தமிழ் ஒளியின் கவிதைகளும் காவியங்களும் நாடகங்களும் பேசப்பட்ட அளவுக்கு அவருடைய சிறுகதைகள் இலக்கிய உலகில் பேசப்படவில்லை. எண்ணிக்கையில் குறைவாக எழுதியது ஒரு காரணமாக இருக்கலாம். இக்கட்டுரையை எழுதுவதற்காகத் தேடுகையில் எனக்கும் குருவிப்பட்டி என்கிற ஒரு தொகுப்பே வாசிக்கக்கிடைத்தது.இன்னொரு தொகுப்பும் உண்டு. அது கிடைக்கவில்லை.
குருவிப்பட்டி தொகுப்பில் எட்டுச் சிறுகதைகளும் பதினைந்து குறுங்கதைகளும் ஓர் ஓரங்க நாடகமும் தொகுக்கப்பட்டுள்ளன. பிரபஞ்சன் ஒரு சுருக்கமான முன்னுரை வழங்கியுள்ளார்.”இலக்கியத்தில் எல்லாக் காலத்திலும் சிலராவது வன்முறைகளுக்கும் அமானுடத்துக்கும் எதிராகக் குரல் கொடுத்தே வந்திருக்கிறார்கள் என்று நினைக்க மகிழ்ச்சி தருகிறது. அந்தத் தெளிவு மிக்க படைப்பாளிகள் வரிசையில் நிமிர்ந்து நிற்கிறார் தமிழ் ஒளி” என்று சரியாகக் கணிக்கிறார் பிரபஞ்சன், உருவகங்களைப் பின் தொடர்ந்து செல்லும் பாணி அவருடையது, “அவள் பெயர் கறுப்பி. மெல்லியல் என்று கூறும் வர்ணனைக்குப் புறம்பானவளும்,
பெண் யானைபோல், அடிவைத்து மிடுக்குடன் நடப்பவளுமாகிய அவளுக்குப் புலவர் வர்ணனை ஒத்து வராது!வெடித்த குரலில் ,அடக்க ஒடுக்கமின்றி அதட்டிப் பேசும் அவளிடம் ‘மென்மை’ இல்லை என்று விமர்சிக்கலாம்.ஆனால் ‘பெண்மை’ இல்லை என்று கூற முடியாது.புலவர் வர்ணனைக்குப் பிடிபடாமல் திமிறி நிற்கும் ஆங்காரம் அவள் சொரூபம்” இப்படித்தான் அறிமுகம் செய்கிறார் “பற்றுக்கோடு” கதையின் நாயகியை.”சரஸ்வதி” இதழில் 1954 இல் இக்கதை வெளியாகியிருக்கிறது. சுந்தரராமசாமி,ஜெயகாந்தன் போன்ற தமிழின் முக்கிய சிறுகதையாளர்கள் அதே காலத்தில் அதே இதழில் எழுதிக் கொண்டிருந்தார்கள். அன்று எழுந்து வந்து கொண்டிருந்த யதார்த்தவாதக்கதைகளை நேரடியான மொழியில் எழுதும் பாணியைத் தமிழ்ஒளி பின்பற்றவில்லை.கருத்தைப் பிரதானமாகக் கொண்டு ‘சொல்லும் விதம்’ பற்றி அதிகம் கவலைப்படாத அன்றைய திராவிட இயக்கச் சிறுகதையாளர்களின் பாணியைக் கைக்கொண்டு எழுதினாரோ என்று தோன்றுகிறது. எதிர்பாராத் திடீர்த் திருப்பங்கள் நிறைந்த கதைகள் இவருடையவை. கறுப்பிக்கும் திடீரென்று ஒரு இணை வந்து சேர்கிறான். கல்யாணமும் நடந்து குழந்தையும் பிறக்கிறது. உடனே கறுப்பியின் தாயும் செத்துப் போகிறாள். கணவர் கந்தசாமி வேறொரு பெண்ணை நாடுகிறான்.அவனை ஓங்கி அறைந்து ஊரைவிட்டே ஓட வைக்கிறாள் கறுப்பி.. குறுங்காட்டில் மரம் வெட்டப் போகிறாள். அப்போது புலி வருகிறது.மரக்கிளையால் அடித்துப் புலியைக் கொன்று போடுகிறாள். முறத்தால் புலி துரத்திய தமிழ்ப்பெண்ணின் வாரிசாக அவளை வரைகிறார் தமிழ்ஒளி. அத்தனை வலுவான ஒரு பெண்ணையும் வறட்சியும் பஞ்சமும் நிலை தடுமாற வைக்கிறது. ஊரோடு பஞ்சம் பிழைக்கப் போகிறாள்.
“அந்தக் கும்பலில், கறுப்பி தன் குழந்தையை அணைத்தபடி செல்கிறாள். அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.வெயிலின் உக்கிரம் தாங்க முடியாமல் குழந்தை அழுதது. அதற்குப்பசி. பல நாட்கள் பட்டினி கிடந்ததால் கறுப்பிக்குப் பால் வற்றி விட்டது.அவளுடைய ஸ்தனங்கள் சுருங்கி விட்டன.. குழந்தை முலைக்காம்புகளில் வாயை வைத்து மாறி மாறிச் சுவைத்தது. பால் இல்லாமற்போகவே வாயை எடுத்துவிட்டு அழுதது. ஆனால் அதற்கு அழுவதற்குக்கூட சக்தி இல்லை, வழி வளர்ந்தது.” என்று கதை வளர்கிறது. அடுத்த ஊரில் கைநீட்டிப் பிச்சை கேட்கிறார்கள் பஞ்சையின் மக்கள். அந்த ஊர்க்காரர்கள் குழந்தைகளை விலை பேசுகிறார்கள். ஒரு குழந்தையின் விலை எட்டணா “சாகக் கொடுப்பதை, எட்டணாவுக்குக் கொடுப்பதே மேல்..” பலரும் குழந்தைகளை விற்கிறார்கள். கறுப்பியின் குழந்தையையும் எட்டணாவுக்குக் கேட்க இவள் திகைத்து வாயடைத்து நிற்கிறாள்.”சரி ஒரு ரூபாய்க்குக் கொடு “ என்று கேட்டார் ஒருவர். கறுப்பி மயக்கம் வந்து தரையில் சாய்கிறாள். அவள் மூளை சுழன்றது.
இப்போது கதை உருவகத்துக்குள் புகுந்து விடுகிறது.
அதோ அவள் குழந்தையுடன் ஓடுகிறாள்.. அந்த வழி நீண்டு செல்கிறது... அது முடியும் இடம்.. அக்னி ஜ்வாலை... அதன் கூர் நாக்குகள் கொழுந்து விட்டெரிகின்றன.. அறுக்கப்பட்ட தலைகளை, அவை எரித்துச் சிரிக்கின்றன...
ஆம், அது யாக குண்டம், உயிர்ப் பலி...நரபலி...!
நாய் நரிகள் ஊளையிட்டுக் குதிக்கின்றன. குழந்தைகளின் இளம் தசை நார்களைக் கிழித்துக் குதறுகின்றன... தீ நாக்குகள் ரத்தங்குடித்து ஆடுகின்றன...
வழி, தொடர்கிறது..
அவள் திரும்பி ஓட எத்தனிக்கிறாள். அதோ தலை நொறுங்க அடிக்கப்பட்ட அந்தப்புலி, பழி வாங்கக் கருதி கர்ஜிக்கிறது.. இப்பொழுது அவள் கையில் எதுவுமே இல்லை. அவள் சுற்றுமுற்றும் பார்க்கிறாள்.. கடகடவென்ற சிரிப்பு அலைமோதுகிறது...
"குழந்தையைப் பறித்த நீலி ! அதைப்பலி கொடு.. பலிபீடம் அழைக்கிறது போ..." என்று அவன் கோரமாக நகைக்கிறான்.. அவன் கறுப்பியின் கணவன்.
அவளுக்கு ஆங்காரம் பிறந்தது. இருகைகளாலும் மார்பைப் பிளந்து குழந்தையை எடுத்து மார்பினுள் வைத்து மூடுகிறாள்...
"என் குழந்தையை யாரும் தொடமுடியாது...'
"நான் உன் மார்பைப் பிளந்து அவனைக் கொல்வேன்" என்று கர்ஜிக்கிறது புலி...
அவள் புலியின் மேல் பாய்கிறாள்.
நிலபுலம் அது அவள் மார்பில் ஓங்கி அறைகிறது... 'ஐயோ என்று அலறி விழிக்கிறாள்.
குழந்தை அவள் மார்பில் உறங்குகிறது. அதை அணைத்துக் கொண்டு அவள் எழுந்து நிற்கிறாள்...
இப்போது கதை மீண்டும் யதார்த்த உலகுக்கு வருகிறது. மயக்கம் தெளிந்த அவள் விலை கேட்டவரிடம் குழந்தையை விற்கிறாள் ஒரு ரூபாய்க்கு உடனே இன்னொரு திருப்பம். அந்த ஒரு ரூபாயை அவள் அவரிடமே கொடுத்து பிள்ளை வளர்ந்த பிறகு அவனுக்கே தன் ஞாபகமாகக் கொடுக்கச் சொல்கிறாள். அவன் தாயின் பெயர் கறுப்பி என்று சொல்லச் சொல்லிவிட்டு அப்படியே கீழே விழுகிறாள்.
இனி அவள் பற்றுக்கோடு எது?
அது அறுந்தது. அவள் உயிர் பிரிந்தது,
என்று கதை முடிகிறது.
சிறுகதை அதன் வனப்புகளோடும் வடிவ நேர்த்தியோடும் வீறு கொண்டெழுந்த காலத்தில்தான் தமிழ் ஒளியும் எழுதியிருக்கிறார். ஆனாலும் புதுமைப்பித்தன், ரகுநாதன், கு.அழகிரிசாமி போன்றோர் தொடங்கி வைத்த வழியில் அவர் பயணிக்கவில்லை.
அடுத்த கதையான ‘குருவிப்பட்டி’யும் இதே பாணியில்தான் சொல்லப்படுகிறது. பொதுவாகப் பலராலும் கவனிக்கப்படாத குருவிக்காரர்கள் எனப்பட்ட மக்களைப் பற்றிய கதையாகும்.
குரங்காட்டிப் பிழைக்கும் குருவிக்கார அண்ணாமலையை அடித்து விரட்டும் சாதி இந்துக்களின் வெறியாட்டம் இக்கதையின் உள்ளடக்கம். அண்ணாமலை ஒரு சாமியாராக மாறும்போது, அந்தச் சாதி ஆணவம், தன்னை மாற்றியமைத்துக் கொண்டு, காலம் காலமாகச் செய்கிற அவனைத் தனக்குள் இசைவித்துக் கொள்கிற தந்திரத்தைச் செய்து, தோற்கிறது.
பணக்கார ஆண்டைக்குப் பரம்பரையாக உழைத்து, உழைப்புக்குப் பதிலியாக எதையும் காணாத கூலிக்காரனைப் பற்றிய கதை ‘அம்மா எனும் குரல். பசுங்கொலை என்கிற ஊர் பண்ணையார் பரங்குசத்தால் பசுக்கொலை ஆன கதை இது. பண்ணையடிமைத்தனத்துக்கு எதிராக வேறொரு கோணத்தில் எழுதப்பட்ட கதை. பசுவுக்கும் பச்சையப்பனுக்குமான உறவு உணர்வுப் பூர்வமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இக்கதையின் பெரும்பகுதி யதார்த்தமாக எழுதப்பட்டுள்ளது. சோவியத்தின் கூட்டுப் பண்ணையை தமிழ்நாட்டில் கொண்டுவந்து இறக்கி வைக்கும் ஓர் கனவை இதில் தமிழ்ஒளி விதைக்கிறார். அன்றைய இளம் கம்யூனிஸ்டுகள் கண்ட கனவு அது. மக்கள் அரசாங்கம் வந்ததும் பண்ணையார்கள் ராஜ்ஜியம் ஒழிக்கப்பட்டுக் கூட்டுப்பண்ணைகள் வந்து விட்டதாக ஒரு கனவை இக்கதையில் விரித்திருக்கிறார். அப்படியெல்லாம் ஒன்றும் நடந்துவிடவில்லை என்பதைக்காண அவர் நீண்டகாலம் வாழ்ந்திருக்கவில்லை.
‘நீதி’ என்னும் கதை முற்றிலும் யதார்த்தமான கதை. பண்ணையார் மகன் நல்லவனாக இருந்து தச்சுவேலை தங்கசாமிக்கு உதவுகிறான். ஆனாலும் அப்பன்காரன் தன் நிலப்பிரபுத்துவ ஆதிக்கப்படி நீதி நிலைநாட்டப்படுகிறது. பிற கதைகளில் வரும் திடீர்த்திருப்பங்களின் குறுக்கீடுகள் இல்லாமல் யதார்த்தமாகக் கதை முடிக்கப்பட்டுள்ளது ஆறுதலளிக்கிறது. இதேபோன்ற இன்னொரு நல்ல கதையாக அமைவது ”கால்நடை வைத்தியர்”. இத்தொகுப்பின் சிறந்த கதையாக இக்கதையைச் சொல்லலாம்.
“திண்ணைப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்குச் சட்டாம்பிள்ளைகள் இருப்பது போன்று வைத்தியசாலைகளில் டாக்டர்களுக்குக் கம்பவுண்டர்கள் இருக்கின்றனர். முழு உழைப்பும் அவர்களுடையதே என்று கூறலாம். எனினும் கம்பவுண்டர்களின் நிலை “கைவிடப்பட்ட’ நிலைதான் என்று கதையின் சுருக்கத்தை முதல் பத்தியில் சொல்லிவிட்டுக் கதையை ஆரம்பிக்கிறார். கால்நடை சிகிச்சை சாலையின் கம்பவுண்டர் கந்தசாமிதான் கதை நாயகன். அவருடைய வாழ்க்கைப் பயணத்தின் ஒரு சிறு பக்கத்தை இப்படிச் சித்தரிக்கிறார்’
“மூட்டைகளைச் சுமப்பதும், அடிகளை ஏற்றுக்கொள்வதும், துயரங்களுக்கு ஆளாவதும் கால்நடைகளின் வாழ்க்கை. வறுமையைச் சுமப்பதும், அதன் குரூர. அடிகளை ஏற்றுக் கொள்வதும், துயரங்களில் மூழ்குவதும் கந்தசாமியின் வாழ்க்கை.மேடுபள்ளங்கள் நிறைந்த வழியில் ஓடும் வண்டி போல் அவர் வாழ்க்கை, லொட லொட்டையாய்ப் போய்விட்டது.
மனைவியும் மக்களும் அவருக்குச் சுமையாய்த் தோன்றும் அளவுக்கு வாழ்க்கை வண்டியின் அச்சுத் தேய்ந்து விட்டது. அடிக்கடி கிறீச்சிடும் சப்தம், ‘எண்ணெய் போட வேண்டும் எண்ணெய் போடவேண்டும்’ என்று வற்புறுத்தியது.
பிள்ளைகள், பசியால் அழுவதுதான் கிறீச்சிடும் சப்தம், எண்ணெய் தான், சம்பளம் !...
நூற்றுக்குமேல் ஊற்று, என்பது பழமொழி.
கந்தசாமியின் மாதச் சம்பளம் நூற்றுக்கும் கீழே ஐம்பதுக்கு வந்துவிட்டதால் அவருடைய வாழ்க்கை, பொங்கும் ஊற்றாக இல்லாமல் பொசுங்கும் பாலையாய் மாறிவிட்டது...
பாலை நிலத்தில் பிரயாணம் செய்யும் அவர், பசிய புல்வெளிகளைப் பற்றிக் கனவுகாண்பது இயற்கைதானே!
அடிக்கடி, அவருடைய செல்வங்கள், அழுது அவருடைய கனவைக் கலைத்துவிடும்... அப்பொழுதெல்லாம் அவர் கோபம் பொங்க, "எருமை மாடுங்களா, வாயை மூடுங்க! என்று கத்துவார்.
"பிள்ளெங்கௌ எதுக்குத் திட்டிக் கொட்டறீங்க?" என்று அவர், சகதர்மிணி எதிர்த்தால், "புத்திகெட்ட மாடே சும்மாக் கெட ! என்று சாட்டை கொடுப்பார் !
மாடுங்களோட பழகி, மாட்டுப் புத்தி வந்துட்டுது, என்று அவர் சகதர்மிணி சொல்லும்போது அமைதியாவார்.
இவர் வைத்தியம் பார்த்து மாடுகள் பிழைக்கும் .ஆனால் எல்லாப் புகழும் டாக்டருக்கே போகும். கதை முடிவில் கந்தசாமியின் மனைவி பிரசவத்துக்காக மருத்துவமனையில் இருக்க இவர் மாட்டுக்குப் பிரசவம் பார்க்கப் போவார்.இவருடைய கைப்பக்குவத்தில் சுகப்பிரசவமாக மாட்டுக்குட்டி உலகுக்கு வரும்.
ஆனால் அவர் மனைவியின் பிரசவத்தில் குழந்தை இறந்து விடும்.படிச்ச டாக்டருக்கு என்ன தெரியும் என்கிற கந்தசாமியின் புலம்பலை மீறி அன்று புதிதாய்ப் பிறந்த கன்றின் குரல் ஒலிக்கும் ”அம்மா..வ்” என்று கதை முடியும். ‘தாமரை’யில் 1960 இல் வந்த கதை இது.இந்தப்பாணியில் அவர் தொடர்ந்து எழுதியிருந்தால் ஜெயகாந்தனைப்போல இன்னொரு சிறுகதைப் படைப்பாளி நமக்குக் கிடைத்திருப்பார்..
காதலுக்கு எதிரே, காதல் வென்றது ஆகிய இருகதைகளும் ஒரே கதையின் இரு பரிமாணங்கள் .முடிவு மட்டும் வேறு வேறு.கதை ஒன்றுதான். ஒரே சாதிக்குள் முகிழ்க்கும் காதலுக்கு எதிராக வர்க்க வேறுபாடு எப்படி குறுக்கே நிற்கிறது என்பதுதான் கதை.முதல் கதையில் பாதிக்கு மேல் உருவகத்துக்குள் சென்று திருக்கழுக்குன்றத்தில் புயலுக்கு நடுவே கொட்டும் மழைக்குள் காதலர் இணைவதாக முடிகிறது. இரண்டாம் கதையில் கமலாவின் அப்பா மரணப்படுக்கையில் கிடக்க, மனம் மாறிக் காதலர்களைச் சேர்த்து வைப்பதாக யதர்த்தமாக முடிகிறது. ஒரே கதைக்கு இரண்டு முடிவுகள் வைத்து ஒரு சோதனை முயற்சியாக எழுதிப்பார்க்கும் படைப்பு மனம் தமிழ் ஒளிக்கு வாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது, அன்றைய தேதிக்கு இது புதுமையான முயற்சிதான்.
பூம்புகரில் புரட்சிப்பெண் என்கிற கதை மணிமேகலை கதையை மறுவாசிப்புச் செய்து ஆணாதிக்கத்துக்கு எதிரான கதையாக மாற்றி எழுதப்பட்டது. இப்படி ஒரு முயற்சியும் தமிழ் ஒளி செய்திருக்கிறார். அணைந்த வேள்வி என்கிற ஓரங்க நாடகமும் ஒரு மறு வாசிப்புத்தான். ஆபுத்திரன் யாகத்தில் பசுக்களைக்கொல்லும் அந்தணர்க்கு எதிராகப் போர்க்குரல் எழுப்புவதுதான் கதை.
குறுங்கதைகள் என்று தொகுக்கப்பட்டுள்ள பதினைந்தில் பலவும் தத்துவத் தெறிப்புகளாக மட்டுமே சுருங்கி நிற்கின்றன. உதாரணத்துக்கு ஒன்று சுதந்திரம் ஆயிரம் அழகிகளை அணைவதைக் காட்டிலும் என் சுதந்திரத்தை அணைவதிலேயே நான் சுகங்கண்டேன்.
இந்த இரண்டு வரித் தத்துவத் தெறிப்பில் ஆணாதிக்கச் சிந்தனை மறைந்திருப்பதை அவரே உணரவில்லை என்று தெரிகிறது.. உலகம் என்றால் என்ன? புறாவும் டாலரும், நிலா! நிலா! வா, வா! ஆகிய மூன்று கதைகள் குறிப்பிடத்தக்க கதைகள்.அவற்றுள்ளும் புறாவும் டாலரும் கதை இந்த 2023 ஆம் ஆண்டிலும் கூட ஆகச்சிறந்த உருவகக் கதை என்று சொல்லத்தக்க விதத்தில் காலத்தை வென்று நிற்கும் கதையாகத் திகழ்கிறது. பூமாதேவி சொல்லும் கதையாக அது விரிகிறது.
சமாதானத்தின் விதையை நாடு நாடாகச் சென்று விதைக்கும் புறா ஒன்று டாலர் தேசத்திலும் போய் விதைக்கிறது.அங்கே டாலர் கோபுரத்தில் இருக்கும் ஒரு தொப்பைப் பேர்வழி குறுக்கிடுகிறான்.வேலையில்லாமல் ஊர் சுற்றும் புறாவே உனக்கொரு வேலை தருகிறென் செய்கிறாயா” என்று அதிகார தோரணையில் கேட்கிறான். புறா சிரித்தது “என்னை சூரியன் ஆசீர்வதிக்கிறன். சந்திரிகா வாழ்த்துகிறாள்; எங்கே அருணோதயம் போன்ற கொடி பறக்கிறதோ, அங்கேயிருந்து நான் வாழ்த்துச் செய்திகளைச் சுமந்து செல்கிறேன்; நதிகளும் வயல்களும் என்னைப் பார்த்து மகிழ்ச்சியடைகின்றன; உலக மக்கள் எல்லாம் தங்கள் வீட்டுக் கூரைகளில் நான் வந்து உட்கார வேண்டுமென்று தவமிருக்கிறார்கள்; குழந்தைகள் என் வரவை எதிர்நோக்கியிருக்கின்றன. எனக்கு வேலை சமாதானத் தொண்டு செய்வது; நான் வேலையற்ற சோம்பேறியல்ல, பிணந்தின்னிக் கழுகல்ல" என்றது புறா.
'ஓ, ஏழைப் புறாவே! உனக்கு டாலர்க் கூண்டு கட்டித் தருகிறேன்; என் வியாபார ஒப்பந்தச் சீட்டுகளை எடுத்துக் கொண்டு போய் உலக மார்க்கட்டுகளில் கொடுத்து விட்டு வா! வாழ்த்துச் செய்தியைவிட, மார்க்கெட் செய்திகள்தான் உயர்ந்தவை. வாழ்க்கையைவிட டாலர் உயர்ந்தது. அருணோதயத்தைவிட, லாபம் உயர்ந்தது, அருணோதயமே இல்லா தொழிந்தால்தான் என்ன? இருளில் லாபம் சம்பாதிப்பது எவ்வளவு இனிமையானது! என்று அந்த மனிதன் தன் சித்தாந்தத்தை உபதேசித்தான்.
எவ்வளவு இனிமையானது !
"சீச்சீ! உன் டாலர்க்கூண்டை நரகத்தில் போடு! அதில் பாபம் குடியிருக்கும். உன் வியாபார ஒப்பந்தச்சீட்டில் மரணம் இருக்கிறது; யுத்தம் இருக்கிறது. கொள்ளை இருக்கிறது. வெறியும் பொறாமையும் இருக்கின்றன. இவைகளைச் சுமந்து கொண்டு போக உன்னுடைய கழுகை அனுப்பு; அதுதான் அதற்கு லாயக்கு" என்று கோபமாகக் கூறியது புறா.
“ஜாக்ரதை! உன் உயிர் என் கையில் இருக்கிறது. திமிர் பேசினால் உன்னைக் கொன்றுவிடுவேன்” என்று துப்பாக்கியை எடுத்தான் வியாபாரி.
உடனே, புறா 'ஜிவ் வென்று ஆகாயத்தில் கிளம்பி ஒரு குரல் எழுப்பியது. காற்று, அதை உலகமெங்கும் பரப்பியது.
செங்கொடியின் ஒளி வெள்ளம், புறாவைச் சூழ்ந்து நின்று ஒரு பாதுகாப்பு அரண் போன்று காட்சி அளித்தது. அருணோதயம் அரக்கு போன்ற அந்தக் கொடியின் கீழ் உலக மக்களெல்லாம் திரண்டார்கள். "வாழ்த்துச் செய்தி கொண்டு வந்த புறாவை ஒரு வியாபாரி கொல்லப் போகிறானாம்' என்ற செய்தி உலக முழுவதும் பரவியது. எல்லோரும் அந்த வியாபாரியை நோக்கிப் படையெடுத்தார்கள்.
அவன் டாலர்க் கோபுரத்தை இடித்து நரகத்தில் போடுங்கள்' என்று புறா அசரீயைப் போல் கூறிற்று.
காற்று, புறாவின் கட்டளையை நிறைவேற்ற சூறாவளி யாக மாறி, டாலர் கோபுரத்தின் மேல் மோதியது. மேகங்கள் இடிமுழக்கத்துடன் ஓடிவந்தன. டாலர்க் கோபுரத்தின்மேல் பேரிடிகளை வீசியெறிந்தன. 'டாலர்க் கோபுரம் நொறுங்கி விழப்போகிறது' என்று மின்னல் பளிச்சிட்டது. 'டாலர்க் கூண்டு ஒழிக! மரண வியாபாரி ஒழிக!! என்ற கோஷம் வான மண்டலமெங்கும் எதிரொலித்தது. இருளைக் கிழித்துக் கொண்டு மக்கள் நடந்தார்கள்; புறாவுக்கு வாழ்த்துக் கூறினார்கள்.
மதுரமான அந்த வேளை வந்தது; செவ்வானத்தில் மலர்ந்த இந்திரவில் புறாவின் சிறகுகளை முத்தமிட்டது. 'சமாதானம் வாழ்க' என்று புறா இசை பாடியது ”
50களில் உருவான சமாதான இயக்கத்தை வரவேற்று இக்கதையை தமிழ்ஒளி எழுதியிருக்கிறார். இயக்கங்களை வரவேற்று முழக்கக் கவிதைகள் எழுதும் வழக்கத்தில் ஓர் உருவகக் கதையையே எழுதி விட்டார். இன்றைக்கும் பொருந்துகின்ற ஏகாதிபத்திய எதிர்ப்புக் கதையை அன்றைக்கு தமிழ்ஒளி எழுதியிருக்கிறர்.
இதுபோலத் தொடர்ந்து எழுதாமல் அகாலத்தில் அவர் மறைந்தாரே என்னும் ஏக்கத்தை இக்கதைகள் நமக்கு ஏற்படுத்துகின்றன.
- ச.தமிழ்ச்செல்வன்