“நாங்கள் செய்த வேலை என்பது அணில் செய்த உதவியைப் போன்றது” 2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றபோது திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரும், அவருடைய மகனான நடிகர் விஜய்யும் அடக்கத்துடன் சொன்ன வார்த்தைகள் இவை.

அதாவது,இராமாயணக் கற்பனைக் கதையில் இலங்கைக்கு ராமர் கட்டியதாகச் சொல்லப்படும் புனைவுப் பாலத்தை அமைப்பதற்கு, ஒரு சின்ன அணில் தன் முதுகில் மண் சுமந்ததாகச் சொல்லப்படுகிறது.அணில் தன் முதுகில் சுமந்த சிறிதளவு மணல் போல, சட்டமன்றத்தேர்தலில் அ.தி.மு.கவின் வெற்றிக்குத் தங்களுடைய பங்கும் சிறிதளவு இருந்ததாக தந்தையும் தனயனும் தன்னடக்கத்துடன் சொல்லிக் கொண்டார்கள்.

அ.தி.மு.கவின் வெற்றிக்கு இந்த அணில்கள் ஏன் உதவின? உண்மையில், விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அடிப்படையில் அண்ணா மீதும் கலைஞர் மீதும் பற்றுக் கொண்டவர். அவருடைய ஆரம்பகால படங்களில் ஒன்று, ‘சட்டம் ஒரு இருட்டறை’. அண்ணா சொன்ன வாக்கியத்தை படத்தின் தலைப்பாக அமைத்தார்.அவருடைய படங்களில் சில நொடிகள், அண்ணா பேசுவது போன்ற காட்சிகளைக் காட்டுவதும் வழக்கம்.

எம்.ஜி.ஆர். ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், கலைஞரின் வசனத்தில் ’நீதிக்குத் தண்டனை’ என்ற படத்தை இயக்கினார் சந்திரசேகர். அந்தப் படத்தில், ‘நீதிக்குத் தண்டனை இது என்ன சோதனை’என்ற பாடலை எழுதியவர்,எம்.ஜி.ஆர்.ஆட்சியில் அரசவைக் கவிஞராக இருந்த புலவர் புலமைப்பித்தன்.கலைஞர் வசனம் எழுதிய படத்தில் எம்.ஜி.ஆரின் அரசவைக் கவிஞர் பாடல் எழுதுவதா என்ற சர்ச்சையும் விவாதமும் எழுந்தன.

விளைவு,புதிய அரசவைக் கவிஞராக முத்துலிங்கத்தை நியமித்தார் எம்.ஜி.ஆர்.எதற்காக இந்தப் பழைய நிகழ்வை நினைவூட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது? கலைஞர் மீது பற்றுக் கொண்டவராக இருந்த எஸ்.ஏ.சந்திரசேகர்,ஏன் தன் தனயனுடன் அ.தி.மு.க வெற்றிக்கு அணில் போல உழைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

விஜய் இன்று தமிழ்த் திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவர்.அவர் நடித்த வேட்டைக்காரன், சுறா போன்ற படங்களை சன் தொலைக்காட்சி நிறுவனம் வணிகத்திற்காக வாங்கியது. அவை தொடர்பாக விஜய் தரப்புக்கும் சன் குடுமத்திற்கும் உருவான சிக்கல்கள், விஜய் நடித்த காவலன் படத்தில் உச்சகட்டத்தை எட்டின.சன் குழுமம் என்ற வணிக நிறுவனத் துடனான பிரச்சினையைத் திட்ட மிட்டு அரசியலாக்கினார்,பல படங்களுக்கு அருமையாக கதை திரைக்கதை அமைத்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்.தனது சினிமா வணிகச் சிக்கல்களை, தி.மு.க தலைமைக்கு எதிரான பிரச்சினையாக உருவாக்கினார். தன் மகன் விஜய்யின் இளவட்ட ரசிகர்களை தி.மு.கவுக்கு எதிராகக் களமிறக்கி,அ.தி.மு.க ஆதரவு பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அரசியல் அறிந்தவர்களுக்கு உண்மை நிலவரங்கள் தெரியும். சன் குழுமத்தினர், கலைஞரின் சொல்லுக்கே கட்டுப்படாத வணிக நோக்கம் கொண்டவர்கள்.

இதனைக் கலைஞரும் சில நேரங்களில் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். இருந்தும்கூட, சன் குழுமத்தைக் காரணம் காட்டி தன் மீதும் தன் குடும்பத்தார் மீதும் அன்பும் அக்கறையும் கொண்டு,பல நேரங்களில் ஆலோசனைகளும் வழங்கிய கலைஞருக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டை எடுத்தார்.போயஸ் தோட்டத்திற்குத் தன் மகனுடன் சென்று, காத்திருந்து சந்தித்து ஆதரவு தந்தார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றதும், அதில் தங்கள் பங்கினை அணிலுக்கு ஒப்பிட்டனர் தந்தையும் தனயனும்.

ஆனால், அ.தி.மு.க தலைமை அதனை ஏற்றுக்கொண்டதா? அரசியலில் யானை அளவுக்கு வலிமையான வாஜ்பாய், சோனியா, நரசிம்மராவ், நல்லகண்ணு, என்.வரதராஜன், ஏ.பி.பரதன் போன்ற தலைவர்களையே தூசாக நினைக்கும் போயஸ் தோட்டம்,தங்களைத் தாங்களே அணில் என்று சொல்லிக் கொள்பவர்களை எந்தளவுக்கு மதிக்கும்?எஸ்.ஏ.சந்திரசேகர் தலைவராக இருந்த தயாரிப்பாளர் சங்கத்தில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பூதாகரமாக எழுந்தன. அவர் ஓடினார்.. ஓடினார்.. போயஸ் தோட்டம் நோக்கி ஓடினார். தோட்டத்தின் கதவுகள் திறக்கப் படவில்லை. சங்கத் தலைவர் பதவி முடங்கிப்போனதுதான் சந்திரசேகர் கண்ட பலன்.அவரது மகன் விஜய் நடித்த புதுப்படங்களின் திருட்டுக் குறுந்தகடுகள் கள்ளச்சந்தையில் சரளமாக விற்பனையாயின. கதறிப் பார்த்தார்.

அணில்களைத் தோட்டம் கண்டுகொள்ளவேயில்லை.

எல்லாவற்றுக்கும் உச்சகட்டமாக..விஜய்யின் 39ஆவது பிறந்தநாளைச் சீரும் சிறப்புமாக 39ஆயிரம் பேருக்கான விருந்துடன் கொண்டாடச் சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் பிரம்மாண்ட பந்தலை அமைத்தார்சந்திரசேகர்.மாநிலமெங்கும் உள்ள ரசிகர்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டது.விஜய்யை வாழ்த்தி எல்லா ஊர்களிலும் பதாகைகள் வைக்கப்பட்டன.விஜய்யை அரசியலுக்குக் கொண்டு வர அவரது அப்பா மேற்கொள்ளும் முயற்சி தான் இது என உளவுத்துறை தனது அறிக்கையைக் கச்சிதமாக அனுப்பியது. அத்துடன், அந்தப் பதாகைகளில், ‘எஸ்.ஏ.சி. அப்பா அழைக்கிறார்’ என்ற வாசகம் இருந்ததும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

தமிழகத்தில், அம்மா மட்டுமே இருக்க முடியும். அப்பா இருக்கலாமா? தோட்டம் சினந்தது. தொரட்டியை எடுத்தது.

விளைவு?ஜெயின் கல்லூரியில் நடைபெறவிருந்த விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அவசர அவசரமாகப் பந்தல் பிரிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும், ‘அப்பா’ அழைப்பதாக வைக்கப்பட்டிருந்த பதாகைகள் அகற்றப்பட்டன.இத்தனை ஏற்பாடுகள் செய்யப்பட்ட விழாவை, எப்பாடுபட்டாவது நடத்திவிடவேண்டும் எனத் தோட்டத்தைத் தொடர்புகொள்ள அணில்கள் முயற்சித்தபோது, தொரட்டி யால் அவை விரட்டப்பட்டன.

திரைப்பட வணிகச் சிக்கலுக்காக தி.மு.கவை எதிர்த்துக் கூக்குரலிட்டு, தோட்டம் சென்று ஆதரவளித்த அணில்கள், தங்களின் சொந்த விருப்பம் சார்ந்ததும் ரசிகர்களின் ஆதரவைப் பெறவுமான ஒரு பிறந்தநாள் விழாவைக்கூட இந்த ஆட்சியில் கொண்டாட அனுமதிக்கப் படாதபோது எப்படிக் கொந்தளித் திருக்கவேண்டும்?ஆனால்,அப்பாவும் மகனும் சகல அவயங்களையும் மவுனமாக்கிக் கொண்டு,பிரம்மாண்ட பிறந்தநாள் விழா வையே ரத்து செய்துவிட்டனர்.

கோரிக்கை,உதவி,புகார் என்று எத்தனையோ முறை கலைஞரை நேரில் சந்தித்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர்.அவருடைய மகன் விஜய்,திரைப்படத்தில் அறிமுகமான போதே கலைஞரின் வாழ்த்தைப் பெற்றவர்.முதல்வர் கலைஞரின் கைகளால் கலை மாமணி விருதும் விஜய்க்கு வழங்கப் பட்டது.ஆனால்,அந்தக் கலைஞரைத் தன் சொந்தக் காரணங்களுக்காகஎதிர்த்தஎஸ்.ஏ.சந்திரசேகர்,அ.தி.மு.கபொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு, தானாக முன்சென்று ஆதரவளித்தார்.அவரையும் அவரது ஆதரவையும் புறங்கையால் தள்ளித் தன்னைத் தெளிவாக அடையாளம் காட்டியிருக்கிறார் ஜெயலலிதா.

அணில்களாய் உதவி செய்தவர்கள் இப்போதும் பாடம் கற்றிருப்பார்களா எனத் தெரியவில்லை.ஆனால்,தமிழக அரசியல் ஒரு பாடத்தை மட்டும் திரும்பத் திரும்ப நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது.குறை சொல்லிக் கோபம் காட்டினாலும் திராவிடம் அணைத்துக்கொள்ளும்.

அடிமைகளாகவே மாறினாலும் ஆரியம் அடித்து விரட்டிவிடும். 

Pin It