செவி வழியாகவும் உயிர் வழியாகவும்

கசியும் செய்திகள்

 

அடைத்த கதவில்

மோதித் திரும்பும் ரகசியங்களென

விழிகளில் தேங்கி நிற்கும்

 

குழந்தைகளின் புத்தகச் சுமையென

இரவின் வன்மம் தாங்கிச் சிணுங்கும்

வளைக்கர ரகசியங்கள்

மின்விசிறியின் காற்றென

சுழன்று கரையும்

 

பொருட்டன்று காமமும்... காதலும்...

 

இணையங்களின் வழியும்

செல்பேசிகளின் துளையும்

புணர்தலின் ரகசியத்தை வானெங்கும் உதிர்த்து

நட்சத்திரங்களை இருட்டடிக்கும்

சொல் புதிது

சுவை புதிது

வாழ்வறியா மனிதக்காட்டுக்குள்

மரணமும் இனிது.