நீதானா என்னை அழைத்தது
நீதானா என்னை நினைத்தது
நீதானா எந்தன் இதயத்திலே நிலைதடுமாறி உலவியது...
பத்து ஆண்டுகளுக்கு முன்பு...
மேசை மீது வைத்த பழைய தொலைபேசி ஒலிக்கிறது. பையன் தொலைபேசியை எடுக்கிறான். மறுமுனையில் இருந்து கடன்காரர், அழைக்கிறார். அப்பா தன் மகனிடம், தான் இல்லை என்று சொல்லச் சொல்லி மகனிடம் சைகை காண்பிக்கிறார். உடனே கடன்காரனுக்கு மகன் பதில் சொல்லுகிறான். ‘அப்பா வீட்டில் இல்லை என்று சொல்லச் சொன்னார்’ என்று, மிகச்சுருக்கமாக அப்பாவின் கதையை முடிக்கிறார் மகன்.
இப்படியாக, ஒரு காலத்தில் அழைப்பவர் யாரெனத்தெரியாமல், பதில் எது சொல்ல வேண்டுமெனத் தெரியாமல் விழி பிதுங்கி நின்ற காலம் உண்டு. இப்போது உலகம் சுருங்கிவிட்டது. எல்லோரும் அருகருகே வந்துவிட்டோம். பிக் பாஸ் நிகழ்ச்சி போல யாரும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. நீங்கள் செல்லுமிடமெல்லாம் தொழில் நுட்பம் பூதக் கண்ணாடியில் உங்களைக் கண்காணித்துக் கொண்டே வருகிறது.
எல்லோரின் கைகளிலும் இப்போது திறன் பேசி இருக்கிறது. எல்லோருடைய எண்ணையும் நீங்கள் சேமித்து வைப்பதும் சாத்தியமில்லை. அப்படியே சேமித்து வைத்திருந்தாலும் இப்போது தொலைத்தொடர்பு திட்டத்திற்குத் தகுந்தாற் போல் நாளுக்கு ஒரு தொடர்பு எண் மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். என்ன செய்வது. கவலையினை விடுங்கள் உங்கள் திறன் பேசியில் True Software Scandinavia AB ¡ True Caller App நிறுவிக்கொள்ளுங்கள். இனி நீதானா என்னை அழைத்தது, நீதானா என்னை அழைத்தது என்று கண்டசாலாவின் பாடலைப் போன்று மிக எளிதாக யார் உங்களை அழைத்தது என்று பார்த்துக் கொள்ளலாம்.
இந்தச் செயிலினை நிறுவிய உடன் உங்களது எண்ணையும் உங்களைப்பற்றிய விவரங்களையும் இது கோரும். உங்களின் எண்ணை மெய்ப்பு பார்த்து உறுதி செய்தவுடன் செயல்படத் தொடங்கிவிடும். நீங்கள் விரும்பினால் உங்கள் நிழற்படம் மற்றும் மின்னஞ்சலினைத் தரலாம். இனி உங்களுக்கு வரும் அழைப்பு அனைத்தையும் உங்கள் போனில் பதிவு இல்லை என்றாலும் கூட அழைப்பவர் யார் என்பதை இந்தச் செயலி உங்களுக்கு அறிவித்துவிடும். அவர் வங்கித்துறை சார்ந்தவரா, நீதித்துறை சார்ந்தவரா, பத்திரிகைத்துறை சார்ந்தவரா மருத்துவத்துறை சார்ந்தவரா என்பதைப் புட்டு புட்டு வைத்துவிடும்.
வேண்டப்படாத அழைப்பு
முதன்மையான பணியில் நாம் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருப்போம். அப்போது கடன் அட்டை வாங்கிக்கொள்ளுங்கள், இந்தப் பாடலை உங்கள் டயலர் டோனாக வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் மொபைல் எண்ணுக்கு அதிர்ஷ்டப் பரிசு விழுந்திருக்கிறது என்ற தேவையற்ற அழைப்புகள் வரும். அவை யாவையும் இந்தச் செயல் தடுத்து நிறுத்தி உங்களுக்கு அழைப்பொலி வராமலே செய்துவிடும். ஒரு மிகப்பெரிய இன்னலில் இருந்து உங்களை இந்தச் செயலி காப்பாற்றும். அது மட்டுமன்றிச் சில குறிப்பிட்ட நபர் அழைப்பில் இருந்து தப்பவும் இந்தச் செயலி உதவும். எந்த எண்ணில் இருந்து உங்களுக்கு அழைப்பு வர வேண்டாம் எனக் கருதுகிறீர்களோ அந்த எண்ணைப் பதிவு செய்து Block List பதிந்துவிட்டால் போதும். எப்போதும் அவர்களது அழைப்பு நமக்கு எட்டவே எட்டாது. அவர் நமக்கு எப்போது அழைத்தாலும் அவருக்கு Busy Tone சென்றுவிடும். நீங்கள் உங்கள் பணியினைத் தங்கு தடையின்றிப் பார்த்துக்கொள்ளலாம்.
பெயர் பட்டியலினை எளிதில் சேமிக்கலாம் -
நமக்கு வரும் அழைப்பு யாரெனத் தெரியப்படுத்துவதுடன் அவர்களது பெயரின் தொடர்பு எண் உங்களுக்குத் தேவையெனில் நீங்கள் Add விசையின் மூலம் உங்கள் தொலைபேசியில் பதிந்து வைத்துக்கொள்ள முடியும். ஏற்கனவே அவர்களிடம் உள்ள தரவுகள் மூலம் அவர் எந்தத் துறையினைச் சார்ந்தவர் என்ற விவரங்களையும் எளிதில் பெற முடியும்.
உங்களைத்தேடியது யார்?
இந்த ட்ரூ காலர் செயலியினைத் தரவிறக்கம் செய்யும் போது நீங்கள் மற்றொன்றையும் தெரிந்து கொள்ளலாம். உங்கள் பெயரை யாராவது தேடியிருக்கிறார்களா? என்பதை அறிந்து கொள்ளலாம். யாரால் எத்தனை முறை தேடப்பட்டு இருக்கிறீர்கள் என்பதை உங்கள மின்னஞ்சல் தகவல்கள் வழியே அறிந்து கொள்ள இயலும். ஒரு சிறிய தொகையினை ஆண்டுக் கட்டணமாகச் செலுத்தினால் பல கூடுதல் வசதியை இந்தச் செயலியில் இருந்து நாம் பெற முடியும். மேம்படுத்தப்பட்ட செயலி வழியே ஒரு பிரபலமானவரின் பெயிரினை வைத்து அவரது முகவரியினையும், எண்களைச் சட்டென அறிய முடியும்.
உங்களுக்கோ அல்லது உங்கள் நண்பருக்கோ பெயர் தெரியாதோரிடமிருந்து அழைப்பு வருகிறது எனில் இந்தச் செயலியில் அந்த எண்ணைத் தட்டச்சு செய்து அழைத்தவர் யாரென அறிந்து கொள்ள முடியும். இவர்கள் உலகின் முன்னூறு கோடி எண்களின் விவரங்களைத் தங்கள் வசம் வைத்துள்ளனர். எனவே தேவையான விவரங்களைக் கொக்கிபோட்டு எளிதில் பிடித்து விடலாம்.
படம் பிடியுங்கள் - டயல் செய்யுங்கள்
நீங்கள் அழைக்க வேண்டிய எண்ணை இந்தச் செயலி வழியே படம் பிடித்தால் போதும் உடனே அந்த எண் டயல் செய்யுமாறு மாறிவிடும் உடனே, அவர்கள் எண்ணை நீங்கள் அழைக்கலாம். இதனால் ஒரு எண்ணை எடுத்து எழுதி அதனை ஒவ்வோர் எண்ணாக அழுத்தி நீங்கள் டயல் செய்ய வேண்டிய நேரம் குறைகிறது. தமிழ் இயங்குதளத்திலும் இந்தச் செயலி கிடைக்கிறது. நீங்கள் விரும்பும் வண்ணப் பின் திரையை (Background Themes) மாற்றி வைத்துக்கொள்ளலாம். தவறிய அழைப்புகளை நினைவு படுத்துதல் ஆகிய வசதிகள் உள்ளன.
பணப் பரிவர்த்தனை
தெரிந்தவர்களுக்கு UPI குறியீட்டு எண்ணுடன் பணம் அனுப்பும் வசதியையும் இப்போது அறிமுகம் செய்துள்ளனர். எங்காவது உங்கள வங்கிக்கணக்கிலிருந்து தொகை செலுத்த வேண்டுமானால் மொபைல் காமராவின் மூலம் Scan செய்தோ அல்லது அவர்களின் வங்கிக்குறியீடுகளின் வழியே தொகையினை எளிதில் பணப் பரிமாற்றம் செய்யலாம். எண்ணற்ற வசதிகள் இந்த செயலியில் உள்ளன. நமது எண்களை யாரெல்லெம் தேடினால் கிடைக்க வேண்டும் என்று குறியிடுகிறீர்களோ அவர்கள் மட்டுமே தேடிப்பெற முடியும்.
தனியுரிமை மற்றும் பாதுகாப்பு
கட்டணத்தைச் செலுத்தினால் எந்தப் பிரபலத்தின் எண்ணையும் நம்மால் பெற்று விட முடிகிறது என்கிற போது நமது எண்களையும் பிறர் கட்டணத்தைச் செலுத்திப் பெற்று விட முடியும் என்பது உண்மையாகிறது. எஸ்எம்எஸ் என்ற கூடுதல் வசதிகள் இவர்கள் அளித்தாலும் இடையே வரும் விளம்பரங்கள் சில நேரங்களில் அலுப்பூட்டுகின்றன.
இனிப் பேசுவது கிளியா - இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க் கொடியா? என்றெல்லாம் கேட்க வேண்டியதில்லை. True Caller App இருந்தால் எதுவும் தெரிந்துவிடும்.