பெரியார் நூல்கள் நாட்டுடைமையாகட்டும்!

உங்களுக்குப் பிறகு யார் வாரிசு என்ற கேள்விக்கு, எனது நூல்கள் தான் என்று பதில் கூறினார் பெரியார். தனது வாரிசாக, தனது சிந்தனைகளே நாடு முழுதும் பரவவேண்டும் என்பதே இதன் அர்த்தம். அதனால் தான் பெரியார் நூல்கள் அரசுடைமையாக வேண்டும் என்ற கோரிக்கை அழுத்தம் பெறுகிறது. பெரியாரின் நூல்கள் அரசுடைமை ஆகும்போது, அவைகளை எவரும் வெளியிட முடியும். அதன் வழியாக அது பரவலாக மக்களிடம் போய்ச் சேரும். ஒரு படைப்பாளியின், தலைவரின் நூல்கள் அரசுடைமையாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையான நோக்கங்களில் இது ஒன்று. மற்றொன்று, அந்தக் கருத்துகளை அரசு மதிக்கிறது; கவுரவிக்கிறது என்பதை மக்களுக்கு இதன் மூலம் உணர்த்தப்படுவதாகும்.

மகாராஷ்டிரா அரசு அம்பேத்கர் சிந்தனைகளை தொகுதிகளாக பல்வேறு மொழிகளில் குறைந்த விலையில் வெளியிட்டது என்றால், அது அம்பேத்கருக்கு வழங்கப்பட்ட கவுரவம் - மரியாதை. அம்பேத்கர் நூல்களை வெளியிட அவரது கொள்கைகளை பரப்பக்கூடிய நிறுவனங்கள் வேறு எதுவும் இல்லை என்பது, இதன் அர்த்தமல்ல.

இதேபோல்தான் பெரியாரின் நூல்களை ‘தேசவுடைமையாக்க வேண்டும்’ என்று ‘தினமணி’ நாளேடு வலியுறுத்தியது. ஆனால் திராவிடர் கழகம், இதற்கு ஒரு மறுப்பை வெளியிட்டிருக்கிறது. அந்தக் கழகத்தின் பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் சார்பில் வெளியிடப்பட்ட மறுப்பை ‘தினமணி’ நாளேடு (செப்.25) வெளியிட்டிருக்கிறது.

“அந்தத் தலைவர் அல்லது படைப்பாளியின் நூல்களை அவரின் மறைவுக்குப் பிறகும் தொடர்ந்து வெளியிட அமைப்பும், பொறுப்பாளர்களும் தகுதியுடன் இருக்கும் பொழுது, நாட்டுடைமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது பாலபாடமாகும்.” - என்று திராவிடர் கழகம், நூல்கள் அரசுடைமைக்குவதற்கு ஒரு ‘பால பாடத்தையே’ உலகுக்கு கற்றுத் தந்திருக்கிறது. அண்ணாவின் நூல்கள் தமிழ்நாட்டில் அரசுடைமையாக்கப்பட்டிருக்கிறது. அதனால் அண்ணாவின் மறைவுக்குப் பிறகும் அண்ணாவின் நூல்களை வெளியிட அவர் உருவாக்கிய கழகத்துக்கே, தகுதி இல்லாமல் போய் விட்டதா, என்ன? நிச்சயமாக இல்லை.

திராவிடர் கழகத் தலைவர்கள், ‘பெரியாரை உலகமயமாக்குகிறோம்’ என்று ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவரது நூல்களை தாங்கள் மட்டுமே வெளியிட தகுதியானவர்கள்; அரசுடைமையாக்கக் கூடாது என்கிறார்கள். இது என்ன முரண்பாடு என்று கேட்கத் தானே தோன்றும்? அப்படி பெரியார் சிந்தனைகளை வெளியிட, இவர்கள் காட்டிய முனைப்புதான் என்ன?

பெரியார் பற்றாளர்கள் திருச்சி பெரியார் மாளிகையில் சுமார் இரண்டு மாதகாலம் கடுமையாக உழைத்து, பெரியாரின் எழுத்து, பேச்சுகளை ஆண்டுவாரியாக ‘குடிஅரசு’ பத்திரிகைகளிலிருந்து திரட்டித் தொகுத்து, 75000 பக்கங்களைக் கொண்ட கையெழுத்து பிரதிகளை 1983-ல் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் திரு.வீரமணியிடம் நேரில் அளித்தனர். அது அப்படியே முடங்கிப் போய்த்தான் கிடந்தது.

20 ஆண்டுகாலம் முடங்கிப் போய்க் கிடந்த அந்தத் தொகுப்பினை மீண்டும் வெளிக்கொணரும் முயற்சிகளில் பெரியார் திராவிடர் கழகம் தான் ஈடுபட்டது. எந்தப் பொருளாதாரக் கட்டமைப்பும் இல்லாத இயக்கம்; கொள்கை வலிமை கொண்ட தொண்டர்கள் மட்டுமே இதன் பலம்; வலிமை! அந்த பெரியார் திராவிடர் கழகம் தான் இதுவரை மூன்று தொகுதிகளை வெளியிட்டுள்ளது. அடுத்தடுத்த தொகுதிகளை வெளியிடுவதற்கு புயல்வேக நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வருகிறது.

பெரியாரின் சிந்தனைகள் ஆண்டு வரிசைப்படி வெளியிடப்படவேண்டும் என்று ஏன் வலியுறுத்தப்படுகிறது? உலகச் சிந்தனையாளர்களின் கருத்துத் தொகுப்புகள் - இப்படி ஆண்டு வரிசைப்படி வெளியிடும்போதுதான், காலத்தோடு இணைத்து அவர்களின் கருத்துகளைப் புரிந்துணர முடியும். கருத்துகளில் காலத்துக்கு ஏற்ற வளர்ச்சிப் போக்கினை அல்லது மாற்றத்தினை அறிய முடியும். காரல் மார்க்ஸ், காந்தி போன்ற தலைவர்களின் சிந்தனைகள் இப்படி கால வரிசைப்படி தான் தொகுக்கப்பட்டுள்ளது. காலவரிசைப்படி தொகுக்கப்பட்ட பெரியார் சிந்தனைகளின் பிரதிகளை கிடப்பில் போட்ட திராவிடர் கழகம், அந்தத் தவறை மறைப்பதற்கு, வேறு ஒரு வழியைக் கண்டுபிடித்தது.

பெரியார் கருத்துகளைத் தலைப்பு வாரியாகப் பிரித்து வெளியிடுவதாக அறிவித்தது. இதையும் நாம் வரவேற்கவே செய்கிறோம். ஆனால் இந்த முயற்சிகூட எப்போது துவங்கியது என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். திராவிடர் கழகம் பெரியார் சிந்தனைகளை தலைப்பு வாரியாக வெளியிட்ட தொகுப்புகள்கூட 1991 ஆம் ஆண்டு வெளிவந்த அய்ந்து தொகுப்புகளோடு நின்று போய் விட்டது. இடையில் 15 ஆண்டுகாலம் எந்தத் தொகுப்பும் திராவிடர் கழகத்தால் வெளியிடப்படவில்லை.

2003 ஆம் ஆண்டில், “பெரியார் திராவிடர் கழகம்” தான் 20 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த ‘குடிஅரசு’ தொகுப்பை ஆண்டு வாரியாக வெளியிட முடிவெடுத்தது. முதலில் 1925 ஆம் ஆண்டு ‘குடிஅரசின்’ பெரியாரின் எழுத்து - பேச்சுக்களை வெளியிட்டது.

அதற்குப் பிறகுதான் 2004 ஆம் ஆண்டில் பெரியாரின் கருத்துகளை தலைப்பு வாரியாக வெளியிடும் முயற்சிகளை மீண்டும் 15 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு திராவிடர் கழகத் தலைமை துவக்கியது. பெரியார் நூல்களை தொடர்ந்து வெளியிடக் கூடிய அமைப்பும் - பொறுப்பும் - தகுதியும் கொண்டவர்கள் தாங்களே என்று மார்தட்டுகிறவர்கள், 15 ஆண்டு காலம் பெரியார் தொகுதிகள் வெளியீட்டை நிறுத்தியது ஏன்? கால வரிசைப்படி எழுதி நேரில் தரப்பட்ட தொகுப்புகளை 20 ஆண்டுகளாக முடக்கிப் போட்டுள்ளது ஏன்? இதற்கு என்ன பதில் தரப் போகிறார்கள்?

பெரியார் திராவிடர் கழகத்தை தங்களுக்கான ‘போட்டி அமைப்பு’ என்று திரு.கி.வீரமணி கூறி வருவதன் பொருள் இப்போது தான் நமக்கும் புரிகிறது. இப்படி ஒரு “போட்டி அமைப்பு” உருவெடுத்து நிற்பதுதான் அவர்களுக்குப் பிரச்சினையே! இந்தப் போட்டி அமைப்பு ‘குடிஅரசு’ தொகுதிகளை வெளியிட முன் வந்ததால் தானே இவர்களும் பெரியாரியல் நூல்களை வெளியிட்டுத் தீரவேண்டிய கட்டாயம் வந்துள்ளது. இப்படி எல்லாம் தங்களுக்கு நெருக்கடிகளை உருவாக்கித் தொலைக்கிறார்களே என்று திராவிடர் கழகத் தலைமை புழுங்கி நிற்பது நமக்குப் புரிகிறது. ஆனாலும், நாம் என்ன செய்ய முடியும்? உண்மைப் பெரியாரியல் வாதிகள் இதில் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்க்க முடியாதே!

திராவிடர் கழகத்துக்கு எப்போதுமே ஒரு அச்சம். பெரியார் நூல்களை அரசுடைமையாக்கி விட்டால், அடுத்து, எவராவது ஆட்சிக்கு வந்து பெரியாரின் சொத்துக்களையும் அரசுடைமையாக்கிவிடுவார்களோ என்ற அச்சம். நமக்கு அது பற்றிக் கவலை இல்லை. சொத்துக்கள் எல்லாம் அவர்களிடமே இருக்கட்டும்! ஆனால், பெரியார் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவரது நூல்கள் மலிவான விலையில் பரவலாகக் கொண்டு செல்லும் முயற்சிகளை ஏன் தடுக்க வேண்டும் என்பதுதான் நமது கேள்வி.

பெரியாரியலைப் பரப்பும் உரிமைகள் கூட தங்களுக்கு மட்டுமே உண்டு என்று கருதுவது பெரியாரியலுக்கே இழைக்கும் துரோகம் அல்லவா என்று கேட்கிறோம். காலத்தின் முன்னோடியான பெரியார் இதைப் புரிந்துதான், தனது வாரிசாகத் தனது நூல்களை மட்டுமே அறிவித்தார். இதைப் புறந்தள்ளி விட்டு, தங்களையே பெரியாரின் வாரிசுகளாக்கிக் கொண்டவர்கள், உண்மையான வாரிசுகளான அவரது நூல்களை அரசுடைமையாக்கக் கூடாது என்கிறார்கள். இது மிகப் பெரும் சோகம், அவலம், பெரியாரின் அறிவியக்கம் - அறிவுப் பரவலுக்கே கட்டுப்பாடுகள் போடத் துடிப்பதா?

தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை நாம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இனமானத்தை முன் வைத்து தமிழின உணர்வோடு அடுக்கடுக்கான திட்டங்களை செயல்படுத்தி, சாதனை படைத்து வரும், கலைஞரின் ஆட்சி, பெரியாரின் நூல்களை அரசுடைமையாக்க தயங்காது முன் வரவேண்டும். இதுவே தமிழின உணர்வாளர்களின் விருப்பம். எதிர்பார்ப்பு.

மகுடம் சூட்டப் பெற்ற ‘வீராங்கனைகளை’ பட்டுக் கம்பளம் விரித்து பவனிவரச் செய்து மகிழ்ந்தவர்கள் - தமிழர்களை எல்லாம் உறையச் செய்த அந்தக் ‘கலைஞரின் நள்ளிரவு’ கைது என்ற ‘மனித உரிமைப் படுகொலையை’ நியாயப்படுத்தி, தங்கள் பாசறைக்குள்ளே வீடியோ காட்சிகளுடன், வீரியமாக விளக்கம் தந்து, வீராங்கனைகளை மகிழ்ச்சிக் கடலில் நீந்தச் செய்தவர்களின் கடந்த கால கசப்பான செயல்களை கலைஞர் மறந்திருக்க மாட்டார்! இதுதான் பெரியாரியலின் சரியான அணுகுமுறை என்று சாட்சிப் பத்திரமும் வழங்க மாட்டார் என்பது நமக்குத் தெரியும்.

பெரியாரியம் எல்லை கடந்தது. அது விரிவாக வளர்த்தெடுக்கப்பட்டு வரும் மானுட விடியலுக்கான தத்துவம். பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளைப் படிவங்களுக்குள்ளும் முகவரியிடப்பட்ட “மாளிகை”க்குள்ளும் அதை குறுக்கிவிடக் கூடாது. இதுவே தமிழகத் தமிழர்களின் உயிர்த்துடிப்பான உணர்வு.

Pin It