நீட் தேர்வு எழுத வேண்டுமானால் ராஜஸ்தானுக்கும், கேரளாவுக்கும், கர்நாடகாவுக்கும் மக்கள் ஓட வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை என்று மக்கள் போராடினால் 13 உயிர்களைப் பலி கொடுக்க வேண்டும்.

பசுமை வழிச்சாலை அமைக்கிறார்கள் என்றால் மக்கள் வாடி வதங்க வேண்டும்.

இவைகள் குறித்துக் கேட்டால் அல்லது பேசினால் கைது, சிறை, குண்டர் சட்டம். இது அரசதிகாரம்.

இப்படிப்பட்ட அரசதிகாரம் மாண்பமை நீதிபதிகளையும் விட்டு விடவில்லை என்பதை அண்மை நிகழ்வு ஒன்று உணர்த்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதி அரசர் இந்திரா பேனர்ஜி உச்சநீதிமன்ற நீதிபதியாகச் செல்வதால், மும்பை உயர்நீதிமன்ற நீதி அரசர் விஜயாகலேஸ் தாஹில் ராணி சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதி அரசராகப் பொறுப்பேற்கச் சென்னை வந்தார்.

பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. ஆளுநரும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இங்கே உயர்நீதிமன்ற நீதிபதி பதவியேற்பு என்பதனால், இந்நிகழ்வுக்கு வரும் நீதிபதிகளை முன்வரிசையில் அமரவைத்திருக்க வேண்டும்.

ஆனால், நடந்ததோ வேறு!

முன்வரிசையில் அமைச்சர்கள். அவர்களுக்குப் பின் வரிசையில் ஆட்சித் தலைவர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள்.

அவர்களுக்கும் பின்னால் மூன்றாம் நிலையில்தான் நீதிபதிகளுக்கு இருக்கைகள் போடப்பட்டிருந்தன.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன்வரிசை. நாளை, அவர்களுக்குத் தண்டனை தரப்போகிற நீதிபதிகள் மூன்றாம் வரிசையிலா? பிரச்சனை எழுந்தது.

மனம் வெதும்பிய நீதிபதிகள் தங்களின் வேதனையை வெளிப்படுத்தினார்கள். ஆனால் ஆளுநர் மாளிகை அதைக் கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்தது.

இந்நிலையில் சுதந்திர நாளையொட்டி ஆளுநர் மாளிகை ஒரு தேநீர் விருந்து அளித்தது.

அந்தத் தேநீர் விருந்தை நீதிபதிகள் பலரும் புறக்கணித்துவிட்டார்கள். இருக்கைகள் காலியாகவே கிடந்தன.

குப்பைகளைக் கூட்டுவதும், மாநில உரிமைகளில் தலையிடுவதும்தான் மோடி அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்களுக்குத் தமிழ்நாட்டில் வேலையே ஒழிய, நாட்டு மக்களையும், மாநில நீதிபதிகளையும் மதிக்கத் தெரியவில்லை அவர்களுக்கு.

ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்றார் அறிஞர் அண்ணா.

இனியும் மாநில அரசுகளுக்கு ஆளுநர் தேவையா?

மக்கள் சிந்திக்க வேண்டிய நேரமிது...

Pin It