துறையின் அனுமதி இல்லாமலே ஒருவரை கைது செய்து விசாரிப்பதற்கும் இந்தச் சட்டத் திருத்தம் அனுமதிக்கிறது, மேலும் கள்ளநோட்டு அச்சடிப்பது, ஆயுதக் கடத்தல், வெடிமருந்து தயாரிப்பு போன்ற குற்றங்களையும் இனி என்.ஐ.ஏ வே விசாரிக்கும் வகையில் புதிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருக்கிறார்கள். அதே போல இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் நீதிமன்ற நடவடிக்கைகள் ஏதுமில்லாமல், எவ்வளவு காலம் வேண்டும் என்றாலும் இனி சிறையில் வைத்திருக்க முடியும் என்ற நிலையையும் ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.
இவ்வளவு மோசமாக பாசிச அமைப்பாக கட்டமைக்கப்பட்டிருக்கும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பை ஒட்டுமொத்தமாக கலைக்க வேண்டும் என்பது ஒன்றுதான் ஜனநாயகவாதிகளின் குரலாக இருக்க முடியும். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர பெரும்பாலான கட்சிகள் ஆர்.எஸ்.எஸ் பிஜேபியின் இந்தச் சதி திட்டத்திற்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் வாக்களித்துள்ளார்கள். அப்படி வாக்களித்ததில் முக்கியமானது திமுக ஆகும். திமுக போன்ற கார்ப்ரேட் கட்சிகளின் ஜனநாயக யோக்கியதை என்பது இவ்வளவுதான். ஆனால் இன்னமும் தமிழ்நாட்டில் உள்ள திமுகவின் கூலிப்படை முற்போக்குவாதிகள் 'திமுக இஸ்லாமியர்களுக்கு ஆதரவான கட்சி' என்று பிரச்சாரம் செய்துகொண்டு இருக்கின்றார்கள். தற்போது அவர்கள்தான் இந்தத் தேசிய புலனாய்வு முகமை சட்டத் திருத்தத்தையும், தேசிய புலனாய்வு முகமையையும் தீவிரமாக ஆதரித்தும் வருகின்றார்கள். எனவே தமிழக மக்கள் இந்தச் சட்ட திருத்தத்தையும், தேசிய புலனாய்வு முகமையையும் ஆதரிக்கும் ஒவ்வொரு கட்சியும் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கட்சி என்பதையும், அவர்கள் அரசியல் களத்தில் இருந்தே அப்புறப்படுத்தப்பட வேண்டிய நச்சுக் கிருமிகள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
- செ.கார்கி