பேரவையின் செயற்குழுத் தீர்மானங்கள்

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் செயற்குழுக் கூட்டம், 12.08.2018 அன்று மாலை 3 மணி முதல் 6 மணி வரையில், திருச்சி, அருண் ஹோட்டல், சிற்றரங்கில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர்கள் 32 பேரும், சிகாகோவிலிருந்து வந்திருந்த வீரசேகரன் உள்ளிட்ட 8 சிறப்பு விருந்தினர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

subavee meeting

கூட்டம் தொடங்குமுன், முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் படத்திற்கு மலர் வணக்கம் செய்யப்பட்டது. பிறகு கூட்டத்திற்குத் தலைமை வகித்த, பேரவையின் அவைத் துணைத் தலைவர் சாவல்பூண்டி சுந்தரேசன் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து, தோழர்கள் மா.உமாபதி, சிங்கராயர், சிற்பி செல்வராஜ், எட்வின், சுப.வீரபாண்டியன் ஆகியோர் உரையாற்றினர்.

கீழ்வரும் தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இந்த ஆண்டு முதல், துப்புரவுத் தொழிலாளர் அல்லது அருந்ததியர் பிள்ளைகளை ஆண்டுக்கு ஐந்து பேர் என்று தேர்ந்தெடுத்து, அவர்களுக்கான நிதியுதவி உள்ளிட்ட கல்வி வசதி வாய்ப்புகளைத் திராவிடத் தமிழர் அறக்கட்டளை மூலமாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அவர்களின் மேற்படிப்பு வரையில் நிதியுதவியைத் தொடர்வதென்றும் முடிவு செய்யப்பட்டது.

1. இன்றைய தமிழக அரசியல் களத்தில், தி.மு.கழகத்தினை வீழ்த்திட வேண்டும் என்ற நோக்கில், பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்கின்ற பா.ஜ.க.வை அம்பலப்படுத்தி, அவர்களுக்குத் துணைபோகும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை வீழ்த்தி, அடுத்துவரும் தேர்தலில், தி.மு.க.வை ஆட்சிக்கட்டிலில் அமர்த்திட, நாடெங்கும் பரப்புரைகளை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

2. மேலை நாடுகளிலும், இந்தியாவில் உள்ள கேரளத்திலும் கூட, பாதாளச் சாக்கடைகளைத் துப்புரவு செய்வதற்குக் கருவிகள் வந்துவிட்டன. ஆனால் தமிழ்நாட்டிலோ, இன்னும் மனிதர்களே சாக்கடைக்குள் இறங்கும் அவலநிலை உள்ளது. அதே போல கையால் மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாளர்களை நாடெங்கும் பார்க்க முடிகிறது. இந்த இழிவுகள் துடைக்கப்பட வேண்டும், இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, இத்தொழிலாளர்களுக்கு மாற்றுப் பணிகள் தரப்பட வேண்டும். இதனை வலியுறுத்தி, மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும், அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

3. இலெனின் சிலையமைப்புக் குழு இம்மாத இறுதிக்குள், தங்கள் திட்டத்தைத் தலைமைக்கு அறிவிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

4. மகளிர் அணிச் செயலாளர் மகாலட்சுமியும், புதுவை மாநிலப் பொறுப்பாளர் திராவிட மங்கையும் இணைந்து, தமிழகம் முழுவதும் பேரவையின் மகளிர் அணியைக் கட்டமைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

5. புலவர் ஜெயபால் சண்முகம், புலவர் செல்லக்கலைவாணன் ஆகியோர் பேரவையின் இலக்கிய அணியையும், தோழர் நெல்லை சந்தானம் இளைஞர் அணியையும் மறுசீரமைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

6.         இன்னும் உறுப்பினர் படிவங்களை நிரப்பி அனுப்பாத மாவட்டச் செயலாளர்கள், வரும் 31 ஆம் தேதிக்குள் அப்பணியை முடிக்க வேண்டும் என்றும், செப்.17 முதல் அனைவருக்கும் உறுப்பினர் அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

Pin It