ஐரோப்பியர்கள் உலகம் முழுவதும் புதிய நிலங்களைத் தேடிச் சென்றபோது அவர்களுடனே எடுத்துச் சென்றதில் முக்கியமான ஆயுதம், தொற்றுநோய்கள். இந்தியாவிற்கும், கிழக்கு ஆசியாவிற்குமான கடல்வழியைத் தேடிச் சென்ற கடலோடிகள் அமெரிக்க கண்டங்கள், ஆப்பிரிக்காவின் உள்பகுதிகள், பசிபிக் கடலில் இருந்த தீவுகள், ஆஸ்திரேலியா மற்றும் இந்திய தீபகற்பம் ஆகிய இந்த இடங்களில் இருந்துவந்த வளர்ந்த ஆட்சியமைப்பிலிருந்து பழங்குடிச் சமூக அரசுகள் வரையிலான அரசாங்கத்தினைக் கைப்பற்றி அழித்து காலனிய ஆட்சி முறையை உருவாக்கினார்கள். இந்த போரில் இவர்களால் கொண்டு செல்லப்பட்ட தொற்று நோய்களும் ஒரு யுத்த ஆயுதமாகவே மாறிப்போனது. பல பழங்குடிகள் இந்த நோய்த் தொற்றினால் முற்றிலும் அழிந்து போன வரலாறும் உண்டு. தொற்று நோய்களை உலகமயமாக்கியது காலனிய ஆட்சிமுறை.
வட அமெரிக்கா, தென்னமெரிக்கா என்று அழைக்கப்படுகின்ற அமெரிக்காவிற்கு ஐரோப்பிய காலனியக் கொள்ளையர்கள் கொண்டு சேர்த்த தொற்று நோய்கள் ஏராளம். இதில் முக்கியமானது சின்னம்மை, தட்டம்மை, ப்ளேக், காலரா, சளி, டிப்த்தீரியா, இன்புளூயன்ஸா, மலேரியா, மீசல்ஸ், ஸ்கார்லெட் காய்ச்சல், பாலியல் நோய்கள், டைபாய்டு, டைப்பஸ், டி.பி எனும் நெஞ்சக காசநோய், பெர்ட்டூசிஸ் எனும் சளி நோய் இவ்வாறான நோய்கள் பழங்குடிகளிடம் வேகமாக பரவின. இந்த நோய்கள் இம்மக்களுக்கு முற்றிலும் புதியன. எனவே இவர்கள் தனிப்பட்டரீதியிலோ, சமூகமாகவோ இந்த நோய் எதிர்ப்பு ஆற்றல் கொண்டவர்களாகவோ, நோய் எதிர்ப்பு வழிமுறை அறிந்தவர்களாகவோ இல்லை. மேலும் கைப்பற்றப்பட்ட பழங்குடிகள் அடிமைகளாக கொண்டு செல்லப்பட்ட இடங்களில் இந்த நோய் தொற்றும் கொண்டு செல்லப்பட்டது.
நோய் தொற்றும், யுத்த தந்திரங்களும்
நோய் தொற்று போரின் ஒரு அங்கமாக பலகாலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நோயுற்ற இறந்தவர் உடல்களை, அல்லது விலங்குகளின் உடல்களை எதிரி நாட்டுப்படைகள் மீது அல்லது மக்கள் மீது எறிந்து அவர்களுக்கும் நோய் தொற்றை ஏற்படுத்திய நிகழ்வுகள் வரலாற்றில் நிகழ்ந்திருக்கின்றன. 17ஆம் நூற்றாண்டில் ஸ்வீடன் மீது படையெடுத்த ரசியாவின் படைகள் ‘ப்ளேக்’கினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் உடலை தால்லிஸ் எனும் நகரின் (தற்போது எஸ்தோனியாவின் தலைநகர்) சுவர்களின் மீது எறிந்திருக்கிறார்கள். இதே போன்று துனிசியன் படைகள், அல்ஜீரிய நகரத்தின் மீதான போரில் பயன்படுத்திய வரலாறும் உண்டு. மங்கோலிய அரசப் படைகளான செங்கிஸ்கான் படைகள் இது போன்ற யுக்திகளைக் க்ரீமியா படையெடுப்பில் கடைப்பிடித்திருக்கின்றன.
1762-63இல் வட அமெரிக்காவில் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிரான பெரும் யுத்தத்தை செவ்விந்தியக் குழுக்கள் நடத்தின. பல செவ்விந்திய இனக்குழுக்களை ஒன்றிணைத்து ‘போண்ட்டியாக்’ எனும் தீரமிக்க தலைவர் ஒரு பெரும் யுத்தத்தை வழி நடத்தினார்.
பல்வேறு செவ்விந்திய இனக்குழுக்கள் வட அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரம் துவங்கி பல இடங்களில் இருந்த கோட்டைகளை முற்றுகையிட்டனர். ஒட்டாவா இனக்குழுவின் தலைவரான போண்ட்டியாக்கிற்கு துணையாக வையண்டாட்ஸ், ஓஜிப்வாஸ், பொட்டாவாட்டமிஸ் எனும் பல செவ்விந்திய இனக்குழுக்கள் படைகளை ஒன்றிணைத்து எழுந்தன. பல கோட்டைகள் செவ்விந்தியர்களிடம் வீழ்ந்தன.
கிட்டதட்ட இரண்டாண்டுகள் இம்முற்றுகை வெற்றிகரமாக தொடர்ந்தது. இம்முற்றுகையை வீழ்த்த முயன்ற இங்கிலாந்தின் முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன. இப்படியாக நடந்த யுத்தத்தில் மேற்கு பென்சில்வேனியாவில் இருந்த பிட் எனும் கோட்டையை லெனாப்பே போர்வீரர்கள் முற்றுகையிட்டனர். இந்நிலையில் கோட்டைக்குள் ப்ளேக் நோய் பரவி இருந்தது. அப்போது 1763 ஜூன் 24ம் தேதியன்று கோட்டை முற்றுகைக்குள் இருந்த சைமேன் ஈக்குயேர் (Captain Simeon Ecuyer) எனும் 22வயது கேப்டன் முற்றுகையிட்ட லெனெப்பே போர்வீரர்களுக்கு இரண்டு போர்வைகளையும், கைக்குட்டையையும் பரிசாக கொடுத்தார். இவை சின்னம்மையால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மருத்துவமனையில் பெறப்பட்டவை.
இதைப் பற்றி வெள்ளையரின் படையணி கேப்டன் வில்லியன் ட்ரெண்ட் (William Trent) எழுதும் போது ‘இந்த பரிசளிப்பு நாம் எதிர்பார்க்கிற விளைவுகளைக் கொடுக்கும்’ என்ற குறிப்புடனேயே தனது தலைமையகத்திற்கு செய்தி அனுப்புகிறார். இதை ஒரு போர் யுக்தியாக ஆங்கிலேயப் படைத் தளபதி ஜெஃப்ரி அம்ஹெர்ஸ்ட், கர்னல் ஹென்றி பொக்கெட்டிக்கு 1793 ஜூன் 29, ஜூலை 13, ஜூலை 16, ஜூலை 26இல் அனுப்பிய கடிதங்களில் விவாதிக்கிறார்கள். ஜெஃப்ரி ஒரு இடத்தில், ”இந்த சகிக்க முடியாத இனங்களை இந்தப் போர்வைகள் வழியாகவோ அல்லது வேறு எவ்வழியிலோ மொத்தமாக இடம் தெரியாமல் அழித்துவிடும் அனைத்து யுக்திகளையும் பயன்படுத்துங்கள்” என்கிறார். இவ்வாறு அனுப்பிய போர்வைகள் செவ்விந்திய போர்வீரர்களிடையே நோயைப் பரப்பவும் செய்தது. இந்த நோய் தொற்று பல செவ்விந்தியக் குழுக்களை முற்றிலுமாக நிலைகுலைய வைத்தது. இவ்வாறாக ஆங்கிலேயர்கள் நோய் தொற்று மூலம் செவ்விந்தியர்களின் எழுச்சியை கிட்டதட்ட முடிவுக்கு கொண்டுவந்தனர்.
செவ்விந்தியர் வீழ்ச்சியும் தொற்று நோய்களும்
இந்நிகழ்விற்கு 250 வருடங்களுக்கு முன்பு, கி.பி. 1519 இன்றைய மெக்சிக்கோவிற்கு வந்திறங்கிய ஸ்பேனிய நாட்டின் ஹெர்னான் கோர்ட்டீஸ், மெக்சிக்கோவின் பூர்வகுடி பேரரசான ஏஸ்டெக் அரசை இவ்வாறான தொற்று நோயினைக் கொண்டு வீழ்த்திய வரலாறை காலனியாக்கத்தில் நோய்க்கிருமியின் முதல் பயன்பாடு எனச் சொல்லலாம். கோர்ட்டேஸ் அங்கே இறங்கியபோது அவனுடன் இருந்தவர் கிட்டதட்ட 500 வீரர்கள். அப்போது ஏஸ்டெக் பேரரசில் கிட்டதட்ட ஒன்றரைக் கோடி பூர்வகுடிகள் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கென்று சிறப்பான நகரமாக டெனோச்சிட்லான் இருந்தது. கோர்ட்டேஸுக்கு மிகப்பெரும் மரியாதை கொடுத்து ஏஸ்ட்டெக் பேரரசின் அரசர் மோண்ட்டிஜூமா வரவேற்றார். ஆனால் உடனே அந்த அரசரை கைது செய்து அப்பேரரசை நிர்மூலமாக்கினார் கோர்ட்டேஸ். தனது 500 படைவீரர்களையும், சில பழங்குடி அரசுகளையும் துணைக்கு வைத்துக் கொண்டு இப்பேரரசை வீழ்த்தினார். அந்த யுத்தத்திலும் தொற்று நோய் ஒரு முக்கிய காரணியாக விளங்கியது. சின்னம்மை இந்த பூர்வகுடிகளிடம் ஸ்பானியர்களிடமிருந்து பரவியது.
ஒரு வருட காலத்திற்குள் இந்த பழங்குடிகளின் மக்கள் தொகையில் கிட்டதட்ட 60% இறந்து போயினர். அதாவது 80 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்தனர். அப்படிப்பட்ட சூழ்நிலையினை உருவாக்கியே கோர்ட்டேஸால் 2 லட்சம் ஏஸ்டெக் வீரர்களை வெற்றிக் கொள்ள முடிந்தது. ”பூச்சிகளைப் போல கூட்டம் கூட்டமாக மக்கள் இறந்தன. ஒட்டுமொத்த குடும்பங்கள் இறந்த நிலையில் அவர்களது வீடுகளிலேயே அவர்கள் புதைக்கபட்டனர். அவர்கள் வீடுகளே கல்லறைகளாகின’ என்று கோர்ட்டேஸுடன் வந்திருந்த சாமியார் எழுதினார்.
இந்த நோயினால் குழந்தைகள் பெருமளவில் இறந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட இளைஞர்களால் ஸ்பானிய படைவீரர்களை எதிர்த்து யுத்தம் நடத்த முடியவில்லை. இவ்வாறு மக்கள் தொகை சீரழிந்ததால் விவசாயம் பாதிக்கப்பட்டு பஞ்சம் தலைவிரித்தாடியது. உணவில்லாமல் பெருமளவில் மக்கள் தங்களது பலத்தை இழந்தனர். இது மேலும் இவர்களைப் பலவீனப்படுத்தியது. கிட்டதட்ட 70 நாட்களுக்குள் பெருமளவில் அழிவு நடந்து முடிந்தது. இவ்வாறு தான் இந்த ஏஸ்டெக் பேரரசும், பழங்குடி மக்களும் அழிந்து ஸ்பானிய காலனியாக மெக்சிகோவும் மத்திய அமெரிக்காவும் உருவானது.
இதே போன்று இன்கா எனும் பழங்குடி பேரரசும், மாயன் பேரரசும் இந்த சின்னம்மையால் முற்றிலுமாக துடைத்தெறியப்பட்டன. தொற்று நோய்களால் கிட்டதட்ட 90 சதவீதமான பழங்குடி அமெரிக்கா மக்கள் அழிந்து போனார்கள். சின்னம்மையை ஒரு போர் ஆயுதமாக மேற்கத்திய நாடுகள் கிட்டதட்ட இரண்டாம் உலகப் போர் வரை முயற்சித்தனர். 20ஆம் நூற்றாண்டில் இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும்வரை இது தொடர்ந்தது.
வணிக விரிவாக்கம் ஆசியாவிற்கு கொண்டு வந்த தொற்று நோய்
தொற்று நோயை ஆயுதமாக பயன்படுத்திய வழிமுறைகள் ஆஸ்திரேலியா, பசிபிக் பழங்குடிகள், இந்திய துணைக்கண்டம் என பல இடங்களில் காலனிய அரசுகளால் நடைமுறைப்படுத்தப்பட்டது. மருத்துவ அறிவு வளராத சமூகங்கள் இந்நோய்களுக்கு வகைதொகையின்றி பலியாகின. போர் ஆயுதங்களை விட இந்த கிருமிகளே பெருமளவில் வெற்றியைக் காலனிய ஆதிக்கத்திற்கு துணை செய்திருக்கின்றன. ஒரு இனத்தை வெற்றி கொள்ள, அடிமைப்படுத்த அம்மக்களிடமிருந்து எழும் போராட்டக்காரர்களை மட்டுமல்லாது அம்மக்கள் ஒட்டுமொத்தமாக பாதிப்பிற்குள்ளாக்கி அழிப்பது ஒரு யுக்தியாகவே இருந்திருக்கிறது.
நோய் தொற்று இந்தப் பணியை அதாவது இனப்படுகொலையை மிக எளிமையாக செய்து முடிக்கிறது. மக்களின் வலிமை குன்றும் போது அம்மக்களின் பொருளாதார நடவடிக்கைகள் குறைகின்றன. இது உற்பத்தியை பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இந்த உற்பத்தி முடக்கம் பஞ்சத்தை மேலும் கூர்மையாக்கி ஒட்டுமொத்த இனத்தையும் ஊனமுற்றதாக்குகிறது. இவ்வாறு தான் காலனியாக்கங்கள் காலம் காலமாக ஏகாதிபத்தியங்களால் ஏற்படுத்தப்பட்டிருகின்றன. ஏகாதிபத்திய வணிகத்திற்காக நிகழ்த்தப்பட்ட பயணங்கள், யுத்தங்கள் இந்த நோய்க்கிருமிகளை உலகலாவிய அளவில் கொண்டு சென்றன.
சீனாவின் யூனான் பிரதேசத்தில் (தற்போது கொரொனா தொற்று ஆரம்பித்த பகுதி) 1850இல் ஆரம்பித்த ப்ளேக் நோய் சீனாவின் மையப்பகுதியில் பெரும் தாக்கத்தைக் கொண்டு வந்தது. இந்த நோய் ஆசியக்கண்டத்தில் பரவுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது அதன் வணிகச் செயல்பாடுகளே. வெள்ளையரின் ‘ஓப்பியம்’ வணிக போக்குவரத்து இந்த நோயை பல இடங்களுக்கு பரப்பியது. இந்த நோய் ஹாங்காங்கிலிருந்து இந்திய துணைக்கண்டத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதில் கிட்டதட்ட 1.25 கோடி இந்தியர்கள் பலியானர்கள். பெருமளவில் இந்த தொற்று நோய்கள் துறைமுக நகரங்கள், வணிக நகரங்கள் வழியாகவே இந்த ஆசியக் கண்டங்களில் பற்றிப்பரவியது.
உடல்மீது நிகழ்த்தப்பட்ட கிருமித் தாக்குதல் என்பது போரில் ஈடுபடாத, காலனிய எதிர்ப்பில் நேரடியாக பங்கேற்காத மக்கள் மீதும் யுத்தம் தொடுத்தது. இந்த வகையான தாக்குதல் என்பது காலனியத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட மக்கள் உடல்ரீதியான காலனியாக்கத்திற்கும் உள்ளாக்கப்பட்டார்கள். இந்த நோய் தொற்று என்பது ஒரு யுத்தக் கருவியாக தமிழீழ மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் போதும், அதற்கு பிந்தைய காலம் வரையிலும் தொடர்கிறது. பொருளாதார ஆக்கிரமிப்பு என்பது மட்டுமே அடிமைப்படுத்தல் அல்லது காலனியத்தின் முற்றுமுழுதான வடிவமாக அமையவில்லை என்பதை இன்று வரை உலகம் விவாதித்துக் கொண்டிருக்கிறது.
- மே 17 இயக்கக் குரல்