(தோழர் தியாகு (சனவரி 30/1950) அவர்கள் தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத ஆளுமை ஆவார். பேச்சு, எழுத்து, போராட்டம், சிறைவாழ்வு, சித்திரவதை என்பதாக அவரது வாழ்வு நீள்கிறது. ஏற்கெனவே அவரது பேட்டிகள் காட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் ஆகியவற்றில் வந்துள்ளன. குறிப்பாக கீற்று இணைய தளத்தில் மூன்று பகுதிகளாக அவரது நேர்காணல் விரிவாக வந்துள்ளது. எனவே அவற்றில் இடம்பெற்றுள்ள கேள்விகளை இயன்ற அளவு தவிர்த்து, இந்தப் பேட்டி தொடர்கிறது.)
கண.குறிஞ்சி: முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்துதான் உங்கள் அரசியல் பயணம் தொடங்கி உள்ளது. அந்தப் பின்னணியில் கண்ணதாசன், ஜெயகாந்தன் மற்றும் ஈவெகி சம்பத் ஆகியோருடனான உங்கள் அரசியல் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள இயலுமா?
தோழர். தியாகு: 1960௦களின் தொடக்கத்தில் எங்கள் குடும்பம் திருவாரூரில் இருந்தது. திருவாரூர் கீழவீதியில் அவ்வப்போது நடக்கும் அரசியல் பொதுக்கூட்டங்களில்தான் என் அரசியல் கல்வி தொடங்கியது. பெரியார், குன்றக்குடி அடிகளார், அண்ணா, நாவலர், கலைஞர், ஜீவானந்தம் ஆகிய தலைவர்களின் உரையை அப்பாவின் தோளிலோ மிதிவண்டிப் பின்னிருக்கையிலோ அமர்ந்தபடி கேட்டு வளர்ந்தேன். எனக்கு வாய்த்த ஆசிரியர்கள் தொடக்கப் பள்ளியில் (“சின்னக்குத்தூசி யாக நாமறிந்துள்ள) தியாகராஜன், உயர்நிலைப் பள்ளியில் பி.சி. கணேசன், எப்போதும் எனக்கு வழிக்காவலும் முடிந்த வரை வகுப்பாசிரியருமான என் தகப்பனார்! ஏதோ ஒரு வகையில் என் அரசியல் அறிவுக் கூடையை இவர்கள் நிரப்பிக் கொண்டே இருந்தார்கள்.
1962 இந்திய-சீன எல்லைப் போரின் போது திருவாரூர் கீழவீதியில் அண்ணா ஆற்றிய உரையின் தாக்கத்தால்தான் மறுநாள் பள்ளியில் நடந்த கூட்டத்தில் பேசினேன். அதுவே என் முதல் மேடைப் பேச்சு!
திமுக-விலிருந்து பிரிந்து சென்ற ஈவெகி சம்பத், கண்ணதாசன் போன்ற தலைவர்கள் 1961இல் தமிழ்த் தேசியக் கட்சி தொடங்கினார்கள். தமிழ்நாட்டிலேயே திருவாரூரில் மட்டும்தான் இந்தக் கட்சி ஓரளவுக்கு வலுப்பெற்றுத் திமுகவுக்குப் போட்டியாக விளங்கியது போல் எனக்குத் தோன்றியது. திமுக படிப்பகம் என்றால் பக்கத்திலேயே ததேக படிப்பகமும் இருக்கும். தமிழ்த் தேசியக் கட்சியின் முதல் மாநில மாநாடு திருவாரூரில் நடந்தது. அதை முன்னிட்டு எங்கள் வீட்டருகே வலிவலம் தேசிகர் மாளிகையில்தான் சம்பத் முதலான தலைவர்கள் தங்கி யிருந்தார்கள். தலைமை ஆசிரியர் பி.சி. கணேசன், நூலகர் வைத்திலிங்கம் ஆகியோரின் நட்புக்காக அப்பாவும் அந்த மாநாட்டுக்கான விருந்தோம்பலில் துணைசெய்தார்கள். சம்பத், கண்ணதாசன் போன்ற தலைவர்களை அருகிலிருந்து பார்க்க அதுவே எனக்கு முதல் வாய்ப்பாயிற்று.
மாநாட்டு மேடையில் சம்பத், கண்ணதாசன் அமர்ந்திருக்க பாரதிதாசன் பேசினார் என்பது எனக்கு நினைவுள்ளது. பாவேந்தரை நான் பார்த்த முதலும் கடைசியுமான தருணம் அது.
1962 பொதுத் தேர்தலில் திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரசுக் கட்சியின் சார்பில் கோட்டூர் அம்பிகாபதியும் திமுக ஆதரவோடு சுதந்திரா கட்சியின் இளஞ்சிங்கமும் போட்டியிட்டார்கள். அம்பிகாபதியை ஆதரித்து நடக்கிற ஊர்வலங்களில் மற்றச் சிறுவர்களோடு நானும் கலந்து கொண்டு முழக்கம் போடுவேன்.
ஒருநாள் நான் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அது ஒரு மிதிவண்டி ஊர்வலம். சாரை சாரையாக நீண்டு நீண்டு சென்றது. பெரிய பெரிய செங்கொடிகள், அரிவாள் கதிர் விளம்பரப் பதாகைகள்! அதிரும் முழக்கங்கள்! எனக்கு வியப்போ வியப்பு! அப்பாவிடம் கேட்டேன். ஆமாம், ஆமாம். இதுதான் கம்யூனிஸ்டுக் கட்சி! இவ்வளவு பேர் எங்கிருந்து வந்தார்கள்? ஊரில் இவர்களை நான் பார்த்ததில்லையே! அப்பா சொன்னார்: சுத்து பட்ட கிராமங்கள்ல பள்ளு பறையெல்லாம் இந்தக் கட்சிலதாண்டா பெரிய தம்பி இருக்காங்க !
என் 12 வயதில் கம்யூனிஸ்டுக் கட்சி பற்றி ஒரு நல்வித்து மனத்தில் விழுந்த தருணம் அதுதான்! பள்ளு பறைக்கான கட்சி என்ற பெருமை! தீண்டாமை எனக்குத் தெரியும் என்பதால் ! தேர்தல் முடிவு வந்த போது அம்பிகாபதி வென்றார், இளஞ்சிங்கம் படுதோல்வி அடைந்தார்! இளஞ்சிங்கத்தைக் காட்டுக்குத் துரத்திய அம்பிகாபதி என்று வெற்றி ஊர்வலத்தில் முழக்கம் கொடுத்தேன். ஆனால் என் கவலை கம்யூனிஸ்டு வேட்பாளர் வடிவேல் என்ன ஆனார் என்பதாகவே இருந்தது. அவர் 2 அல்லது 3 ஆயிரம் வாக்கு வேறுபாட்டில்தான் தோற்றுப் போயிருந்தார்.
இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும். அந்த ஊர்வலத்தைப் பார்ப்பதற்கு முன்பே கீழவீதிப் பொதுக்கூட்டத்தில் ஜீவா உரை கேட்டுள்ளேன். 1962 தேர்தலுக்குப் பின் பாலதண்டாயுதம் பேசியும் கேட்டுள்ளேன். ஆனால் அந்த உரைகள் ஏன் என்னிடம் கம்யூனிஸ்டுக் கட்சி மீது மதிப்புண்டாக்க வில்லை என்று எண்ணிப் பார்க்கிறேன். அவர்கள் கம்யூனிஸ்டுக் கட்சியின் சிறப்பு பற்றிப் பேசுவதை விடவும் காங்கிரசின் பண்டித நேருவின் - புகழ்பாடுவதிலேயே குறியாக இருந்தார்கள். இரண்டாவதாக திமுகவைக் கடுமையாகத் தாக்கிப் பேசுவார்கள். காங்கிரசு எதிர்ப்பு தேவையாக இருந்த நேரத்தில் திமுக எதிர்ப்பை முதன்மைப்படுத்தியது என்ற பெரும்பிழையும் கம்யூனிஸ்டுக் கட்சி வளராமல் தேய்ந்து போனமைக்கு ஒரு காரணம் எனலாம்.
போகட்டும். 1964இல் உயர்நிலைப்பள்ளிப் படிப்பு முடிந்து வயது போதாமையால் கல்லூரியில் சேர முடியாத நிலையில்... வலங்கைமானுக்கு மாறி வந்து... தட்டச்சு பயிலப் போன இடத்தில் என் அறிவுத்தந்தையாக அமீர் ஜான் கிடைத்தார். என் வினாக்களுக்கெல்லாம் விடை, ஐயங்களுக்கெல்லாம் தெளிவு “ஜான் சார்'தான் எனக் கண்டேன். அவரால் நாத்திகன் ஆனேன், சாதி சமய மறுப்பாளன் ஆனேன், பொதுமைவிரும்பி ஆனேன். சிபிஎம் மீது ஒரு மரியாதை இருந்தது. ஆனால் 1967 பொதுத் தேர்தலில் சுதந்திராக் கட்சியோடு கூட்டுச் சேர்ந்ததில் கசந்து போய் விட்டது. ராஜாஜி மீது வெறுப்பு, காமராசரைப் பற்றிப் பெரிய மரியாதை இருந்தது. கல்விக் கண் திறந்தவர்! தந்தை பெரியார் இந்த மதிப்பைப் பெரிதும் வளர்த்து விட்டவர்.
1967 தேர்தல் காலம் குடந்தை கல்லூரியில் பட்டப்படிப்பு முதலாண்டு. அரசியல் ஆர்வம் படிப்பார்வத்தைப் பின்னுக்குத் தள்ளி விட்டது. குடந்தையில் காங்கிரசு-திராவிடர் கழக மாணவர்களுடன் சேர்ந்து தேர்தல் பரப்புரைக்குப் போக ஆரம்பித்தேன். ஒரு நாள் மாலை வலங்கைமானில் காங்கிரஸ் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் திடீரென்று என்னைப் பேசச் சொல்லி விட்டார்கள். மறுக்க முடியாத ஆசையுடன் பேசி விட்டேன். அதிலிருந்து தினமும் வரிசையாகக் கூட்டங்கள் பெரும்புள்ளிகள் அறிமுகம் வீட்டில் அப்பாவின் எதிர்ப்பு !
இப்படிப் பணக்காரப் பிற்போக்குக் கட்சியான காங்கிரசை ஆதரிப்பது சரிதானா? என்ற ஐயுறவு மட்டும் இருந்தது. அமீர் ஜானைக் கேட்டேன். அவர் விளக்கினார்: இதில் ஒன்றும் தவறில்லை, இன்றைக்கு கம்யூனிஸ்டுத் தலைவர்களாய் இருப்பவர்கள் எல்லாம் காங்கிரசில் இருந்தவர்கள்தாம். கிருஷ்ண மேனன் போன்றவர்கள் கதர் சுமந்து விற்றவர்கள். காங்கிரசு வெறும் கட்சியல்ல. அது பேரியக்கம். அதில் இருந்த படி நம் கொள்கைகளுக்காக நாம் போராடலாம்.
காமராசர், பெரியார் போன்றவர்களின் வழிகாட்டுதல் என்ற ஆறுதல் இருந்தது. என்ன தவறு இருந்தாலும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்பினேன். அவர்களை எதிர்க்கிற கட்சி என்பதால் திமுக மீது வெறுப்பு இருந்தது.
ஒரு முறை பெரியார் முன்னிலையிலேயே பேசச் சொன்னார்கள். ஆனால் அறிமுகம் ஆகவில்லை. காமராசர் ஏறத்தாழ வழிபாட்டுக்குரியவராக முன்னிறுத்தப்பட்டார். அவர் அப்போதெல்லாம் நெருங்க முடியாத தொலைவில் மிகுந்த உயரத்தில் இருந்தார். அவரோடு அறிமுகமாவது, பழகுவது என்ற நினைப்புக்கே இடமில்லை. அவர் அனைத்திந்திய காங்கிரசுத் தலைவர். நானோ ஒரு மாணவன், கட்சியில் ஒரு பிரசங்கி”! ஈவெகி சம்பத், கண்ணதாசன் எல்லாரும் தேர்தல் பரப்புரைக்கு வந்தார்கள். ஆனால் அது வரை அறிமுகம் இல்லை.
தேர்தல் முடிந்து திமுக ஆட்சி அமைந்த பிறகு என் அரசியல் ஈடுபாடு தீவிரமாயிற்று. காமராசர் புகழ் பாடுவதற்கு சொல்லின் செல்வர் ஈவெகி சம்பத் “ஆரோக்கிய அரசியல்” விளக்கங்கள் தருவார். தமிழக அரசியல் என்பது இருதுருவ அரசியலாகி விட்டது என்பார். ஒரு பக்கம் காமராஜ், மறு பக்கம் இராஜாஜி என்று புரிந்து கொள்ள வேண்டும். புத்தகங்களில் புழுக்களாக நுழைந்து விளையாடும் கம்யூனிஸ்டுகளுக்கு இது விளங்கவில்லையே” என்பார். கண்ணதாசன் எழுதிக் குவித்த கட்டுரைகளிலும் மடல்களிலும் பாக்களிலும் காமராசர் காவிய நாயகனாகப் போற்றப்பட்டார் - சிவகாமியின் புதல்வர், காலா காந்தி, கருப்பு வைரம், களத்திலே தருமர், சோசலிசக் கருமவீரர், கலைமகளின் தலைமகன், ஏழைப் பங்காளர், எளியோரின் தெய்வம்... சொல்லி மாளாது.
திமுகவுக்குப் போட்டியாக மாணவர்களைத் திரட்ட காமராசர் விரும்பினார். அதற்குத் தமிழ்ப் பற்றைக் கையிலெடுக்கத் திட்டமிட்டார். சென்னை சட்டக் கல்லூரி மாணவராக இருந்த தஞ்சை அ. இராமமூர்த்தியை அமைப்பாளராகக் கொண்டு தேசிய மாணவர் தமிழ் வளர்ச்சிக் குழு என்ற அமைப்பை நிறுவச் செய்தார். இடதுசாரிகளாக அறியப்பட்ட வாழப்பாடி கூ. இராமமூர்த்தி, பசுபதி தனராஜ், தண்டாயுதபாணி, திருமாறன் போன்றவர்களும் துணைநின்றார்கள். இந்த அமைப்பின் முதல் மாநில மாநாடு சென்னை தேனாம்பேட்டை காங்கிரசு திடலில் நடைபெற்றது. அதற்காகவே நான் முதன்முதலாகச் சென்னை வந்து, சத்தியமூர்த்தி பவனில் சில நாள் தங்கினேன். அரசியலில் முனைப்பாக இருந்த இடது சிந்தனை கொண்ட மாணவர்களோடு உரையாட முடிந்தது. ஏற்கெனவே அமீர் ஜான் தமிழ்வழிக் கல்வி பற்றி எனக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தியிருந்தார். அது பற்றி எவரோடும் விவாதிப்பேன். ஆட்சி மொழியைப் பொறுத்த வரை மும்மொழிக் கொள்கையில் நம்பிக்கை வைத்திருந்தேன். மாநாட்டில் மாலை கூட்டம் நிரம்பி வழிந்த நேரத்தில் நான் பேசினேன். மேடையில் காமராசர், சம்பத், கண்ணதாசன், தமிழ்வாணன், ஜெயகாந்தன், பாலதண்டாயுதம் அனைவரும் இருந்தனர். “win இந்தப் பையன்? என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தனர். தமிழ்வழிக் கல்வியையும் மொழிக் கொள்கையில் இந்தியத் தேசியப் பார்வையையும் வலியுறுத்திப் பேசினேன். மேடையில் தமிழ்த் தாய் சிலை வைக்கப்பட்டிருந்தது. நான் பகுத்தறிவுக்கு முரணான மொழி வழிபாட்டை எதிர்த்துப் பேசினேன். நான் பேசப் பேச கூட்டத்தில் ஒரு கனத்த அமைதி கவிந்தது. பேசி முடித்து வெளியே வந்து கொண்டிருந்த போது பாலதண்டாயுதம் கைகுலுக்கினார். “துணிச்சலான பேச்சு” என்றார். “நன்றி! துணிச்சல் இருக்கட்டும். சரியா? சொல்லுங்கள்” என்றேன்.
இந்த மேடைதான் ஒருங்கே எல்லாத் தலைவர்களுக்கும் என்னை அறியத் தந்தது. அதன் பிறகு மாவட்டம் தோறும் நடந்த மாணவர் மாநாடுகளில் என்னை விரும்பியழைத்துப் பேசச் செய்தனர். சேலம் மாநாட்டில் பிற்பகலில் அப்போதைய தலைமையமைச்சர் இந்திரா காந்தியிடமிருந்து வந்த அழைப்புக்காக அனைத்திந்திய காங்கிரசுத் தலைவர் காமராசர் உடனே சென்னை புறப்பட வேண்டியிருந்தது. அப்போது அவர் என்னை மட்டும் அழைத்துப் பேசச் சொல்லி, “நண்பர் தியாகு கேட்டதையே திமுக ஆட்சியைப் பார்த்து நானும் கேட்க விரும்புகிறேன்” என்று பேசி விட்டுப் புறப்பட்டார்.
சிதம்பரம் மாநாட்டின் போது உணவு இடைவேளையில் என்னோடு பேச நேரிட்ட போது காமராசர் சிரித்துக் கொண்டே “சாஸ்திரி” என்றழைத்தார். நான் திகைத்துப் போய்ப் பார்த்த போது அவர் “வலங்கைமான்தானேங்கறேன் , சீனிவாச சாஸ்திரி ஊராச்சே?” என்று சொல்லிச் சிரித்தார்.
பழ. நெடுமாறன் முன்னின்று ஒழுங்கு செய்த மதுரை மாநாட்டில் மொழித் திணிப்புக்கும் இந்தியப் பெருமுதலியத்தின் சந்தைத் தேவைக்குமான தொடர்பு பற்றிப் பேசினேன். நான் பேசி முடித்த போது கண்ணதாசன் எழுந்து வந்து “உங்கள் பேச்சைப் பெரியவர் (காமராஜர்) ரசித்துக் கேட்டார்” என்றார்.
அந்த மாநாட்டில் ஜெயகாந்தனும் பேசினார் மதுரை முத்துவுக்கு சவால் விடும் முரட்டுப் பேச்சு!
ஜெயகாந்தன் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். ஆனால் நெருங்கிப் பழகவில்லை. நோக்கமா? வழிமுறையா? போன்ற தத்துவக் கேள்விகள் இருந்தால் அவரிடம் கேட்பேன். நறுக்கென்று விடை சொல்வார். ஜெயபேரிகை ஏட்டில் அவர் எழுதுவதையெல்லாம் விடாமல் படித்து விடுவேன். கண்ணதாசன் என்ற இலக்கிய மாத இதழில் ஜெயகாந்தன் சினிமாவுக்குப் போன சித்தாளு என்ற பெயரில் கதை எழுதினார். இந்த இதழில் கண்ணதாசன் எழுதிய சில கவிதை வரிகளை இப்போதும் நினைவுகூர்வதுண்டு:
“ஆலை அரசுகள் சோலை மிராசுகள்
பாலில் மிதந்தது போதும் - இங்கு
வேலை இழந்தவர் வீதி முனைகளில்
கூழுக்கலைவதைப் பாரும் அவர்
கூட்டத்தை ஓரணி சேரும்.”
அது ஒரு நீண்ட கவிதை. அதன் தலைப்பு: நான் ஒரு நக்சலைட்டு. கேரளத்தில் புல்பள்ளி காவல் நிலையம் தாக்கப்பட்டு அஜிதா கைது செய்யப்பட்ட நேரம். அது பற்றியும் அஜிதாவைப் போற்றிக் கண்ணதாசன் எழுதினார்.
மதுரை முத்து இல்லத் திருமணத்துக்கு வந்த நாவலருக்கும் கலைஞருக்கும் எதிராக நெடுமாறன் தலைமையில் இளைஞர் காங்கிரசு சார்பில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் நெடுமாறனும் மற்றவர்களும் தளைப்படுத்தப்பட்டார்கள். கைதின் போது காங்கிரசு இளைஞர்கள் கழற்றி வைத்த மைனர் செயின் முதலானவற்றின் மதிப்பை நவசக்தி நாளேடு பெருமையுடன் வெளியிட்டது.
நெடுமாறன் பிணையில் வர மறுத்து விட்டார். தம்மைச் சிறையிலடைத்த நீதிபதியைக் கண்டித்துக் கூட்டம் நடத்தும் படி சொல்லியனுப்பினார். ஆனால் அப்போது மாநில இளைஞர் காங்கிரசு அமைப்பாளராக இருந்த குமரி அனந்தன் தயக்கம் காட்டினார். நாங்கள் மாணவர் காங்கிரசு சார்பில் நெடுமாறன் சொன்னபடி பொதுக்கூட்டம் நடத்தினோம். கூ.ரா. (வாழப்பாடி இரமமூர்த்தி) பேசினார். மறுநாள் தங்கம் திரையரங்கில் பொதுக்கூட்டத்துக்கு கண்ணதாசன் வந்து விட்டார். நான் அவரை காலேஜ் அவுஸ் அறையில் பார்த்து அது வரை நடந்திருப்பதை விளக்கினேன். அரங்கக் கூட்டத்தில் குமரி அனந்தனும் பேசினார். அவரை மறைமுகமாகக் குறை சொல்வது போல் நான் பேசினேன். கண்ணதாசன் இறுதியாகப் பேசினார். அப்படி ஒரு சொற்பெருக்கை அதுவரை நான் கேட்டதில்லை. காவல் துறை, நீதித் துறை எதையும் விட்டு வைக்கமல் சாடித் தீர்த்தார். எப்போதுமே காவல்துறையைக் கிழிப்பதென்றால் எனக்கு மகிழ்ச்சிதான் !
1969 காங்கிரஸ் பிளவுக்கு முன்னந்திப் போது. காமராசருக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுத்த பொள்ளாச்சி மகாலிங்கம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சத்தியமூர்த்தி பவன் வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்த மாணவர்கள் கூடியிருந்தோம். கண்ணதாசனும் எங்களோடு சேர்ந்து கொண்டார். உள்ளே செயற்குழு கூடியிருந்த போது வெளியே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். வைரக் கடுக்கண், உச்சிக் குடுமி... இப்படிப்பட்ட ஆட்களைத் தலைமையில் வைத்துக் கொண்டா சோசலிசம் கொண்டுவரப் போகிறார் நம் தலைவர்? என்று கேட்டு கண்ணதாசன் உரையாடலைத் தொடங்கினார்.
அடுத்து நடக்கவிருந்த பரிதாபாத் காங்கிரசு பற்றிய பேச்சு வந்தது. கண்ணதாசன் அப்போது அனைத்திந்தியக் காங்கிரசு கமிட்டி உறுப்பினர். இந்திரா காந்தியின் பத்து அம்சத் திட்டம் பற்றிச் சொன்னவர் காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் அணிசேர வேண்டும் என்று பரிதாபாத் கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப் போகிறேன் என்றார். அவர்கள் இதை ஏற்க வேண்டுமே? என்றேன். ஏற்கவில்லை என்றால் அவர்கள் anti-national என்று தெரிந்து விடும் என்றார். Anti-congress என்பதும் anti-national என்பதும் ஒன்றா? எனக் கேட்டேன். இல்லை, போகிற போக்கைப் பார்த்தால் anti-congressSMest pro-national2_.b றர௦-௦றஜாeதான் anti-nationalo_ib ஆகி விடும் போல் உள்ளது என்று சொல்லிச் சிரித்தார்.
கண்ணதாசன் இப்படிச் சிந்தனையைத் தாறுமாறாகக் கிளறி விட்டுக் கொண்டிருக்க, என்னைப் போன்றவர்களை அலைக்கழித்த முரண்பட்ட போக்குகளுக்கு நடுவில் சம்பத் நம்பிக்கையூட்டிக் கொண்டிருந்தார். அவரைத் தமிழ்நாடு காங்கிரசுத் தலைவராக்க வேண்டும் என்பது எங்கள் வேணவா. கருப்பையா மூப்பனாரோ ”என்னைத் தலைவராக்க ஆதரவு தருவீர்களா?” என்று சம்பத்திடமே கேட்டுச் சிரித்துக் கொண்டிருந்தார்.
திருவரங்கம் அம்மாத் தோப்பில் ஒரு வார காலம் மாணவர்களுக்கான சோசலிசப் பயிற்சி முகாம் நடந்தது. செவிக்கும் சிந்தைக்கும் வயிற்றுக்கும் தடபுடல் விருந்து! காமராசர் முன்னிலை வகித்தார். பெரும்பாலான நிகழ்வுகளில் சம்பத் உடனிருந்தார். இளந்துருக்கர் சந்திரசேகர், விகே கிருஷ்ண மேனன், மோகன் தாரியா, விகேஆர்வி ராவு உள்ளிட்ட பெரிய பெரிய ஆட்கள் ஒவ்வொரு நாளும் வந்து சோசலிசம் பற்றி உரையாற்றினார்கள். அசோக மேத்தா திண்டில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு இந்தியத் தாயின் கருப்பையை அமெரிக்க முதலீட்டுக்குத் திறந்து விட வேண்டும் என்று பேசிய போது வன்மையாக எதிர்ப்புத் தெரிவித்தோம். அசோக மேத்தா ”கப்பிடலிசம் காலாவதியாகி விட்டது” என்று கூறியதோடு நில்லாமல் சோசலிசமும் காலாவதியாகி விட்டது என்ற போது மீண்டும் கொதித்தோம். அப்போது சம்பத் குறுக்கிட்டு ”கப்பிடலிசத்தை அடைந்து விட்டோம், அது காலாவதியாகி விட்டது, ஆனால் நாம் இன்னும் சோசலிசத்தை அடையவே இல்லை என்பதால் அது காலாவதியானதாகச் சொல்ல முடியாது” என்று விளக்கமளித்து எங்களை ஆற்றுப்படுத்தினார்.
சோசலிசப் பயிற்சி முகாமில் சந்திரசேகரோடு நீண்ட நேரம் உரையாடினேன். நிறையக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். ஏகபோகங்கள் பற்றிய மகலனோபிஸ் குழு அறிக்கையில் இடம்பெற்ற தரவுகள் அவரிடமிருந்து எனக்குக் கிடைத்தன. இந்திய ஏகபோக முதலாளிகளின் சொத்து விவரம், முன்னாள் மன்னர்களுக்குக் கிடைத்து வரும் சலுகைகள், (ராஜ மானியங்கள்) குறித்தெல்லாம் அவர் தந்த ஆவணங்களைப் படித்துதான் “பத்து அம்சத் திட்டம்” என்ற குறுநூல் எழுதி வெளியிட்டேன். அதுதான் நான் எழுதிய முதல் நூல். எழுதுவதற்கு குடந்தை சிபிஎம் தோழர்கள் அறிவுரைகள் தந்துதவினார்கள். தாராசுரம் சோமு செட்டியார் அச்சிட்டுக் கொடுத்தார். தஞ்சை சோசலிசக் கருத்தரங்கில் டாக்டர் கோபி வெளியிட தஞ்சை அ. இராமமூர்த்தி பெற்றுக் கொண்டார். இந்த வெளியீடு கட்சிக்குள் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. பெரியவர் (காமராசர்) தலையிட்டு “நண்பர் தியாகு சொல்வதில் தவறில்லை” என்று முடித்து விட்டார். ஆனால் அப்போதே எனக்கு நக்சலைட்” பட்டம் வந்து விட்டது.
தஞ்சை சோசலிசக் கருத்தரங்கில் சி. சுப்ரமணியம் முன்மொழிந்த பசுமைப் புரட்சி' ஆய்வுரை மீது இடதுசாரி மாணவர்கள் முடிவெடுத்த படி நான் கேள்விகள் எழுப்பி, நில உச்சவரம்புச் சட்டங்களை நிலக்கிழார்கள் ஏய்த்துக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, அவர் மீதே குற்றஞ்சுமத்தப் போய், அது அவருக்கும் மாணவர்களுக்கும் இடையே சூடான வாக்குவாதமாக மாறிய போது சி.சு. கோபித்துக் கொண்டு வெளியேறினார். சம்பத் அவரைச் சமாதானப்படுத்த முயன்ற போது “நீங்கள் என்னைத் திட்டமிட்டே அவமதிக்கின்றீர்கள்” என்று கத்தி விட்டுப் போய் விட்டார்.
சம்பத் முதன்மைப் பேச்சாளராகவும் நான், என் மாணவ நண்பர் (வேறு) சம்பத், ஹக்கீம் ஆகியோரில் ஒருவர் அல்லது இருவர் துணைப் பேச்சாளராகவும் கலந்து கொண்டு பேசிய கூட்டங்கள் பல. ஒரு முறை அரியலூர் ஒற்றுமைத் திடலில் உள்ளூர் திமுகவினரின் கடுமையான வன்மிரட்டலை மீறி நடந்த பொதுக் கூட்டத்தில் நாங்கள் பேசி முடித்து இரவு விருந்துக்கு அமர்ந்த போது நான் மரக் கறி உணவு கேட்டேன். யார் அந்த வீரசைவர்? என்று சம்பத் கேட்டார். அமீர் ஜான் வழியில் நான் புலால் மறுப்பைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்துக் கொண்டிருந்த காலம். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இந்தக் கொள்கை சரிப்படாது என்பதைப் பல முறை எனக்கு எடுத்துக் கூறி நான் மாறுவதற்குத் தூண்டுதலாக இருந்தவர் சம்பத். நான் காங்கிரசு மீது அறவே நம்பிக்கை இழந்த பின் கடைசியாக சாலியமங்கலம் அம்மாப்பேட்டையில் சம்பத்துடன் ஒரு பொதுக் கூட்டம் பேசினேன். அதன் பிறகு அவருடன் எவ்விதத் தொடர்பும் இல்லை.
சிறையில் 1972-73 வாக்கில் தோழர் ஏஜிகே (அ.கோ. கஸ்தூரிரெங்கன்) தூக்குக் கொட்டடியில் இருந்த போது அவரைத் தூக்கிலிடுவதற்கு எதிராகப் பெரியார் அறிக்கை வெளியிட்டார். ஈவெகி சம்பத்தும் அறிக்கை வெளியிட்டார். எம் கல்யாணசுந்தரம் உட்படப் பலரும் முயற்சி எடுத்தனர். எதற்கும் அன்றைய மாநில அரசு செவிசாய்க்கவில்லை.
காங்கிரசைக் கைகழுவி விட்டு செவ்வியக்கத்துக்கு வந்த பின் கண்ணதாசனை மறந்தே போனேன். சிறைப்பட்ட பின் நீதிமன்றப் புறக்கணிப்பின் போது கூண்டில் நின்று பாடுவதற்காகத் திரை யிசையில் பாடல்கள் எழுதலானேன். அப்போது கண்ணதாசனின் பாடல்களே பெரிதும் கைகொடுத்தன. ஒவ்வொரு விசாரணை நாளிலும் முதலில் “கோர்ட்டு என்ன கோர்ட்டு” பாடுவோம் “மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்” பாட்டின் இசைக்கு எழுதிய பாடல் அது. தஞ்சாவூர் மாவட்ட அமர்வு நீதியர் குப்பண்ணன் அதற்கு 'பிரேயர்” என்று பெயர் கொடுத்திருந்தார். இப்படிப் பல பாடல்கள். வாலி எழுதிய “காதுகொடுத்துக் கேட்டேன் ஆகா குவா குவா சத்தம்” என்ற இசைக்கு நான் எழுதிய “வோட்டுக் கேட்டு ஜெயித்தேன் அது போட்டவர்கள் குற்றம்” என்ற பாட்டு வெளியிலும் பரவி மேடைகளில் பாடப்பட்டதாக அறிந்தோம்.
சிறை வாழ்க்கையில் கண்ணதாசனைப் பார்க்கும் வாய்ப்பு ஒரே ஒரு முறை வந்தது. 1980-81இல் நான் சென்னை மத்தியச் சிறையில் தனித் தொகுதியில் இருந்தேன். சிறைக்கைதிகள் அனைவருக்கும் சிறப்பு உணவு வழங்குவதற்காகக் கவிஞர் வரப்போவதாகச் சொன்னார்கள். எங்கள் பகுதிக்கு வரும் போது பார்க்கலாம் என்றிருந்தேன். ஆனால் சிறை நிர்வாகம் எப்படியோ அவர் என்னைப் பார்க்க விடாமல் செய்து விட்டது. நானும் அது பற்றிக் கவலைப்படவில்லை. அடுத்த சில மாதங்களில் அமெரிக்கா சென்ற கவிஞர் உயிருடன் திரும்பவே இல்லை.
சிறையிலிருந்து விடுதலை ஆகி வந்த பின் சில நிகழ்ச்சிகளில் ஜெயகாந்தனைப் பார்த்தேன். தஞ்சாவூரில் குன்றக்குடி அடிகளார் தலைமையிலான ஒரு கருத்தரங்க மேடையில் கருத்து மோதல் ஏற்பட்டதும் உண்டு. ஆனால் பழைய பழக்கத்தை இருவருமே நினைவுபடுத்திக் கொள்ளவில்லை.
சம்பத், கண்ணதாசன், ஜெயகாந்தன்... இவர்கள் பேச்சிலும் எழுத்திலும் பேராளுமைகள் என்பதில் மறுப்புக்கு இடமில்லை. ஆனால் இவர்களிடமிருந்து நான் கற்றதாகச் சொல்வதற்குப் பெரிதாக எதுவும் இல்லை. ஒருசிலவற்றில் இவர்களை எதிர்நிறை ஆசான்களாகவே கருத வேண்டும். இறுதி நோக்கில்... இவர்களிடம் நிலையான, உறுதியான கொள்கை இல்லை; அரசியலில் தங்களைத் தாங்களே மையப்படுத்திக் கொண்டு விளம்பர மயக்கத்தில் மனம்போன போக்கில் இயங்கியவர்களை வெறும் திறமைகளுக்காக இளைஞர்களுக்குப் பரிந்துரை செய்யலாகாது என்றுதான் கருதுகிறேன்.
தொடர்ந்து சாரு மசூம்தாரின் அழித்தொழிப்புக் கோட்பாட்டில் ஈர்க்கப்பட்டு அதில் செயல்படத் தொடங்கி உள்ளீர்கள். சாரு மசூம்தாரை நீங்கள் நேரில் சந்தித்தீர்களா? விவாதித்தீர்களா? அது குறித்த செய்திகளைப் பதிவிடவும்.
இந்திய நாட்டின் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும்” என்ற தலைப்பில் லிபரேசன் ஏட்டில் வெளிவந்த சாரு மசூம்தாரின் எழுச்சியுரையால் ஈர்க்கப்பட்டு, இல்லமும் கல்வியும் துறந்து இயக்கத்துக்கு வந்த முதல் தமிழ்நாட்டு மாணவன் நான். 1969 செப்டெம்பரில் வீட்டுச் சிறையிலிருந்து தப்பி, இயக்கப் பணிக்காக பெரும்பண்ணையூர் சேரி வந்து சேர்ந்த சில நாளில் திருச்சிராப்பள்ளியில் பெல் குடியிருப்புக்கு ஒரு தோழரைப் பார்க்கவென்று என்னை அனுப்பி வைத்தனர். அந்தத் தோழர்தான் சாரு மசூம்தார் என்று அங்கு போன பிறகுதான் தெரிந்தது. மெலிந்து சிவந்த தோற்றம், கூரிய நாசி, பரபரப்பாகக் காணப்பட்டார். அகவை 50 இருக்கலாம்.
அவரிடம் என்னைப் பற்றிச் சொல்லியிருந்தார்கள். அருகில் உட்கார வைத்து முதுகில் தட்டிக் கொடுத்துப் பாராட்டினார். இந்தியாவெங்கும், குறிப்பாக வங்காளத்திலும் ஆந்திரத்தில் சிறிகாகுளத்திலும் கொழுந்து விட்டெரியும் ஆய்தப் போராட்டம் பற்றிப் பெருமையாக எடுத்துச் சொன்னார். வசந்தத்தின் இடி முழக்கம், வங்கக் கடல் அலைகளில் பற்றியெரியும் தீ, சிறிகாகுளம் மலைகளில் மோதி எதிரொலிக்கும் வேட்டோசை, பீர்பூம் சமவெளிகளில் அணிவகுக்கும் செஞ்சேனை... என்றெல்லாம் அவரது பேச்சிலும் எழுத்திலும் மிளிர்ந்த அணிநயத்தால் ஈர்க்கப்பட்டவன் ஆயிற்றே! இதோ நேரில் அவர் பேசப்பேச இமைகொட்டாமல் வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருந்தேன்.
அன்றைய தினமணி நாளிதழில் இடம்பெற்ற முதன்மைச் செய்திகளைப் படித்து ஆங்கிலத்தில் சொல்லச் சொல்லி ஆர்வமாகக் கேட்டறிந்தார் சாரு. இடையிலேயே வெள்ளைத் தாளில் புகையிலைத் தூளை வைத்து மெல்லச் சுருட்டிப் புகைத்துக் கொண்டார். இதோ ஒரு நல்ல செய்தி என்று, விசாகபட்டினம் மத்திய சிறையிலிருந்து 11 நக்சல் கைதிகள் தப்பிச் சென்ற செய்தியை நான் படித்துக் காட்டிய போது துள்ளி எழுந்து என் தொடையில் தட்டி மகிழ்ந்தார். என்ன நடந்திருக்கும் என்பதை எனக்கு விளக்கிச் சொன்னார்.-
விசாகபட்டினம் சிறையில் ஏராளமான சிறிகாகுளம் தோழர்களை அடைத்து வைத்திருந்தனர். அவர்களில் முக்கியமானவர்களை ஏதாவது சாக்கிட்டு வெளியே அழைத்துப் போய் மலைக் காட்டில் 'மோதல்-கொலை” செய்வதைக் காவல் படை வழக்கமாகக் கொண்டிருந்தது. அடுத்த நாளுக்குரிய பட்டியலில் இருந்த 11 தோழர்களையும் காவலர்களே தப்பச் செய்திருக்க வேண்டும். சிறிகாகுளம் மாவட்டத்துக்குள் நுழையா விட்டால் அவர்களைப் பிடித்து விடுவோம் என்று ஆந்திரக் காவல்துறைத் தலைமை அதிகாரி (ஐஜி) சொல்லி யிருந்தார். அப்படியானால் சிறிகாகுளம் செந்தளமாகி விட்டதா? எப்படியானாலும் அவர்களைப் பிடிக்க முடியாது என்று சாரு நம்பிக்கையோடு சொன்னார். ஆந்திரத் தோழர்களின் போராட்டத்துக்குத் துணைநிற்க வேண்டும் என்றார்.
அன்று மாலை வரை நான் சாருவுடன் இருந்தேன். தலைவர் சாருவை நான் பார்த்த ஒரே தருணம் அதுதான். ஆனால் தமிழ்நாட்டில் சாரு வந்து போன செய்தியைப் பல இடங்களிலும் சொல்லக் கேட்டுள்ளேன். நான் சந்தித்த மறுநாள் அவர் சென்னையிலிருந்தார். விசாகப்பட்டினம் சிறையிலிருந்து தப்பிய தோழர்கள் சென்னையில் அவரை சந்தித்து விட்டுச் சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம் சென்று ஆந்திரத்துக்கு வண்டியேறினார்களாம்.
வர்க்கப் பகைவரை அழித்தொழிப்பது மட்டுமே போராட்ட வடிவம் என்ற கருத்தில் சாரு மசூம்தார் எவ்வளவு உறுதியாக இருந்தார் என்பது பற்றித் தோழர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். “பகைவனின் குருதியில் கைநனைப்பவனே உண்மையான கம்யூனிஸ்டு” என்பது அவரது முழக்கங்களில் ஒன்று. தலைஞாயிறு பகுதியில் சிபிஐ, சிபிஎம், திமுக போன்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மொத்தமாக விலகி வந்து தீவிர கம்யூனிஸ்ட் என்ற பெயரில் இயக்கம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு தோழர் ஏஎம்கே வழிகாட்டிக் கொண்டிருந்தார். அறுவடையைக் கைப்பற்றும் இயக்கமும் பெரிய அளவில் நடத்தப்பட்டது. ”'தென்னிந்தியாவின் நக்சல்பாரி” என்று இந்து ஏடு செய்திக் கட்டுரை வெளியிட்டது. முக்கியத் தலைவர்கள் தளைப்படுத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
சாரு மசூம்தார் நேரில் வந்தார். தலைவர்கள் வழக்கு நடத்தாமல் தலமைறைவாகி அழித்தொழிப்புப் போராட்டம் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினாராம். அவர்கள் யாரும் அதை ஏற்கவில்லை. சாரு அழித்தொழிப்புச் செயல் செய்ய அணியமான ஒரு குழுவைக் கூட்டச் சொன்னாராம். அவர்களிடம் அழித்தொழிக்கப்பட வேண்டிய பகைவர்களைப் பட்டியலிடச் சொல்லி, அவர்களில் ஆக மோசமான பகைவரை உடனடியாக (”நான் இரயிலேறுவதற்குள்”') அழித்தொழிக்க அறிவுறுத்தி விட்டுப் புறப்பட்டாராம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
அந்தக் குழுவினரைத் தொடர்ந்து இயக்கி அழித்தொழிப்புக்குக் கொண்டு செல்லும் பொறுப்பைத் தலைமை என்னிடம் ஒப்படைத்தது. அந்தப் பகுதிக்குப் பல முறை சென்று வந்தேன். அந்தத் தோழர்களைத் தேடிச் சென்று பார்த்தேன். ஆனால் யாரையும் அந்தச் செயலுக்கு அணியமாக்க முடியவில்லை. ”தலைபோகிற காரியம் என்பார்கள், இது தலை எடுக்கிற காரியமாயிற்றே” என்று தோழர் ஏஎம்கே ஆறுதல் சொன்னார். வேறோர் அழித்தொழிப்பை முடித்து விட்டு மீண்டும் அந்தப் பகுதிக்குச் செல்லத் திட்டமிட்டேன். அது நடவாமலே போய் விட்டது.
1972-73இல் சிறையில் தூக்குக் கொட்டடியில் எங்களுக்குள் தீவிராமான அரசியல், கருத்தியல் விவாதம் நடைபெற்ற போது மீண்டும் ஒரு முறை சாரு மசூம்தாரின் தலை உருண்டது எனலாம். சாரு தலைமறைவாக இருந்தபடி ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் சீனப் புரட்சியின் வழியில் இந்தியப் புரட்சி எனும் கருத்தை வலியுறுத்தியிருந்தார். “சீனத்தில் நடந்தது போல் இந்தியாவிலும் நீண்ட பயணம் நடக்குமா?” என்ற வினாவிற்கு “நடக்கும், சிறிகாகுளத்திலிருந்து பீர்பூம் வரை நடக்கும்” என்று விடையளித்திருந்தார். நடக்காது என்று நான் அழுத்தமாகச் சொன்ன போது தோழர்கள் அதிர்ந்து போனார்கள். என்ன, சாரு சொல்வது தவறா?
சீன நிலைமைக்கும் இந்திய நிலைமைக்குமான ஒரு முக்கிய வேறுபாட்டைச் சுட்டிக்காட்டினேன். சீனம் முழுவதும் மிகப் பெரும்பாலும் ஒரே மொழி பேசும் ஒரே 'ஹான்' இன மக்கள். தெற்கே காண்டன் தொடங்கி வடக்கே யேனான் வரை படைப் பயணம் செல்வதில் மொழி தடையாகாது. ஆனால் சிறிகாகுளத்தில் புறப்படுகிற பயணம் வரங்கல் வரைதான் செல்ல முடியும். அது வரை தெலுங்கு பேசும் மக்கள். தாண்டினால் வேறு மொழிக்காரர்கள். மொழிபெயர்ப்பாளர்களை உடனழைத்துப் போய் இயக்கம் நடத்த முடியாது. இந்தியாவின் பன்மொழி, பல்தேசிய இன இயைபைக் கணக்கில் கொள்ளாமல் சீனப் பாதையில் புரட்சி செய்வது எப்படி?
சாரு மசூம்தாரின் பிழைகளுக்கு ஒரு முக்கியக் காரணம் சீனப் புரட்சியைப் பார்த்தொழுகும் ஆசைதான் என்று பிற்காலத்தில் நான் முடிவுக்கு வந்தேன். இந்தியச் சமூகப் பகுப்பாய்வு, இந்தியப் பெருமுதலாளர்களின் தன்மை, இந்திய அரசின் குணம், இந்தியப் புரட்சியின் கட்டம்... என்று ஒவ்வொன்றிலுமே சாருவின் பார்வை இப்படித்தான் இருந்தது.
முடிவாக, தோழர் சாரு மசூம்தார் ஒரு கலகக்காரர். இந்தியப் பிற்போக்குக்கு எதிராக மட்டுமன்று, திருத்தல்வாதத்துக்கும் எதிராகக் கலகம் செய்தவர். ஆனால் எல்லாக் கலகங்களும் புரட்சி ஆவதில்லை. நக்சல் இயக்கத்தின் பொன் விழாவை முன்னிட்டு எழுதிய கட்டுரைக்கு “புரட்சியாக மலரத் தவறிய கலகம்” என்று தலைப்புக் கொடுத்திருந்தேன். சாரு பற்றிய ஒரு கட்டுரைக்கு “அழித்தொழிக்க முடியாத நினைவுகள்" என்று தலைப்பிட்டேன். அழித்தொழிப்பு என்ற ஒற்றைப் போராட்ட வடிவத்தில் அவருக்கிருந்த பிடிவாதமான பிடிப்பால் இயக்கத்துக்கு ஏற்பட்ட பெருஞ்சேதம் பற்றிய நினைவுகளும் அழித்தொழிக்க முடியாதவையே.
மார்க்சிய - இலெனினிய இயக்கத்தில் தமிழகத்தில் முக்கிய ஆளுமையாக விளங்கியவர்கள் யார் யார்? குறிப்பாக ஏ.எம். கோதண்டராமன் அவர்களைப் பற்றிய உங்களது அனுபவங்களைக் குறிப்பிடவும்.
நான் இயக்கத்துக்கு வந்த 1969 பிற்பகுதியில் ஐம்பெரும் தலைவர்கள் இருந்தார்கள்: தோழர்கள் (1) எல். அப்பு; (2) ஏ.எம். கோதண்டராமன்; (3) புலவர் கலியபெருமாள்; (4) பி.வி. சீனிவாசன்; (5) ஆர். மாணிக்கம். இவர்களைக் கொண்டதுதான் மாநிலக் குழு. அப்பு, ஏஎம்கே இருவரும்தான் எங்களுக்கு வழிகாட்டிகள். நான் ஏஎம்கே அவர்களுடன் சேர்ந்துதான் வேலை செய்தேன். அறிவு, உழைப்பு, ஈகம், கட்டுப்பாடு ஒவ்வொன்றிலும் அவருக்கு நிகர் சொல்ல முடியாது. என்னிடம் அடிக்கடி initiative (முன்முயற்சி) வேண்டும் என்று வலியுறுத்துவார். அவரே அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. எங்கே தூக்கி வீசினாலும் பத்துப் பேரைச் சேர்த்து அமைப்பைக் கட்டிக் கொண்டு வந்து விடுவார். இத்தனைக்கும் அவர் யாரென்று தெரியாமலே அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டு விடுவார்கள். பெரியவர் என்று அன்புடனும் மதிப்புடனும் குறிப்பிடுவார்கள். இளைஞராகச் சென்னையில் தொழிற்சங்க இயக்கம் கட்டியதில் அவரது அமைப்புத் திறமும் தலைமைப் பண்பும் மிளிர்ந்தன. அந்த இயக்கத்தை அப்படியே விட்டுவிட்டுப் புரட்சி செய்யக் கிராமத்துக்கு வந்து விட்டார். திரும்பிப் பார்க்கும் போது அது சரியான முடிவன்று என்பதே என் பார்வை. புறநிலையில் முதிர்ச்சியடையாத ஒரு புரட்சியை அகநிலை முடிவுகள் சார்ந்து எப்படியேனும் வரவழைக்கும் முயற்சி ஏஎம்கே போன்ற ஒருவருக்கே பாறையில் தலையை முட்டிக் கொள்வதாகத்தான் அமைந்தது.
சிறை வாழ்க்கையில் அநீதிக்கும் கொடுமைக்கும் எதிரான போராட்டத்தில் உதிரிப் பாட்டாளிகள் என்று சொல்லும்படியான கைதிகளைத் திரட்டிப் போராடியதில் அவர் முத்திரை பதித்தார். கடலூர், சென்னை சிறைகளில் சிறைப்படுத்தப்பட்டோரைத் திரட்டிப் போராடியதில் அவர் வகித்த பங்கு குறித்து முன்பே எழுதியுள்ளேன்.
திருச்சி சிறையில் ஏஎம்கே அவர்களுடன் நானும் தோழர் இலெனினும் சில நாட்கள் இருக்க வாய்ப்புக் கிடைத்து. கருத்தியல் வேறுபாடுகள் குறித்து விவாதிக்க முயன்றோம். வெகுதொலைவு விலகிப்போய் விட்டோம் என்று புரிந்தது. சிறை வாழ்க்கையில் செய்ய வேண்டிய பணிகள் பற்றிப் பேசினோம், நாங்கள் பழகத் தொடங்கிய காலமுதலே “இதை நீங்கள்தான் செய்ய முடியும்” என்று எனக்கு ஊக்கமளிப்பார். அப்போது நான் மூலதனம் தமிழாக்கம் செய்து கொண்டிருந்தேன். தொடர்ந்து செய்யுங்கள், உங்களால்தான் செய்ய முடியும் என்றார்.
ஏஎம்கே சிறையிலிருந்து விடுதலையான பின் அழித்தொழிப்பு போன்ற வடிவங்களைக் கூர்மையாக எதிர்த்து நின்றார். தர்மபுரி மாவட்டம் போன்ற பகுதிகளில் மக்கள் பெருந்திரள் அமைப்புகளை உருவாக்க முயன்றார். தோழர் பாலன் இந்த முயற்சிக்கிடையேதான் *'மோதல்-கொலை” செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்தபடி காவல்துறை அராசகத்தை எதிர்த்து மனிதவுரிமை இயக்கம் நடத்த வழிகாட்டினார்.
நானும் விடுதலையாகி வந்து தமிழ்த் தேசியம் சார்ந்து இயங்கத் தொடங்கிய பின் எங்களுக்கிடையே நெருக்கம் வந்தாலும் அவர் தலைமறைவாக இருந்தபடியால் அடிக்கடி சந்திக்க இயலவில்லை. சிறை பற்றி எழுதுவதற்காக ஒரு முறை சந்தித்தேன். அரசியல் விவாதத்துக்காக சந்திக்க விரும்பி உடல் நலிவுற்ற நிலையிலும் வீடு தேடி வந்தார். அதுவே இறுதிச் சந்திப்பாயிற்று. அப்போதும் இயக்க வரலாறு பற்றிப் பேசும் போது “நீங்கள்தான் செய்ய வேண்டும்” என்றார்.
அழித்தொழிப்பு நிகழ்வில் உங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பின், அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டதன் பின்னணி யாது?
நானும் தோழர்களும் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டோம். தஞ்சாவூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கின் முடிவில் நீதியர் குப்பண்ணன் எங்கள் நால்வரில் இருவருக்கு (ரெங்கசாமி லெனின், குருமூர்த்தி) தூக்குத் தண்டனை விதித்தார். எனக்கும் கனேசனுக்கும் ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. நாங்கள் மேல்முறையீடு செய்ய மறுத்த போதிலும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் பார்வை வழக்காக உயர்நீதிமன்றம் விசாரித்தாக வேண்டும். பார்வை வழக்கில் தாமாக முன்வந்து வழக்கறிஞர் என்.டி. வானமாமலை வாதிட்டார். இவ்வளவு முக்கியமான குற்றச்சாட்டுகள் இருக்கும் வழக்கில் சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்யாமல் தீர்ப்பு வழங்கியிருக்கக் கூடாது. எதிரிகளே மறுத்தாலும் வழக்கறிஞர் அமர்த்திக் கொடுத்திருக்க வேண்டும், இல்லையென்றாலும் நீதியரே குறுக்கு விசாரணை செய்திருக்க வேண்டும் என்ற வாதுரையை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. எனவே செய்நுட்பக் காரணங்களால் மாவட்ட நீதிமன்றத் தீர்ப்பு நீக்கம் செய்யப்பட்டது. வழக்கை நாகை நீதிமன்றத்தில் வேறு நீதியரைக் கொண்டு மீள் உசாவல் செய்ய ஆணையிடப்பட்டது.
நாகப்பட்டினத்திலும் நாங்கள் வழக்குப் புறக்கணிப்புச் செய்தோம். ஆனால் நீதியரே ஒவ்வொருவருக்கும் வழக்கறிஞர் வைத்து வாதிடச் செய்தார். முடிவில் எனக்கும் சேர்த்து மூவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவருக்கு மட்டும் ஆயுள் தண்டனை.
இப்போதும் நாங்கள் மேல்முறையீடு செய்யாமலே உயர் நீதிமன்றத்துக்கு வழக்கு சென்றது. உயர்நீதிமன்றம் ”அசலே உறுதி என்று சொல்லி விட்டது. நாங்கள் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கைப் புறக்கணித்ததாகவும், ஆனால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதும் அஞ்சிப் போய் மேல்முறையீடு செய்திருப்பதாகவும் உயர்நீதிமன்றம் சொல்லியிருப்பதாக நாளேடுகளில் பொய்ச் செய்தி வெளியிடப்பட்டது. இதற்கு கியூ, பிரிவுக் காவல்துறையே காரணம் என்று ஐயுற்றோம். இது ஒரு பட்டினிப் போராட்டம் தொடங்கி கொடிய தடியடி வரை சென்றது. சுவருக்குள் சித்திரங்களில் இது பற்றி விரிவாக எழுதியுள்ளேன்.
இதற்கிடையில் சிறைக்குள் தீவிரமான கருத்துப் போராட்டம் நடந்து, எம்-எல் கட்சியிலிருந்து விலகும் முடிவுக்குச் சென்றோம். அதே சிறையில் ஆயுள் கைதியாக இருந்த தோழர் ஏ.ஜி. கஸ்தூரி ரெங்கன் எங்களுக்கு வழங்கிய அறிவுரையின் படி குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் தண்டனைக் குறைப்புக் கோரி விண்ணப்பம் கொடுக்கத் தீர்மானித்தோம். அது கருணை மனுவாக இருப்பினும், மன்னிப்புக் கோராமல் ஒரு மேல்முறையீட்டின் தன்மையில் இருக்கும்படி அவரே வரைந்து கொடுத்தார். 1974 ஏப்ரல் மாதம் அப்போதைய முதலமைச்சர் பரிந்துரைத்தவாறு ஆளுநர் ஆணைப்படி தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டு நாங்கள் ஆயுள் தண்டனைக் கைதிகளானோம். இந்தத் தண்டனைக் குறைப்புக்குக் கலைஞர் உரிமை கொண்டாடியதன் பின்னணி இதுதான்.
மொத்தம் எத்தனை ஆண்டுகள், நீங்கள் சிறையில் இருந்தீர்கள்? பல்வேறு சிறைகளில் இருந்த பொழுது, நிகழ்ந்த மிக முக்கியமான ஓரிரு சம்பவங்களை நினைவு கூரவும்.
15 ஆண்டுகள் சிறையிலிருந்தேன். 1970 அக்டோபரில் பட்டுக்கோட்டை கிளைச் சிறையில் தொடங்கிய என் சிறைவாழ்க்கை 1985 நவம்பரில் சென்னை மத்திய சிறையில் முடிந்தது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 8 மத்திய சிறைகளில் வேலூர், பாளையங்கோட்டை தவிர எல்லாச் சிறைகளிலும் இருந்து விட்டேன். ஒப்பளவில் கூடுதலான காலம் கழித்தது திருச்சிராப்பள்ளியில்தான். சிறைப்படுத்தப்பட்டோர் நலவுரிமைச் சங்கம் அமைத்ததும், 1974 மேநாளில் தொடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க பெருந்திரள் போராட்டம் நடத்தியதும், அடுத்து வந்த அடக்குமுறைக்கு ஆளானதும், 1983 யூலைப் படுகொலைக்கு எதிராகச் சிறைக்குள் ஊர்வலம் நடத்தியதும், கைதிகளை 1984 மாநிலந்தழுவிய சிறைப் போராட்டத்துக்கு மையம் அமைத்ததும், உரிமைக் குரல், சுதந்திர தாகம், பாட்டாளித் தத்துவம் என்று இரகசியக் கையேடுகள் நடத்தியதும்... எல்லாமே திருச்சி சிறையில்தான்.
1964இல் திருவாரூரை விட்டு வலங்கைமான் புறப்பட்ட போது அப்பாவின் நெருங்கிய நண்பர் ஜெயராஜ் எனக்கு எழுதிக் கொடுத்த அறிவுரை: Live a dangerous life! சிறை வாழ்க்கை முழுக்க இந்த அறிவுரையைக் கடைப்பிடித்தேன் என்று சொல்லலாம். சிறை வாழ்க்கையில் ஒவ்வொரு நாளுமே விறுவிறுப்புதான் ! சலிப்புக்கே இடமில்லை. நானும் இலெனினும் விடுதலைக்கு அவசரப்பட்டதே இல்லை என்னும் அளவுக்கு நாங்கள் சிறையில் வாழ்ந்தவர்கள். கடல் போல் அலையடிக்கும் நினைவுகளிலிருந்து ஓரிரு நிகழ்வுகளை எடுத்துக்காட்டுவது எளிதன்று. சுவருக்குள் சித்திரங்கள், கம்பிக்குள் வெளிச்சங்கள் விலங்கிற்குள் மனிதர்கள் என்ற தொடர்களில் ஒரு சிலவற்றைப் பதிந்துள்ளேன். எஞ்சியவற்றை வயதும் நலிவும் பிறவும் மறக்கடிக்குமுன் எழுத்தாக்கி விடத்தான் நினைக்கிறேன். அவ்வளவு தேவை எனக் கருதினால், பிழைத்தும் கிடந்தால்... பார்க்கலாம்.
சிறையிலிருந்த பொழுது காரல் மார்க்ஸ் அவர்களின் மூலதனம் நூலின் மூன்று பாகங்களையும் மொழியாக்கம் செய்தீர்கள். அந்த அனுபவம் மிகவும் முக்கியமானது அது குறித்த உங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.
எங்கள் சிறை வாழ்க்கையில் முதன் முதலாகப் புத்தகங்கள் வாங்கி வந்து கொடுத்தவர் சிபிஐ தலைவர் எம். கல்யாணசுந்தரம் அவர்களே. அவர் வாங்கி வந்தவை Lenin Selected Works - 3 volumes. ஆனால் அவை உடனே எங்களிடம் தரப்படவில்லை. கியூ பிரிவு காவல்துறை அனுமதித்தால் தணிக்கை செய்து கொடுப்பதாகச் சொல்லி விட்டனர். அப்போது நான், இலெனின். குருமுர்த்தி மூவரும் சிபி கண்டத்தில் தூக்குக் கைதிகளாக இருந்தோம். கணேசன் ஆயுள்கைதியாக எங்களுடன் இருந்தார். கல்யாணசுந்தரம் கொடுத்துச் சென்ற புத்தகங்களைத் தரக் கோரியும் அத்துடன் கழிப்பறை வசதி போன்ற கோரிக்கைகளுக்காகவும் நாங்கள் நால்வரும் தட்டைக் கவிழ்த்தோம் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை பட்டினிப் போராட்டம் ! மூன்று நாள் போராட்டத்துக்குப் பின் சிறை நிர்வாகம் எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது. புத்தகங்கள் வந்து சேர்ந்தன. அதே கண்டத்தில் தோழர் ஏஜிகே அவர்களும் அப்போது அந்தணப்பேட்டை முக்கொலை வழக்கில் தூக்குக் கைதியாக இருந்தார். லெனின் தேர்வு நூல்கள் கிடைத்து விட்டது தெரிந்தவுடன் மகிழ்ச்சியுடன் வந்து எடுத்துப்போய் படித்துக் குறிப்பெடுக்க ஆரம்பித்து விட்டார். அவர் முடித்துக் கொடுத்த பின் நானும் கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்கத் தொடங்கினேன்.
நேர்காணலில் புத்தகம் பெற்றுக் கொள்ளும் உரிமை கிடைத்து விட்டதால் எல்லாத் தோழர்களும் எங்களைப் பார்க்க வருவோரிடம் சொல்லி நூல்கள் சேகரித்துப் படிக்கத் தொடங்கினோம். புத்தகப் படிப்பு காலப்போக்கில் எங்களுக்குள் பெரிய அறிவுவிழிப்புக்கும் ஆய்வுக்கும் விவாதத்துக்கும் இட்டுச் சென்றது.
என் தாயார் பிறந்த ஊர் இளங்காடு. காவிரித் தீரத்தில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்துப் புகழ்மேவிய பெரும் சிற்றூர். நம்மாழ்வாரும் அதே ஊர்தான். என் தாய் மாமா திரு இராமநாதன் சென்னையில் இருந்தார். தமிழ்ப் பற்றும் திராவிட இயக்க ஆர்வமும் புரட்சித் தலைவர் இலெனின் மீது உயர்மதிப்பும் கொண்டவர். படிப்பாளர், பாட்டுக்காரர். அவர் என் அக்காள் காந்தியிடம் CAPITAL ஆங்கிலப் பதிப்பு மூன்று பாகங்களும் மலிவு விலையில் வாங்கிக் கொடுத்தனுப்பினார்.
ஆ, மார்க்ஸ்! ஆ, கப்பிடல்! மூலதனம்! மகிழ்ச்சி கலந்த வியப்பாக இருந்தது. பக்கங்களைப் பிரித்துப் படிக்க முயன்றேன். எளிதில்லை என்று தோன்றியது. இங்கிலீஷ்தானே? படி என்றார் பக்கத்திலிருந்த இலெனின். படிக்கப் படிக்க... இது தமிழில் இல்லையா? என்ற கேள்வி எழுந்தது. வெளியிலும் விசாரிக்கச் சொன்னோம். இல்லை என்று விடை கிடைத்தது. இலங்கையில் கூடவா? அங்கேயும் இல்லை என்றனர். நான் சொல்லி இலெனின் எழுதுவது வழக்கம். அப்போது நாங்கள் தூக்குக் கைதிகள். சாவதற்குள் இதைச் சாதிக்க வேண்டும் என்று அவர் தூண்டிக் கொண்டே இருந்தார். ஆனால் எதையும் புரியாமல் மொழிபெயர்க்க முடியாதே! முதலில் படிக்க வேண்டும், திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும். ஒத்திப்போட்டு விட்டு வேறு வேலை பார்க்கலானேன். இதற்கிடையில் உட்கட்சிப் போராட்டம் வந்து விட்டது. அழித்தொழிப்பு, ஆய்தப் போராட்டம் ஒவ்வொன்றைப் பற்றியும் கடுமையான கருத்து மோதல்! தூக்குக் கைதிகளாக இருந்த எங்களைத் தவிர வெவ்வேறு வழக்குகளில் நீண்ட சிறைத்தண்டனை பெற்ற பத்துக்கு மேற்பட்ட தோழர்களும் இருந்தார்கள். மா இலெனின் உரைத் தொகுப்பு “புரட்சிகர வாய்ச்சொல்” என்பதைப் படித்து நான் தெரிந்து கொண்டவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். புரட்சி பற்றி எங்களுக்கிருந்த மயக்கங்களைக் கலைத்துப் போடுவது போன்ற பலவும் இலெனின் உரைகளிலிருந்து கிடைத்தன.
இவ்வளவு பரபரப்பான சூழலில் Capitaleg ஓரமாக வைத்து விட்டேன். இப்படியே சில ஆண்டுகள் கரைந்து விட்டன. இடையில் நிறையப் படித்தேன், நிறைய எழுதினேன், தமிழ் படிக்கத் தெரியாத கேரளத் தோழர்களுக்காக ஆங்கிலத்திலும் எழுதினேன். எங்களுக்குள் நீண்ட கடிதப் பரிமாற்றங்கள் நடந்தன. மார்க்சியப் படிப்பில் எனக்கொரு நம்பிக்கை வளர்ந்தது. கருத்துப் போராட்டம் ஒருபுறமிருக்க, சிறையுரிமைகளுக்கான போராட்டத்திலும் முனைப்புடன் பங்காற்றினோம். எல்லா முனையிலும் தோழர் ஏஜிகே சேய்மையில் இருந்தபடி எங்களைச் செழுமை செய்தார்.
கொலைத் தண்டனை குறைந்து வாழ்நாள் சிறைத் தண்டனை ஆகி 1974 மே போராட்டம், அடக்குமுறை, இரண்டாம் போராட்டமும் பழிவாங்கலும், செப்டெம்பரில் பாலகிருஷ்ணன் தூக்கு... எல்லாம் கழிந்து, என்னையும் இலெனினையும் பழைய கண்டம் என்னும் ஆறறைக் கூடத்தில் மறைப்புக்குள் தனிமைப்படுத்தி வைக்க, 1975 சனவரி முதல் நாள் மார்க்சைத் தமிழாக்கத் தொடங்கினேன். இடையில் நெருக்கடிநிலை அறிவிப்பு வந்தது. ஆனால் 1976 சனவரி 30 வரை பாதிப்பில்லை. இடைக்காலத்தில் தோழர் ஏ. பாலசுப்ரமணியமும் அனந்த நம்பியாரும் நேர்காண வந்தார்கள். மூலதனம் மொழிபெயர்ப்புக்குத் தேவையான அகராதி போன்ற உதவிகள் அனுப்புவதாகச் சொன்னார்கள். எழுதுவதற்கு மேசை - நாற்காலி வசதிகள் கேட்டுப் பெற்றுக் கொள்ளச் சொன்னார்கள்.
1976 சனவரி இறுதியில் திமுக ஆட்சி கலைக்கப்பட்ட பின் தமிழ்நாட்டிலும் நெருக்கடிநிலையின் தாக்கம் தொடங்கிற்று. மிசா கைதிகள் வந்து சேர்ந்தார்கள். சிறைக்குள்ளேயும் நிறைய மாற்றங்கள்! எங்களையும் இடமாற்றம் செய்தார்கள். அனைத்துக்கும் இடையே மொழிபெயர்ப்புப் பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தோம். மொத்தத்தில் ஒன்றரை ஆண்டுக் காலத்தில் முதல் பாகம் முடிந்தது. குறிப்பேடுகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு, திருத்திப் புதிதாக எடுத்தெழுத வேண்டியிருந்தது.
சிறைபட்டோருக்காக விண்ணப்பங்கள் எழுதிக் கொடுப்பது, குறிப்பாகத் தூக்குக் கைதிகளுக்காக மேல்முறையீடும் கருணை மனுவும் எழுதிக் கொடுப்பது... இந்தப் பணிகளை ஏஜிகே செய்து கொடுப்பார். காலப் போக்கில் இந்தப் பணிகளைக் கற்றுக் கொண்டு நான் செய்யலானேன். இந்தப் பணிகளில் எனக்குதவ படித்த ஆயுள்கைதியான ஒருவரைப் பழக்கிக் கொண்டேன். திருத்திச் செம்மை செய்த மூலதனம் தமிழாக்கத்தைப் படியெடுக்கும் வேலையை அவரும் எனக்குச் செய்து கொடுத்தார். தூக்கிலிடப்பட்ட வீரையன் என்ற கைதி தூக்கு மேடை ஏறுவதற்குக் காத்திருந்த கடைசிப் பத்து நாளும் மூலதனம் நூலைப் படியெடுக்கும் வேலையைச் செய்து கொடுத்தார்.
இருபதறைத் தொகுதி எனப்படும் மெயின் கண்டத்தில் எங்களோடு அடைக்கப்பட்டிருந்த மெய்வழிச் சாலை வரதராச அனந்தர் கூட நான் உடனுக்குடன் மொழிபெயர்ப்பதில் வியந்து போய் மூலதனம் மொழிபெயர்ப்பு பற்றி விசாரித்தறிந்தார். என் மொழிபெயர்ப்புக் குறிப்பேடு ஒன்றை வாங்கிப் படித்து நல்ல அறிவுரைகள் சொன்னார்.
சிறைக்குள் என்றாலும் சிறை விட்டுச் சிறை என்றாலும் போகுமிடமெல்லாம் இந்தக் குறிப்பேடுகளையும் மற்றப் புத்தகங்களையும் தூக்கிச் செல்ல வேண்டும். வேலை முடிந்த குறிப்பேடுகளை வெளியே அனுப்பிப் பாதுகாத்து வைத்துக் கொண்டிருக்கலாமே? எங்கே அனுப்பிப் பாதுகாப்பது? அக்காவிடம்? நம்பிக்கைக்குரிய காவலர்களிடம்? நம்மிடம் இருப்பதுதான் நல்லது என்ற முடிவுக்கு வந்தோம். அதற்கு இன்னொரு முக்கியக் காரணமும் இருந்தது: நான் அது வரை செய்த தமிழாக்கத்தை இறுதியாகக் கருதவில்லை. திரும்பத் திரும்பப் படித்துத் திருத்திச் செழுமை செய்ய வேண்டும் என நினைத்தேன். கைச்சுவடிகள் அனைத்தும் கையிலிருந்தால்தான் அப்படிச் செய்ய முடியும்.
இரண்டாவதாகக் கலைச் சொற்களின் தமிழாக்கம் பற்றிய சிக்கல் இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. ஒருசில கலைச்சொற்கள் இரவு பகல் என் மனத்தைக் குடைந்து கொண்டே இருந்தன. அது வரை வந்திருக்கக்க் கூடிய மார்க்சியப் பொருளியல் நூல்கள் எதுவும் இவ்வகையில் எனக்கு நிறைவளிக்கவில்லை. ஒரு சிறிய ஆங்கில ஆங்கில அகராதி மட்டுமே வைத்திருந்தேன். அதுவும் பக்கம் பக்கமாய் நைந்து கிடந்தது. ஒரு கலைச்சொல் குறித்துத் தீர்வு கிடைத்து விட்டதாக நான் நினைத்தால் அத்தனைக் கைச்சுவடிகளையும் பக்கம் பக்கமாகப் புரட்டித் திருத்தம் போட்டாக வேண்டும். தனியாக ஒரு குறிப்பேட்டில் அட்டவணை இட்டு தமிழாக்கச் சிக்கல்கள் ஆங்கில மூலத்தில் பக்கம், தமிழில் கைச்சுவடியில் பக்கம் என்று எழுதி வைத்துக் கொள்வேன். காட்டாக, manufacture, circulation, realization, currency, cooperation போன்ற சொற்களை மொழிபெயர்ப்பது எளிது போல் தோன்றும். ஆனால் இது போன்ற ஒரு சொல் அன்றாடப் புழக்கத்தில் குறிப்பதிலிருந்து மாறுபட்ட பொருளை அறிவியலில் குறிப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அதற்கும் மேலே மார்க்ஸ் என்ன பொருளில் அச்சொல்லை ஆள்கிறார் என்று ஆழ்ந்து நோக்கித் தமிழ் செய்ய வேண்டும். அறிவியல் கண்டிப்புடன் கலைச்சொல் ஒரே சீர்மையுடன் ஆளப்பட வேண்டும். எளிமையின் பெயரால் இடத்துக்கு இடம் மாற்றி ஆள முடியாது.
இந்தப் பணிக்கிடையே நான் மதுரைக்கும் தோழர் இலெனின் கோவைக்கும் மற்றப்பட்டோம். 1977 செப்டெம்பரில் மதுரையில் என் தலைமையில் ஒரு போராட்டம், கோவையில் இலெனின் தலைமையில் ஒரு போராட்டம் நடந்து அவர் மதுரைக்கு மாற்றப்பட, என்னை சேலத்துக்கு மாற்றினார்கள். சேலத்திலிருந்து சென்னைக்கு நேர்காணலுக்கான மாற்றல் கேட்டுக்கொண்டு சென்றேன். அங்கிருந்த போது மூலதனம் முதல் பாகத்தின் கைச்சுவடிகளை இறுதி வடிவாக்கி அக்கா காந்தியிடம் கொடுத்தனுப்பி விட்டேன். அவை சிபிஎம் தோழர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, தோழர் ஏபி தோழர் பாலவிநாயகத்திடம் கொடுத்தனுப்பிக் கருத்துக் கேட்டிருப்பதாக எனக்கு அறியத்தந்தனர்.
முதல் பாகத்தின் தமிழாக்கம் அச்சேறத் தக்கதாய் இருந்தால் அடுத்தடுத்த பாகங்களை எடுத்துக் கொள்ளலாம், இல்லையேல் இத்தோடு விட்டு விடலாம் என்று நினைத்திருந்தேன். 1979இல் கோவை சிறையிலிருந்த போது தோழர் ஏபி சார்பில் தோழர் அப்துல் வகாப் என்னை நேர்கண்டார். மூலதனம் தமிழாக்கத்தை மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் வெளி யிடத் தீர்மானித்திருப்பதாகவும், அவர்கள் இரண்டாம், மூன்றாம் பாகத்தையும் மொழிபெயர்த்துக் கொடுக்குமாறு கேட்பதாகவும் தெரிவித்தார். நான் உடனே அந்த வேலையைத் தொடங்க நினைத்தேன். ஆனால் நான் சொல்லச் சொல்ல எழுதுவதற்கு இப்போது இலெனினைப் போல் யாருமில்லை. மேலும் இடைக் காலத்தில் தோழர் பி.சுந்தரையாவின் தெலங்கானா பற்றிய வரலாற்று நூலைத் தோழர் கோபாலைக் கொண்டு மொழிபெயர்க்கச் செய்து திருத்திச் செம்மை செய்து கொண்டிருந்தேன். தோழர் தமிழரசன், வள்ளுவன், குமார் உட்பட 9-10 தோழர்கள் பத்தாம் தொகுதியில் இருந்தோம். சிறை நிலைமைகள் தொடர்பான பட்டினிப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. அதே நேரம் தோழர் ஏஎம்கே சமரன் ஏட்டில் தேர்தல் தொடர்பாக எழுதிக் கொண்டிருந்ததை மறுத்து நான் அவருக்குக் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தேன். பிறகு அதே கடிதங்களை கட்டுரை வடிவில் *நக்சலைட்டுகளுக்கு ஒரு சிறைப்பறவையின் வேண்டுகோள்” என்ற தலைப்பில் சிபிஎம் வெளியிட்டது.
1979 கடைசியில் நானும், தோழர் தமிழரசனும், தோழர் கந்தசாமியும் சிறைக் கோரிக்கைகள் தொடர்பான ஒரு வழக்கிற்காகக் கோவையிலிருந்து சென்னை சிறைக்கு மாற்றப்பட்டோம். 1980 சனவரி முதல் நாள் மூலதனம் இரண்டாம் பாகத்தை மொழிபெயர்க்கத் தொடங்கினேன். சென்னைச் சிறையில் வழக்கறிஞர் தோழர் சந்துரு என்னை நேர்காணலில் பார்த்தவுடனே மூலதனம் மொழிபெயர்ப்பு பற்றிக் கேட்டார். சென்னை பல்கலைக் கழகம் வெளியிட்ட அகராதி வைத்துள்ளீர்களா? என்று கேட்டார். இல்லை என்றேன். மறுமுறை வரும் போது வாங்கி வந்தார். கையில் வந்ததும் சில சொற்களைப் புரட்டிப் பார்த்தேன். முதலில் circulation வழக்கமாகப் புழக்கம் எனப்படும். Money circulation பணப் புழக்கம். Blood circulation இரத்த ஓட்டம். ஆனால் commodity circulation என்பது சரக்குச் சுற்றோட்டம். நான் இந்தச் சொல்லைக் கொடுத்திருந்தேன். அகராதியிலும் அதே சொல்லைக் கண்ட போது மகிழ்ந்தேன். ஏனென்றால் சரக்கு - பணம் - சரக்கு என்பது ஒரு சுற்று. பணம் - சரக்கு - பணம் என்பதும் ஒரு சுற்றுதான். சந்தையில் சரக்கு அல்லது பணம் சுற்றுகளாக ஓடுகிறது. சுற்றிச் சுற்றி ஓடுகிறது. சுற்றோட்டம் என்பது சுற்றுகளால் ஆனது. Circulation is made of circuits.
நான் மூலதனம் மொழிபெயர்க்கக் காலம் குறித்து வேலை செய்வதாகச் சொன்ன போது சந்துரு மகிழ்ந்து எனக்குப் புதிய உயர்தரக் குறிப்பேடுகள், பேனா எல்லாம் வாங்கித் தந்து உதவினார். உடனிருந்த தோழர் தமிழரசன் எனது பணியில் மிகுந்த ஆர்வம் காட்டுவார். மணிக்கணக்காக உட்கார்ந்து எழுதுவதால் இடையில் செய்தித்தாள் படிக்கும் போதாவது நில்லுங்கள் என்பார். புலவர் கலியபெருமாளின் ஒன்று விட்ட உடன்பிறப்புகள் பொய் வழக்கில் தண்டிக்கப்பட்ட ராஜமாணிக்கமும் ஆறுமுகமும் எங்களோடிருந்தனர். “நீ பேசாமல் எழுதிக் கொண்டே இரு, உனக்கு என்ன வேண்டுமோ நாங்கள் செய்து தருகிறோம்” என்பார்கள்.
ஏப்ரல் 22ஆம் நாள் (லெனின் பிறந்த நாள்) இரண்டாம் பாகம் மொழிபெயர்ப்பை முடித்தேன். மே நாளில் மூன்றாம் பாகம் தொடங்கத் திட்டம். அந்த இடைப்பட்ட நாட்களில் ஒரு துயரச் செய்தி வந்தது: அக்காள் காந்தி மறைந்தார். கம்பிகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் எல்லாம் என் தம்பிகள் என்று வாழ்ந்து கொண்டிருந்தவர் மறைந்த செய்தியைச் சிறைத் தோழர்களுக்கேல்லம் தெரிவித்து விட்டு, மீண்டும் மார்க்சிடம் போய் விட்டேன்.
நவம்பர் புரட்சி நாளில் மூன்றாம் பாகமும் திட்டமிட்டவாறு முடித்து எழுந்தேன். இன்னும் ஒரு முறை திருத்த வாய்ப்புக் கிடைத்தால் திருத்த வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இன்றும் ஆசைப்படுகிறேன். அதற்காக மீண்டும் சிறைக்குப் போகலாமா?
(தொடரும்)