கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

 

மார்க்சிய தத்துவம் அதன் அமைப்பு வடிவமும் எவ்வாறு உழைப்பாளிகளை, சாதாரண மனிதர்களை, மிகப்பெரும் புரட்சிக்காரர்களாகவும், மக்கள் தலைவர்களாகவும் மாற்றியமைத்துள்ளது என்பதை இடதுசாரி தலைவர்களின் வரலாற்றை புரட்டும் போதே பளிச்சிடுகிறது.

மார்க்சிய தத்துவத்தையும் கொள்கையையும் ஏற்றுக்கொண்டு இந்தியாவில் சோசலிசம் எனும் லட்சியத்தை அடைய போராடி பன்முகத்திறமையோடு இந்திய அரசியல் அளவிலும் தமிழக அரசியலிலும் களம் பல கண்டவர்தான் தோழர் பி. ராமமூர்த்தி. 1908ம் ஆண்டு சென்னை திருவல்லிக் கேணியில் பிறந்து தன்னுடைய 11வயதில் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று அன்னிய துணியை பகிஷ்காரம் செய்து கதர் ஆடையை அணிந்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தார். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் அந்நிய பள்ளிகளையும் பல்கலைகழகங்களையும் துறந்து இந்தியர்களால் நடத்தப்படும் தேசிய பள்ளிகளில் சேருங்கள் என்ற அறைகூவலை ஏற்று தன்னுடைய 13 வது வயதில் வீட்டிற்கு சொல்லாமல் அலகாபாத்தில் நேருவால் நடத்தப்பட்டு வந்த தேசிய பள்ளியில் இணைந்து பயின்று வந்தபோது 1930ல் சைமன் கமிஸன் இந்தியாவிற்குள் நுழைந்தபோது. சைமன் குழுவே வெளியேறு என்று நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது கங்கையை கடந்து சைமன் குழு செல்லப்போகிறது என்ற தகவல் ராமமூர்த்திக்கு கிடைத்தவுடன் (அப்போது வயது 15) தன்னுடைய முயற்சியால் 30 படகுகளை வாடகைக்கு எடுத்து அவரோடு தேசிய பள்ளியில் படித்து வந்த மாணவர்களை திரட்டி கங்கையில் சைமன் கமிஸன் கப்பல் கடந்து சென்ற போது அக்கப்பலை சுற்றி வளைத்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.

பின்பு மாவீரன் பகத்சிங்கால் வழிநடத்தப்பட்டு வந்த நவஜவான் பாரத் சபாவின் வெகுஜன அமைப்பான இந்திய மாணவர் வாலிபர் சங்கத்தில் தீவிர உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட்டார். பின்னர் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட்டார். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலை சிறந்த தலைவர்களான தோழர் அமீர் ஐதரலிகான், பி. சுந்தரய்யா,எஸ். வி. காட்டே போன்ற தலைவர்களால் கம்யூனிஸ்ட்டாக மாறி 1964ல் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் இரண்டாக பிரிந்த காலகட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு தன்னுடைய வாழ்நாள் முழுவதும் உழைப்பாளி வர்க்கத்தின் உரிமைக்காக போராடினார்.

பல வகையில் உழைப்பை செலுத்தும் தொழிலாளர்களை அணிதிரட்டி உழைப்பு சுரண்டலுக்கு எதிராக தொழிலாளி வர்க்கத்தின் உரிமைக்கான வலுவானபோராட்டங்களை நடத்தி பலமான தொழிற்சங்க இயக்கத்தை கட்டி வளர்த்தார் இப்படி உழைப்போர் நலனே உயிர் நாடியாக வாழ்ந்து வந்தார் தோழர் ராமமூர்த்தி.

தமிழக தொழில் வளர்ச்சியில் பங்கு:

தொழில்வளர்ச்சியிலும், தொழில்நுட்ப மேம்பாட்டிலும் நாடு முன்னேறினால்தான் மற்ற நாட்டில் கையேந்தும் நிலை ஏற்படாது என்று வாதிட்டு வந்தது மட்டுமல்ல, தொழில் வளர்ச்சியை உருவாக்கியும் காட்டினார். நமது இந்திய பூமிக்கடியில் ஏராளமாக கொட்டிக் கிடக்கும் பழுப்பு நிலக்கரியை கொண்டு இரும்பை உருவாக்க முடியாது என்று அன்றைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசு வாதிட்டு வந்தது. ஆனால் பி. ஆர் அவர்கள் ஒரு துண்டு பழுப்பு நிலக்கரியை எடுத்துக் கொண்டு பழுப்பு நிலக்கரியைக் கொண்டு இரும்பை உருவாக்கும் ஜெர்மனிக்கு சென்று சோதித்து இரும்பை உருவாக்கமுடியும் என்பதை நிருபித்தார்.

அதன் பின்புதான் பொதுத்துறை நிறுவனங்களாக தமிழகத்தில் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் மற்றும் திருச்சி பெல் நிறுவனம் உருவானது.

தமிழ் மொழிக்கான போராட்டத்தில்:

தற்போதைய சென்னை, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு உள்ளடக்கிய சென்னை ராஜதானி சட்டமன்றத்தில் பி. ஆர் உட்பட 63 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்தனர். சட்டமன்றத்தில் அவரவர் தாய் மொழியில் தான் பேச வேண்டும் முடிவு எடுத்து சட்டமன்றத்தில் முதலில் தமிழில் பேசியவர்கள் கம்யூனிஸ்ட்கள். அதோடு மட்டுமல்ல மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டு இன்றைய தமிழ்நாடு சென்னை மாகாணம் என்கிற பெயரில் இருந்தபோது அதை மாற்றி தமிழ் நாடு என்று பெயர் சூட்டவேண்டும் என்றும் அனைத்து தளத்திலும் தமிழை கொண்டு வந்து தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று நாடாளுமன்ற சட்டமன்றத்திற்குள்ளேயும்,வெளியேயும் போராடினார்.

மார்க்சிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்ட காலத்தில் தன்னுடைய ஊனமான காலைவைத்து கொண்டு காவல் துறையிடம் சிக்காமல் தலைறைவு வாழ்க்கையில் அவர் ஆற்றிய பணியை படிக்கிற போது வியப்பளிக்கிறது.

தீண்டாமை கொடுமைக்கு எதிராக:

காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ராஜாஜி அவர்களால் வர்ணாசிரம அடிப்படையிலான குலக்கல்வி சட்டத்தை கொண்டுவந்தபோது பிறப்பால் பிரமணரான பி. ஆர் கடுமையாக எதிர்த்து போராடினார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான போராட்டத்தில் முன்நின்று தாழ்த்தப்பட்ட மக்களை அணிதிரட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் சென்னை திருவல்லிக்கேனி பார்த்தசாரதி கோவிலிலும் ஆலய நுழைவு போராட்டம் நடத்தி அம்மக்களின் உரிமைகளை பெற்றுத்தந்தார். தன்னுடைய உழைப்பால் கோட்டை போன்ற மாளிகையை கட்டி எழுப்புகிற உழைக்கும் மக்கள் குடியிருக்க வீடு இல்லாமல் கோனி கட்டி வாழ்ந்து வருகிறான். நாட்டுக்கே உணவை உற்பத்தி செய்து கொடுக்கும் விவசாயி பட்டினியால் மடிந்து போகிறான் இப்படிப்பட்ட மோசமான ஏற்றத்தாழ்வை மாற்ற சமூக மாற்றம் அவசியம் என்றார். இந்தியாவில் புரட்சியின் எதிர்காலம் குறித்து எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு மார்க்சியத்தின் வெற்றிக்காக நாங்கள் பாடு படுகிறோம் நிச்சயமாக வெல்வோம் என்றார்.

1992 ம் ஆண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடந்த போது அம்மாநாட்டுக்கு வரவேற்பு குழு தலைவராக தோழர் பி. ஆர் இருந்தார் அப்போது அவரின் உடல்நிலை மிகவும் மோசடைந்து வந்தது அப்படி இருந்தும் மாநாட்டுக்கு வாழ்த்துச்செய்தியை அனுப்பினார். அதில் ஏகாதிபத்திய தலையீடாலும் காங்கிரஸ் கட்சியின் தவறான பொருளாதார கொள்கையாலும் நாடு மிகவும் சீர்கெட்டுள்ளது. இந்நிலையில்தான் இம்மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டுக்கு வருகை தந்துள்ள பிரதிநிதிகளை ஒவ்வொருவரையும் வரவேற்பதோடு ஏகாதிபத்திய தலையீட்டையும் காங்கிரஸ் கட்சியின் மக்கள் விரோத கொள்கையையும் இளைஞர்களாகிய நீங்கள் துணிந்து நின்று எதிர்ப்பதற்கு உறுதி எடுத்து கொள்ள வேண்டும் என்றார்.