பெண்ணெழுத்து -11

 

ஒடுக்குமுறையைப் பற்றி

நாம் உணர்ந்த பிறகு

மகிழ்ச்சியற்ற நிலைமையிலும் அடிமைத்தனத்தில்

தொடர்ந்து நாம் எப்படி வாழ்வது?

- ஷீலா ரௌபாத்தம்

 

அவனைப்போல ஒரு கவிதை (2007) திருமதியாகிய நான் (2009) எனும் இரண்டு கவிதைத் தொகுப்புகளையும் மறந்துபோன குரல்கள் (2002) எனும் சிறுகதைத் தொகுப்பையும் அளித்துள்ள கீதாஞ்சலி பிரியதர்ஷினி குடும்பம், உறவு சார்ந்த விஷயங்களையும் அதுசார்ந்த உளவியல் போராட்டங்களையும் பிரதானப் படுத்துகிறார்.

பெண்ணின் இருப்பின் மீதாக அவர் தொடுக்கும் கேள்விகள் வதைபடும் நாட்களின் நீட்சிகளை வார்த்தைகளுக்குள் அடக்கத் தெரிந்த மனதின் சூட்சுமம். பெண் இருப்பு முடிக்கப்படுவதல்ல என்ற இயக்கத்தின் சக்கரத்திலிருந்து ஒவ்வொரு அனுபவங்களையும் கவிதையாக்க முயலுத லென நகரும் கீதாஞ்சலியின் முதல் தொகுப்பு பரவலாக வரவேற்பைப் பெற்றது.

வீடு பல்வேறு கேள்விகளைக் கிளர்த்தும் இடமாக இவருக்கு இருக்கிறது துணைக்குக் காற்று ஏராளமாய் இருக்கிற சாளரங்கள் மூடியுள்ள வீடென வீடு நிறைத்து வைத்திருக்கிற வெறுமைக்கு காற்றின்மூலம் உருவம் கொடுக்கிறார்.

நிறுவனங்களைத் தக்கவைக்க மரபான புனிதங்கள் கட்டி எழுப்பப்படுவதை ஏற்கும் இடமாகிப்போன வீடு, அன்பு, பாசம் எனும் உளவியல் காரணிகளைக் கொண்டு நிர்மாணிக்கப் படுகிறது. இந்தவீடு கட்டிஎழுப்புகிற அடிமைத் தனம் என்பது மிக நுட்பமாக கண்ணுக்குத் தெரியாத வகையில் பூட்டப்படுகிறது. வயல்வெளிக்குள் காட்டுமிருகங்கள் நுழைந்துவிடக்கூடாதென மின்வேலியிடுவதைப்போல வீடுகளின் முன்ன திர்வு பெண்ணின் இருப்பு சிறகசைத்து விடாத சூனியத்தைத் தன்னுள் கொண்டிருக்கிறது.

பெண்ணின் விருப்பத்தையும் சுயத்தையும் அருதியிட்டு தீர்மானிக்கிறது. ஒரு வீட்டு விலங்கைப் பழக்குவதைப் போலத்தான் வீடு அது உருவாக்கும் மனிதர்களையும் பழக்குகிறது. நாகரிகத்தின் வளர்ச்சிஎன பண்பாட்டின் பக்குவ மென பெருமிதம் கொள்கிறோம். இந்த நாகரிகத்தின் பண்பாட்டின் நீட்சி நூற்றாண்டுகளாக செப்பனிடப்பட்டு பின்பற்றி ஒழுகுவதாக அமை கிறது. இந்த பண்பாடு நாகரிகம் சார்ந்தவை ஒரு பாலுக்கொரு நீதியைக் கட்டமைப்பதில் காட்டி யுள்ள தீவிரம் பெண்ணின் அறிவை குடும்ப நிறுவனத்திற்கு மட்டுமானதாக சமூக வெளியில் ஆணின் குரலுக்கும் அதிகாரத்திற்கும்பின் ஒளிந்து கொள்ள கற்பிக்கப்படும் நுண்மையதான பெண்மையின் பெயரால் ஒடுக்குகிறது.

பெண்ணுக்கு எதுவும் தெரியாது என்ற மனோநிலையைக் கட்டிக்காக்கிறது.  சமூகப் பங்கேற்பில் பொதுவெளிக்கு வர தடை செய்யப் பட்டு அதுசார்ந்த அனுபவங்களை மறுக்கிற ஆணாதிக்கம். அடுத்தடுத்த தலைமுறையையும் பெண் அறிவை விசாலமானதாகப் பார்க்காமல் உணர்வின் அடிப்படையில் பார்க்கவைக்கிறது. அனுபவங்களின் குறைபாடுகளைக் கடத்திச் சென்று பெண் ஏதும் அறியாதவள் என்ற மாயத்தை உருவாக்குவதில் தீவிர வினையாற்றுகிறது.

பெண்ணின் இருப்பு எதுவுமே தெரிய வில்லை என்ற சொல்லுக்குள் எளிதாக அடக்கப் பட்டு விடுகிறது. கீதாஞ்சலியின் ”நிலைப்பாடு” எனும் அவர்முதல் தொகுப்பில் வெளிவந்திருக்கும் கவிதை கணவன், மகன், மகள் என வீட்டிற்குள் இருக்கும் இரத்த உறவுகள் பெண்ணை தெரியா தவளாகப் பார்க்கிற, பார்க்கவைக்கிற ஆணாதிக் கத்தின் நுண்ணிய வேர்களைக் காட்டுகிறது. எதுவும் தெரியாது என்பதைத்தவிர எதுவும் தெரியாததும் நிஜமே என பெண்மனம் எதிர்க் கவோ, ஆர்ப்பரிக்கவோ செய்யாமல் ஏற்றுக் கொள்கிற தயாரிப்புக்குப் பழகிவிட்டதையும் காட்டுகிறது.

குடும்பம் பெண்மீது சுமையேற்றுகிற அடுக்குகளைக்கு தொடர்ந்து அவளைத் தயாரிக் கிறது. சமைப்பதும் துடைப்பதுமான ஒரே வேலையை சலிப்பூட்டச் செய்து கொண்டு இருந் தால் அவளை மெச்சிப்பூரிக்கும் மனநிலையைப் பெண்களுக்குத் திணித்திருக்கிறது. பெண் அவளது எல்லையைத் தாண்டாமல் இருப்பதற்காக குலவிளக்காக மாற்றிவைக்கப்பட்டிருக்கிறாள்.

குலவிளக்கு கொஞ்சம் தன்னிலையிலிருந்து மாறினாலும் அவள்மீது தொடுக்கப்படும் விமர்சனங்கள் அவள்மீது நிறுவனம் சுமத்தி யிருக்கிற அறமதிப்பீடுகளைக் கொண்டே முன் வைக்கப்படுகின்றன. அறமதிப்பீடுகள் நிலவு டமையின் அடிவானத்தில் ஆண்களுக்கு புறத்தை போதிப்பதாக புறவெளியை ஆக்கிரமச் செய்வ தாகவும் பெண்ணை இதே அணுகுமுறையைத் தனதாக்கிக் கொண்டால் அடக்கமேயில்ல ஆம்பள போல அலையுறா என்பதுபோல பலசொல்லி முடக்க நினைப்பதும் நூற்றாண்டுகள் மாறினாலும் மாறாததாக இருக்கிறது.

“ அம்மாவின் கவலைகள்” கவிதை தாய் மகள்மீது வைக்கும் விமர்சனத்தை மட்டும் வரிசைப் படுத்திச் செல்கிறது. அவளது கவலை களைக் கவிஞரின் வரிசைப்படியே பார்ப்போம். தடித்த புத்தகங்களை வாசிப்பது, சிரிப்பது, பையன் தலைக்கு மேல உசந்தாலும் வேற்று ஆண்களோடு போனில் சதாபேசுவது, ருசியாக சமைக்கத் தெரியாதது. வீட்ல தங்கறது இல்ல, ஒரு வேலை யில் சேர்ந்தமாதிரி இல்லை, எழுதிக் கிழிச்சது போதும்னு அவளை எப்ப நம்ம மருமகன் சொல்றது, பாவம் அவர் சுகப்படறது என்கிற தாயின் கவலையில் நிறைந்து ததும்பும் ஆணாதிக் கத்தின் சாறு ஆணாதிக்க கருத்துருக்கள் பெண்ணின் ஒவ்வொரு அணுவிலும் கலந்திருப்பதைக் கூறு கிறது. இதை எதிர்த்து குரலெழுப்பும் ஒற்றைச் சொல்லையும் கீதாஞ்சலி பயன்படுத்தவில்லை. அம்மாவின் கவலைகளை பதிவாக்கிவிட்டு மெல்ல நகர்ந்து விடுகிறார். வாசகமனநிலை அதைக் கடக்கமுடியாமல் நின்று சிந்திக்கத் தூண்டுகிறது.

ஆண் படிப்பது, சிரிப்பது, வெளியுலகத் தோடு தொடர்பு வைத்திருப்பது, தொடர்புகளைப் பெருக்கிக் கொள்வது என்பவை கேள்விகளுக்கு உள்ளாவதில்லை. எழுதிக் கிழிச்சது போதும் என அவனை முடக்கினாலும் ஆண்என்ற காரணம் ஒன்றிற்காக மட்டுமே முடக்கப்படுவதில்லை. வேறுபிற காரணங்களை உள்ளடக்கிய தாகவே அமையும். (காட்டாக அவனது பொருளாதாரம், அவன் கொடுக்க மறுக்கும் குடும்பத்திற்கான நேரம் என) அப்படியிருந்தும் திருமணத்தை ஆணுக்கான சிறை என விமர்சித்துக் கொண் டிருக்கும் ஆணாதிக்க நாக்கு நடைமுறையோ பெண்ணுக்கான சிறையை தக்கவைப்பதாகவே இருக்கிற முரணை என்னென்பது.

கீதாஞ்சலியின் அம்மாவின் மற்றுமொரு கவலை வீட்ல தங்கறது இல்ல. வீடு சார்ந்த விடயங்களுக்குத் தடையற நடமாட அனுமதிக்கிற குடும்பம் பெண்ணின் சுயவிருப்பம் என்பதையே மறத்து வரும் நிலையில் அவளது தேவையை ஒட்டிவெளியே செல்வதை எளிதில் அனுமதித்து விடுமா என்ன? சுதந்திரத்தைக் கோரும் மனநிலையைப் பெறாத நிலவுடமைக் கருத்தாக்கங்களில் புதைந்து கொண்ட தலைமுறை அடுத்தடுத்த தலைமுறை யையும் ஒழுக்கத்தின் பெயரால் கருத்தியல்களை   உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது.

ஒரு வேலையில் சேர்ந்ததுபோல கவனம் வைப்பதற்குரிய வீடு பெண்ணுக்கு அமைந்து விடுகிறதா? அவள் வீடுசார்ந்த பொறுப்பு களுடனேயே சுய ஆர்வங்களில் கவனம் செலுத்த முனையும் போது அடுப்புல வைச்ச பால் தீயுறது கூட தெரியாம வாசிக்கிறாயா? எனும் கேள்வி களை சந்தித்துத் தீர்க்க வேண்டியிருக்கிறது. சிறகு களை இயக்க முனையும் பறவை மெல்ல அசைத்து நடப்பதுபோல பெண் ஒரே வேலையில் மட்டும் கவனத்தைக் குவிக்காமல் இங்குமங்கு மாக அலைக்கழிய வேண்டியிருக்கிறாள். எழுதிக் கிழித்தது போதும்னு மருமகன் அறையவேண்டும். மருமகன் சுகப்படணும் என்று மகளின் சுயத்தை மறுப்பதையும் ஆணின் சுகத்தை விழைவதையும் அம்மாவின் மனநிலை கொண்டிருப்பதை இதற் காக மகள் அடிவாங்கினாலும் பரவாயில்லை என நினைக்கும் அதீத அடக்குமுறை சார்ந்த எண்ண ஓட்டத்தைப் பதிவுசெய்கிறார்.

எழுதிவிட முடியாத இயலாமைகள்

ஓர் எழுத்துப்பிழை எனப் பதிவாகிறது

ஒவ்வொரு புலம்பல் இடையிலும்

நானற்ற என் புகைப்படங்கள் இப்படியே

எடுக்கப்பட்டு விடுகின்றன

பின்பு வெறுமனே அலுப்பூட்டும் விதமாக

சுயசரிதையை ஆரம்பிக்கிறேன்

பெண்ணின் இயலாமையும் புலம்பலும் சுயமற்ற அவளது வாழ்வும் தொடர்ந்த வண்ணமே யிருக்கின்றன. ஆணாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட பெண்களால் இயல்பாக இருக்கமுடிகிறது. ஆணாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிற பெண் மனம் தவிப்புக்கும் அதிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியாத தடைகளிலிருந்து மீட்டுக் கொள்ள போராடித் தோற்பதும் தொடர்கிறது. ஆணாதிக்கத்தை எதிர்ப்பதற்கு அரசியல் தெளிவு தேவையில்லை. சுயத்தைத் தக்கவைக்க வேண்டும் என்ற அடிப்படை மனநிலை எதிர்ப்பை நோக்கி நகர்த்தும்.

”திருமதியாகிய நான்” கவிதையில் யாரும் நிர்பந்தப்படுத்தாமல் ஒருவாழ்வை இனியாவது எழுதத் தொடங்க வேண்டும் என்கிறார். அவ மானங்களை சிறுமுத்தமென நினைக்கவும் வடுக் களை மாதாந்திரக் குருதி என மறக்கவும் பழகு என்கிறார்கள் எனக்குறிப்பிடும் கீதாஞ்சலியின் சுயம் மூச்சடைக்கிறது. அதைத் தக்கவைக்கப் போராடும் மனதின் பதிவுகளாக கவிதைகள் பேசுகின்றன.

பணிநிமித்தமான பெண்ணின் உடல் ஒத்து ழைக்கத் தயங்குகிறது. காவலுக்கு கோவிலுக்கு முன் நின்றபடி உறங்குகிறாள். பெண்ணொருத்தி யின் சீருடைமீறிய அவளது  அசதியை ஆண்டாள் அறிவாள் என்கிறார்.

பெண்மேற்கொண்டுள்ள பணி, அசத்தும் அசதி அதைமீறி ஆண்டாள் அறிவாள் என்ற இடத்தில் கீதாஞ்சலி பெண்ணின் துயரத்தை பெண்ணின் உடலை சக பெண் ஒருத்தியால்தான் புரிந்துகொள்ளமுடியும் எனும் கருத்தைக் கொண்டி ருக்கிறது. அரங்கன் அறியவில்லையெனி னும் என்றவரிகள் ஆண்கள் உணரமுற்படாத பெண் உலகத்தைப்பற்றிப் பேசுகிறது.

பெண்களின் உடலைத் தேவையின் பொருட்டு பண்டமாக்கிக் கொள்ளுகிற குடும்ப நிறுவனமும், ஆணாதிக்கமும் அவளது மனதை யும் உடலையும் பொருட்டாகக் கொள்வதில்லை என்ற தொனிப் பொருளையும் கொண்டிருக்கிறது.

அரைமணிக்குள் ஆயிரம் அழைப்பு

நாய் சாப்பிட்டாச்சா என

தப்பிப்பது பெரிதல்ல ஒரு

அலைபேசியை நிறுத்தி விட்டு

வாழ்க்கையை சதா பின்தொடரும் கண்கள் இருக்கத்தான் செய்கிறது. பெண் என்பதாலேயே கண்காணிப்புகள் அதிகரிக்கும்போது அவளது உடல் உடமையாக பரிசீலிக்கப்படும் எண்ணத்தைத் தூண்டுகிறது. இந்த மனநிலையில்தான் கீதாஞ்சலி யின் வரிகளில் கோபம் கொப்பளிக்கிறது. கண்காணிப்பிலிருந்து தப்பிப்பது பெரிதல்ல. நினைத்தால் அதை செய்ய முடியும் தொலை பேசியை அணைத்துவிடுவதான செயல்களை செய்யமுடியும் என்கிறார். ஏன் அதை செய்யா மலிருக்கிறாள்? கண்காணிப்பு கையிலும் காலிலும் விலங்கு பூட்டும் விதமானது. கண்காணிக்கப் படுகிறோம் எனத் தெரிந்தும் பொறுத்துக் கொள்வதும், பின்பற்ற ஒத்துழைப்பதுமான மன நிலை பெண்களுக்கு எளிதாக போதிக்கப் பட்டிருக்கிறது. கண்காணிப்பு உரிமையின் பெயரால் மேற்கொள்ளப்படுகிறது. தூய்மையை, ஒழுக்கத்தை பெண்ணிடம் அவாவும் மனநிலை இதற்குக் காரணம். உளவுத்துறையோ, காவல் துறையோ இல்லாமல் பாசத்தின் பெயரால் நடைபெறும் கண்காணிப்பு, அதிகாரத்திற்கு துணைபோவது அடக்குமுறையை விரும்புவது.

டிஜிட்டல் பேனர்கள் தலைவர்களை, நகரத்தின்

மாமனிதர்களைக் காட்டியபடி நிலவை, கதிரை

மறைத்து தலைகளை நினைவுறுத்துகிறது      அனிச்சையாக

நேற்று மாநகரத்தில் வளரும்

குழந்தை ஒருத்தியிடம் சென்று கண்ணே முழு

நிலா பார்க்கலாம் வா என்றேன். விலகிய

அவள்தன் சேமிப்பிலிருந்து ஒரு வர்ணமற்ற

பழைய மண்டை ஓட்டினை எனக்குக் காட்டி

இது நிலாதான் என்கிறார்

என குழந்தைகள் இயற்கையிடமிருந்து விலக்கப்பட்டிருக்கிற நகர்மயத்தையும் பழக்கப் பட்டுவிட்ட அரசியல் கலாச்சார சிதறு தேங்காய் களுக்குமான குழந்தைமனம் மண்டையோடாய்ப் போன அவலத்தைக் காட்டுகிறது. கடல் சிறுமி கவிதையில் கடல்பற்றி கவிதைகேட்கிற சிறுமி கடல் எப்படியிருக்கும் என்ற கேள்விக்கு கடல் ப்ளுவாக இருக்கும் என்பதைத் தவிர கடலை விவரிக்கமுடியாததாக நாலுவரிபோதும் என கடலை அலுவல் ரீதியாக மட்டும் பேசிக்கடக்கிற மனநிலையைக் காட்டுகிறார்.

சந்ததிகளை எப்படி பழக்கிக் கொண் டிருக்கிறோம் எனும் “அரசியல் கவிதை ஒன்று”  கவிதை வேலையே செய்யாமல் இருப்பவர்கள் தான் இங்கு, அதிக பொருள் மற்றும் புகழோடு திரிவார்கள், இப்பவும் காதலைத் திரையிலும் காமத்தை இருட்டிலும் பழகவும், அண்டை நாட்டில் நமதுமொழி பேசுபவர்கள் கொல்லப் படுவதையும் அதுபற்றி பேசுபவர்கள் இங்கு மெல்ல அடங்குவதையும் காண்பித்து அரசியலைப் பழக்கிவிட்டுதான் ஓய்கிறோம் எனச் செல்லும் கவிதை

ரத்த ருசி தின்றுபழகு என்பது போலவும்- உன்

தொப்புள்கொடி உறவுமறு என்றும்

முடிகிறது வருங்காலத்தின் சொத்தாக இன உணர்வை மதிக்கத்தெரியாத, சுயநலத்தைப் போர்த்திக் கொள்ளுகிற, சோம்பேறிகளின் முன் னேற்றம் குறித்த புதிய கருத்தாக்கத்தை ஏற் படுத்துகிற உணர்வற்றுப் போனவர்களே எளிதாக ஜீவிக்க முடிகிற சமகாலத்தை, உணர்வைத் துளிர்க்க விடாமல் அடக்கச் செய்கிற அரசியலை சுட்டிச் செல்கிறது. கீதாஞ்சலியின் மெல்லியமொழி கனத்த கருத்துகளை விமர்சிக்கிறது. கோஷங்களோ ஆர்ப்பாட்ட குரல்களோ இல்லாத கவிதைகளைக் கொண்டிருக்கிறது.

ஒளிரும் கல்லொன்று மேல்விழும் வெளிச் சத்திற்கேற்ப ஒளிர்வின் பரவசத்தை சாத்தியப் படுத்துவதுபோல கீதாஞ்சலியின் கவிதைகள் வாசிப்பின் தன்மைக்கேற்ப ஒளிரத் தொடங்கி விடுகிறது. பெண்ணின் வாழ்க்கையை, குடும்ப நிறுவனத்தின் மீதான விமர்சனத்தை, இயலாமை யை, தனிமையை, உறவுக்கும் சுதந் திரத்திற்கும் இடையே நிலவும் சுமுகத்தன்மையின் தரத்தை, மௌனங்களின் அற்புதத்தைப் பேசுகிற கவிதைகள் கீதாஞ்சலியுடையது.

Pin It