நீதிக்கட்சி நிறுவனர்களில் முக்கியமானவரும், சென்னை மாகாணத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கியவருமான பி.தியாகராயர் பிறந்த தினம் இன்று. (ஏப்ரல் 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* சென்னை கொருக்குப்பேட்டையில் வசதியான குடும்பத்தில் (1852) பிறந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். தந்தை நடத்திய நெசவு, தோல் பதனிடுதல், உப்பளம், சுண்ணாம்புக் காளவாய் ஆகிய தொழில்களைக் கவனித்து வந்தார்.

* தொழில்களுக்கு உதவியாக 100 படகுகளுடன் சொந்தமாகப் போக்குவரத்துக் கம்பெனி நடத்திவந்தார். தன் வீட்டருகில் ‘பிட்டி’ நெசவாலை என்ற நெசவாலையை ஏற்படுத்தினார். இங்கு தயாரிக்கப்பட்ட பிட்டி மார்க் கைக்குட்டைகள் உலகப்புகழ் பெற்றவை.

* ‘சென்னை உள்நாட்டினர் சங்கம்’ என்ற அமைப்பை 1882-ல் தொடங்கினார். இது பிற்காலத்தில் ‘சென்னை மகாஜன சபை’ என்று மாற்றப்பட்டது. இச்சபை அவ்வப்பபோது கூடி விவாதித்து தங்கள் கோரிக்கையை ஆங்கிலேய அரசுக்குத் தெரிவித்தது.

* சென்னையில் இந்திய தேசிய காங்கிரஸின் 2-வது மாநாட்டை முன்னின்று நடத்தினார். சென்னை வந்த காந்தியடிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார். 1916 வரை காங்கிரசில் இருந்தவர், கருத்து வேறுபாடு ஏற்பட்டு அக்கட்சியில் இருந்து விலகினார். அதே ஆண்டு வேப்பேரியில் ஒரு சிறப்புக் கூட்டம் கூட்டி ‘தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார்.

* இந்த அமைப்பு சார்பில் ‘நீதி’ என்ற இதழை நடத்தினார். இதன் பெயரைக் கொண்டே இந்த அமைப்பு நீதிக்கட்சி ((Jusitice Party)) எனக் குறிப்பிடப்பட்டது. இதன் தலைவராகப் பொறுப்பேற்று, கட்சியைச் சிறப்பாக நிர்வகித்தார்.

* இவரது தன்னலமற்ற முயற்சியால், 1921-ல் சென்னை மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் நீதிக்கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வர் பதவி இவரைத் தேடிவ வந்தாலும் அதை மறுத்து வேறு ஒருவரைப் பொறுப்பேற்கச் செய்தார்.

* கட்சிப் பணியைத் தொடர்ந்து செய்தார். கோயில் திருப்பணிகளையும் மேற்கொண்டார். சென்னை நகராட்சி உறுப்பினராகத் தொடர்ந்து 40 ஆண்டுகள் சேவை புரிந்தார். சென்னை நகரமன்றத் தலைவராக (மேயர்) இருந்து மகத்தான பணிகளைச் செய்தார். அரசுப் பள்ளியில் இலவச மதிய உணவுத் திட்டத்தை முதன்முதலில் தன் சொந்தச் செலவில் தொடங்கி வைத்தார்.

* இலவச மதிய உணவுடன் கூடிய தொடக்கப் பள்ளியை 1892-ல் தொடங்கினார். ‘திராவிடன்’ என்ற தமிழ் நாளேடு, ‘ஆந்திரப் பிரகாசிகா’ என்ற தெலுங்கு நாளேட்டை நடத்தினார். பார்வையற்றோருக்கான பள்ளி, பிச்சைக்காரர் இல்லம், இலவச மருத்துமனைகள் தொடங்கினார். மது ஒழிப்புக்காகப் பாடுபட்டார். சாதி ஆதிக்கத்தை எதிர்த்தார்.

* சென்னையில் உள்ள தியாகராயர் கல்லூரி இவரால் நிறுவப்பட்டது. சென்னை, ஆந்திரா பல்கலைக் கழங்களை நிறுவ அரும்பாடுபட்டார். தொழில்நுட்பப் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கினார்.

* சென்னையில் புதிததாக உருவாக்கப்பட்ட நகருக்கு இவரது நினைவாக தியாகராய நகர் (தி.நகர்) என்று பெயர் சூட்டப்பட்டது. இவரைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்தன. ‘வெள்ளுடை வேந்தர்’ எனப் போற்றப்பட்ட சர் பிட்டி. தியாகராய செட்டியார் 73-வது வயதில் (1925) மறைந்தார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

(நன்றி :  “தி இந்து (தமிழ்)”, ஏப்ரல் 2016)                                                                                         

Pin It