கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம் என்ற ஜஸ்டிஸ் கட்சிக்குத் திராவிடர் கழகம் என்ற பெயர் மாற்றம் ஒரே நாளில் எடுக்கப்பட்ட முடிவல்ல. ஒராண்டு காலமாகப் பல்வேறு மாநாடுகளில் விவாதிக்கப்பட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

26-4-43 நண்பகல் 2 மணிக்குச் சேலம் தேவங்கர் பள்ளிக் கூடத்தில் ஜஸ்டிஸ் கட்சியின் நிர்வாகக் குழுக்கூட்டம் பெரியார் தலைமையில் கூடியது. அக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் - 2

“ஜஸ்டிஸ் கட்சிக்கு (S.I.L.F) தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் என்றிருக்கும் பெயரைத் தென்னிந்திய திராவிடர் கழகம் என்றும், ஆங்கிலத்தில் South Indian Dravidan Fedration என்றும் பெயர் திருத்தப்பட வேண்டும்.

தீர்மானம் - 4

இத்தீர்மானங்களைச் சேலத்தில் நடக்க போகும் கட்சி மாநாட்டில் உறுதிப்படுத்தி அமலுக்குக் கொண்டு வர வேண்டுமென்று இக்கமிட்டி தீர்மானிக்கிறது.

(குடி அரசு 4-12-43 பக்கம் 5)

ஜஸ்டிஸ் கட்சிக்கு அமைந்த தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் என்ற பெயர் இனித் தென் இந்திய திராவிடர் கழகம் என்பதாக அழைக்கப்பட வேண்டும் என்பதாகும். இந்தத் தீர்மானமும் ஒரு விதத்தில் திருவாரூர் மகாநாட்டில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்றே சொல்லலாம்.

(குடி அரசு 4-12-43 பக்கம் 11)

கோவையில் 19-11-43 அன்று அறிஞர் அண்ணாவின் சந்திரோதயம் நாடகத்திற்குப் பெரியார் தலைமைத் தாங்கினார். அப்போது பெரியாருக்கு வாசித்தளித்த வரவேற்புத் தாளில் கோவை மாவட்ட திராவிட கழகத்தால் என்று அச்சிட்டிருந்தனர்.

(குடி அரசு 18-12-43 பக்கம் 4)

சேலம் நகரில் செவ்வாய்பேட்டை திராவிடர் கழகத்தின் முதலாவது ஆண்டுவிழா 16-1-44 முற்பகல் 11 மணிக்குத் தொடங்கியது. தொடக்கத்தில் சேலம் தோழர்கள் பெரியார் ஈ. வெ. ரா., அண்ணாதுரை, என்.அர்ச்தனன், ஐ. ச. கண்ணப்பர் ஆகியவர்களை இரட்டைக் குதிரை கோச்சு வண்டியில் அமரவைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

(குடி அரசு 22-1-44 பக்கம் 6)

1943இலேயே இங்குத் திராவிடர் கழகம் தொடங்கப் பட்டு முதலாமாண்டு விழாவும் நடைபெற்றுள்ளது. புவனகிரி திராவிடர் கழக ஆரம்ப விழா 6-2-44 காலை 10.30 மணிக்கு சி.பி.சின்னராசு தலைமையில் நடைபெற்றது. பெரியார் அவர்களுக்குத் திராவிடர் கழகத்தாரால் வாழ்த்து மடல் வாசித்து அளிக்கப்பட்டது.

(குடி அரசு 12-2-44 பக்கம் 5)

சென்னையில் நீதி கட்சியின் சென்னை மாவட்ட மாநாடு 13-2-44 அன்று தோழர் சி. என். அண்ணாதுரை அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அப்போது நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களில் முதலாவது தீர்மானம் கட்சியின் பெயர் மாற்றத் தீர்மானமாகும்.

1. தென் இந்தியர் நல உரிமைச் சங்கம் என்பதைச் சென்னை மாகாண ‘திராவிடர் கட்சி’ என்று மாற்றுமாறு சேலத்தில் நடைபெறப்போகும் மாகாண மாநாட்டிற்கு இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

(குடி அரசு 26-2-44 பக்கம் 14)

திருச்சி மாவட்ட நீதிக்கட்சி 15ஆவது மாநாட்டில் 20-2-44 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று கட்சியின் பெயர் மாற்றத் தீர்மானம் பற்றியது ஆகும். அண்மையில் சேலத்தில் நடக்கவிருக்கும் நமது மாகாண மாநாட்டில் நமது கட்சியின் பெயரைத் “திராவிடர் கழகம்” என்று மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையை இம்மாநாடு சிபாரிசு செய்கிறது.         (குடி அரசு 4-3-44 பக்கம் 4)

நாகையில் திராவிடர் கழகம் திறப்பு விழா 9-3-44 முற்பகல் 11.45 மணிக்கு நடைபெற்றது. நாகை திராவிடர் கழகத்தாரால் பெரியாருக்கு நல்வரவேற்பிதழ் வாசித்து அளிக்கப்பட்டது. சி. பி. சின்னராசு, எஸ். கே. சாமி ஆகி யோர் உரையாற்றிய பின் டி. வி. சொக்கப்பா தலைமையில் பெரியார் திராவிடர் கழகத்தைத் திறந்து வைத்தார்.

(குடி அரசு 18-3-44 பக்கம் 5)

11-3-44 அன்று திருச்சி பொன்மலையில் கற்கண்டார் கோட்டை ‘திராவிடர் கழக’த் திறப்பு விழாவும் பொதுக் கூட்டமும் நடைபெற்றது. பெரியாருக்கு 102 காலனாக்கள் பணமுடிப்பளித்தனர்.

(குடி அரசு 18-3-44 பக்ம் 10)

கோவை மாவட்ட திராவிட இளைஞர் மாநாடு

17-4-44 அன்று ஈரோடு சரஸ்வதி ஹால் என்னும் மண்டபத்தில் கோவை மாவட்ட முதலாவது திராவிட இளைஞர் மாநாடு தோழர் சி. என். அண்ணாதுரை அவர்கள் தலைமையில் நடைபெறும். க. அன்பழகன், இரா. நெடுஞ் செழியன் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள். அனை வரும் வருக.

(குடி அரசு 15-4-44 பக்கம் 5)

மேற்கண்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களில் ஒன்று பெயர் மாற்றத் தீர்மானம் ஆகும். அண்மை யில் நடக்கவிருக்கும் நீதி கட்சியின் மாகாண மாநாட்டில் அக்கட்சியின் பெயரைத் “திராவிடர் கழக”மென்று மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

சேலத்தில் சூன் 18, 19 ஆகிய நாட்களில் நடைபெற்ற சேலம் மாவட்ட திராவிட இளைஞர் மாநாட்டு தீர் மானங்களில் முதன்மையானது.

1. நீதி கட்சியையும், தன் மதிப்பியக்கத்தையும், ஒன்றுபடுத்தி திராவிடர் இயக்கமென்று பெயரிட்டு நிதியும், கழகங்களும், தினசரித்தாளும் அமைத்து ஆக்க வேலை செய்ய பெரியால் ஈ. வெ. ரா.வை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

(குடி அரசு 8-7-44 பக்கம் 11)

11-7-44 அன்று தஞ்சையில் ஊ. ஆ. பூ. சௌந்தர பாண்டியன் தலைமையில் தஞ்சை மாவட்ட திராவிடர் இளைஞர் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் நீதிக் கட்சியையும் தன் மதிப்பியக்கத்தையும் ஒன்றுபடுத்தி ‘திராவிடர் இயக்கம்’ என்று பெயரிட வேண்டும்மென்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

(குடி அரசு 29-7-44 பக்கம் 2)

திராவிடர்களே சேலம் மாநாட்டிற்குச் செல்லுங்கள் என்ற தலையங்கம் எழுதப்பட்டது. அத்தலையங்கத்தில் நாம் திராவிடர், நம் கழகம் திராவிடர் கழகம், நமக்கு வேண்டியது திராவிட நாடு என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

(குடி அரசு 12-8-44 பக்கம் 6)

20-8-44இல் நடத்த இருந்த சேலம் மாநாடு சரியான ஏற்பாடு செய்யப்படாததால் 27-8-44க்குத் தள்ளி வைக்கப் பட்டு நடைபெற்றது.

சேலம் மாநாட்டுக்கு வரும் தீர்மானங்கள் கட்சி அரசியல் தீர்மானங்கள்

1. (அ) இந்த மாநாடானது ஜஸ்டிஸ் கட்சி என்னும் இக்கட்சிக்கு உள்ள தென்இந்தியர் நலஉரிமைச் சங்கம் என்ற பெயரை திராவிடர் கழகம் `Dravidian Association’ என்று பெயர் மாற்றத் தீர்மானிக்கிறது.

(குடி அரசு 26-8-44 பக்கம் 3)

சேலம் மாநாடு ஒரு வாரம் தள்ளிப் போடப்பட்டதால் மாநாட்டிற்கு வரும் தீர்மானங்கள் முன் கூட்டியே குடி அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

27-8-44இல் நடைபெற்ற சேலம் மாநாடு சேலம் நகரையே உலுக்கியது. ஊர்வலத்தில் 30,000 பேர், உயிருக்குத் துணிந்த வீரர்கள் 5,000 பேர், 40 குதிரைகள், 2 யானைகள், 4 சக்கர இரட்டைக் குதிரை சாரட்டில் தலைவர் ஊர்வலம் டஜன் கணக்கான கார்கள் பின் தொடர்ந்தன. புதிய உடையுடனும் கொடியுடனும் 300 தொண்டர்கள், 5 ஜதை பாண்டு, 10 ஜதை மேளம், 100 தப்பட்டை, 40 கொம்புகள் பெரியார் வாழ்க, திராவிட நாடு திராவிடர்க்கே, திராவிடர் கழகம் ஓங்குக என்ற முழுக்கம் பிற்பகல் மாநாடு பெரியார் தலைமையில் மாலை 3 மணிக்கு கூடியது.

ஜஸ்டிஸ் கட்சியின் பெயரை அதாவது தென்னிந்திய நல உரிமைக் கழகம் என்பதைத் திராவிடர் கழகம் என்பதாக மாற்ற வேண்டும் என்ற தீர்மானம் தோழர் அண்ணாதுரை அவர்களால் முன்மொழியப்பட்டது. தோழர் டி. சண்முகம் அவர்கள் அமோதித்தார். இத்தீர்மானத்தைத் தோழர்கள் சி. ஜி. நெட்டோ, அ. கணேச சங்கரன், எ. வேணுகோபால் ஆகியவர்கள் விஷய ஆலோசனைக் கூட்டத்தில் அனுமதித்து விட்டுப் “போதுமான கால நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை” என்பதாக ஆட்சேபித்தார்கள்.

தலைவர் பெரியார் எழுந்திருந்து ‘ஜஸ்டிஸ்’ என்பது பத்திரிகையின் பெயர் என்றும், இக்கட்சியின் பெயர் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்பதாகவும், சேலத்தில் 26-11-43 இல் கூடிய நிர்வாக சபை கூட்டத்தில் (இவர்களும் கூடியிருந்த நிர்வாகசபைக் கூட்டத்தில்) ஜஸ்டிஸ் கட்சி என்றிருப்பதை ‘திராவிடர் கழகம்’ என்பதாக மாற்ற வேண்டுமென மாகாண மாநாட்டுக்கு சிபாரிசு செய்திருப்பதாகவும் மற்றும் பல சங்கங்கள் ஆதரித்திருப்பதாகவும் தென்னிந்தியர் என்றாலும் திராவிடர் என்றாலும் ஒன்றுதான் என்றும் தெரிவித்தார்.

பின்னர் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ஆயிரக்கணக்கான கைகள் உயரத்தூக்கின. ஆட்சேபிக்கிறவர்கள் கை தூக்கும்படி கேட்கப்பட்ட போது யாரும் கை தூக்கவே இல்லை. ஆட்சேபித்தவ ர்களும் சும்மா இருந்து விட்டார்கள். எனவே, தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

(குடி அரசு 2-9-44 பக்கம் 3)

சேலம் மாநாடு பற்றிப் பெரியார் அறிக்கை

சேலம் மாநாட்டைப் பற்றி ஒரு சிலர் தாறுமாறான அறிக்கைகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி வருகிறார் கள். அவைகள் ஒன்றும் நேர்மையானவை அல்ல, பெரும் பாலான விஷயங்கள் உண்மையுமல்ல. அந்த அறிக்கைகள் எனக்கு ஒன்றும் அனுப்பவுமில்லை.

மாநாட்டில் ஜஸ்டிஸ் கட்சிக்கு தென் இந்திய நல உரிமைச் சங்கம் என்று, இருந்த பெயரைத் ‘திராவிடர் கழகம்’ என்று மாற்றப்பட்டது உண்மைதான், ஆனால் அத்தீர்மானம் பொதுக்கூட்டத்தில் பிரேயித்து ஆமோதித்த வுடன் இதற்குப் “போதிய நோட்டீஸ் இல்லை” என்று மாத்திரம் தோழர் நெட்டோ சொன்னார். அதை கணேசங்கரன் ஆதரித்தார். தலைவர் அதற்குச் சமாதானம் சொன்னார்.

“சேலத்தில் 26-11-43ம் தேதியில் நடந்த S.I.L.F நிர்வாகச் சபைக் கூட்டத்தில்” பெயர் மாற்றம் நிறைவேற்றப்பட்டு அதைச் சேலத்தில் நடக்கும் மாகாண (இந்த) மாநாட்டுக்குச் சிபாரிசு செய்வதாகவும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

அதில் தோழர்கள் நெட்டோ, இரத்தினம் பிள்ளை முதலியவர்களும் இருந்திருக்கிறார்கள். அதன் பின் சுமார் 20-க்கு மேற்பட்ட ஜில்லா, தாலுக்கா மாநாடுகளில் இது நிறைவேற்றப்பட்டு சேலம் மாநாட்டுக்குச் சிபாரிசு செய்யப்பட்டு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாநாட் டிற்கும் இதுபற்றி வெளியூர்களில் இருந்து ஏராளமான தீர்மானங்கள் வந்திருக்கின்றன, அவை தோழர் நெட்டோ அவர்கள் வசமே இன்னமும் இருக்கின்றன.

அன்றியும் தென் இந்தியர் கழகம் என்பதும் திராவிடர் கழகம் என்பதும் ஆதியில் ஏற்படுத்தினவர்களின் கருத்தில் வித்தியாசம் கொண்டதல்ல, மக்களுக்கு இன எழுச்சியும், நாட்டு எழுச்சியும் ஏற்படுவதற்கும், திராவிட நாடு கேட்பதற்கும் ஊக்கம் அளிப்பதற்கும் ஆகவே அச்சிறு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது” என்று சொன்னார்.

பிரதிநிதிகள் ‘ஓட்டு ஓட்டு’ என்றார்கள், ஓட்டுக்கு விடப்பட்டது; ஏகமனதாய் நிறைவேறிற்று. அப்போது தோழர் நெட்டோ அவர்களும் மற்றும் இப்போது அறிக்கை விடும் நண்பர்களும் இருந்தார்கள். எதிர்ப்புக்கு நெட்டோ வாவது இதர நண்பர்களாகவது கை துhக்கியோ, ஓட்டு கொடுக்கவில்லை; வேறு ஒருவரும் எதிர்ப்புக்கு ஓட்டு கொடுக்கவில்லை.

இதுதான் பெயர் மாற்றத் தீர்மானத்தினு டையவும் அதன் எதிர்ப்பினுடையவும் நடவடிக்கையாகும். நெட்டோ முதலியவர்களால் பத்திரிகைகளுக்கு வந்த சேதிகள் பின்னால் யோசித்துச் சொல்லப்படுபவைகளாகும்.

மாநாடு வெற்றியாக முடிந்து தலைவர் முடிவுரை ஆனவுடன் ராவ்சாகிப் துரைசாமி பிள்ளை அவர்கள் வரவேற்புக் கழகச் சார்பில் தீர்மானங்களைப் புகழ்ந்து கூறித் தலைவருக்கும், தோழர் பாண்டியனுக்கும், வரவேற்புத் தலைவர், காரியதரிசி, ஆகியவர்களுக்கும் பிரதிநிதிகளுக்கும், மாநாட்டுக் கொட்டகை உதவிய முனிசி பாலிட்டியாருக்கும் மற்றவர்களுக்கும் பெருத்த கைத்தட்டலிடையே நன்றி கூறினார்கள்.

மாநாடு எவ்வித ஒரு சிறு அபிப்பிராய பேதமோ மேற்கண்டதைக் தவிர ஒரு சிறு எதிர்ப்போ இல்லாமல் நடைபெற்றது. தீர்மானங்கள் யாவும் ஏகமனதாய் நிறைவேறின. இதற்குப் பத்திரிகை நிருபர்களும் சர்க்கார் ஊ. ஐ. னு. சுருக்கெழுத்தாளர்கள், ரிக்கார்டுகளும், அதிகாரிகளும், கட்சியாளர்களும், பிரதிநிதிகளும் சாட்சியாகும்.

ஈ. வெ. ராமசாமி

(குடி அரசு 2-9-44 பக்கம் 8)

குறும்புத்தனமான அறிக்கைகள்

சேலம் மாநாடு முடிந்த பிறகு பத்திரிகைகளில் சிலர் குறும்புத்தனமான அறிக்கைகள் விட்ட வண்ணம் இருக்கிறார்கள். நம் எதிரிகளான பார்ப்பனர் முதலிய பத்திரிகைக்காரர்கள் இந்த சமயத்தைத் தங்களுக்கு அனுகூலமாக ஆக்கிக்கொண்டு அதற்கு விஷமத்தனமான பெரிய தலைப்புக் கொடுத்து அதிக விளம்பரம் செய்து வருகிறார்கள்.

நம் இயக்கம் செய்ய வேண்டிய வேலைகளும் அது அடைய வேண்டிய வெற்றிகளும் இந்த இரு கூட்டத்தினால் தடைப்பட்டு போய்விடாது என்கிற தைரியத்தாலேயே அவைகளை நாம் பிரமாதமாக லட்சியம் செய்வதில்லை என்பதோடு நம் உண்மைத் தோழர்களும் மதிக்கமாட்டார்கள் என்பதும் நாம் அறிவோம்...

ஒரு சபைக்குப் பெயர் மாற்ற அச்சபை பொது மாநாட்டிற்கு அதிகாரம் இல்லை என்று சொல்லுவது அறிவுரையாகாதென்றே சொல்வோம்.

அடுத்த ஆட்சேபனை போதிய நோட்டீசு (அறிவிப்பு) இல்லை என்பது. இது பரிகசிக்கத்தக்கதேயாகும்.

நோட்டீசு இல்லாமல் மாநாடுகளில் எத்தனையோ தீர்மானங்கள், எத்தனையோ மாகாண மாநாடுகளில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்றாலும் அந்த முறை யையோ, மாற்றியதையையோ இப் பேர் மாற்றத் தீர்மானத் திற்கு நாம் உரிமை பாராட்டவில்லை.

இத்தீர்மானமானது முறைப்படி சேலத்தில் 10 மாதங்களுக்கு முன் கூட்டப்பட்ட நிர்வாக சபைக் கூட்டத்தில் தோழர்கள் இரத்தினசாமி, நெட்டோ, அவர்கள் வீற்றிருந்த கூட்டத்தில் நெட்டோ அவர்களின் ஆதரிப்பின் பேரிலேயே “தென் இந்திய நல உரிமைச் சங்கம் என்பதை திராவிடர் கழகம் என்று அழைக்கப்பட வேண்டும்” என்று ஏகமனதாக தீர்மானித்து ‘இந்த தீர்மானத்தை மாகாணப் பொது மாநாட்டுக்கு இக் கமிட்டி சிபாரிசு செய்கிறது’ என்று தீர்மானித்து இருப்பதோடு ‘அப்படி கூட்டப்படும் மாநாட்டை சேலத்தில் நடத்த வேண்டும்’ என்றும் அந்த வினாடியிலேயே மாநாட்டை அறிவித்தவர்கள் இதே தோழர்கள் இரத்தினம் பிள்ளையும் நெட்டோ அவர்களும் ஆவார்கள்.

அன்றியும் சேலம் நிர்வாக சபைக் கூட்டத்திற்கு பிறகு கூட்டப்பட்ட பல ஜில்லா, தாலுக்கா மாநாடுகளில் இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுக் காரியாலயத்திற்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.

இவை மாத்திரமல்லாமல் 27-8-44 இல் நடந்த சேலம் மாநாட்டுக்குக் கூட மாநாட்டாரின் அறிக்கைப்படி இது சம்பந்தமாக பல ஸ்தாபனங்களிலிருந்தும், தனிப்பட்ட வர்கள் இருந்தும் தீர்மானங்கள் வந்திருக்கின்றன. இந்த 10 மாதகாலமாக இவை பத்திரிகைகளிலும் விளம்பரப்படுத் தப்பட்டிருக்கின்றன. இனி எந்த விதமான முன் அறிவிப்பு (நோட்டீசு) வேண்டுமென்று இவர்கள் கருதுகிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.

அன்றியும் விஷயாலோசனைக் கமிட்டிக் கூட்டத்தின் போது இந்த ஆலோசனைக்காரர்கள் இருந்து இத்தீர்மானம் நிறைவேற்றப்படும் போது ஒரு அதிருப்தியும் காட்டாமல் ஆதரவாளர்களாக இருந்து விட்டு, வேறு காரியங்களுக்காக இவர்கள் மீது ஒழுங்கு முறை நடவடிக்கைத் தீர்மானம் நிறைவேறியவுடன் அத்தீர்மானம் தங்கள் மீதும் நடவடிக்கை எடுத்துக் கொள்ள இடமிருக்கிறதென்று கருதி பயந்து போய் அதிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு தந்திரமாக இந்தச் சாக்கை ஒரு சிலர் உபயோகிக்க, பின்னால் யோசனை செய்து கண்டு பிடிக்கப்ப பட்டதல்லாமல் இதில் வேறு உண்மையோ, நியாயமோ, நாணயமோ என்ன இருக்க முடியும் என்று கேட்கிறோம்.

(குடி அரசு 9-9-44 பக்கம் 6, 7)

சேலம் மாநாட்டின் செயலாளராக இருந்தவர் நெட்டோ, சேலம் மாநாட்டின் வரவேற்புக்குழு தலைவராக இருந்தவர் இரத்தினம் என்பவர் இவர்கள் இருவரும் தான் திராவிடர் கழகம் என்பதற்குப் பதிலாக பழைய ஜஸ்டிஸ் கட்சி என்ற பெயரே இருக்க வேண்டும். பெயர் மாற்றம் தேவையற்றது அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அறிக்கை விட்டவர்கள்.

சேலம் மாநாட்டில் பெரியாரின் தலைமையை மாற்ற வேண்டுமென்று செயல்பட்டவர் பாலசுப்பிரமணியம் ஆவார், அவரும் பின்னர் தன்பேச்சை பின் வாங்கிக் கொண்டார்.

கி.ஆ.பெ. விசுவநாதம் மாநாட்டுத் திறப்பாளர். அவர் பெரியாரைப் பற்றி கிண்டலும் கேலியுமாகச் சில வார்த் தைகள் பேச எதிரே இருந்தவர்கள் அவரை உட்காரும்படி முழுக்கமிட்டவுடன் பெரியாரைப் புகழ்ந்து பேசிவிட்டுப் பெரியாரின் சர்வாதிகாரத் தன்மை தேவைதான் என்று கூறி முடித்துவிட்டார்.

அருகோபாலன் கூறுவது போல கி.ஆ.பெ. விசுவநாதம் எந்தத் தீர்மானமும் கொண்டு வரவில்லை.

(குடி அரசு 2-9-44 பக்கம் 2)

கி.ஆ.பெ. அவர்களைப் பற்றி 1984இல் எம்ஃபில் ஆய்வு செய்த மணிமேகலை என்பவர் அவர் உயிருடன் இருக்கும் போதே அவரிடம் நேர் காணல் செய்துள்ளார். சேலம் மாநாட்டைப் பற்றி அவரிடம் கேட்டு பதிவு செய்துள்ளதில் தென்னிந்தியர் நல உரிமைச் சங்கத்தின் பெயரைத் ‘தமிழ் நாடு நீதிக்கட்சி’ என்ற பெயரில் மாற்றி அமைத்து ஆதரவு திரட்ட வேண்டுமென்ற தமது விருப்பத்தைத் தெரிவித்தார் என்று தான் பதிவு செய்துள்ளார்.

(முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம், வ. மணிமேகலை பக்கம் 48)

கி.ஆ.பெ. விசுவநாதம் நீதிக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து 1942ல் விலகும்போது அதற்கான பல காரணங்கள் கூறியிருந்தார்.

ஜஸ்டிஸ் கட்சி எல்லோராலும் போற்றப்பட வேண்டு மானால் அடியிற்கண்ட வேலைத் திட்டத்தைப் போன்ற ஒரு முறையைக் கொண்டு கட்சியை பலம் பொருந்திய ஸ்தாபனமாக ஆக்குவதில் மூலம் தான் முடியும் என்ற எனது எண்ணத்தில் இன்றும் கூட மாறுதல் அடைய விரும்புவதில்லை என்பதை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி நீதிக் கட்சியின் வளர்ச்சிக்குப் பல ஆக்கப்பூர்மான யோசனைகள் தெரிவித்துள்ளார்.

கட்சியின் பெயர் மாற்றம் பற்றியோ பெரியார் கன்னடர் என்பது பற்றியோ ஒருவரி கூட இல்லை. கடிதத்தை முடிக்கும் போது கூட இவைகளை எனது ஆலோச னைகளாகக் கட்சியின் நலனுக்காகக் குறிப்பிட்டுள்ளேன். நான் சாதாரண அங்கத்தினன் என்ற முறையில் என்னால் இயன்ற உதவிகளையும் எக்காலத்திலும் செய்யக் காத்திருக்கின்றேன் என்பதை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

(மேற்கண்ட ஆய்வு நூல் பக்கம் 121-127)

மேற்கண்ட அறிக்கையின் மூலமும், சேலம் மாநாட்டில் அவர் கொண்டு வர நினைத்த தீர்மானம் ‘தமிழ் நாடு நீதி கட்சி’ என்ற பெயரின் மூலம் அவர் பெரியாரைக் கன்னடர் என்று வெறுத்தார் என்பதற்கோ, தமிழர் கழகம் எனப் பெயர் மாற்ற முயன்றார் என்பதற்கோ எந்த வித சான்றும் இல்லை. எனவே அருகோபாலனின் கூற்றாகிய காலையில் தமிழர் கழகம் என்ற பெயரை மாலையில் பெரியார் மாற்றினார் என்பது சுத்தமான வடிக்கட்டின பொய் என்பது புலப்படும்.

அருகோ கூறும் இன்னொருவர் அண்ணல் தங்கோ, சுவாமிநாதன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் அன்றைய வடஆர்க்காடு மாவட்டம் (வேலூர் மாவட்டம்) குடியற்றம் பகுதியைச் சேர்ந்தவர். அவர் இந்திய தேசிய காங்கிரசில் தீவிரமாக வேலை செய்து வந்தவர். 1934இல் காந்தி தமிழ்நாட்டிற்கு வந்த போது அவரைத் தமது பகுதியில் பேச செய்வதற்கு முன் அனுமதி பெற்று குடியற்றம் பாலற்றங் கரையில் மிகப் பெரிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இவருடைய வளர்ச்சியை விரும்பாத பார்ப்பன இராசாசி, காந்தி அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதபடி பாதையை மாற்றி அழைத்துச் சென்று விட்டார். இதனால் வெறுப்புற்ற சுவாமிநாதன், பார்ப்பன எதிர்ப்பியக்கமான சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். வடஆர்க்காடு மாவட்டத்தில் செல்வாக்குடன் இருந்தவர் சேலம் நீதிகட்சி மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரும் அளவுக்குச் செல்வாக்கு பெற்றிருக்கவில்லை. அவருடைய பெயர் அந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரலிலோ, இதழ்களிலோ இல்லை. இவர் கி. ஆ. பெ.வுடன் சேர்ந்து தமிழர் கழகம் எனப் பெயர் மாற்றத் தீர்மானம் கொண்டு வந்தார் என்பது அருகோவின் கற்பனையே ஆகும்.

24, 25-8-1940 நாள்களில் திருவாரூரில் நடைப்பெற்ற தென்னிந்தியர் நல உரிமைச் சங்கத்தின் 15ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முதன்மை யானது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இந்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது நாம் அனைவரும் திராவிடர் என்றே பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இந்துக்கள் என்று பதிவு செய்து கொள்ளக் கூடாது. என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தை முன்மொழிந்து பேசியவர் அண்ணல் தங்கோ ஆவார். அதே திருவாரூர் மாநாட்டில் திராவிட நாடு பிரிவினைத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. திராவிடநாடு பிரிவினைக் கோரிக்கையைச் செயல்படுத்த ஒரு குழு அமைக்கப் பட்டது. அக் குழுவில் கி.ஆ.பெ. விசுவநாதமும் ஒருவராவார். அப்போது அவர் நீதிக் கட்சியின் செயலாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(குடிஅரசு 1-9-1940 பக்கம் 12)

சேலம் மாநாடு முடிந்த பிறகும் கி. ஆ. பெ. விசுவநாதம் நாங்கள் தான் உண்மையான ஜஸ்டிஸ் கட்சி என்று கூறிக் கொண்டிருந்த பி. டி. இராசன், பாலசுப்பிரமணியம் குழுவில் நீதிக் கட்சியில் தான் இருந்தார்.

சில ஆண்டுகள் கழிந்த பின்பே அவர் 1947இல் தமிழர் கழகம் என்ற அமைப்பையும் ‘தமிழர் நாடு’ என்ற இதழையும் நடத்தி வந்தார். அவர் 21-6-1959இல் நடத்திய திருச்சி வானொலி நிலையத்தில் எழுதப்பட்டிருந்த ‘ஆகாசவாணி’ பெயர்ப் பலகையைத் தார்ப் பூசி அழிக்கும் போராட்டத்தை நடத்திய போது பெரியார் சென்று அதில் கலந்து அவருடைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

(மேற் கண்ட நூல் பக்கம் 89)

மா.பொ.சி. இந்திய தேசிய காங்கிரசில் ராசீவ் காந்தி தலைமையில் சேருகின்றவரையில் தமிழரசு கழகத்தை வைத்துக்கொண்டுதான் இருந்தார். தமிழரசு கழகம் என்ற பெயரை வைத்துக் கொண்டுதான் விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பென்றும் அதன் தலைவர் பிரபாகரனை பயங்கரவாதி என்று கூறிக்கொண்டு ராசீவ் செயவர்தனே ஒப்பந்தத்தை ஆதரித்து தமிழகம் முழுவதும் துக்ளக் சோ மற்றும் ஜெயகாந்தன் போன்ற தமிழின துரோகிகளுடன் இணைந்து பரப்புரைச் செய்தார். (மா.பொ.சி., ஈழத்தமிழரும் நானும் பக். 186).

எனவே தமிழர் என்ற பெயர் கொண்ட அமைப்பை எல்லாம் திராவிட இயக்கத்தினர் அழித்தனர் என்பதெல் லாம் வடிகட்டின பொய்யேயாகும்.

- வாலாசா வல்லவன்