தமிழ்நாடு முதலமைச்சர், ஆளுநர் ஆர்.என் இரவியை சந்தித்திருக்கிறார். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பக் கோரியதை ஆளுநர் ஏற்றுக் கொண்டு விட்டதாக தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது. நீட் விலக்கு மசோதாக்களைப் போல வேறு பல மசோதாக்களையும் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். முதலமைச்சர் “The Dravidian Model” என்ற ஆங்கில நூலை ஆளுநருக்கு பரிசாக வழங்கியிருக்கிறார்.

தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பு இரண்டு செய்திகளைக் கூறுகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பை ஆளுநர் காப்பாற்ற வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் உணர்வை ஆளுநர் மதிக்க வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளையும் ஏற்று ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு நீட் விலக்கு மசோதாவை உறுதி கூறியபடி அனுப்பி வைப்பாரா ? மாட்டாரா ? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். (இது நாள் வரை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவில்லை) இந்தப் பிண்ணனியில் தமிழ்நாட்டு ஆளுநரைப் பற்றிய ஒரு வரலாற்று செய்தியை நினைவு படுத்துவது சரியாக இருக்கும்.

நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இரவி இருந்தார். நாகாலாந்தை தனி நாடாகக் கேட்டு பல ஆயுதம் தாங்கிய குழுக்கள் அங்கே போராட்டம் நடத்திக் கொண்டிருந்தன. 1947 ஆகஸ்டு 15 இந்தியா சுதந்திரம் அடைந்ததாக கூறப்பட்டாலும், அதற்கு முதல் நாள் ஆகஸ்டு 14ஆம் தேதி நாகாலாந்து தனி நாடு என்று போராளிக் குழுக்கள் அறிவித்து தங்களுக்கென்று தனி இராணுவம் ஒன்றை அமைத்துக் கொண்டனர். 1952இல் இந்திய ஒன்றிய இராணுவம் ஆயுதம் தாங்கிய நாகா குழுவை கடுமையாக ஒடுக்கியது. தற்போது மோடி ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு ஆயுதம் தாங்கிய ‘Nationalist Socialist Council of Nagaland’ (NSCN) என்ற அமைப்போடு ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. ஒன்றிய பேச்சுவார்த்தைக் குழுவிற்கு தலைமை தாங்கியவர் தற்போது தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கக் கூடிய இரவி. அப்போது அவர் நாகாலாந்தின் ஆளுநராக இருந்தார்.

2015ஆம் ஆண்டு ஆகஸ்டு 3ஆம் தேதி NSCN குழுவிற்கும் இந்திய ஒன்றிய அரசுக்கும் பிரதமர் மோடி முன்னிலையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில் இந்திய ஒன்றியத்தின் சார்பில் கையெழுத்தட்டவர் ஆர்.என். இரவி. அந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் இடம் பெற்றுள்ள வாசகம் மிக முக்கியமானது. ‘Recognize the unique history of Nagaland and its culture and positions of Naga's and sentiments.’ இதனுடைய அர்த்தம், ‘இந்திய அரசு நாகாலாந்து மக்களின் தனித்துவமான கலாச்சாரம், நாகாலாந்து போராளிக் குழுக்களின் நிலைப்பாடு, அவர்களுடைய உணர்வுகள், அவர்களுடைய விருப்பங்கள் இவைகளை அங்கீகரிக்கிறது’ என்று ஒன்றிய அரசினுடைய அறிவிப்பு வெளியானது. ஆனால் என்ன உடன்பாடு ஏற்ப்பட்டது என்பதை மட்டும் அவர்கள் இதுவரை இரகசியமாக அப்படியே வைத்திருக்கிறார்கள். இன்னும் வெளியிடவில்லை.

‘Shared Sovereignty’ (இந்திய இறையாண்மையை பகிர்ந்து கொள்கிறோம்) என்ற வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக பிறகு போராளிக் குழுத் தலைவர் ‘கரன் தாப்பர்’ என்ற பிரபல பத்திரிக்கையாளருக்கு அளித்தப் பேட்டியில் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். தங்களுக்கென்று தனி அரசியல் சட்டமும், கொடியும் வேண்டும் என்ற கோரிக்கை, பேச்சு வார்த்தையின் போது ஏற்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

ஒரு கட்டத்தில் நாகலாந்து ஆயுதம் தாங்கிய குழுக்களும் பிரச்சினையில் தொடர்புடைய அசாம் முதல்வர் பிஸ்வாஸ் சர்மா, நாகா முதல்வர் நெய்டியூரியோ ஆகியோரும் “பேச்சுவார்த்தையை ஒருங்கிணைக்கும் ஆர்.என்.ரவி, நம்பத்தகுந்த மனிதர் அல்ல; அவர் சதி செய்கிறார்; பேச்சு வார்த்தையிலிருந்து விலக வேண்டும்” என்று பிரதமரிடம் வலியுறுத்தினர். ஆர்.என். ரவியை, பிரதமர் மோடி பதவி விலகச் சொன்னார். பிறகு தமிழ்நாடு ஆளுநர் பதவிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நாகாலாந்திலிருந்து இராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) திரும்பப் பெற வேண்டும் என்று நாகாலாந்து சட்டசபை ஒருமித்து நிறைவேற்றிய தீர்மானத்தைத் தொடர்ந்து, அது குறித்து ஆராய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு குழுவை நியமித்திருக்கிறார். தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப மறுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவியின் அரசியல் பின்னணி இது.

மற்றொரு தகவலையும் குறிப்பிட வேண்டும்.

அய்க்கிய முற்போக்கு கூட்டணி 2007 ஆம் ஆண்டு நீதிபதி பூஞ்சே தலைமையில் ஒன்றிய மாநில அரசு உறவு பற்றி ஆராய ஒரு குழுவை நியமித்தது. அக்குழு 2010 இல் தனது பரிந்துரையை ஒன்றிய அரசிடம் அளித்தது. அதில் 2 கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை.

1) ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாவை, மீண்டும் சட்டசபை நிறைவேற்றி அனுப்பினால், (திருத்தங்களுடனோ அல்லது திருத்தம் இல்லாமலோ) ஆளுநர் மசோதாவை 6 மாதத்திற்குள் கட்டாயம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியாக வேண்டும்.

2) அதேபோல், குடியரசுத் தலைவரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதா சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றினால், குடியரசுத் தலைவர் கட்டாயம் அந்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும். இது நீதிபதி பூஞ்சே குழு வழங்கிய பரிந்துரை.

இவற்றை ஒன்றிய ஆட்சியும், ஆளுநரும், குடியரசுத் தலைவரும் கவனத்தில் கொள்வார்களா?

- விடுதலை இராசேந்திரன்

Pin It