கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த 7 பேரின் வழக்குகளையும் ஒரே சமயத்தில் விசாரித்து விடுதலை செய்தது. சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே இதுவே முதன் முறையாகும்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான பி.கே.மிஸ்ரா ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவராவர். இது போன்று நிறைய வழக்குகளில் அவர் அரசுக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளார். வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பான “நுழைவு தேர்வு இரத்து செய்து தமிழக அரசு சட்டமியற்றியது செல்லும்” என்று தீர்ப்பளித்தவரும் இவரே. 2006 இல் நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் 99 வார்டுகளில் முறைகேடு நடந்துள்ளது என்று தீர்ப்பளித்த நீதிபதிகளில் இவரும் ஒருவர்.

லெட்சுமணன், தாமோதரன் மற்றும் குமரனுக்கு எதிராக போட்ட தேசிய பாதுகாப்பு சட்டம் செல்லாது என நீதிபதி பி.கே. மிஸ்ராவுடன் இணைந்து தீர்ப்பளித்த நீதிபதி ஜே.எ.கே.சம்பத் குமார் தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கில் கொடுத்த கடைசி தீர்ப்பு இதுதான். ஏனென்றால் அடுத்த நாள் அவர் ஓய்வு பெற்றார்.

ஈரோடு மாவட்ட கழகத் தோழர்கள் இராம. இளங்கோவன் உள்ளிட்ட நால்வரின் வழக்கு 27.4.07 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அன்றுதான் அந்த ஆண்டின் கடைசி வேலை நாளாகும். அடுத்த நாள் உயர்நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை ஆரம்பம்.

கைது செய்யப்பட்ட 7 பேர்களின் ஹேப்பியஸ் கார்பஸ் மனுவிற்கு மத்திய அரசினாலோ, மாநில அரசினாலோ பதில் மனு ஏதும் தடுப்புக்காவல் கைதிகளுக்கு வழக்கு முடியும் வரை வழங்கப்படவில்லை.

மாநில அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பிறப்பித்த உத்திரவினை உறுதி செய்வதற்கு முன் கைதிகள் அனைவரும் அறிவுரைக் குழுமம் முன் நிறுத்தப்படுவர். அறிவுரைக் குழுமத்தில் 3 ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். கழகத்தின் சார்பாக துணைத் தலைவர் ஆனூர் செகதீசனும், சென்னை மாவட்ட பொறுப்பாளர் கேசவனும் அறிவுரைக் குழுமத்தில் கழகத்திற்கு ஆதரவாக வாதிட்டனர்.

ஆனூர் செகதீசன் அறிவுரைக் குழு மத்திடம் பூணூல் தான் தேசத்தை பாதுகாக்கிறதா? பூணூலை அறுத்தால் தேசவிரோதம் ஆகிவிடுமா? என்று வாதிட்டது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் வெளிவந்த பெரியார் எழுதிய கட்டுரையை அறிவுரைக் குழுமத்தின் பார்வைக்கு ஆனூரார் கொண்டு வந்தார்.

சென்னை மாநகர ஆணையர் தவறான சட்டப் பிரிவில் குமரனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்தது, ‘சரியா சிந்திக்காமல் எடுத்த முடிவு’ என்று கூறி தீர்ப்பளித்து நீதிமன்றம் குமரனை விடுவித்துள்ளது.

ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு விழிப்புணர்வு இல்லை என்று கூறி இராம. இளங்கோவன் உள்ளிட்ட நால்வரையும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்தது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் விடுவித்துள்ளது.

லெட்சுமணன், தாமோதரன் ஆகியோரை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்தது ஏற்கனவே திட்டமிட்ட ஒன்று என்று கூறி இருவரையும் உயர்நீதிமன்றம் விடுவித்துள்ளது.

7 வழக்குகளுக்கும் ஒரே நீதிபதியே. அதாவது நீதிபதி பி.கே. மிஸ்ராவே தீர்ப்பளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் 7 பேரும் விடுதலை அடைந்தாலும் சென்னை மாவட்ட கழகத் தோழர் குமரன் தவிர மற்ற 6 பேரும் ஜாமீன் மனு அந்தந்த மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ஜாமீனில் வெளிவர உத்திரவு பெற்றால் மட்டுமே சிறையிலிருந்து வெளிவர முடியும். குமரனுக்கு ஏற்கெனவே சென்னை உயர்நீதி மன்றம் ஜாமீன் வழங்கியுள்ளதால் அவர் 28.4.2007 மாலை சென்னை மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

உயர்நீதிமன்ற தீர்ப்பு கலைஞர் அரசின் முகத்தில் கரிப்பூச்சாகும். பார்ப்பனரை மகிழ்விக்க கலைஞர் எடுத்த நடவடிக்கைக்கு பதிலடியாகவே இத் தீர்ப்பு வந்துள்ளது.