ஜூலை.30 அன்று ஜப்பானில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடக்கின்றன. மக்களின் கடுமையான அதிருப்தியைச் சந்தித்துள்ள லிபரல் ஜனநாயகக் கட்சி மீண்டும் மக்களைச் சந்திக்க முடிவெடுத்தது. கடந்த ஓராண்டாக ஜப்பான் சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடி மாற்றுக்கருத்துகளை அந்நாட்டு மக்களின் மனதில் விதைத்தது. 1929 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கனிகோசன் என்ற நாவல் 2008 ஆம் ஆண்டில் திடீரென்று அதிகமாக விற்றது. முதலில் யாருக்கும் புரியவில்லை. முதலாளித்துவ சுரண்டலை எதிர்த்து வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்திய மீன்பிடித் தொழிலாளர்கள்தான் அந்த நாவலின் கதாநாயகர்கள். ஆட்குறைப்பும், வேலையிழப்பும் இத்தகைய புத்தகங்களை நோக்கி ஜப்பானிய மக்களைத் தள்ளியுள்ளது.
அதோடு ஜப்பானியக் கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கி செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஜப்பானியர்கள் முன்பு இரு அம்சத்திட்டத்தை அக்கட்சி வைத்துப் பிரச்சாரத்தைத் துவக்கி விட்டது. மக்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் ஆகிய இரண்டையும் பாதுகாக்கும் வகையிலான பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பது தான் முதலாவது அம்சமாகும். ஒவ்வொரு ஜப்பானியக் குடிமகனுக்கும் சமூகப் பாதுகாப்புத்திட்டம் சென்றடைய வேண்டும் என்பது உள்ளிட்ட பலவற்றை இந்த அம்சத்தில் கொண்டு நிறுத்தியுள்ளார்கள். உலக அமைதியை வலியுறுத்தக் கூடிய சுயேட்சையான வெளியுறவுக்கொள்கையைக் கடைப்பிடிப்பது இரண்டாவது அம்சமாகும். அமெரிக்காவின் அடியாள் போன்று செயல்படக்கூடாது என்பதுதான் அதன் உள்ளடக்கம். உள்நாட்டில் அமெரிக்கப் படைகளுக்காக கோடிக்கணக்கான டாலர்களைக் கொட்டிக் கொண்டிருக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதையும் ஜப்பானியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
IM kanikosen அமெரிக்க ஆதரவுக்கு சாவேசின் ஆப்பு
2002 முதல் 2008 வரையிலான வெனிசுலாவின் வறுமை குறித்த அறிக்கை உலக முற்போக்கு ஜனநாயக வட்டாரங்களுக்கு நல்ல செய்தியைத் தருகிறது. “கடுமையான வறுமை”யால் பாதிக்கப்பட்டிருந்த வெனிசுலா மக்களின் எண்ணிக்கை 20.2 சதவீதத்திலிருந்து 11.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. அவ்வப்போது வேலைகிடைத்து ஏதோ நாங்களும் சம்பாதிக்கிறோம் என்ற நிலையில் இருந்தவர்களின் எண்ணிக்கை 43 சதவீதமாக இருந்தது. அது 27.5 என்று சரிந்துள்ளது. ஏழை மக்களைக் குறிவைத்து செயல்படுத்தப்படும் இடதுசாரிக் கொள்கைகளின் விளைவே இந்தப் புள்ளிவிபரங்கள். 1998 ஆம் ஆண்டுக்கு முன்பாக நாட்டில் அபரிமிதமாகக் கொட்டிக் கிடக்கும் எண்ணெய் வளத்திற்கும் 90 சதவீதமான மக்களுக்கு சம்பந்தமில்லாமல் இருந்தது. அவர்கள் அனைவருக்குமே அன்றாட வாழ்க்கை என்பதே போராட்டம்தான். எண்ணெய் வளம்தான் நாட்டின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளதுதான் அதற்குக் காரணம்.
சாவேஸ் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டபிறகுதான் இந்த வளத்தின் மூலம் வரும் வருமானம் மக்களின் நலன்களுக்காக ஒதுக்கப்பட்டது. 35 ஆண்டுகளாக அமெரிக்காவில் வர்த்தகம் செய்து வந்த வெனிசுலாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான பிடிவிஎஸ்ஏ, ஒரு டாலரைக்கூட சொந்த நாட்டுக்கு கொண்டுவராமல் இருந்தது. கேட்டால் அங்கேயே முதலீடு செய்து விடுகிறோம் என்று டபாய்த்தார்கள். விபரம் கேட்டபோது பேந்தப் பேந்த முழித்தார்கள். விடவில்லை சாவேஸ். இந்தச் சாக்குப்போக்கெல்லாம் இனி செல்லாது. கணக்கு காண்பியுங்கள் என்று உத்தரவிட்டார். சர்வாதிகாரமாக செயல்படுகிறார் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்திகளைத் திரிக்கத் துவங்கின. அது இன்னும் தொடர்கிறது. ஆனால் மக்களின் நல்வாழ்வுப்பணிகள் அந்த மோசடியைத் தொடர்ந்து அம்பலப்படுத்துகிறது.
யோசித்துச் சொல்லுங்களேன்
அட... அப்படியா என்று மூக்கின் மேல் விரல் வைக்கும் நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமேயில்லை. ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த பெண்மணி இறந்துபோன விஷயம் ஒரு ஆண்டுக்குப்பிறகுதான் தெரிய வந்தது. அவருடைய மரணம் இயற்கையானதா அல்லது தற்கொலையா என்பது இப்போதைக்கு தெரியவில்லை. ஆனால் ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்திருக்க வேண்டும் என்பதை அறிவித்து விட்டார்கள். 66 வயதான அந்தப் பெண்மணி தனியாகத்தான் வாழ்ந்திருக்கிறார். இந்தச் செய்தியைப் படித்தவுடன் பலர் ஒரு பெண் தனியாக வாழ முடியாது பார்த்தீர்களா என்றெல்லாம் இணையதளங்களில் விவாதிக்கத் துவங்கி விட்டார்கள். தனியாக இந்த சமூகத்துடன் தொடர்பில்லாமல் யாருமே வாழக்கூடாதுதான். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி.
இதோ இவரைப் பாருங்கள். சீனாவின் ஷான்க்சி மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர், தனது காரை சிக்னலுக்காக நிறுத்தினார். சிக்னல் விழுந்தபிறகும் வண்டியை எடுக்கவில்லை. பார்த்தால் வண்டியில் தூங்கிக்கொண்டிருந்தார். கடுமையான போதை. அவரை எழுப்ப 20 நிமிடங்கள் ஆனது. அனுமதிக்கப்பட்ட அளவை விட 2.5 மடங்கு அதிகமான ஆல்கஹால் அவரது உடலில் இருந்தது. ஆண்கள் தனியாகக் கார் ஓட்டக்கூடாது என்று சொல்வார்களா..?
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
இளைஞர் முழக்கம் - ஆகஸ்ட் 2009
சொந்தக்காலில் நிற்கலாமே...!
- விவரங்கள்
- கணேஷ்
- பிரிவு: இளைஞர் முழக்கம் - ஆகஸ்ட் 2009