ஜெர்மனியின் Verein für Raumschiffahrt என்ற ஆய்வு நிறுவனம் தான் 1930 களில் விண்வெளி ஆய்வுக்கான முதல் புள்ளியைப் போட்டது.
1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 அன்று ஸ்புட்னிக் -1 என்ற முதல் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது சோவியத் ஒன்றியம். ஜுலை 20, 1969 ஆம் ஆண்டில் அப்பல்லோ - 11 மூலம் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கினார்.
இன்று சந்திராயன் என்ற விண்கலனின் ‘லேண்டர்’ பகுதியைப் பிரித்து நிலவில் இறக்கத் தலைப்பட்டு விட்டார்கள் தரையில் இருக்கும் ஸ்ரீஹரிகோட்டா விஞ்ஞானிகள்.
இது அறிவியல் வளர்ச்சியில் விஞ்ஞானிகளின் சாதனைகளுள் ஒன்று. அதே சமயம் அஞ்ஞானவாதிகள், இந்த மாதிரி வானூர்தியை அந்தக் காலத்திலேயே முன்னோர்கள் பறக்க விட்டார்கள் என்று புராணக் கதை விடுவதைப் பார்க்கலாம்.
மனிதனின் அறிவு பலத்தால் செய்யப்பட்ட விண்வெளி ஏவுகணைப் பயணம் வெற்றி பெற திருப்பதிக்குச் செல்வது என்பது மனித ஆற்றலைப் பின் தள்ளுவதாகும்.
அறிவியல் வளர்ந்த அளவுக்கு மண்ணில் மனித நேயம் வளரவில்லை என்பதை மறுப்பதற்கு இல்லை.
மதம், சாதி, கலவரம் என்பதில் வன்முறை தலைவிரித்தாட சில அமைப்புகள் இறங்கி இருக்கின்றன என்பது வேதனைக்குரியது.
என்றைக்கு வேதங்கள் என்று சொன்னார்களோ, என்றைக்கு நான்கு வருணங்கள் என்று சொன்னார்களோ அன்றே இந்த வேதனை இந்நாட்டில் இறங்கி விட்டது.
இதற்குத் தீர்வு காண முயன்ற புத்தரையும் கூடக் கடவுளாக மாற்றி விட்டார்கள் மாற்றங்கள் வளர்ச்சியை நோக்கியதாக இருக்க வேண்டும் - சந்திராயன் போலவும், விஞ்ஞானிகள் போலவும்.
2024 ஆண்டு பொதுத் தேர்தலில் விஞ்ஞானிகள் போல ஒரு பெரிய மாற்றத்தை மக்கள் தரவேண்டும்.
I.N.D.I.A என்ற கூட்டணி ராக்கெட்டை வெற்றி பெறச் செய்து உயரப் பறக்க விட வேண்டும், சந்திராயன் போல.
- கருஞ்சட்டைத் தமிழர்