தமிழ்நாடு ஆளுநர் கடந்த ஆகஸ்ட் 12ஆம் நாள், “நீட்”டில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தேநீர் விருந்து வைக்கிறேன் என்று அவர்களையும், அவர்களின் பெற்றோரையும் ஆளுநர் மாளிகைக்கு வரவைத்து இருக்கிறார்.
பல லட்சங்கள் செலவு செய்து, பல ஆண்டுகள் தம் குழந்தைகளை இரவு பகலாகப், புத்தகப் புழுக்களாக துன்புற வைத்துத், தேவையற்ற மனஉளைச்சலும், பண விரயமும் சேர நொந்து போன பெற்றோரே அதில் அதிகம் என்பது தெரியவில்லையா அவருக்கு? இதில் மதிப்பெண் குறையக் குறைய கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் அதிகப் பணம் கட்டிச் சேர்க்க வேண்டிய பெற்றொரின் கவலைகளை அவர் எங்கே அறிந்திருக்கப் போகிறார்.
ஆளுநர் ஏதோ சாதனையாளரைப் போலவும், பரமகுரு போலவும் “நீட்”டின் மகத்துவத்தால் அவர்களுக்கு மருத்துவ இடம் கிடைத்தது எனவும் அதன் மூலம் “நீட்” பற்றிய பொய்ப் பரப்புரைகள் வீழ்த்தப்பட்டதாகவும் கதையளந்து இருக்கிறார்.
தமிழ்நாட்டில் நம் அரசால் நம் மக்கள் வரிப் பணத்தில் ஏற்படுத்தப்பட்ட மருத்துவக் கட்டமைப்பை இவர்கள் நாசமாக்கியதை உணராதவர்களா நம் பெற்றோர்?
அதில் அம்மாசியப்பன் ராமசாமி என்ற ஒரு மாணவனின் தந்தை எழுந்து, “என் மகள் “நீட்”டில் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரியில் சேருகிறாள். ஆனாலும் சொல்கிறேன், நீட் தேவையற்றது. எங்கள் மாநிலத்தில் ஏற்கனவே எங்களுக்கு நல்ல கட்டமைப்பு இருக்கிறது. என் போன்று செலவு செய்ய இயலாத பெற்றோர்
தங்கள் குழந்தைகளின் கனவை எவ்வாறு நிறைவேற்றுவர்? அதனால் நீங்கள் “நீட்” சட்ட வரைவில் கையெழுத்திட வேண்டும்” எனக் கேட்டிருக்கிறார்.
அவ்வளவு தான், ஆளுநர் மிக மோசமாக அவரை முறைத்து, அவரிடமிருந்த ஒலி வாங்கியைப் பிடுங்கச் செய்து, தான் எக்காரணம் கொண்டும் அதில் கையெழுத்து போடப் போவதில்லை எனப்பொங்கி இருக்கிறார்.
தமிழ்நாடு அரசு எப்படியாவது “நீட்”டை ரத்து செய்துவிடும் என நம்பிக்கை கொண்டிருந்த ஏழை எளிய தமிழ் மாணவர்களின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவதாக விழுந்திருக்கிறது அச்செய்தி. ஒரு மாணவரும், அவருடைய தந்தையும் அடுத்தடுத்து தற்கொலை செய்து இறந்திருக்கிறார்கள்.
இரண்டாம் முறையாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பியும், அவருக்கு அதிகாரமே இல்லை என குடியரசுத் தலைவரிடம் அனுப்பி அங்கு கிடப்பில் போடப் பட்டிருக்கிறது “நீட்” மசோதா. இதுவரை 16 மாணவ மாணவிகளும் ஒரு பெற்றோரும் “நீட்”டால் உயிரிழந்து இருக்கின்றனர்.
மனித உயிர்களின் மாண்பறியாத இந்த சனாதனிகள் ஆளுநராக அல்ல ஆண்டவனாக இருந்தாலும் விரைவில் வெளியேற்றப்படுவர்.