பார்ப்பனரல்லாதார் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று செய்யப்பட்ட தீர்மானத்திற்கு இதுவரை மூன்று காரணங்களே சொல்லப்படுகின்றன.
அவை ஒன்று, பார்ப்பனரல்லாதார் கட்சி ஒரு அரசியல் கட்சியாக இருக்க வேண்டுமானால் அது எந்த வகுப்பாரையும் தள்ளிவைத்த கட்சியாயிருக்கக் கூடாது என்பது.
மற்றொன்று, பார்ப்பனரல்லாதார் கட்சி எல்லோருக்கும் சமத்துவம் அளிக்கும் உத்தேசத்துடன் ஏற்படுத்திய கட்சியானதால் எல்லா வகுப்பாருக்கும் அதில் இடம் இருக்க வேண்டுமென்பது. வேறு ஒன்று பார்ப்பனரல்லாதார் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளாவிட்டால் அக் கட்சியில் உள்ள தலைவர்கள் எல்லாம் போய் விடுவார்கள்.
பிறகு கட்சிக்குத் தலைவர்களே இருக்கமாட்டார்கள்; இதனால் கட்சியே செத்துப் போய்விடும் என்பது. ஆகிய இம்மூன்று காரணங்களே இப்போது பார்ப்பனரல்லாதார் கட்சியின் முக்கிய தலைவர்களாய் பாவிக்கப்பட்டு வந்த கனவான்களால் சொல்லப்பட்ட சொல்லி வருகின்ற காரணங்களாகும்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய காரியம் என்னவென்றால் மேற்கண்ட மூன்று காரணங்களும் உண்மையானவைகளா? அல்லது சுயநலத்தை உத்தேசித்து பொதுமக்களை ஏமாற்றுவதற்காக அவ்வப்போது சொல்லப் படுபவைகளா? என்பதைப் பற்றியதேயாகும்.
ஏனெனில் நமது அபிப்பிராயத்தில் இக்காரணங்கள் ஒன்றும் அதன் தலைவர்களுக்கு உண்மையான காரணங்கள் அல்லவென்றே சொல்லுவோம். ஏனெனில் மேற்கண்ட மூன்று காரணங்களையும் கண்டித்து திரு. க்ஷ. முனுசாமி நாயுடு தவிர மற்றவர்கள் எல்லாம் அவ்வப்போது தங்கள் தங்கள் அபிப் பிராயங்களை பத்திரிகைகளிலும் பொதுக் கூட்டங்களிலும் பேசியும் எழுதியும் இருப்பவைகளே போதுமானதாகும்.
ஜஸ்டிஸ் பத்திரிகையில் திரு. ஏ. இராமசாமி முதலியார் எழுதிவந்த கண்டனங்களுக்கு மேல் இனி யாராலும் எடுத்துக் காட்ட முடியாது. நெல்லூர் மகாநாட்டில் திரு. ஆர். கே. ஷண்முகம் அவர்கள் பேசியதற்கு மேல் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளுவதால் ஏற்படும் கெடுதியைப் பற்றி இனி யாராலும் பேச முடியாது என்றே சொல்லுவோம்.
மேலும் திரு. பி. முனுசாமி நாயுடு அவர்கள் கக்ஷியை விட்டுப் போய் விட்டாலும் பாதகமில்லை என்றும், அவர் காங்கிரஸ் கொள்கை உடையவராதலால் போய்விடுவதே மேல் என்றுமே கருதித்தான் அவ்வளவு தைரியமாகவும் முரட்டுத்தனமாகவும் அத்தீர்மானம் தாக்கப்பட்டே வந்திருக்கின்றது.
ஆனால் உப்பு சத்தியா கிரகத்தின் பலனாய் திரு. முனுசாமி நாயுடுவுக்கு ஆந்திரமெம்பர்களின் பலம் ஏற்பட்டு விட்டதாலும் ஜஸ்டிஸ் கக்ஷியில் உள்ள சிலரின் சூக்ஷிக்கு பயந்து அக்கக்ஷியிலுள்ள மற்றும் சிலர் திரு. முனுசாமி நாயுடுவுடனும் திரு. டாக்டர் சுப்பராயன் உடனும் சேர ஏற்பாடு செய்து கையெழுத்து முதலியவைகள் போட்டு விட்டதாலும் தங்களுக்கு எவ்வித யோக்கியதையுமே இல்லாமல் போய் விடுமே என்று கருதி இப்போது பல்ட்டி அடித்து எந்தக் கொள்கையையோ விட்டுக் கொடுத்தானாலும் யாரையாவது தங்களுடன் சேர்த்து மந்திரி பதவி பிரைஸ் அடிக்க வேண்டியது இவர்களுக்கு அவசியமாய் விட்டது.
இந்த நிலையில் பார்ப்பனரல்லாத கக்ஷியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று இப்போது இவர்கள் சொல்லுவது மந்திரி வேட்டைக்காகப் போடப்பட்ட ஒரு வலையே அல்லாமல் நியாயத்தையோ கட்சியின் நன்மையையோ கோரியது அல்லவென்பதே நமது முடிவான அபிப்பிராயம்.
மந்திரி வேலை அடைய ஆசைப்பட எல்லோருக்கும் பாத்தியமுண்டு என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோம். ஆனால் அதற்காக காங்கிரசுக்காரர்கள் பாமரஜனங்களை பலி கொடுத்து மந்திரி வேலை முதலிய உத்தியோகங்கள் அடையப் பார்ப்பது போல் ஜஸ்டிஸ் கக்ஷி தலைவர்கள் என்பவர் களும் பார்ப்பனரல்லாத மக்களை பலி கொடுத்து மந்திரி வேலை அடையப் பார்ப்பதை நாம் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை.
எந்தக் காரணத்திற்காக நாம் காங்கிரசிலும் ஒத்துழையாமையிலும் கலந்து இருந்து எவ்வளவோ வேலைகள் எல்லாம் அதில் செய்தும் நம்மை நம்பி - நம்மை பின்பற்றி சிலரையாவது அதில் சேரும்படி செய்து அவர்களையும் கஷ்ட நஷ்டங்களையும் அனுபவிக்கச் செய்து கடைசியில் அதை விட்டு வெளியில் வந்து அதன் சூக்ஷிகளையும் சுயநலங்களையும் வெளிப் படுத்தினோமோ, அந்தக் காரணங்களையே நாம் இப்போது ஜஸ்டிஸ் கக்ஷி என்பதில் காண நேருமானால் எப்படி அவைகளைப் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்க முடியும்? என்பதை வாசகர்கள் தான் யோசித்துப் பார்த்து பதில் சொல்ல வேண்டும்.
திரு காந்தியை விட்டு நமது ஆயுட்காலம் வரை பிரிய சமயம் வாய்க்காதென்றே கருதி இருந்தோம். அவரது கட்டளையை தட்டிப் பேசுவது பெரிய தோஷம் என்று கூட எண்ணி இருந்தோம்.
அவர் காரியத்திற்காக உயிரை விட நேர்ந்தால் அதுவே நமது முடிவான பேறு என்றும் கருதி இருந்தோம். காங்கிரசைத் தவிர வேறு ஸ்தானபங்களே உலகில் இருக்கக் கூடாது என்றும் எண்ணி இருந்தோம்.
அப்படியெல்லாம் கருதி இருந்தவைகளை அடியோடு விட்டு விட்டு வெளியேறி வந்து இப்போது தாராளமாய் அவை எல்லாவற்றையும் எதிர்க் கின்றோம். அவைகளின் சூட்சிகளையும் குற்றங்களையும் அறியாமைகளையும் தாராளமாய் வெளிப்படுத்துகின்றோம்.
அப்படி இருக்க இந்த சூட்சிகளை மாத்திரம் நாம் எப்படி சகித்துக் கொண்டிருக்க முடியும்? என்பதை யோசித்து பாருங்கள். இதனால் நமக்கு கெட்ட பேர் வரலாம். தப்பெண்ணங்கள் கற்பிக்கப்படலாம். இவைகளைப் பற்றியெல்லாம் நமக்குச் சிறிதும் கவலை இல்லை. ஏனென்றால் நமது லட்சியம் இவைகளில் எதுவுமல்ல என்பதேயாகும்.
ஜஸ்டிஸ் கட்சிக்கும் சுயமரியாதைக் கட்சிக்கும் ஏதாவது சம்மந்த மிருக்க வேண்டுமானால் எதை உத்தேசித்து இருக்க வேண்டும் என்பது முதலில் கவனிக்கத்தக்கது. முதலாவது சுயநல சூக்ஷி இல்லாமல் இருக்க வேண்டும்.
காங்கிரஸ் தலைவர்கள் சூட்சிக்கும் ஜஸ்டிஸ் தலைவர் சூட்சிக்கும் கால்மாத்துக் கூட வித்தியாசமில்லாமல் இருக்கத்தக்க நிலைமைக்கு வந்து கொண்டிருக்கின்றதானாலும் காங்கிரசை விட இதில் சற்று நமக்கு அவசிய மான கொள்கைகள் இருக்கின்றது என்கின்ற சமாதானமும் இருந்தது.
ஆனால் இப்போது அதன் கொள்கையே அழிக்கப்படும் போது அதன் தலைவர்கள் எவ்விதமான தாட்சண்யத்திற்கும் பாத்திரமானவர்களாவார்கள்?
ஜஸ்டிஸ் கட்சி இப்போது போகின்ற நிலைமையில் அதன் மூலம் ஜாதி வித்தியாசம் ஒழியும் என்கின்ற நம்பிக்கையைக் கொள்ள சிறிதும் இடமில்லை.
ஏனெனில் தாழ்த்தப்பட்ட ஜாதியார் சமத்துவமடைவதற்கு அவர்களுக்கு அதிகமான சலுகை காட்டா விட்டாலும் அவர்களுக்கு உரிய உரிமையாவது கொடுக்க வேண்டும் அல்லவா? அதற்கும் ஆபத்து வரும் படியாக வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவக் கொள்கையில் கையை வைத்தாகி விட்டது. அதோடு மாத்திரமல்லாமல் அதை ஒழிப்பதற்கு பார்ப்பனர்கள் சொல்லும் காரணத்தையே சொல்லப்பட்டாய் விட்டது.
பணக்காரர்கள் ஆதிக்கமாவது குறையுமா என்று பார்த்தால் அதற்கும் சிறிதும் இடமில்லாமல் இருக்க இருக்க பெரிய பணக்காரர் இடமே தலைமை ஸ்தாபனம் போகப் பார்க்கின்றது. படித்தவர் ஆதிக்கமாவது குறைகின்றதா என்று பார்த்தால் அதுவும் அதாவது ஜாதியும் பணமும் உள்ளவரிடம் இருக்கும் படிப்புக்கார ஆதிக்கமேதான் வளரும்படியான நிலைமையில் போய்க் கொண்டிருக்கின்றது.
இந்த மாதிரி படிப்புக்காரர்கள் ஆதிக்கமானது மற்ற சாதாரண படித்த மக்களுக்கு பெரிய ஆபத்தாவதோடு பார்ப்பனர் படிப்புக்காரர் ஏகபோக உரிமைகளைவிட இவர்களது ஆதிக்கம் தலைமுறை தலைமுறை ஏகபோக உரிமையாக நிலைநிற்க ஏற்பாடுகள் பலப்பட்டுவிடும்.
ஆகவே இதானது விலங்கைத் தரித்து குட்டையில் மாட்டிக் கொண்டது போலவேயாகும். பார்ப்பனர்கள் இக் கட்சியில் இல்லாமலிருந்தாலாவது இக் கட்சியார் பார்ப்பனர்களுக்கு பயந்து கொண்டாவது சற்று ஏழைகளையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் கிருஸ்தவ முகமதிய சமூகத்தையும் திரும்பிப் பார்க்க வேண்டியதாக இருக்கும்.
இனி ஜஸ்டிஸ் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளுவதன் மூலம் பணக்காரனும், பார்ப்பானும், படித்தவனும் ஒன்று சேர்ந்து விட்டால் பிறகு எதற்காக இவர்கள் மற்றவர்களைக் கவனிக்க வேண்டிய அவசியம் வரும்? என்பதை கவனித்துப் பாருங்கள்.
சீக்கிரத்தில் சர்க்காரும் இக் கக்ஷியில் சேர்ந்து விடப்போகின்றது. எப்படி என்றால் பல வெள்ளைக்காரர்களும் கவர்னரும் இந்த சூட்சிக்கு ஆசி கூறியாய் விட்டது. வயிற்றையும் வாயையும் கட்டி பார்ப்பனரல்லாத ஏழை மக்களும் தாழ்த்தப் பட்டவர்களும் தங்கள் பிள்ளைகளைப் படிக்கவும் வைத்து தங்கள் நன்மை யையும் கவனிக்கப்படும் என்று கருதி பார்ப்பனரல்லாதார் கட்சி என்பதையும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்து அதற்கு ஒரு யோக்கியதையும் உண்டாக்கி ஏதோ சற்று எல்லா, வகுப்புக்காரர்களுக்கும் சம சுதந்திரமும், சம அரசியல் பங்கும் சமத்துவமும் கிடைக்கும் படியான நிலைமை தேர்தல்களிலும் உத்தியோகத்திலும் ஏற்பட்டவுடன் தங்களுக்கே முழுவதும் கிடையாமல் எங்கு எல்லோருக்கும் பங்கு போய் விடுகின்றதோ என்று கருதி அடியோடு அவர்கள் வயிற்றிலும் வாயிலும் மண்ணும் போடத் தீர்மானித்து இப்போது பார்ப்பனர்களுடன் உறவாடத் துணிந்தால் இக் கூட்டத்தாரிடம் இனி இதை விட வேறு சமூகத் துரோகமும் நம்பிக்கைத் துரோகமும் என்ன எதிர்ப்பார்க்க முடியும்? என்பதை வாசகர்களையே ஊகித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்ளுகின்றோம்.
தவிர இக்கட்சிக்கு ராஜா சர். அண்ணாமலை செட்டியாரை தலைவ ராக்க சென்னைத் தலைவர் ஆகாயத்திற்கும் பூமிக்கும் சூட்சி செய்வதாக பத்திரிகைகளிலும் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களிடமிருந்தும் தெரியவருகின்றது. இதானது குதிரை தள்ளினது மல்லாமல் புதைக்க குழியும் தோண்டிற்று என்ற உதாரணத்திற்குச் சரியான அத்தாட்சியாகும். ராஜா சர். அண்ணாமலை அவர்கள் பெரிய இந்து தர்மப் பிரபு - பணக்காரர் - பரம்பரை ராஜா பட்டம் பெற்றவர். இவற்றில் நமக்கு ஆட்சேபனை இல்லை. பார்ப்பனரல்லாதார் கட்சித் தலைமைக்கு இந்த யோக்கிதையே தான் அவசியமானதா? என்று கேட்கின்றோம்.
அவருக்கு மகாராஜா பட்டம் வருவதிலாவது செட்டி நாட்டு ஆளுகை யின் பூரா சுதந்திரமும் அவருக்கு கொடுக்கப்படுவதிலாவது அவரது சிலையை முக்கியமான இடங்களில் எல்லாம் நிறுத்துவதிலாவது நமக்குச் சிறிதும் ஆட்சேபனை இல்லை. அதற்குத் தகுந்த அறிவும் யோக்கியதையும் அவரிடம் உண்டு என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகிறோம்.
ஆனால் பார்ப்பனரல்லாத ஏழை மக்கள், இழிவு படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் ஆகியவர்களின் நன்மைக்காக ஏற்பட்ட ஸ்தாபனங்களை அப்பேர்பட்டவர்கள் வசம் ஒப்புவிக்கிலாமா? என்பதை யோசித்துப் பாருங்கள்.
பார்ப்பனருக்கு விரோதமாக ஏதாவது செய்ய அவரால் முடியுமா? இந்து மதத்திற்கு விரோதமாக ஏதாவது செய்ய அவரால் முடியுமா? பணக்காரர்கள் நன்மைக்கு விரோதமாக ஏதாவது செய்ய அவரால் முடியுமா? சர்க்காருக்கு விரோதமாக ஏதாவது செய்ய அவரால் முடியுமா? என்பதை யோசித்துப் பாருங்கள்.
நமது நாட்டு பணக்காரர்கள் பார்ப்பனர்களைவிட இளைத்தவர்கள் அல்ல என்பதே நமது அபிப்பிராயமாகும். நமது நாட்டு ராஜாக்கள் பார்ப்பனர்களை மந்திரியாகக் கொண்டவர்கள்; நமது நாட்டு பணக்காரர்களோ பார்ப்பனர்களை மந்திரிகளாயும் ஆத்ம சினேகிதர்களாகவும் கொண்டவர்கள்.
நாட்டுக்கோட்டை பணக்காரர்களுக்கோ பார்ப்பனர்கள் இன்றியமையாதவர்கள். இப்படி இருக்கையில் பார்ப்பனரையும் இக் கட்சியில் சேர்த்துக் கொண்டு பணக்காரர்களையும் தலைவர் ஆக்கி அந்த ஸ்தாபனத்தையும் அவர்கள் கையில் ஒப்புவித்தும் விடுவதாய் இருந்தால் இதை பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு பார்ப்பனரை சேர்த்துக் கொள்ளுவது என்னும் நெருப்பை வைத்து பணக்காரரை தலைவராக நியமிப்பது என்னும் நெய்யை ஊற்றி ஓமம் வளர்த்து கட்சியை சாம்பலாக்கி அந்த சாம்பலை நெற்றியில் வைத்துக் கொண்டது போலத்தானே ஆகிவிடும். மற்றபடி இதனால் வேறு என்ன பலன் யாருக்கு ஏற்படப் போகிறது என்று கேட்கின்றோம்.
நிற்க, நாம் ஏதோ நெல்லூரில் பார்ப்பனர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னதாகவும் சில தலைவர்கள் பிரசாரம் செய்வதாகவும் கேள்விப்படுகின்றோம். இது மிகவும் இழிவான செய்கையாகும் என்று வருத்தத்துடன் சொல்லுகின்றோம்.
பார்ப்பனர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நாம் இவர் களுக்கு எப்போதும் சொன்னதில்லை என்பதை உறுதியாக சொல்லுகின்றோம். மனிதத் தன்மை உடையவர்களானால் நிரூபிக்க முன்வரட்டும்.
நாம் பார்ப்பனர்களை கவுன்சில் நடவடிக்கைகளில் மாத்திரம் கலந்து கொள்ள சம்மதம் கொடுத்ததுண்டு. ஏனெனில் ஜஸ்டிஸ் கட்சி தலைவர்களுடைய வேண்டுகோளுக்காகவே சம்மதம் கொடுத்ததே ஒழிய மற்ற எந்த காரியத்தையும் உத்தேசித்தல்ல.
அதுவும் எந்த நிபந்தனையின் மீது என்றால்; -
1. எப்படிப்பட்ட பார்ப்பனர்களையும் ஜஸ்டிஸ் கட்சியில் அங்கத்தினர்களாகச் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
2. எந்த பார்ப்பனரையும் கட்சியின் பேரால் எந்த தேர்தலுக்கும் நிறுத்தக் கூடாது.
3. பார்ப்பனர்களுக்கு கக்ஷியின் சார்பாய் ஓட்டு சேகரிக்கக் கூடாது.
என்பனவாகிய நிபந்தனைகளின் பேரிலேயே ஒழிய வேறில்லை. இவை 13-10-29 தேதி மாலை 5, மலர் 23 குடி அரசில் காணலாம்.
நெல்லூர் மகாநாட்டில் பார்ப்பனர்களை ஜஸ்டிஸ் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டு மென்பதாக சர். எ. பி. பாத்ரோ தீர்மானம் கொண்டு வந்த பொழுது திரு. ஈ. வெ. ராமசாமி பேசியதாவது:-
“பார்ப்பனர்களை தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் சேர்க்க முடியாதென்றும் கமிட்டி வைத்து இஷ்டப்பட்டவர்களை மாத்திரம் கமிட்டியின் மூலம் தெரிந்தெடுக்கலாமென்பது அர்த்தமற்ற தென்றும் இப்பொழுது இருப்பது போலவும் முன் நாம் ராஜியை முன்னிட்டு மந்திரி கட்சியாரிடமும் திரு. நடேசன் கட்சியாரிடமும் ஒப்புக் கொண்டு நிர்வாக சபை கூட்டத்திலும் ஏகமனதாய்ச் செய்த தீர்மானத்தின் படியும் மற்றவர்களுக்கு நமது இயக்கத்தின் சார்பாக வாக்குக் கொடுத்திருக்கின்ற படியும் சட்டசபையில் மாத்திரம் சேர்த் துக் கொள்ளலாம் என்றும், அப்படி சேர்த்துக் கொள்வதிலும் உறுதியானதும் வெளிப்படையானதுமான நிபந்தனை இருக்க வேண்டு மென்றும், அதாவது எந்தக் காரணம் கொண்டும், தென்னிந்திய நல உரிமை சங்கத்தில் சேர்ப்பதில்லை என்பதும், எந்த காரணத்தைக் கொண்டும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் சார்பாக சட்டசபை தேர்தல்களில் பார்ப்பனர்களை நிறுத்தக் கூடாது என்றும் விவரமாய் தெரிவித்து விடவேண்டும் என்றும் தான் அந்த நிபந்தனையின் மேல் தான் இதை ஆமோதிப்பதாகவும், மற்றபடி சர். பாத்ரோ தீர்மானத்தை யாரும் கண்டிப்பாய் ஒப்புக் கொள்ளக் கூடாது என்றும், ஏனெனில் மக்கள் பிறவியில் ஜாதி உண்டென்கின்ற கொள்கை உள்ளவரையில் நமது கட்சியில் எந்த பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொள்வது முடியவே முடியாது என்றும், அதுவரை எந்த பார்ப்பனர் எவ்வித நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டாலும் நமக்கு பயன்படாதென்றும் பல காரணங்களையும் உதாரணங்களையும் எடுத்துக் காட்டினார்.
உடனே தலைவர் ஓட்டு எடுத்ததும், சர். பாத்ரோ தீர்மானத்திற்கு சுமார் 5, 7 ஓட்டுக்களும் எதிரிடையாக நூற்றுக்கணக்கான ஓட்டுக்களும் இருந்ததால் அது தோல்வியுற்றது என்று பேசி இருக்கின்றோம்.
இதுவும் கூட சில தலைவர்கள் மந்திரிகளைத் தங்கள் கக்ஷியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்ற ஆசையின் பேரில் தான் அவர் களிடம் ராஜி பேசி ஜஸ்டிஸ் பத்திரிகை நடைபெற வேண்டிய பொறுப்பை அவர்கள் மீது சுமத்தி அந்தக் காரணங்களை எல்லாம் நமக்குச் சொல்லி நமது கக்ஷி விதிகளுக்கும் ஆதி கொள்கைகளுக்கும் எவ்வித விரோதமும் இல்லை என்று தெரிவித்துக் கொண்டதின் பேரில் நாம் சம்மதித்ததே தவிர வேறில்லை என்று உறுதி கூறுவோம். மறுப்பதனால் யாராவது வந்து மறுக்கட்டும், சமாதானம் சொல்லத் தயாராயிருக்கின்றோம்.
இந்த நிலையில் நம்மிடம் இஷ்டப்படி வேலை வாங்கிக் கொண்டது மல்லாமல் இப்போது இதை திருத்திக் கூறி நம்மீது குற்றம் சொல்லி விஷமப் பிரசாரம் செய்வதாய் இருந்தால் நாம் சும்மாய் இருப்பதா? என்று கேட்கின்றோம்.
இது சம்பந்தமாக இன்னும் பல இரகசியங்கள் கூட உண்டு. ஆனால் அவை இப்போது தேவையில்லை. நம் தலையில் அடிக்கப் பார்ப்பதால் இரண்டு கையையும் தூக்கி அடியை தடுத்துக் கொள்வதற்காக இதைச் சொல்லுகின்றோம்.
தவிர நம்மைப் பற்றி மற்றொரு பழிப்புப் பிரசாரம் செய்யப்படுகின்றது. அதைப் பற்றி பின்னால் விளக்குவோம்.
(குடி அரசு - துணைத் தலையங்கம் - 29.06.1930)