உலகத்திலேயே மிகச் சிறந்த ஜனநாயகத்தை நாங்கள் தான் (இந்தியா) கடைப்பிடிக்கிறோம் என்று உலகம் சுற்றும் பிரதமர் மோடி சொல்லிக் கொண்டு இருக்கிறார்
மணிப்பூரில் நடைபெற்ற வன்முறைக் கலவரம், இடிக்கப்பட்ட தேவாலயங்கள், மசூதிகள், கோயில்கள், வதைக்கப்பட்ட மக்கள், சொல்வதற்கு நா கூசும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், கொலைகள், இவைகள் எதையும் வெளிவராமல் இணையம் மற்றும் ஊடகச் சேவைகளை முடக்கிப் போட்ட மோடியின் பா.ஜ.க ஜனநாயகத்தை உலகமே வெட்கித் தலைகுனிந்து பார்க்கிறது.
இது குறித்து விவாதிக்க ‘இந்தியா’ கூட்டணி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரவைத் தலைவரிடம் ஒத்திவைப்புத் தீர்மானத்திற்கு அனுமதி கேட்டாலும் பயனில்லை.
நாடாளுமன்றம் வருகிறார் பிரதமர், அவரின் அலுவலகம் செல்கிறார். ஆனால் நாடாளுமன்ற இரு அவைகளுக்கு மட்டும் அவர் வருவதில்லை.
மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல், அங்கு அமைதிப் பேரணி நடத்தாமல், தமிழ்நாட்டில் ஒரு நடைபயணத்தை நடத்திக் கொண்டு இருக்கிறது பா.ஜ.க. இந்நடை பயணத்தைத் தொடக்கி வைத்தவர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இது தான் மோடி சொல்லும் ஜனநாயகமா?
நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்ப்பு, கூச்சல் குழப்பம், ஒத்திவைப்பு என்று இருந்தாலும், பிரதமர் இல்லாமலே, விவாதம் இல்லாமலே பா.ஜ.கவுக்குச் சாதகமான மசோதாக்கள் நிறைவேற்றப் படுகின்றன.
எடுத்துக் காட்டாக டில்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் இருந்தாலும், அவரின் அதிகாரத்தைப் பறிக்க உச்ச நீதிமன்ற உத்தரவை மீறிச் சட்ட மசோதாவை நிறைவேற்றுகிறது பாசிச பா.ஜ.க அரசு.
அதாவது டில்லி துணை நிலை ஆளுநர் இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிப்பாராம். டில்லி முதலமைச்சருடன் இந்த அதிகாரிகள் சேர்ந்து மாநிலப் பிரச்சனைகளைப் பேசுவார்களாம். இறுதி முடிவு அந்த அதிகாரிகள் எடுக்கும் முடிவுதானாம். அப்படியானால் முதல்வர் கெஜ்ரிவால் அதிகாரமற்ற ஒரு பொம்மைதான். இது தான் மோடியின் ஜனநாயகமா?
உயர உயரப் பறந்தாலும் தரையில் இறங்கித்தான் ஆக வேண்டும். அவர்கள் இட்லர்களாக இருந்தாலும் சரி, முசோலினிகளாக இருந்தாலும் சரி, விதி ஒன்றுதான்.
ஜனநாயகப் படுகொலையை, அதே ஜனநாயத்தைக் கொண்டுதான் சரி செய்ய வேண்டும்.
அந்த வேலையை 2024 ஆம் ஆண்டில் மக்கள் செய்வார்கள். அதற்கு ‘இந்தியா’ எதிர்க்கட்சிக் கூட்டணி கடுமையாகவும், கவனமாகவும் உழைக்க வேண்டும்.
- கருஞ்சட்டைத் தமிழர்