கடந்த பெளர்ணமியில் பேசிய
நினைவின் நொடியில்
என்னுள் வளரத் தெடங்கியது நிலா
தோழிவீட்டு வாசலில் திருட்டுக்குப் பயந்து
தாலியை அஞ்சறைப்பெட்டிக்குள் ஒளித்துவிட்டு
கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்தோம்
நள்ளிரவுவந்த குறுஞ்செய்தியொன்று
சன்னலில் நிலா என்றது
செல்பேசியில் பதுக்கிவைக்கப்பட்ட நிலவைத் தேடுகிறேன்
நிரந்தரமற்ற வீட்டில் குடியிருப்பவனைப்போல் புன்னகைக்கின்றன
குளிரூட்டப்பட்ட அறைச்சுவரெங்கும்
பசையிடப்பட்ட விண்மீன்களும் பிறைநிலவும்