வெள்ளையனே வெளியேறு என்று மக்கள் தெருவில் இறங்கிப் போராடிக்கொண்டிருந்த 1942 இல் தகிக்கும் ஒரு செப்டம்பர் நாளில் மதுரை கோச்சடையில் திரு.நரசிம்மன் திருமதி. ராமானுஜம் தம்பதியரின் ஒன்பது குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தவர் எழுத்தாளர் தோழர் என்.ராமகிருஷ்ணன். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரைப் பூர்வீகமாகக் கொண்ட திரு.எஸ்.நரசிம்மன் ஒரு பொறியாளர். அந்த நாட்களில் தமிழகத்தில் பொறியியல் கல்லூரி இல்லாததால் 1915இல் பம்பாய் நகரத்தில் கற்று வந்த பொறியாளர் அவர்.
நான்கு வயதில் தந்தையை இழந்த ராமகிருஷ்ணன் தாயாரின் அரவணைப்பிலும் அண்ணன்மார்கன் பாதுகாப்பிலும் மதுரையில் வெள்ளியம்பலம் பள்ளியில் 6,7 வகுப்புகளையும் பின்னர் உயர்நிலைப்பள்க்கல்வியை சேதுபதி பள்ளியிலும் முடித்தார். அவருடைய அண்ணன் தோழர்.
என்.சங்கரய்யா மாணவப்பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து போலீசாரின் தடியடிகள்,தலைமறைவு வாழ்க்கை,போராட்டங்கள் எனத் தீவிரமான போராளியாக ஆகியிருந்தார்.
”அண்ணனின் கட்சி என் கட்சியானது.எங்கள் குடும்பத்தின் கட்சியானது.கட்சியே எங்கள் குடும்பமுமானது.1940கல் அமெரிக்கன் கல்லூரி மாணவராக அண்ணன் சங்கரய்யா இருந்த காலத்திலேயே அவர் தீவிரமான கட்சி ஊழியராகிவிட்டார்.
நான் பள்ளிச்சிறுவனாக இருந்த நாட்களில் தினசரி பள்ளிக்கூடம் விட்ட உடன் மதுரை மண்டையன் ஆசாரி சந்திலிருந்த கட்சி அலுவலகத்துக்கு ஓடி விடுவேன்.வீட்டில் இருக்க என்னால் முடியாது.அந்தப் பருவத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான இடமாக கட்சி அலுவலகமே இருந்தது.அங்கே தோழர்கள் ராமராஜ்,பழனிச்சாமி , கே.பி.ஜானகியம்மா என்று எல்லோருமே என் மீது பிரியமாக இருப்பார்கள். காப்பி, டீ வாங்கிக்கொடுப்பது உள்ளிட்ட வேலைகளை நான் ரொம்ப உற்சாகத்துடன் செய்வேன்.அங்கு ஜனசக்தி படிப்பேன்.பத்திரிகை படிக்கும் பழக்கம் அங்குதான் ஏற்பட்டது.தலைவர்கள் போராட்ட அனுபவங்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதை சிறு பையனாக வாய்பிளந்து ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருப்பேன்.கட்சி ஆபீஸ் கல்யாண வீடு போல எப்போதும் கலகலப்பாகவும் பரபரப்பாகவும் இயங்கிக் கொண்டே இருக்கும்.எனக்கான இடம் அதுதான் என்கிற உணர்வு எப்போதும் எனக்குள்ளே ஓடிக்கொண்டே இருந்தது.
கம்பத்திலிருந்து அத்தா (தோழர் அப்துல் வகாப்) வருகிற நாள் கட்சி அலுவகத்தில் கொண்டாட்ட நாள்தான். கையில் காசு கொண்டுவந்து அலுவலகத்திலுள்ள எல்லோருக்கும் காப்பி, பலகாரம் ,சாப்பாடு என்று வாரி வழங்குவார். கட்டுச்சாதத்தில் நாட்களை ஓட்டிக்கொண்டிருக்கும் நம் தோழர்கள் வயிறார உற்சாகத்தோடு சாப்பிடும் நாட்களாக அவை அமையும்.
அப்போது என் காலில் செருப்புக் கிடையாது.ஒருநாள் ஜானகியம்மா பார்த்து என்னடா செருப்பில்லாம புழுதியிலே நடக்கிறே வா என்னோடு என்று ஒரு செருப்புக்கடைக்கு அழைத்துச் சென்று எனக்குச் செருப்பு வாங்கிக்கொடுத்தார்கள்.நெகிழ்ச்சியான அந்த நிமிடம் என் வாழ்வில் மறக்க முடியாத நிமிடமாகும்’’
தோழர் ராமகிருஷ்ணனின் இளமைக்காலமாகிய 1950கன் பிற்பகுதியில் மதுரை மாநகரம் தேசிய அரசியல் நடவடிக்கைகன் கொந்தப்புமிக்க மையமாக விளங்கியது.திமுகவும் வளரும் சக்தியாக அப்போது புறப்பட்டிருந்த்து.காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகன் அகில இந்தியத் தலைவர்கள் தவறாமல் வந்து போகிற நகரமாக அன்றாடம் அரசியல் கூட்டங்கள் நடக்கிற களமாக மதுரை விளங்கியது.நகரெங்கும் ஆங்காங்கே பல்வேறு கட்சிகள் இயக்கங்கன் இலவச வாசகசாலைகள் (அன்சாரி நூலகம்,பத்மாசனி வாசக சாலை,பகுத்தறிவுப்பாசறை,தியாகி சுந்தரம் நூலகம்)என இயங்கும். ஆணியில் கயிறு கட்டி பத்திரிகைகளைத் தொங்கவிட்டிருப்பார்கள்.மதுரை என்றில்லை அன்று தமிழகத்தின் பல நகரங்களில் இத்தகைய வாசக சாலைகள் இயங்கின.அரசியல்கூட்டங்களும் கட்சி அலுவலகத்தில் நடக்கும் விவாதங்களும் வாசகசாலைகளும் இளம் ராமகிருஷ்ணனை செதுக்கி வடிவமைத்துக்கொண்டிருந்த காலமாக அது இருந்தது.
இவை ஒருபுறம் இருக்க அந்த வயதில் எனக்கு மிகவும் பிடித்த பத்திரிகைகளாக இருந்தவை அம்புலிமாமா, ஆர்வி நடத்திய கண்ணன்,தமிழ்வாணனின் கல்கண்டு போன்றவைதான். கல்கண்டில் தமிழ்வாணன் எழுதிய ஆயிரம் கண்கள் என்கிற தொடரை விடாமல் வாசிப்பேன்.கடைகல் இந்த இதழ்கள் வரும்வரை காத்திருக்கப் பொறுமை இருக்காது.வெள்ளிக்கிழமை அதிகாலை பத்திரிகை ஏஜெண்ட் வீட்டுக்கே போய் கட்டை உடைத்து இந்த இதழ்களை வாங்கி சுடச்சுடப் படிப்பேன்.அப்போது கல்கண்டில் வந்த ஒரு கேள்வி பதில் என்னால் மறக்க முடியாதது.
கேள்வி: நேருவுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமராக வரத் தகுதியானவர் யார்?
தமிழ்வாணன்:சந்தேகமென்ன நமது பி.இராமமூர்த்திதான்.
இந்த வாசிப்பிலிருந்து நான் அடுத்த கட்டத்துக்குச் சென்றதற்குக் காரணம் நியூ செஞ்சுரி புத்தக நிலையம்தான்.ஐந்தாவது பாரம் ஆறாவது பாரம் படித்துக்கொண்டிருந்த நாட்கல் கோடை விடுமுறையில் என்சிபிஎச் புத்தகக்கண்காட்சியில் வேலைக்குப் போனேன்.45 நாள் வேலை.நாள் ஒன்றுக்கு ஒரு ரூபா சம்பளம்.மாலை 4 மணி முதல் இரவு 10 வரைதான் விற்பனை.ஆனால் மற்ற நேரத்தில் காவல் வேலை.கண்காட்சிக்குக் கதவு கிடையாது பெரிய படுதா மட்டும்தான்.ஆகவே காலையிலிருந்து மாலைவரை வாட்ச்மேன் வேலை பார்ப்பேன்.அந்த நேரம் பூராவும் படிப்புத்தான்.காலை உணவுக்கு 2 ரூபாயும் மதிய உணவுக்கு 2 ரூபாயும், இரவுக்கு 2 ரூபாயும் கொடுப்பார்கள்.கரும்பு தின்னக்கூலி போலத்தான். டால்ஸ்டாய், கார்க்கி, கோகோல், செகாவ், காண்டேகர், மாஸ்தி என்று துவங்கி ரகுநாதன், கு.அழகிரிசாமி என்று பரந்து சென்றது என் வாசிப்பு.மு.வ.வின் நூல்கள் அத்தனையையும் படித்து முடித்தேன்.நிக்கலோய் ஓஸ்திரோவ்ஸ்கியின் வீரம் விளைந்தது நாவல் மனதை முழுதாக ஆக்கிரமித்து ஆட்டுவித்த நாட்கள் அவை.மலையாள எழுத்தாளர்கள் தகழி,பொற்றேகாட்,உருபு, பொன்குன்னம்வர்க்கி போன்றோரின் நூல்கள் என்னை வெகுவாகக் கவர்ந்தன.ஜெயகாந்தனின் பல கதைகளை அன்று நான் மனப்பாடமாகச் சொல்லுவேன்.கண்காட்சியிலிருந்த நான் பின்னர் என்சிபிஎச் நிரந்தரக் கடை மேலக்கோபுரத்தெருவில் திறந்தபோது (1959) ஆறாவது பாரம் படித்து விட்டு வேலைக்குச் சேர்ந்தேன்.அப்போது ராதாகிருஷ்ணமூர்த்தி என்கிற அற்புதமான மனிதர் அங்கே பொது மேலாளராக இருந்தார்.நான் சின்னப்பையனாக இருந்தாலும் ரொம்ப அன்புடனும் சம மதிப்புடனும் நடத்துவார்.என் புத்தக தாகத்துக்கு மதிப்புக்கொடுத்து வேலை வாங்குவார்.
அங்கிருந்து பின் மதுரை ஜனசக்தி நிருபராக இருந்த தோழர் எம்.என்.ஆதிநாராயணனிடம் உதவியாளராகப் போய்ச் சேர்ந்தேன்.அப்போது செய்திக்காக தோழர் ஜீவா உள்ட்ட தலைவர்களோடு உடன் செல்லும் பெரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
1961இல் தோழர் ராமகிருஷ்ணன் சென்னைக்குப் பயணமானார்.அப்போது ஜனசக்தி 10 ரூபாய் பங்குகளாக விற்பனை செய்து ஒரு நிறுவனமாக்கப்பட்டது.4000 பங்குதார்கள் சேர்ந்தனர்.அதையெல்லாம் கணக்கு வைத்து ஒழுங்கு செய்ய ஒரு ஆள் தேவைப்பட்டது. இளைஞர் ராமகிருஷ்ணன் 1961இல் ஜனசக்திக்கு வந்து சேர்ந்தார்.பின்னர் அங்கு காசாளராகக் கொஞ்ச நாள் பணியாற்றியபின் அவரை தகவல் களஞ்சியப் பொறுப்பாளராக நியமித்தார்கள்.அற்புதமான அந்த ஜனசக்தி நூலகத்திலேயே கிடக்கும் அரிய வாய்ப்பு அது.ஜீவாவை ஆசிரியராகவும் தோழர் கே.முத்தையாவை பொறுப்பாசிரியராகவும் கொண்டு அப்போது ஜனசக்தி வந்து கொண்டிருந்தது.ஆசிரியர் குழுவில் இருந்த மகத்தான மனிதர்களாக இருந்த மாஜினி,கே.ராமநாதன், வி.ராதாகிருஷ்ணன், எழுத்தாளர் டி.செல்வராஜ்,தோழர் ஐ.மாயாண்டிபாரதி,சோலை ஆகியோருடன் பழகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
அப்போது நானும் சோலையும் ஜீவாவுடன் நெருக்கமாக இருப்போம்.அவர் எங்கு கூட்டத்துக்குப் போனாலும் அவருடைய பையைத் தூக்கிக் கொண்டு நாங்கள் இருவரும் அவர் பின்னாலேயே ஓடிவிடுவது வழக்கம்..இரவில் நானும் சோலையும் குரோம்பேட்டையில் இறங்கிக்கொள்வோம்.ஜீவா தாம்பரம் செல்வார்.ஜீவா தொடராக எழுதிய புதுமைப்பெண் என்னும் கட்டுரையையும் பாரதி பற்றிய கட்டுரையையும் நூலாகக் கொண்டு வரலாமே என்று ஜீவாவிடம் நான் கேட்டேன்.நீயே பிரதி எடு என்று ஜீவா சொல்ல ஜெராக்ஸ் அக்காலத்தில் இல்லாததால் என் கையெழுத்திலேயே அவ்விரு தொடர்களையும் பிரதி செய்தேன்.கட்சிப் பிளவுக்குப் பின் பாரதி குறித்த கட்டுரை மட்டும் ரகுநாதன் முன்னுரையுடன் நூலாக வந்ததாக அறிந்தேன்.இன்னொரு நூல் பற்றி ஒன்றும் தெரியவில்லை.
ஜனசக்தியில் தோழர் ராமகிருஷ்ணன் சேர்ந்த காலம் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் ஆழமாக வேர்பரவிய நாட்களாக இருந்தது.அச்சமயம் 1963 ஜனவரி 19 அன்று தோழர் ஜீவாவும் மரணமடைந்தார்.ஜீவா இல்லாத கம்யூனிஸ்ட் கட்சியா என்று நாடும் கட்சியும் திகைத்து நின்றன.
வேறுபாடுகள் கட்சிப்பிளவை நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்தன. ஜனசக்தி ஊழியர்களில் நான், சோலை, டி.எஸ்.தினகரன், சூரியநாராயணன் போன்றோர் பிந்தைய சிபிஎம் நிலைபாடு கொண்டவர்களாக இருந்தோம். தோழர் அப்பு முன்முயற்சியில் அவரை ஆசிரியராகக் கொண்டு தீக்கதிர் பத்திரிகை அச்சிடப்பட்டது. ஜனசக்தியிலிருந்து ஏற்கெனவே வெளியேற்றப்பட்ட சோலை உண்மையான ஆசிரியராக இருந்தார். நான் பகலில் ஜனசக்தி வேலையையும் இரவில் சத்தமில்லாமல் கோடம்பாக்கம் போய் அங்கு தீக்கதிர் வேலையும் செய்வேன். 1964இல் கட்சி பிளவுபட்டது.அன்று காலை 9 மணிக்கு வழக்கம்போல ஜனசக்தி அலுவலகம் போனோம். வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டோம். தோழர் ஏ.எஸ்.கே ஐயங்கார் எங்கடம் கட்சி ரெண்டாயிடுச்சி. நீ எந்தப்பக்கம்? என்று எங்களிடம் கேட்டார். நாங்கள் பி.ஆர். பக்கம் என்று சொன்னோம். அப்படியானால் உங்களுக்கு இங்கே இடம் இல்லை என்று ஒரு மாத சம்பளத்தைக் கையில் கொடுத்து மூன்று பேரை வெளியே அனுப்பி விட்டார்கள். திடீரென்று தெருவில் நின்றோம். நானாவது பிரம்மச்சாரி. மற்றவர்கள் குடும்பஸ்தர்கள். ஒரே குழப்பமாக இருந்தது.சில நாட்களில் தினகரன் ஒய்.எம்.சி.ஏ.வில் கணக்கெழுதப்போய்விட்டார். சூர்யநாராயணன் ஒரு கோவிலில் குருக்களாகப் போய்ச்சேர்ந்தார்.அவருக்கு பக்தியும் கிடையாது.ஓதுகிற மந்திரமும் தெரியாது.ஆனாலும் வாழ்க்கை இருந்ததே என்ன செய்ய?
நான் சைதாப்பேட்டையில் தீக்கதிரில் வேலை பார்க்கப் போய்விட்டேன்.சம்பளம்,அலவன்ஸ் எதுவும் கிடையாது.மணியார்டர் ஏதும் வந்தால் சாப்பாடு கிடைக்கும்.அல்லது பக்கத்துப் பெட்டிக்கடையில் கடனுக்கு வாழைப்பழமும் கடலை மிட்டாயும் சாப்பிட்டு தண்ணியைக் குடிப்போம்.லட்சிய வெறியோடு வேலை பார்த்த நாட்கள் அவை.
கோவை ஈஸ்வரன், உசிலை சோமநாதன் போன்றோர் தீக்கதிருக்கு பெரும் உதவி செய்தார்கள். இந்தக் காலம் முழுவதிலும் டெல்லிக்குப் போய் கட்சி வேலை பார்க்க வேண்டும் என்கிற ஒரு ஆசை என் மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.நான் தோழர் பி.ராமமூர்த்தி அவர்களைப் பார்க்கும் நேரமெல்லாம் நச்சரிக்கத் துவங்கினேன்.
1969இல் அவர் ஆசைப்பட்ட அல்லது கனவு கண்ட டெல்லி மாநகரில் கட்சியின் நாடாளுமன்ற அலுவலக ஊழியராகப் பணியில் சேர்ந்தார்.மதுரையில் இருந்தபோது தினமணியையும் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸையும் ஒருசேர வாசித்து ஆங்கிலப்பயிற்சி எடுத்த அனுபவத்தை டெல்லி வந்ததும் தீவிரமாகத் தொடர்ந்தார். மக்களவை நடவடிக்கைக் குறிப்புகளை தினசரி வாசித்து வாசித்தே ஆங்கிலத்தில் சொந்தமாக எழுதும் அளவுக்கு மொழிப்பழக்கம் வந்தது.
1969 முதல் 1983வரை நான் டெல்லியில் இருந்த 15 ஆண்டுகள் வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்கள் கொண்ட ஆண்டுகளாயின.எத்தனை ஆளுமைகள் எத்தனை தலைவர்கள் !
அப்போது கட்சியின் மத்தியக் குழு அலுவலகம் கல்கத்தாவில் செயல்பட்டது.4,அசோகாரோடு அலுவலகத்தில் இயங்கிய எங்கள் அலுவலகமே டெல்லிக்கு வரும் எல்லாத் தலைவர்களும் தங்கி வேலை பார்க்கும் இடமாக இருந்தது.தவிர மாநிலங்கல் நோய்வாய்ப்படும் முழுநேர ஊழியர்களையும் சிகிச்சைக்காக எங்கள் பராமரிப்பில் கொண்டு வந்து தங்க வைப்பார்கள்.ஏகே.ஜியும் சுர்ஜித்தும் அங்குதான் தங்குவார்கள்.
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் ஒன்பது பேரும் உண்மையில் குணத்தாலும் உழைப்பாலும் தியாகத்தாலும் நவரத்தினங்கள்தான் என்பதை அருகிருந்து பார்த்துப் புரிந்து கொண்டேன்.அவர்களுக்கிடையே ஆச்சரியமூட்டும் விதமான வேலைப்பிரிவினையும் உறவும் தோழமையும் இருக்கும்.
சும்மா இருக்க நேரம் வாய்த்தால் தோழர் பசவபுன்னையா எங்களோடு சற்று வம்பு இழுத்து சமகால அரசியல் பற்றிய எங்கள் புரிதலை அறிந்து கொண்டு கல்வி புகட்டுவார்.தோழர் ஏ.கே.ஜி ஊழியர் நலனில் ரொம்பவும் அக்கறையாக இருப்பார்.கம்பளி இருக்கிறதா ஷ¨ இருக்கிறதா என்று பார்த்துப் பார்த்து வாங்கித்தருவார்.
ஒருமுறை எங்கள் விருந்தினர் அறையிலிருந்த எட்டுக் கட்டில்களும் நிறைந்து விட்டன.அது டிசம்பர் குளிர்காலம்.ஒரு நாள் நள்ளிரவு தூக்கத்திலிருந்து முழிப்புத் தட்டியபோது என் கட்டிலுக்குக் கீழே யாரோ குளிரில் நடுங்கிக்கொண்டு புரண்டு கொண்டிருப்பதைப்பார்த்து எழுந்து விளக்கைப் போட்டேன்.தோழர் சுர்ஜித்! எந்த மாநிலத்துக்கோ போய்விட்டு இரவு தாமதமாக வந்தவர் தோழர்கள் தூக்கத்தைக் கெடுக்கக்கூடாது என்று யாரையும் எழுப்பாமல் கீழே இருந்த தரைவிரிப்பில் படுத்திருக்கிறார்.எனக்கு உடம்பெல்லாம் பதறிவிட்டது.அவரை எழுப்பிக் கட்டாயப்படுத்தி என் கட்டிலில் படுக்க வைத்தேன்.
1971இல் நல்ல சிவந்த நிறமுடைய பார்த்தாலே அறிவின் தீட்சண்யம் துலங்குகின்ற புன்னகை மிரும் முகத்தோடு ஓர் இளைஞர் சென்னையிலிருந்து தோழர் வி.பி.சிந்தனின் கடிதத்தோடு என்னைப் பார்க்க வந்தார்.அக் கடிதப்படி அவரை டெல்லி மாநிலக்குழு அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றேன்.ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராகச் சேர வந்திருந்த அவரை மாணவர் சங்கப்பணிகல் பயன்படுத்துமாறு தோழர் வி.பி.சி.கேட்டுக்கொண்டிருந்தார்.உண்மையில் அந்த இளைஞர் களத்தில் இறங்கிய பிறகுதான் டெல்லியில் மாணவர்சங்கம் மகத்தான வளர்ச்சி பெற்றது.அவர்தான் தோழர் பிரகாஷ் காரத் என்பதை இதற்குள் நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குறிப்புகளைத் தயாரிக்கும் பணியினூடாகத் தன் சொந்த அரசியல் மற்றும் மொழியறிவை வளர்த்துக்கொண்ட தோழர் ராமகிருஷ்ணன் 1981 வரை மக்களவைப் பணிகளையும் 1982 இல் மாநிலங்களவைப் பணிகளையும் ஒருங்கிணைத்தார்.1982இல் மதுரைக்குத் திரும்ப வேண்டும் என்கிற மனநிலையை கட்சி கேட்டுக்கொண்டதற்கிணங்க 1982 வரை அடக்கி வைத்தார்.1983இல் கட்சியின் மத்திய குழு அலுவலகப்பணியில் சேர்ந்தார்.டெல்லியில் வாழ்ந்த இந்தக்காலம் முழுவதும் மிகப்பெரிய பேறாக அவர் கருதுவது பல தலைவர்களோடு நெருங்கிப்பழகிக் கற்றுக்கொண்டதைத் தான்.
அதைப்போலவே மிக முக்கியமானது அங்கிருந்த நாட்களில் நான் சந்தித்த புரட்சியாளர்கள்.பகத்சிங்கின் சகாக்களான தோழர்கள் சிவவர்மா,பண்டிட் கிஷோரிலால்,டாக்டர் கயா பிரசாத் கட்டியார் மூவருமே எங்கள் இடத்துக்கு வருவார்கள்.சிவவர்மா அடிக்கடி வந்து எங்களோடு தங்குவார்.அப்போது அவர் உத்தரப்பிரதேச மாநிலக் குழுவின் செயற்குழுவில் இருந்தார்.பகத்சிங் பற்றிய கதைகளை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் அதே உணர்ச்சியுடன் எங்களுக்குச் சொல்லுவார் .அந்த இரவுகள் மறக்க முடியாதவை.டெல்லிக்குரின் நடுக்கத்தைவிட பகத்சிங்கின் கதை தரும் அதிர்வு கூடுதலாக இருக்கும். ஒவ்வொருமுறை பேசி முடிக்கும்போதும் தோழர் சிவவர்மா கேவி அழுதுவிடுவார். நாங்கள் கண்களில் நீர் கசிய அவரைச்சுற்றி மௌனமாக உட்கார்ந்திருப்போம்.
ஒருமுறை தோழர் கே.முத்தையா அவர்கள் சந்திரசிங் கார்வாலி என்பவரை தீக்கதிருக்காகப் பேட்டி எடுத்து அனுப்புமாறு என்னைக்கேட்டுக்கொண்டார்.அவர்யார் என்று எனக்குத் தெரியாது.அவர் நம் அறைக்கு வருவாரா என்று அறைத்தோழர்களிடம் விசாரித்துக்கொண்டே இருந்தேன்.ஒருநாள் நீ தேடிய ஆள் வந்திருக்காரப்பா என்று தோழர்கள் சொல்லவும் சந்திரசிங் கார்வாலி என்கிற அந்த முரட்டுக்கிழவரை சந்தித்தேன்.பேட்டி பற்றிச் சொன்னதும் முரட்டுக்குரலில் பேட்டியெல்லாம் எதுக்கு வேற வேலை இல்லே என்று மறுத்து விட்டார்.அப்புறம் அடுத்த முறை அவர் வந்தபோதும் பேட்டி என்று ஆரம்பித்தேன். அட போப்பா! என்று மறுத்து விட்டார்.ஒருமுறை நிதானமாகப் பார்த்தார்.பிறகு அதுதான் அப்பவே ராகுல் சாங்கிருத்தியாயன் என் வாழ்க்கை வரலாறை எழுதிட்டாரே.. அதை வாங்கிப் படிக்க வேண்டியதானே.... என்று சொன்னார்.1922இல் பெஷாவரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து நின்றபோது மக்களைச் சுடுமாறு கார்வாலி ரெஜிமெண்ட்டுக்கு ஆங்கிலேயர்கள் உத்தரவிட்டார்கள்.எம் மக்களை நாங்கள் சுடுவதா என்று மறுத்துத் துப்பாக்கிகளைக் கீழே போட்ட வீரர்கன் தலைவர்தான் இந்த கார்வாலி. தூக்குத் தண்டனை தரப்பட்டுப் பின்னர் காந்தியாரின் பேச்சுவார்த்தையால் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த வீரர் அவர். சிறையில் அவர் கம்யூனிஸ்டானார்.
சிட்டகாங் எழுச்சியில் பங்கேற்ற கடைசிக் ‘குற்றவாளி’’யான தோழர் சுபோத்ராய் எங்களோடு வந்து தங்குவார்.கல்பனாதத்தும் கூட வந்திருக்கிறார்.புரட்சி நாயகர்களான இவர்களோடு தங்கிப் பேசும் வாய்ப்பும் அவர்கள் வாயிலாகவே அந்த நாட்கன் தகிப்பை கேட்ட அனுபவமும்தான் டெல்லி வாழ்க்கை எனக்குத் தந்த மாபெரும் சொத்தாகக் கருதுகிறேன்.
உண்மையில் அந்தச் சொத்தோடும் விடைபெற்றபோது தோழர் இ.எம்.எஸ் எழுதிக் கொடுத்த ஒரு பாராட்டுக்கடிதத்தோடும்தான் தோழர் ராமகிருஷ்ணன் டெல்லியிலிருந்து விடைபெற்று மதுரை வந்து சேர்ந்தார்.ஒரு முழு நேர ஊழியர் வங்கியில் சேமிப்பெல்லாம் வைத்திருக்க ஏது வாய்ப்பு? வீசின கையும் வெறும் கையுமாக சில நாள் அலைந்தார். பின்னர் தீக்கதிர் நாராயணன் உதவியால் கட்சித்தோழரான என்.பி.கே.முத்து என்கிற கீழக்கரையைச் சேர்ந்த ஒரு தோழரின் மொசைக் நிறுவனத்தில் மதுரைக்கிளையில் (மொசைக் லாண்ட்)கொஞ்ச நாள் வேலை பார்த்திருக்கிறார்.அங்கும் மதியம் வரைதான் வேலை.350 ரூபாய் சம்பளம்.இரண்டு மணிக்கு தீக்கதிருக்கு வந்து கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், பிரசுரங்கள் எழுதிக்கொடுக்கிற வேலைகள் செய்துள்ளார்.ஊதியமில்ல்லாவிட்டாலும் மனதுக்கு நிறைவத்தது இந்த வேலைதான்.
அப்போது 1986 முதல் தீக்கதிரில் விளம்பர பொறுப்பாளராக பத்தாண்டுகள் பணியாற்றினார்.
1987இல் தோழர் பி.ராமமூர்த்தி இறந்த நாளன்று நான் சவுத் விஷன் பாலாஜியைச் சந்தித்தது என் வாழ்வின் அடுத்த திருப்புமுனையாக அமைந்தது.பாலாஜிதான் எனக்கு எழுத்தாளன் என்கிற ஒரு அடையாளத்தை வழங்கினார் என்பேன். அவர் கேட்டுக்கொண்டபடி இ.எம்.எஸ்ஸிடம் நேரடியாகப் பேசி அனுமதி பெற்று அவருடைய ‘ஓர் கம்யூனிஸ்ட்டின் நினைவலைகள்’ ‘ என்கிற புத்தகத்தை நான் மொழிபெயர்த்தேன்.பாலாஜி அதை வெயிட்டார்.அதை அடுத்து தோழர்கள் பி.ராமமூர்த்தி, வி.பி.சிந்தன், கே.பி.ஜானகி அம்மா, எம்.ஆர்.வெங்கட்ராமன், ஏ. பாலசுப்ரமணியம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிட்டோம். பிஆர் நூலுக்காக பல இடங்களுக்கும் சென்று தகவல்கள் சேகரித்தேன். தோழர்கள் இ.எம்.எஸ்,சுர்ஜித் உள்ட்ட தோழர்களை நேரில் சந்தித்து குறிப்புகள் எழுதி வாங்கினேன். அந்த நூலைத் தயாரிக்க இரண்டாண்டுகல் 22 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவானது. வட்டிக்கு வாங்கி செலவு செய்யப்பட்டது.
இக்காலம் முழுவதும் என் எழுத்துப்பணிக்கு வழிகாட்டியாக இருந்தவர் தோழர்.கே.வரதராஜன்தான்.
45 வயதுக்கு மேல் நான் எழுத்தாளன் ஆனேன். 23 புத்தகங்களை வெளியிட்டு எனக்கு எழுத்தாளன் என்கிற முகத்தை வழங்கியது சவுத் விஷன் பாலாஜிதான்.
தோழர் ராமகிருஷ்ணனின் எளிமையான நூல்கள் பரவலான வாசிப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளன.தன்னுடைய எழுத்து வகை தோழர் சோலையின் பாணியைப் பின்பற்றியது என்று குறிப்பிடும் அவர் தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றையும், நெல்லை,வட ஆற்காடு, கோவை போன்ற மாவட்டக் கட்சி வரலாறுகளை எழுதியதை மிக முக்கிய அனுபவமாகக் குறிப்பிடுகிறார்.
இவ்வரலாறுகளை எழுதுவதற்காக பல ஊர்களுக்கும் சென்று பழைய தோழர்களைத் தேடித் தேடிச் சந்தித்தது மிகப்பெரிய மனப் பாதிப்பை உண்டாக்கியது.ராஜபாளையம் கந்தசாமி என்கிற மூத்த தோழரைத் தேடிப்போனேன்.தன் மகள் வீட்டுத் திண்ணையில் ஓர் அழுக்குச் சட்டையோடு எப்போதும் அவர் படுத்து இருப்பார். அவர் நிலைமை என் மனதைப் பிசைவதாக இருந்தது.ஓடி ஓடிக் கட்சிப்பணியாற்றியவர் அவர் தூத்துக்குடியில் டாம் டாம் நல்லசிவன் என்று அறியப்பட்ட தோழர் மு.நல்லசிவன் அவர்களைச் சந்தித்தேன்.200 ரூபாய் முதியோர் பென்சனுக்கு ரேசன் அரிசியுடன் கணவன் மனைவி இருவரும் வாழும் எய வாழ்க்கை வறுமையைச் சந்திக்கும் மன உறுதி மிகுந்த நெகிழ்ச்சியூட்டியது.இப்படி எத்தனையோ தோழர்களைச் சந்தித்தேன். அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்.
இவர்கள் அனைவருக்குமே கட்சியின் மீது மிகப்பெரும் மதிப்பும் நம்பிக்கையும் கொண்டவர்களாக வாழ்வதைப் பார்த்தேன்.
கட்சியின் உயர்மட்டத்தோழர்களோடும் பழகியிருக்கிறேன்.இப்படிக் கீழ்மட்டத்தில் பணியாற்றிய தோழர்களையும் பார்த்துவிட்டேன்.புரட்சியாளர்களையும் பார்த்தேன்.இவர்கள் யாவருமே தம்மை முன்னிறுத்தாத தியாகச் செம்மல்கள். இந்தப் பண்பாடு கம்யூனிஸ்ட் பண்பாடு நாம் ஒவ்வொருவரும் உள்வாங்கி வளர்த்தெடுக்க வேண்டிய பண்பாடாகும்
தனக்கு எழுதுவதைத் தவிர வேறொன்றும் தெரியாது.அதன் மூலம் நம் காலத்தின் ஈடு இணையற்ற வளரும் தத்துவமான மார்க்சியத்துக்குச் சேவை செய்வதே தன் வாழ்வின் லட்சியம் என்று அடிக்கடி குறிப்பிடும் தோழர் ராமகிருஷ்ணன் இடையறாது எழுதி வரும் ஒரு படைப்பா. அவருடைய பெயர் இல்லாமல் பல கண்காட்சிகள், கட்சிப்பிரசுரங்களுக்காக அவர் ஏராளமான பங்கப்புகளைச் செய்திருக்கிறார்.ஒருநாள் முழுக்க அவரோடு பேசி இந்த நேர்காணலை எழுதியபோது கட்சி கட்சி என்றுதான் பேசிக்கொண்டிருந்தார்.தன் சொந்த வாழ்க்கை பற்றி கேட்டால் மட்டுமே பேசினார்.அவருக்கு குருவம்மாள் என்கிற துணைவியாரும் (இப்போது அவர் காலமாகிவிட்டார்) மணவாளன்,சாந்தி என்று இரு மக்கள் இருப்பதையும் கூட கேட்ட பிறகுதான் குறிப்பிட்டார். தன்னுடைய துணைவியாரும் பிள்ளைகளும் கூட கட்சியின் மீது அளப்பரிய மதிப்போடும் நம்பிக்கையோடும் இருப்பதில் பெருமையும் பெருமித உணர்வும் கொள்ளும் ராமகிருஷ்னன் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை குறித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.
நான் எங்கெங்கு சுற்றி வந்தாலும் மண்டையன் ஆசாரி சந்தில் என் அண்ணன் கட்சி என்கிற உணர்வோடு கட்சி அலுவலகத்தில் சுற்றித்திரிந்த அதே பையனாகவே இப்போதும் உணர்கிறேன். காதுக்குள் காங்கிரஸ் போலீஸ் தீக்குச்சியை உரசிப்போட்டுச் செவிடாக்கிய தியாகி தோழர் பொதும்பு ராமையா, பொதும்பு பொன்னையா ,வீரணன், சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட தோழர் வீராயி இவர்கன் வீர காவியங்களால் உந்தப்பெற்றுக் கட்சிக்குள் ஈர்க்கப்பட்ட மதுரைப்பையனாகவே இருக்கிறேன்.. இருப்பேன்...
சந்திப்பு: ச.தமிழ்ச்செல்வன்