கடந்த ஆகஸ்ட் 15 அன்று உச்ச நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றியபின் உரையாற்றிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, "இந்திய நாடாளுமன்றத்தில் விவாதங்களும் நடைபெறவில்லை, ஜனநாயகமும் இல்லை" என்று பேசியிருக்கிறார். இதுதான் "உண்மையான மன் கி பாத்" என்று முரசொலியில் எழுதப்பட்டுள்ள தலையங்கம் மிகச் சரியானது.

நீதிபதி கொடியேற்றிவிட்டு நீதிமன்றத்திற்குள் உள்ளே சென்றிருக்கலாம். அதுதான் வழக்கமானதும் கூட. ஆனால் இம்முறை, நீதிமன்றத்திற்கு வெளியில் அவர் ஓர் சிற்றுரை ஆற்றியுள்ளார். அதில்தான் மேற்காணும் வரிகளைக் குறிப்பிடுகின்றார். ஓர் உச்சநீதி மன்றத்தின் நீதிபதி இவ்வளவு வெளிப்படையாகத் தன் உள்ளக்குமுறலை எடுத்துச் சொல்ல வேண்டிய நிலைக்கு நம் நாடு வந்துவிட்டது என்பது மிகுந்த வேதனைக்குரியதாகும்.

opposition leadersஇந்தச் சூழலில்தான் நேற்று, காணொலி வாயிலாக 19 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து கலந்துரையாடியுள்ளனர். காங்கிரஸ், திமுக, திரிணாமுல் கட்சி, பொதுவுடைமைக் கட்சிகள், தேசியக் காங்கிரஸ், சிவசேனா என்று பல்வேறு கட்சிகள் உரையாடலில் இணைந்துள்ளன. தமிழ்நாடு, மேற்கு வங்கம்,மகாராஷ்டிரம், ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களின் முதலமைச்சர்களும் அதில் பங்கேற்றுள்ளனர்.

அந்தக் கலந்துரையாடலில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதப் போக்கை எதிர்ப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் கூடிப் பேசியுள்ளன. என்றாலும், மக்களுக்கான தடுப்பூசி தொடர்பானத் தீர்மானமே முதல் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது. மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட வேண்டும், பெகாசஸ் தொடர்பாக விசாரிப்பதற்கு நீதிமன்ற ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

முதலாளித்துவம் தனக்கானப் புதைகுழியைத் தானே தோண்டிக் கொள்ளும் என்பார் மார்க்ஸ். பாசிசமும் அதே வழியில்தான் பயணம் செய்யும். பல்வேறு காரணங்களால் பிரிந்து கிடந்த எதிர்க்கட்சிகளை ஆளும் கட்சியின் பாசிசம் இன்று ஒன்று சேர்த்திருக்கிறது.

இந்தக் கூட்டணி பிரியாதிருக்க வேண்டும் என்பதோடு, தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கவும் வேண்டும். ஏற்கனவே பிரதமர் மோடியின் செல்வாக்கு குறைந்து கொண்டே இருக்கிறது. சில நாள்களுக்கு முன், இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக் கணிப்பில். சென்ற ஆண்டு 66% ஆக இருந்த பிரதமரின் செல்வாக்கு இந்த ஆண்டு அதே ஆகஸ்ட் மாதத்தில் 24% ஆகக் குறைந்துள்ளது என்று கூறுகின்றது. இது ஓர் இமாலயச் சரிவு!

இந்தச் சரிவிற்கு என்ன காரணம்? பண வீக்கம், விலைவாசி உயர்வு ஆகியனவற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கலே பெரும்பபான்மை மக்களின் மனமாற்றத்திற்குக் காரணமாக உள்ளது என்கிறது இந்தியா டுடே. இதனைத் தாண்டி, ஒன்றிய அரசு மற்றும் ஆளும் கட்சியின் சர்வாதிகாரப் போக்கை, பாசிசத் தன்மையை மக்களிடம் மேலும் விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். அண்மையில், கான்பூரில், "ஜெய் ஸ்ரீ ராம்" என்று கூறத் தயங்கிய ஒரு இஸ்லாமியப் பெரியவரையும் அவருடைய மகளான ஒரு சிறுமியையும் அடித்து இழுத்துக் கொண்டு போகும் காட்சி காணொலிகள் எங்கும் பரவியதைப் பார்த்தோம். இந்த நிலை இனியும் தொடரக் கூடாது.

எல்லாவற்றையும் எதிர்க்கட்சிகள் பார்த்துக் கொள்வார்கள் என்று மக்கள் இருந்துவிடக் கூடாது. மக்கள் விழிப்புற்று எழ வேண்டும். அதற்கு அனைத்துச் ஜனநாயகச் சக்திகளும் தங்களால் இயன்றவற்றைச் செய்திடல் வேண்டும்!

சுப. வீரபாண்டியன்

Pin It