வெனிசுலாவின் தலைநகர் கராகஸில் சென்ற ஜனவரி 22 முதல் 24 வரை நடைபெற்ற ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உலகக் கூட்டமைப்பில் ஐந்து கண்டங்களைச் சேர்ந்த சமூக, அரசியல் இயக்கங்களின் 403 பிரதிநிதிகளும், 2096 தேசியப் பிரதிநிதிகளும் ஒன்றுகூடினர். வெனிசுலாவின் ஆளும் ஐக்கிய சோசலிசக் கட்சியால் (பி.எஸ்.யூ.வி) இந்தக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெனிசுலாவின் கராகஸில் நடைபெற்ற XXV சாவ் பாலோ மன்றத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தத் தென் அமெரிக்க நாட்டின் அனுபவங்களை மற்ற நாடுகளுக்கும் கொண்டு சேர்ப்பதற்கும் மேலாக, ஏகாதிபத்திய எதிர்ப்பிற்கான ஒரு சர்வதேச ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்காகவே இந்த ஏற்பாடு.
கூட்டமைப்பின் பங்கேற்பாளர்கள், “வாழ்க்கை, இறையாண்மை மற்றும் அமைதிக்காக” என்ற முழக்கத்தின் கீழ் ஒன்றுசேர்ந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகளும் அதன் நட்பு நாடுகளும் ஊக்குவிக்கும் புதிய தாராளமய ஏகாதிபத்தியக் கொள்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்தனர் “அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்புக் கொள்கையால் பூமியின் அமைதி கடுமையாக அச்சுறுத்தப்படுகிறது” என்ற இறுதி அறிவிப்பிற்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் தங்கள் கடப்பாட்டைப் பங்கேற்பாளர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். தங்களது பல்வேறு போராட்டங்களையும் ஒரு வலிமையான, தடுக்கவியலா ஆற்றலாக ஒன்றிணைக்கத் தேவையான அனைத்து ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும் வாக்களித்தனர்.
வெனிசுலாவின் அதிபர் நிகோலஸ் மதுரோ உரையாற்றுகையில், அமெரிக்கப் பேரரசிலிருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு மேலாக அதன் சந்தைப் பொருளாதார மேலாதிக்க வாழ்வு முறையில் நெறியியல் நெருக்கடி உருவாகி உள்ளது என்றார்; அதில் நுகர்வுக் கலாசாரத்தைத் திணிப்பதற்காகத் தேசியக் கலாசாரங்கள் மற்றும் மனித விழுமியங்கள் புதைக்கப்படுகின்றன என்றார்.
மனித மதிப்புகளுக்கு எதிரான முதலாளித்துவத்தின் தனிமனித வழிபாட்டு முறை உழைக்கும் மக்களின் வாழ்நிலை நெருக்கடியை மிகவும் மோசமாக்குகிறது. ஏகாதிபத்தியம் நெருக்கடியில் உள்ளதாகையால் அது மேலும் ஆக்ரோஷமானதாகவும், ஆபத்தானதாகவும் அழிவுகரமானதாகவும் உள்ளது என்று உரையாற்றினார்.
கலாச்சார மேலாதிக்கத் தொழில்துறை, வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (நேட்டோ) இராணுவச் செயல்பாடுகள் மற்றும் 21ஆம் நூற்றாண்டின் பொலிவரியன் சோசலிசம் பற்றியும் போராளிகள் விவாதம் செய்தனர். இப்போதைய பொருளாதார மாதிரிக்கு மாற்றாக சர்வதேச அமைப்பை ஏற்படுத்துவது குறித்தும் மூன்று நாட்கள் விவாதித்தனர்.
ஏகாதிபத்திய எதிர்ப்புத் தாக்குதலின் மையப் பிரச்சினை பற்றிய விவாதத்திற்கு அப்பால்,: பெண்கள், கறுப்பின மக்கள், பழங்குடி மக்கள், தொழிலாளர்கள், கம்யூன்கள், தகவல் தொடர்பு மற்றும் இளைஞர்கள் குறித்த துறைசார்ந்த பிரச்சினைகள் பற்றிய விவாதங்களும் நடந்தன
தொழிற்சங்க விவாதத்தில், பங்கேற்பாளர்கள் உலகளாவிய ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்திற்கான ஒரு தளத்தை உருவாக்குவது குறித்தும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் கல்வி அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வது குறித்தும் விவாதித்தனர்.
கம்யூன்கள் பற்றிய விவாதத்தில், வெனிசுலாவின் கம்யூன்கள் மற்றும் பிரேசிலின் நிலமற்ற கிராமப்புற தொழிலாளர் இயக்கத்தின் (எம்எஸ்டி) குடியேற்றங்கள் போன்ற, மக்களின் சக்தியைக் கட்டியெழுப்புவதற்கான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு இணைய நூலகத்தை உருவாக்குவதற்கான திட்டம் முன்மொழியப்பட்டது.
சென்ற வருடம் டிசம்பர் மாதம் தகவல் தொடர்புக் கூட்டமைப்பில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவால் அறிவிக்கப்பட்ட முன்னெடுக்கப்பான, தகவல்தொடர்புத் துறையில், மாற்றுத் தகவல்தொடர்புக்கான ஒரு சர்வதேச வலையமைப்பை உருவாக்குவது குறித்து முன்மொழியப்பட்டது, அதே போல் தகவல்தொடர்புப் பல்கலைக்கழகம் உருவாக்கி திறனாய்வு அரசியல் கல்விக்கான பாடத் திட்டங்களை ஏற்படுத்துவது குறித்தும் முன்மொழியப்பட்டது.
டெலிஷுயர் (ஊடகம்) மற்றும் ஹிஸ்பான் டிவி ஆகிய, சர்வதேச அளவில் அச்சுறுத்தல்களைப் பெற்ற இரண்டு நிலையங்களையும் ஆதரிக்க எடுக்கப்பட்ட நகர்வுகள் கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்டன.
வெனிசுலாவின் விடுதலைக்கான கல்வி மற்றும் பணித்துறை துணை அமைச்சர் திவா குஸ்மான் தனது உரையின் போது "இந்த சந்திப்புகள் நமது புரட்சியை பகுப்பாய்வு செய்யும் எங்கள் கட்சியின், செயல்முறைகளாக முடிவடைகின்றன. உலகளாவிய போராட்ட சூழலில் வெனிசுலாவின் அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகளை ஊக்குவிப்பது முக்கியம் என்று நாங்கள் நம்புகிறோம், ஏனென்றால் எங்கள் போராட்டம் மற்ற நாடுகளின் போராட்டங்களுக்கு வெனிசுலா தரும் பங்களிப்பாக இருக்கக்கூடும் ”என்று தெரிவித்தார்.
" வெனிசுலாவின் உதாரணத்தை உற்று நோக்கினால், அமெரிக்கப் பேரரசு செயல்படும் விதம் தெளிவாகத் தெரியும். இராணுவத் துறையில் சக்திவாய்ந்த ஒரு நாடு, வெனிசுலாவின் உள் விவகாரங்களில் தலையிவதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள், நமது பொருளாதாரத்தையும் நமது சமுதாயத்தையும் முற்றிலும் சீரழிக்கும் ஒரு திட்டமும் ஆர்வமும் அமெரிக்கா கொண்டுள்ளது. இது வெனிசுலாவில் மட்டுமல்ல, பொலிவியாவிலும் இவ்வாறே செயல்படுகிறார்கள், ஈக்வடாரில் சூழ்ச்சியானக் கையாளுகை மூலமாகவும், அர்ஜென்டினாவிலும் பிரேசிலிலும் திணிப்பு முறையின் மூலமும் இதைச் செய்தார்கள். அவர்கள் மன்ரோ கோட்பாட்டை புதுப்பிக்கிறார்கள், ”என்றும் குஸ்மான் இந்த நிகழ்வின் ஏகாதிபத்திய எதிர்ப்பு தன்மை பற்றியும் கருத்து தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆக்கிரோஷமான நடவடிக்கைகள் காரணமாக, இராஜதந்திரமுறையில் பதிலளிக்க அதிக வாய்ப்பில்லை ஏனெனில் ஜனநாயக அமைப்புகளும் சர்வதேச சட்டமும் பெரிய உலக சக்திகளால் முறியடிக்கப்பட்டன என்றும் துணை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவிலிருந்து சோசலிசம் மற்றும் விடுதலைக்கான கட்சியின் உறுப்பினரான எலிசபெத் பிர்ரீல் அவர்கள் "அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் போன்ற பெரிய ஒரு அரக்கனை தோற்கடிக்க, நாம் அனைத்தையும் செய்ய வேண்டியது அவசியம். அதோடு, நாம் இங்கே பார்த்தபடி ஒற்றுமையுடனும் செயல்படவேண்டும் அமெரிக்காவில் நாம் சோசலிசத்தை அடைந்தால், இது வரை இருந்து வந்ததிலே மிகக் கொடூரமான இந்த ஏகாதிபத்தியத்திலிருந்து உலகத்தை நாம் விடுவிக்க முடியும் என்பதை நான் அறிவேன்” என்று .அறிவித்தார்.
பிரிட்டானிய கம்யூனிஸ்டுகள் சார்பில் பேசிய தோழர் ஜொடி ஏகாதிபத்தியத்தை எப்படிஅழிக்க வேண்டுமென்பதை லெனினிடம் இருந்து கற்றுக்கொள்வோம் என்று உ ரையாற்றினார்.
வெனிசுலாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் தோழர் ஜார்ஜ் அரீஸாவின் ஆற்றல் மிக்க தொடக்க உரையின் சாரம்:
உன் எதிரியை தெரிந்துக்கொள்:
தனது கருத்துக்களை அறிமுகப்படுத்திய அமைச்சர் அரீஸா, பெர்லின் சுவர் இடிந்து விழுந்தபோது லத்தீன் அமெரிக்காவின் மக்கள் உணர்ந்த நம்பிக்கையற்ற தன்மையைப் பற்றியும், வரலாற்றின் முடிவாக அதை ஏகாதிபத்திய சித்தாந்தவாதிகள் ‘உச்சரித்ததைப் பற்றியும் கூறினார்.. ‘ஏகாதிபத்தியம்’ என்ற சொல்லைப் பற்றி பொதுவாக, குறிப்பாக இளைஞர்களுக்கு எந்தப் புரிதலும் இல்லை, இச்சொல் ‘வயதான, தாடிவைத்த கம்யூனிஸ்டுகளால்’ மட்டுமே’ பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படுவதாகத் அவர்களுக்குத் தோன்றியது.. இளைஞர் கூட்டம் இதை மூத்த மார்க்சிஸ்டுகளின் ‘வரட்டுவாதம்’ எனக் கருதி அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள மறுத்து நிராகரித்தனர்.
போராட்டம் நிறைந்த இந்த காலகட்டத்தில் எதிர்கொள்ளும் எதிரியின் தன்மை குறித்து மக்களுக்கு தெளிவின்மை இருந்தபோதிலும், கிளர்ச்சியின் உத்வேகம் தொடர்ந்தது.
காலம், மூத்த மார்க்சிய கெரில்லாக்கள் சரியானவர்கள் என்று நிரூபித்துள்ளது. ஏகாதிபத்தியதம் குறித்த லெனினின் வரையறை, முற்றிலும் சரியானது மேலும் எப்போதும் பொருத்தமானது.
இந்தப் புரிதல் எப்படி வந்தது? லத்தீன் அமெரிக்காவின் போராடும் ஏழைகளுக்கு ஒரு கலங்கரை விளக்கம் போல் ஒளியூட்டிய கம்யூனிஸ்ட் கியூபாவின் எதிர்ப்பும், மக்கள் எதிர்கொள்ளும் எதிரியைப் பற்றி எப்பொழுதும் நேர்படவே பேசும் .‘ஒரு மண்வெட்டியை ஒரு மண்வெட்டி என்றே கூறும், தளபதி ஹ்யூகோ சாவேஸின் போதனைகளும் இப்புரிதலுக்கு பெரும்பங்காற்றியுள்ளன.
கடைசியாக, அமெரிக்க அதிபராக அதிகாரத்தைப் பிடித்த டொனால்ட் ட்ரம்ப் ஏகாதிபத்தியத்தின் முகத்திலிருந்து முகமூடியைக் கிழித்துள்ளார்., ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களின் வளங்கள் குறித்து பேரரசின் நோக்கத்தை மிகத் தெளிவுபடுத்தும் விதமாக பொய்யான பரப்புரைகளையும் ஊடகங்களையும் அம்பலப்படுத்தியுள்ளார்.
ஏகாதிபத்தியத்தின் இருப்பு குறித்தோ, அதன் தன்மை குறித்தோ நம் மனதில் எந்த சந்தேகமும் இல்லை, இந்த ஏகாதிபத்திய அமைப்பு வீழ்ச்சியடைந்துள்ளது, அதனால் அது இன்னும் மிகவும் ஆபத்தானதாகவும் உள்ளது.
வெனிசுலா இன்று, மேற்கு அரைக்கோளத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தின் மையமாக உள்ளது, அதே நேரத்தில் வீரமிக்க சிரிய மக்கள் கிழக்கில் போராட்டத்தை வழிநடத்துகிறார்கள். சண்டை வெவ்வேறு வடிவங்களை எடுக்கக்கூடும், ஆனால் அது ஒரே போராட்டம் தான். மேலும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு எங்கு நடந்தாலும் அதை எதிர்ப்பதற்கான நமது திறனை மேம்படுத்த ஒரு கூட்டு நடவடிக்கைக்கான திட்டம் நமக்கு தேவை.
2019 ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி:
ஏகாதிபத்திய தலையீட்டின் ஒரு நேர்வு ஆய்வு:
டிரம்ப் சகாப்தத்தில், வெனிசுலாவில் ஏகாதிபத்தியத்தின் திட்டங்கள் மற்றும் சூழ்ச்சிகள் குறித்து இனி எந்த ரகசியமும் இல்லை. அமெரிக்கா தனது உத்தரவுகளை வெனிசுலாவில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு வெளிப்படையாகவே பிறப்பிக்கிறது, அதன் உறுப்பினர்களுக்கான செலவுகளை வெளிப்படையாக செலுத்துகிறது மேலும் அவர்களின் மூலோபாயத்தையும் தந்திரங்களையும் தீர்மானிக்கிறது. அதன் உறுப்பினர்கள் பெறும் உதவித்தொகை மற்றும் செலவுகள் வரை.இந்த கைக்கூலிகளுடான வெளியுறவுத் துறையின் சந்திப்புகள் எந்த ஒளிவு மறைவுமின்றி வெளிப்படையாக மேற்கொள்ளப்படுகின்றன, மேலும் அவை நன்கு ஆவணப்படுத்தப்பட்டும் உள்ளன,
வெனிசுலாவில் அமெரிக்காவின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி என்பது ஒரு இறையாண்மை கொண்ட நாட்டில் ஏகாதிபத்திய தலையீட்டிற்கான ஒரு நேர்வு ஆய்வே ஆகும். அல் கபோனை ஒரு துறவி போல தோற்றமளிக்க செய்ய அதன் இராஜதந்திர யுத்தம் மட்டுமே போதும். வெனிசுலா ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தேர்ந்தெடுக்கப்படுவதைத் தடுக்க அமெரிக்கா, சிறிய, பலவீனமான நாடுகளை மிரட்டி, அழுத்தமேற்படுத்தி செய்த பிரச்சாரம் ஒன்று போதும். அதையே உலகெங்கிலும் சர்வதேச மன்றங்களில் மேற்கொள்ளப்பட்ட இது போன்ற இராஜதந்திர யுத்தங்களுக்கு உதாரணமாகக் கூறலாம்.
ஐக்கிய நாடுகள் சபையின் கவுன்சிலுக்கு வெனிசுலாவின் நியமனத்தை ஆதரித்தால், ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துவோம் என்று அமெரிக்கா பல அரசுகளை அச்சுறுத்தியது, ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளுக்கு உதவியைக் குறைப்போம் என்று மிரட்டியது. கரீபியன் நாடுகளின் அமைச்சர்களை அச்சுறுத்தியது. இந்த முயற்சிகள் அனைத்தையும் மீறி, 106 நாடுகள் வெனிசுலாவுக்கு வாக்களித்தன, 90 நாடுகளுக்கு எதிராக அழுத்தம் கொடுத்ததால் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டன. வாக்களிப்பதற்கு முந்தைய கடைசி தருணம் வரை போராட்டம் தொடர்ந்தது, அவையில் எந்தவிதமான நயவஞ்சக நடவடிக்கையையும் தவிர்க்க வாக்கெடுப்பு நடந்த அமர்வில் பல்வேறு அரசுகளின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் வெனிசுலாவுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய அட்டூழியங்கள், ஆக்கிரமிப்புக்கான பல வழிமுறைகளை அமெரிக்கப் பேரரசு மேற்கொண்டுள்ளது. இராஜதந்திர சூழ்ச்சி, அச்சுறுத்தல் மட்டுமல்லாமல், சரமாரியாக ஊடக பொய்களின் வாயிலாகவும், வெனிசுலாவின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் மீதும் தாக்குதல்களை தொடுத்தது. வெனிசுலாவின் வெளிநாட்டு சொத்துக்கள் திருடப்பட்டது, அமெரிக்காவின் கைப்பாவை ஜுவான் கைடே மற்றும் பலரின் மூலமாக சதி முயற்சி செய்தது. ஆனால் இவை எல்லாம் நடந்தும் ஒரு நொடி கூட சரணடைவதை நாங்கள் கருதவேயில்லை.
வெனிசுலாவின் மக்கள் ஏகாதிபத்தியக் கட்டளைகளுக்குத் தலைவணங்க மறுத்ததற்காக அவர்களை தண்டிப்பதற்காக விதிக்கப்பட்ட அடிகளே பொருளாதாரத் தடைகள்.அவை மக்களை பட்டினி போட்டு தங்கள் அரசாங்கத்தை நிராகரிக்க வைப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்டன, ஆனாலும் அவை தோல்வியடைந்துள்ளன.. - உணவு, மருந்து மற்றும் அனைத்து வகையான அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறையால் – சிரமங்கள் ஏற்பட்டிருந்தபோதிலும் மக்கள் அரசாங்கத்தை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளனர்.
அமெரிக்காவின் ஆட்சி கவிழ்ப்பு சதி ஒன்றுமில்லாமல் போன போது அமெரிக்க ஆளும் வட்டாரங்களில் பெரும் அவநம்பிக்கை ஏற்பட்டது. ஆட்சிக்கவிழ்ப்பிற்காக, அணிசேர்ந்த படைகள் மிகவும் சிறியவையாகவும், தன்னுறுதி இல்லாமலும் இருந்தன (கைடேவுடன் கூடியிருந்த பெரும்பான்மையான வீரர்கள் ஏமாற்றப்பட்டனர் மற்றும் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளின் தொலைபேசி அழைப்புகள் மூலம் அவர்கள் எதற்காக அதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று விளக்கம் பெற்ற போது அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்) அவர்களை சிதறடிக்க செய்ய கண்ணீர்ப் புகை தவிர வேறொன்றும் தேவைப்படவில்லை. மீதமிருந்த கையளவிலான நபர்கள் அரசு அதிகாரத்தை கைப்பற்ற வேண்டிய நாளில் ஸ்பெயின் தூதரகத்தில் ஜாமன் செரானோ-வை சாப்பிட்டு முடித்தனர்.
இனப்படுகொலைக்கான முற்றுகை நீக்கப்படும் வரை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்பதில் நிக்கோலஸ் மதுரோவின் பொலிவரிய அரசு உறுதியாக உள்ளது.
புதிய தேர்தல்கள் நெருங்கும்போது குழப்பத்தில் எதிரணி:
இதற்கிடையில், எதிர்க்கட்சி இப்போது குழப்பத்தில் உள்ளது, குய்டே ஒரு கையாலாகாதவர் என்று தெரியவந்துள்ளது. அவர் சமீபத்தில் பெரும்பான்மையானவர்களால், அரசை எதிர்க்கும் பெருமளவு சக்திகளால் கூட நிராகரிக்கப்பட்டார் (வெனிசுலாவின் வெகுஜனங்களுக்கு அவர் ஒரு பொருட்டே இல்லை அவர்களில் பலர் அவரைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை).
வாஷிங்டனில் உள்ள கைப்பாவைகளின் எஜமானர்கள் அதிபர் தேர்தலில் போட்டியிடாத குய்தோ என்ற நபரையே சட்டபூர்வமான’ அதிபராக்கும் அபத்தமான யோசனையை முன் நிறுத்தும் முயற்சியிலே உள்ளனர். அவர்களின் உத்தரவுக்கு மாறாக வெனிசுலாவின் எதிர்க்கட்சி எம்.பி.க்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இப்போது அரசுடன் சமாதான உடன்படிக்கைக்குக்கான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களைப் பற்றி பேசிய அமைச்சர், ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகள் ஒரு வலுவான நிலையில் இருப்பதாகவும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இழந்த சட்டமன்றத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்ற வெனிசுலாவின் மக்களுக்கு கடமைப்பட்டிருப்பதாகவும் கூறினார். சட்டம் இயற்றவோ அல்லது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடவோ முடியாதவாறு அரசுப் பணிகளைத் தடுப்பதற்காக இது சமீபத்திய ஆண்டுகளில் செய்யப்பட்டுள்ளது.
எங்களது நாடாளுமன்றத்தில் மூன்று வருடமாக நிகழும் பிரெக்ஸிட் சீர்குலைவுகளுக்குப் பிறகு, மக்களின் விருப்பத்திற்கு முரணாக ஒரு சட்டமன்றத்தை அமைப்பதே அமைச்சரின் கண்ணோட்டம் என்பதைத் பிரிட்டனில் உள்ள தொழிலாளர்கள் தெரிந்து கொள்வார்கள். வரவிருக்கும் தேர்தல், அரசின் கரங்களுக்கிடையே நல்லிணக்கத்தை மீட்டெடுப்பதற்கும், வெனிசுலாவின் ஏகாதிபத்திய ஆதரவு கொண்ட தன்னலக்குழுக்களின் முகவர்களால் மிகவும் மகிழ்ச்சியுடன் பயன்படுத்தப்பட்ட தடங்கல் பொறிமுறையை அகற்றுவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.
வெனிசுலா: ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உலகப் போராட்டத்தில் ஒரு முன்னணி:
தோழர் ஜார்ஜ் வெனிசுலாவின் போராட்டத்தை மீண்டும் ஒரு உலக கண்ணோட்டத்தில் கொண்டுவந்தார், இது போராட்டத்தின் பல முனைகளில் ஒன்றாகும். சமீபத்தில் ஈரானுக்கு சென்று திரும்பிய அவர், ஏகாதிபத்திய முற்றுகைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரானக் கூட்டு ஒற்றுமையின் அவசியத்தையும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு துடிப்பான மற்றும் ஒருங்கிணைந்த உலக இயக்கத்திற்கானத் தேவையையும் மீண்டும் வலியுறுத்தினார்.
போராட்டத்தின் கடைசி ஆண்டு கொடுமையானதாகவும், மிகவும் கடினமானதாகவும் இருந்தது, ஆனால் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் வெனிசுலா வெற்றிகரமாகவே வெளிவந்தது. எங்களுடையது ஒரு நிறைவான அரசு இல்லை தான், ஆனால் மக்கள் எங்களை ஆதரிக்கிறார்கள், ஏனென்றால் நாங்கள் அவர்களை நேசிக்கிறோம், அவர்களின் பிரச்சினைகளை உண்மையாகவேத் தீர்க்க முயற்சிக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறார்கள். அந்த ஆதரவு இல்லாமல் எங்களால் நீடித்திருக்க முடியாது.
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர் நாம் வெல்ல வேண்டிய ஒன்றாகும், நமது கண்டம் மற்றும் உலகெங்கிலும் ஏகாதிபத்தியவாதிகள் வளர்ந்து வரும் மக்கள் இயக்கங்களை நசுக்க முயற்சிக்கின்றனர். இருப்பினும், மக்கள் தொடர்ந்து போராடுகிறார்கள்.
வெறுக்கப்பட்ட அமெரிக்கத் தலைவரின் விஷயத்திற்குத் திரும்பிய அவர், அதிபர் டிரம்ப் ஒரு நேர்மறையான பக்கத்தைக் கொண்டிருப்பதாக மீண்டும் கூறினார்: ஏகாதிபத்தியத்தின் சுயநல, கொள்ளைக்கார, மேலாதிக்க தன்மையின் மிக நேர்த்தியான ஆளுருவமாக டிரம்ப் உள்ளார். - உண்மையில், ஏகாதிபத்திய் முதலாளித்துவ சமூகத்தின் அனைத்து எதிர்மறை மதிப்புகளுக்குமான சரியான ஒரு பிரதிநிதியாக உள்ளார். “சுதந்திர உலகின் ஆட்சியாளர்கள்”, நளினமான ஸூட்டுகள், போலிப் புன்னகைகள் மற்றும் இரட்டை நாக்குடன் கூடிய ஒபாமா நாட்களுக்கு திரும்புவதற்கு ஏங்குவதில் ஆச்சரியமில்லை!
வெனிசுலாவைப் பற்றி அமெரிக்கா தவறாகக் கணக்கீடு செய்தது. சாவேஸுடன் புரட்சி இறந்துவிடும் என்று அவர்கள் நினைத்தார்கள், ஆனால் சாவேஸின் திட்டங்களும், கோட்பாடுகளும் மக்களிடையே ஆழமாக வேரிட்டுள்ளன என்பதால் இந்த வழியில் அவரைக் கொல்ல முடியவில்லை. சாவேஸ், எங்கெங்கும் உள்ளார் அதனால் தான் ஓய்வூதியம், வீட்டுவசதி, கல்வி, கலாச்சாரம் என முன்னர் கிடைக்காத உரிமைகளை இப்பொழுது தொழிலாளர்கள் அனுபவித்து வருகின்றனர்.
வெனிசுலாவின் தவறுகளிலிருந்தும் பின்னடைவுகளிலிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்.. பொருளாதாரத்தின் முக்கிய நெம்புகோல்கள் ஒரு விரோத வர்க்கத்தின் கைகளில் உள்ளன. குடியாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றாலும் வங்கியாளர்களையும்,பெருமுதலாளிகளயும் தொடர்ந்து ஆட்சி செய்ய அரசால் அனுமதிக்க முடியாது.
புதிய சிரமங்கள் வந்து கொண்டு தானிருக்கின்றன, அவர் கூடியிருந்த பிரதிநிதிகளிடம், உங்கள் அனைவரது ஆதரவும் ஒற்றுமையும் எங்களுக்குத் தேவை. அது குறிப்பாக எல்லா இடங்களிலும் மக்களின் மனதிலுள்ள ஏகாதிபத்திய ஊடகங்களின் பிடியை உடைப்பதற்கு தேவைப்படும். ஏகாதிபத்திய எதிர்ப்பு ஊடகங்களின் புதிய உலகளாவிய வலையமைப்பை நாம் கட்டியெழுப்ப வேண்டும், தகவல்களை நேரடியாக ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள வேண்டும் மேலும் எல்லா இடங்களிலும் உள்ள தொழிலாளர்களுக்கு உண்மையைப் பரப்புவதற்கான ஒவ்வொரு வழியையும் நாம் பயன்படுத்த வேண்டும்.
இந்த பொய்கள் யாவும் இருந்தபோதிலும், உண்மை தன்னை உறுதிப்படுத்தியது. பொலிவரியன் புரட்சி கடந்த ஆண்டின் போர்களால் பலப்படுத்தப்பட்டு அதன் தலைமை உருக்கு பெற்றுள்ளது..
சிரிய மக்களின் வீரத்திற்கும், ஏகாதிபத்திய படையெடுப்பிற்கு எதிரான அவர்களின் வெற்றிகரமான போராட்டத்திற்கும், ஐஎஸ்ஐஎஸ், மத்திய கிழக்கின் ஏகாதிபத்திய ஆதரவாளர்களுக்குப் பெருந்துன்பமாகத் திகழ்ந்த ஈரானின் கொலை செய்யப்பட்ட தளபதி சுலைமானி அவர்களுக்கும் அமைச்சர் புகழ் அஞ்சலி செலுத்தினார்.
தளபதி சோலைமானியைக் கொன்றதில் அமெரிக்காவின் நடவடிக்கையும் மற்றும் டிரம்ப் அவரைப் பற்றிக் கூறியப் பொய்களும், மத்தியக் கிழக்கில் ஏகாதிபத்தியத்தின் உண்மையானக் குறிக்கோள் பயங்கரவாதிகளை அழிப்பதல்ல, அவர்களைக் காப்பாற்றுவதே என்பதையும் பிராந்தியத்தில் உள்ள மக்களை விடுவிப்பதற்காக அல்ல, அவர்களை அடிமைப்படுத்துவதற்கே.என்பதையும் மீண்டும் மிகத் தெளிவாகக் காட்டியுள்ளது.
வாஷிங்டனில் உள்ள கைப்பாவைகளின் எஜமானர்கள், அதிபராக நன்கு பேசும், நேர்த்தியான ஒரு பெண்மணியை தேர்ந்தெடுத்து, முகத்தில் புன்னகையுடன் உலக அழிப்பைத் தொடரவே விரும்புகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இங்கு பிரச்சினை ஏகாதிபத்தியத்தின் அமைப்பு தானே தவிர அந்த அமைப்பின் தலைவராக முன்னணியில் செயல்படும் நபரின் அல்லது பெண்மணியின் குறிப்பிட்ட குணநலன்கள் அல்ல. என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அண்மையில் நடந்தக் கூட்டத்தில் சீனப்பிரதிநிதி கூறியதை அமைச்சர் அவரது ஒப்புதலுடன் மேற்கோள் காட்டினார்: “ ஏகாதிபத்திய எதிரியை திறம்பட எதிர்கொள்ள, நாம் எதிரியை ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.” நாம் அதை அழிப்பதில் வெற்றிபெற வேண்டுமானால் ஏகாதிபத்தியத்தின் தன்மையை முழுமையாக ஆராய வேண்டும்.”
ஏகாதிபத்தியத்தை அழிக்க வேண்டுமென்றால் நாம் செய்யவேண்டியது நிறைய உள்ளது. செயல்படுத்தும் வகையிலான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்கான முழுமையான திட்டம் நம்மிடம் இருக்க வேண்டும். இந்த வேலையை செய்ய முடியும், செய்யப்படவும் வேண்டும். முயற்சி செய்து தோல்வியடைய இன்னும் 200 ஆண்டுகள் நம்மிடம் இல்லை. மனிதகுலத்தின் தொடர்ச்சியான இருப்பு நமது வெற்றியைப் பொறுத்தே அமைந்துள்ளது என்றும் தோழர் அரீஸ் ஜார்ஜ் உரையாற்றினார்...