அறிவியலையே அடிச்சித் தொவச்சி காயப்போடுற அதிபுத்திசாலிங்க நெறயப்பேர் நம்மநாட்ல இருக்காங்க. கங்கண சூரிய கிரகணத்தையே  கதிகலங்க வெச்சிட்டாங்கன்னா பாருங்களேன்.

இந்த மாதிரியான கங்கண கிரணம் 108 வருசத்துக்கு ஒருதடவதான் வருமாம். 1991, டிசம்பர் 11ல வந்த கங்கண சூரியகிரகணம் 108 வருசத்துக்கப்புறமா இந்த வருசந்தான் வந்திருக்கு. அதுவும் பொங்கலன்னிக்கு. இது போதாதா நம்மாளுங்களுக்கு. ஆளாளுக்கு அவுத்துவுட ஆரம்பிச்சிட்டாங்க. வழக்கமா கெரகணம் புடிக்கிறப்ப, ஒலக்கய நட்டமா நிக்க வைக்கிறதோட நம்ம ஆராய்ச்சி முடிஞ் சிரும். ஆனா இப்ப வந்துருக்கிறது அதிசய கிரணமாச்சே, அதுவும் பொங் கலன்னிக்கு வந்திருக்கே அவ்வளவு லேசில விட்ர முடியுமா? கலக்கிட்டாங்கள்ல நம்ம அம்மணிங்க.

சாதாரண கிரகணத்துல இருந்து கொஞ்சம் வித்தியாசமானது இந்த கங்கண கிரகணம். அதாவது சூரியன், சந்திரன், பூமி இந்த மூனுமே ஒரே நேர்கோட்ல வர்றப்ப, சந்திரன் சூரியனை கொஞ்ச நேரம் மறைக்குற ஒரு அறிவியல் நிகழ்வுதான் சூரிய கிரகணம். அப்ப சந்திரனுக்கும், பூமிக்கும் நடுவுல இருக்குற தூரத்தப் பொறுத்து, சூரியகிரகணம் பல வடிவங்கள்ல தெரியும். சந்திரன் பூமிக்குக் கொஞ்சம் தூரத்துல இருந்தாவளை சூரிய கிரகணம் தெரியும். அதாவது சந்திரன் மறச்சது போக மிச்சமிருக்கிற சூரியனோட பகுதி வட்டமா வளையல் மாதிரி தெரியும். இதத்தான் கங்கண சூரிய கிரகணம்னு சொல்றாங்க. கங்கணம்கிற சமற்கிருதச் சொல்லுக்கு வளையம்னு அர்த்தம்.

“ பயப்படுறதுக்கு இதுல ஒன்னுமே இல்ல. கிரகணம் யாரையும் எதுவும் செய்யாது. வழக்கம் போல சாப்பிடலாம், குளிக்கலாம், ஒன்னுக்குத் தண்ணிக்கெல்லாங்கூடப் போகலாம்னு ” அறிவியல் விஞ்ஞானிங்க எவ்ளவோ சொன்னாங்க. தேநீர் விருந்து, விழிப் புணர்வு ஊர்திப் பயணமெல்லாம் நடத்துனாங்க. என்னத்த சொல்லி... என்னத்த செய்ய...

கங்கண சூரிய கிரகணத்தன்னிக்கு நம்ம பொம்பளைங்க கழுத்துல, கையிலல்லாம் ‘அடி­னலா ’ ஒரு மஞ்சக் கயிறு ஏறியிருந்துச்சி. ஒரு மஞ்சக் கயித்துக்கே மண்டல விரதம், மாநில விரதம்னு இந்த பொம்பளைங்க உடம்ப கெடுத்துக்குறாங்க. இது என்னடா புது வரவுன்னு கேட்டா, ‘கல்லானாலும்’ கணவன் இருக்காரே அவருக்கு எதுவும் ஆயிரக்கூடாதுன்னு வேண்டிக்கிட்டு கட்டிக் கிட்டதாம் அந்தக் கயிறு. கங்கண சூரிய கிரகணம் கட்டிக் கிட்ட மகராசனுக்கு ஆகாதுன்னு எவனோ லேசா சரடு விட்ருக்கான்.அவ்வளவுதான், பொட்டிக்கடையில ஸ்டாக் இருந்த மஞ்சக் கயிரெல்லாம் நம்ம மாதர்குல மாணிக்கங்களோட கழுத்துல, கையில வந்து ஏறிக்கிடுச்சி. இதுபத்தாதுன்னு, வீட்டு வாசல்ல பொங்கலுக்கு வச்சிருந்த பச்சரிசியைப் பரப்பி அதுல விளக்கேத்தி வைச்சி விழுந்து கும்பிட்டப்புறம்தான் நிம்மதியாச்சு பாவம். பின்னே தாலிக்கு வந்த பங்கத்த தலவாசலோட  திருப்பி அனுப்பிட்டாங்கல்ல!

இந்த எடத்துல நமக்கு ஒரு சந்தேகம் வருது. இப்ப அவசரத்துல கட்டுன கயிறுதான் புரு­சனக் காப்பாத்தும்னா, முப்பத்து முக்கோடி தேவர்கள் முன்னிலையில, மந்திரஞ் சொல்லி தாம்புக் கயிறு ரேஞ்சுக்கு ஒரு மஞ்சக் கயித்தக் கட்டுனாரே அதோட பவர் என்னாச்சி? ஒரு வேள சார்ஜ் போயிருச்சா?

இன்னொரு கேள்வியும் நம்மகிட்ட இருக்குது.(கேள்வி கேட்குறது, துருவிதுருவிப் பாக்குறது இதெல்லாம் இந்தப் பெரியாரால வந்த வினைங்க..) குரு கூடுவிட்டு கூடு பாயும்போது, சனி சர்ருன்னு ´ப்ட்டாகும் போது, கெரகணம் புடிக்கும்போது, சுனாமி சொழட்டி அடிக்கும்போது, பூமி பதறும்போது இப்படி அந்தரத்துலயும், அடி ஆழத்துலயும் எது நடந்தாலும் இந்த ஆம்பிளைங்களுக்கு மட்டும் ஆகாம போயிடுதே அது எப்படி?

எப்பவாவது, அய்யய்யோ  வண்டலூர்ல காண்டாமிருகம் குட்டி போட்டிருக்கறதால பொண்டாட்டிகளுக்கெல்லாம் ஆகாதாமே, அதனால நாங்க கோயிலச் சுத்தி உருளப்போறோம், தவழப்போறோம்னு கூட இல்ல, ஒத்த ரூபாய்க்கு கற்பூரமாவது கொளுத்தப் போறோம்னு எந்த ஆம்பிளையாவது கெளம்பின துண்டா?

அது என்னமோ தெரியல, என்ன மாயமோ தெரியல, ஆம்பிளைங்களுக்குத்தான் அடிக்கடி ஆகாமப் போயிடுது.

இப்படித்தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி, இரண்டு யானைங்க வழிதவறி வந்து, ரயில்ல அடிபட்டு அநியாயமா செத்துப் போச்சிங்க. அதுல ஒரு யானை நெறமாத கர்ப்பிணி. அதுவும், அது வயித்தில இருந்த குட்டியும் விபத்துல செத்துப்போச்சி. உடனே, வீட்ல இருக்குற ஆம்பிளைங்களுக்கு ஆகாதுன்னு வீட்டு வாசல்ல மூனு அகல்விளக்குகள ஏத்தி வச்சாங்க மகராசிங்க. அய்யோ பாவம் வயித்துப் பிள்ளையோட யானை செத்துப்போச்சே, அதுக்கு வருத்தத்தை தெரிவிக்கிற விதமா விளக்க ஏத்தினா அது மனிதாபிமானம். இத எந்த மாதிரி அபிமானம்னு சொல்றது?

- இரா.உமா

Pin It