“பாரதீய சனதாக் கட்சியின் நடப்புச் செயல்பாடோ அது சென்று கொண்டிருக்கும் திசை வழியோ உவப்பாக இல்லை என்ற எண்ணமே சிறிது காலமாக எனக்கு இருந்து வருகிறது. நாட்டைப் பற்றியும் நாட்டு மக்களைப் பற்றியும் மட்டுமே கவலைப்பட்ட டாக்டர் முகர்ஜியும் பண்டிட் தீனதயாள்ஜியும் நானாஜியும் வாஜ்பாய்ஜியும் உருவாக்கிய அதே இலட்சியக் கட்சி தான் இது என்று இப்போது நான் கருதவில்லை.

இன்று நம் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் தத்தமது சொந்தத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதிலேயே குறியாக உள்ளனர்.” இப்படி எழுதியிருப்பவர் இப் போதைய பா.ச.க. தலைவர்களிலேயே மூத்தவரான லால்கிசன் அத்வானி. அவர் கட்சியின் முக்கியப் பொறுப்புகளிலிருந்துவிலகியதை ஆர்.எஸ்.எஸ்.கட்டளைப்படி விலக்கிக் கொண்டிருந்தாலும் மேற் சொன்ன வன்மையான குற்றாய்வை விலக்கிக்கொண்டு விடவில்லை.நாளை மோகன் பகவத் உத்தரவிட்டு அத்வானி இந்தக் கருத்துகளையும் விலக்கிக் கொன்டாலும் கூட, காறித் துப்பிய எச்சிலைத் திரும்ப எடுத்து விழுங்க முடியாது. சொன்னது சொன்னதுதான்.

பா.ச.க.வின் நடப்புச் செயல்பாடு, அதன் திசைவழி உவப்பாக இல்லை என்கிறாரே அத்வானி, அது என்ன செயல்பாடு? என்ன திசைவழி? முகர்ஜி, தீனதயாள்ஜி, நானாஜி, வாஜ்பாய்ஜி ஆகிய மாபெரும் ஜிக்கள் உருவாக்கிய இலட்சியக் கட்சி என்கிறாரே,அது என்ன இலட்சியம்? அல்லது இலட்சி யங்கள்? அவை இப்போது மாறி விட்டனவா? அகண்ட பாரதம், இந்துத் துவம் என்ற பெயரிலான பார்ப் பனிய மேலாதிக்கம்,வட மொழித் திணிப்பு ...அத்வானி போற்றும் இந்த இலட்சியங்களை பா.ச.க.

கைவிட்டுவிட்டதா?ரதயாத்திரையின் நாயகன் முன்னின்று நடத்திய பாபர் மசூதி இடிப்பு குற்றம் என்றுணர்ந்து அதற்குக் கழுவாய் தேடத் தீர்மானித்து விட்டதா?அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.

பனாஜியில் நடந்த மந்திராலோசனை களை அத்வானிஜி புறக்கணித்து விட்டு ராமபாணம் போல் ஒரு கடிதக் கணை விட்டதற்கு நாட்டின் மீதோ மக்களின் மீதோ அவர் அக்கறை கொண்டதன்று காரணம்.அவருக்கும் ஒரு சொந்தத் திட்டம் அது மற்றொரு தலைவரின் சொந்தத் திட்டத்தோடு முட்டிக் கொண்டது என்பதே உண்மை.அந்த மற்றொரு தலைவர் நரேந்திர மோடி என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? பா.ச.க. எவ்வளவு ஆபத்தான கட்சி என்பதை மட்டுமன்று,நரேந்திர மோடி எவ்வளவு ஆபத்தான தலைவர் என்பதையும் அறிந்தோ அறியாமலோ இந்த ஊடல் வழியே நமக்கு உணர்த்தி விட்ட அத்வானிஜிக்கு நாம் நன்றி சொல்லத் தான் வேண்டும்.

மக்களின் மறதி...மோடி வித்தைக் கரர்களுக்கு வசதி ஆகி விடக் கூடாது என்பதால் சில வரலாற்று உண்மைகளை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

ஆரியப் படையெடுப்பு பற்றியும் அதன் வர்ணசாதியத் தாக்கங்கள் பற்றியுமான தொன்மைச் செய்திகள் மறந்து போயிருக்கலாம். உலகமே பார்த்திருக்க ஒரு பழைய மசூதியை இடித்து நாடெங் கும் பல்லாயிரம் புதிய கல்லறைகள் கட்டுவதற்கு வழிகோலிய பாபர் மசூதி இடிப்பைப் பற்றிய புதுமக்காலக் கொடுஞ்செய்திகளும் கூட மறந்து போயிருக்கலாம்.

ஆனால் நாட்டின் நாளைய தலைமையமைச்சர் நானே என்று தாடியைத் தடவிக்கொண்டு புறப்பட்டு வரும் நர விலங்கை உலகறியச் செய்த செய்திகளை மறத்தல் தகுமோ?அது 2002 பிப்ரவரி 27ஆம் நாள் காலை கோத்ரா தொடர்வண்டி நிலை யத்தில் சபர்மதி விரைவுத் தொடர் வண்டியின் ஒரு பெட்டி எரிகிறது, அல்லது எரிக்கப்படுகிறது. இந்தத் தீயில் கருகிச் செத்த59பயணிகளில் சிலர் அயோத்தியிலிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த கரசேவகர்கள்.

கோத்ரா தீவைப்பு ஒரு சமுதாயத் தினரின் பயங்கரவாதத் தாக்குதல் என்று குசராத்து முதலமைச்சர் நரேந்திர மோடி உடனே அறிவிக்கிறார். குசராத் எங்கும் ‘வகுப்புக் கலவரம்’ என்ற பெயரில் முசுலிம்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடக்கிறது.முதலமைச்சரின் வாய்மொழி ஆணைப்படி,காவல் துறை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறது,அல்லது உடந்தையாகச் செயல்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ்.பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முன்னின்று முஸ்லிம்கள் மீது கொலை, பாலியல் வன்செயல், தீவைப்புக் கொடுமைகள் நிகழ்த்து கின்றனர். மூன்றே நாளில் இரண்டா யிரத்துக்கு மேற்பட்ட முசுலிம்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்.

குப்புறத் தள்ளிய மோடிக் குதிரை குழியும் பறிக்கத் தயங்கவில்லை.முசுலிம்கள் கொலையுண்ட வழக்குகளில் குற்றவா ளிகளைத் தப்பவிட குசராத்து அரசே செய்த தில்லுமுல்லுகள் கொஞ்சமில்லை.

முசுலிம்கள் உயிரோடு கொளுத்தப்பட்ட பெஸ்ட் பேக்கரி வழக்கில் மனித உரிமைப் போராளிகள் அயராது பாடு பட்டு உச்ச நீதிமன்றத்திலேயே குசராத்து அரசின் மோசடிகளை அம்பலப்படுத்தினார்கள்.முசுலிம்கள் மீதான நரவேட் டைக்கு நரேந்திர மோடி அமைச்சர வையே திட்டமிட்டுக் கொடுத்தது என்ற வலுவான குற்றச்சாட்டுகள் அசைக்க வியலா அகச் சான்றுகளோடு எழுப்பப் பட்டுள்ளன.

அதே 2002 கடைசியில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் மோடி தலைமையிலான பா.ச.க. வெற்றி பெற்று ஆட்சிக்குத் திரும்புகிறது, நரவேட்டைக் குற்றவாளிகள் பலரும் இந்து மத வெறியை முன்னிறுத்தியே தேர்தலில் வெற்றி பெறுகின்றனர்.அடுத்தடுத்த தேர்தல் களில் மோடி கும்பல் வெற்றி பெறுவதை வைத்து ந.மோ.வை நல்ல தலைவராகக் காட்டும் முயற்சி தொடர்ந்து நடைபெறு கிறது.

இலங்கைத் தேர்தல்களில் சிங்கள இனவெறியை முன்னிறுத்தி இராசபட்சே கும்பல் பெறும் வெற்றிக்கும் இந்து மதவெறியை முன்னிறுத்தி மோடி கும்பல் பெறும் வெற்றிக்கும் பெரிய வேறுபாடில்லை.மக்கள் தலைவர்கள் தேர்தலில் தோற்பதும் மக்களின் பகைவர்கள் அமோக வெற்றி குவிப்பதும் இந்திய ‘சனநாயக’த்தில் அதிசயம் அல்லவே?பா.ச.க.வுக்கு சரியான கொள்கைவழி மாற்றாக காங்கிரஸ் அமையவில்லை என்ற உண்மையையும் கணக்கிற்கொள்ள வேண்டும்.

குசராத்து இசுலாமியர் படுகொலை 2002தொடர்பாக ந.மோ.வகையறா மீது யாரும் ஏனோதானோஎன்றுகுற்றம் சுமத்தவில்லை.நீதிமான்வி.ஆர்.கிருஷ்ணய்யர் தலைமையிலான குடிமக்கள் தீர்ப்பாயத்துக்காக முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஹோஸ்பெட் சுரேஷ் தலைமையிலான விசாரணைக் குழு அளித்த அறிக்கையை எவராலும் எளிதில் புறந்தள்ள முடியாது.

தெகல்காவுக்காக இளம் புலனாய்வுச் செய்தியாளர் அசீஷ் கேத்தன் தனியருவராய் எடுத்த முயற்சி புலனாய்வு இதழியல் வரலாற்றில் ஒரு புதுச் சாதனை.அவர் கண்டறிந்து வந்து வெளிப்படுத்திய உண்மைகள் குறித்து தமிழ்த் தேசம் 2007நவம்பர் இதழில் ‘கொலை முதல்வன் குசராத்து மோடியைச் சிறை செய்க!’ என்ற தலைப்பில் விரிவான ஆசிரியவுரை எழுதியுள்ளேன்.

அசிஷ் கேத்தன் வெளிப்படுத்திய பல உண்மைகள் இப்போது மெய்யுறுதி செய்யப்பட்டு நிற்கின்றன. சான்றாக ஒன்று: தலைநகர் அகமதாபாதில் நரோடா பட்டியா, நரோடா கிராமம் ஆகிய இரு முஸ்லிம் பகுதிகளிலும் 2002 பிப்ரவரி 28ஆம் நாள் பஜ்ரங் தளத்தையும் விசுவ இந்து பரிசத்தையும் சேர்ந்த முப்பது பேரைத் திரட்டிப் போய் ‘சாரா’பழங்குடி வகுப்பைச் சேர்ந்தசிலரையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டு,200க்கு மேற்பட்ட முசுலிம் ஆண்பெண்குழந்தைகளை வாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும், பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியும் படுகொலை நிகழ்த்தியவர்கள் பஜ்ரங் தளத் தலைவன் பாபு பஜ்ரங்கியும், பா.ச.க. சட்டப் பேரவை உறுப்பினர் மாயாபென் கொத்னானியும். இவர்களில் மாயாபென் ஒரு பெண்ணாம், பேயுருக்கொண்ட பெண்! .

நரோடா பாட்டியா வழக்கில் அண்மையில் தீர்ப்பு வந்துள்ளது பாபு பஜ்ரங்கியும் மாயபென்னும் கொலைக் குற்ற வாளிகள் என்று.இருவருக்கும் வாழ்நாள் சிறை போல் நீண்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் இந்தத் தண்டனை போதாது,தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்யலாமா என்று குசராத்து அரசு வழக்கறிஞர்கள் பரிசீலித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

சொல்லியிருப்பது யார் தெரியுமா?இந்த நரவேட்டைக் காரர்களின் தலைவர் நரேந்திர மோடியேதான். இதற்காக இந்துத்துவ அமைப்புகள் அவர் மீது பாய்ச்சல் காட்டியுள்ளன.

இந்துக்களின் காவலர் என்று நினைத்தோம், இவரே கொலைகாரர்களை அவர்கள் இந்துக்கள் என்றும் பாராமல் தூக்கிலிடச் சொல்வது துரோகம் அல்லவா?என்று கேட்டுள்ளன. சிவசேனையின் அதிகாரப்பூர்வ ஏடு இதற்காக மோடியைக் கண்டித்து எழுதியுள்ளது. ஆனால் எல்லாம் ஒரு நாடகம் என்று அவர்கள் எல்லாருக்குமே தெரியும்.

நரேந்திர மோடியின் குருதிக் கறைகளைக் கழுவி அவரை ‘பாரத தேச’த்துக்கே ஏற்புடையவராகக் காட்டும் முயற்சிதான் இது.. பஞ்சமாபாதகம் செய்தவர்களே என்றாலும் அவர்கள் இந்துத்துவக் காடையர்கள் என்றால் காக்கக் காக்க இவர் போல் வேறெவரும் இல்லை என்பதால்தான், ஆர்.எஸ்.எஸ்.

தலைமையே அத்வானியின் தலையில் குட்டி,உற்சவ மூர்த்தியாக மோடியை உலா வரப் பணித்துள்ளது! கோத்ரா எரிப்புக்குப் பழிதீர்க்க சூளுரைத்தவர் மோடி.

“அடுத்த மூன்று நாளில் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று வன்முறையாளர்களைக் கட்டவிழ்த்து விட்டவர், அரசு இயந்திரத்தை அவர்களுக்கு உடந்தை ஆக்கியவர் மோடி.பாபு பஜ்ரங்கியையும்மாயாபென் கொத்னானியையும் தூக்கிலிடுவதாக இருந்தால் அவர்களுக்கு முன் தூக்கிலிட வேண்டியது நாளைய தலைமையமைச்சராக முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடியைத்தான்.

நரேந்திர மோடியின் வளர்ச்சிக் கொள்கை பற்றியும்,அவரால் குசராத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றியும் ஆகா ஓகோ என்று புகழ் பரப்பும் தொடர்முயற்சி ஒன்று நடைபெறுகிறது.முதலாவதாக இன்றைய இந்தியாவில் மாநில அரசுக்கென்று ஒரு தனித்துவமான வளர்ச்சிக் கொள்கை இருக்க வழியில்லை. உலகமயம், தனியார்மயம், தாராளமயம் என்ற முக்காலிக் கொள்கைதான் இந்திய அரசின் பொருளியல் அணுகுமுறைக்கும் முடிவுகளுக்கும் அடிநாதமாக இருப்பது.

இந்தக் கொள்கையின் முகமையாக மட்டுமே எந்த மாநில அரசும் செயல்பட முடியும். இந்திய மற்றும் அயலகப் பன்னாட்டு மூலதனத்துக்கு சேவை செய்யும் இந்தக் கொள்கை பெருந்திரளான மக்களின் வாழ்வுரிமையைப் பறித்து அவர்களை ஓட்டாண்டிகளாக்கும் போதே ஒரு புதிய பணக்கார வர்க்கத்தைத் தோற்றுவிக்கிறது.இது பெரும்பாலும் உயர் கல்வியிலும் உயர் வேலைவாய்ப்பிலும் முற்றுரிமை வகித்து வரும் பார்ப்பனர்களுக்கும், தொழில் வணிகத்தில் முதன்மை வகித்து வரும் பனியாக்களுக்கும் பயனளித்து வருகிறது. இந்தப் பார்ப்பன பனியாக் கும்பல்தான் ‘நரேந்திர மோடியாக நம’ என மந்திரம் படிப்பதில் தீவிரமாக உள்ளது.

நரேந்திர மோடி இந்திய இந்துத்துவ பாசிசத்தின் தீவிர வடிவம்,அரச பயங்கரவாதத்தின் கோர முகம். மோடியின் ‘வளர்ச்சி’ சமூக நீதி ஆற்றல்களுக்கு ஓர் எச்சரிக்கை. குறிப்பாகத் தமிழ்நாட்டில்...

பா.ச.க என்றொரு கட்சி நம்மிடையே இருப்பதும், வாஜ்பாய், அத்வானி போன்ற பெயர்கள் தமிழ்நாட்டுமக்களுக்குத் தெரிந்திருப்பதுமே வெட்கக்கேடு!இப்போது மோடியின் இந்துத்துவப் ‘படை’ என்றால், தமிழ்நாட்டில் இவர்கள் ஒதுங்குவதற்கு ஒரு மரம் கூட நிழல் தரக் கூடாது.செயல் வழியிலும் கொள்கை வழியிலும் இது குறித்த எச்சரிக்கை உணர்வு தமிழர்களுக்குத் தேவை. 

Pin It