“கற்க கசடறக் கற்க கற்றபின்
நிற்க அதற்குத் தக”
என இயம்புகிறது வள்ளுவம். கல்வி பெற்றிடுவது முதன்மையானது; இன்றியமையாதது என்பதை நிறுவுகிறார் ‘கற்க’ என்ற சொற்றொடர் போன்ற ஒரே சொல்லில். பெறும் கல்வி அய்யம் திரிபுர அமைந்திட வேண்டும் எனக் கட்டளை இடும் வகையில் ‘கசடறக் கற்க’ என்ற சொற்றொடரை வைக்கிறார், வள்ளுவர்.
‘கசடறக் கற்க’ எப்பொழுது முடியும்? அறிந்தவை யைக் கொண்டு அறியாதவற்றை அறிந்துகொள்ள முற்படுவது இயல்பு. பின் அறிவுத் தள வளத்தைப் பெருக்கிக் கொண்டால்தான் அய்யத்திற்கு இடமின்றி கற்றுக்கொண்டதாகக் கொள்ள முடியும். எப்படி அறிந்த வையிலிருந்து அறியாதவற்றிற்குக் கல்வியை நகர்த்த முடியும்? அது தாய்மொழி வழிக்கல்வி பெற்றால் மட்டுமே இயலும்.
அதாவது குழந்தை தாய், தந்தை மடிகளில் தவழ்ந்து ஒத்த அகவைக் குழந்தைகள், குடும்பம், உறவுகள், தன் சமூக வெளியில் தன் தாய்மொழியில் தவழ்ந்து அந்தத் தாய்மொழியில் கல்வி பயின்றால்தான் அறிந்த வற்றிலிருந்து அறியாதவற்றை அறிந்துகொள்ளலாம். அதன்பின் அறிவுத் தளம் விரிவடையும்; பெருகும். அதன் அடிப்படையின் அய்யத்திற்கிடமின்றி செறிவான, தெளிவான கசடற்ற கல்வியைப் பெற்றிட்டதாகக் கொள்ள முடியும். அத்துடன் நிற்கவில்லை வள்ளுவர். கல்வியின் தன்மை, உள்பொதிவு எவ்வாறு இருக்க வேண்டு மென்பதை வலியுறுத்தி வரையறுத்துக் கூறுவதாக ‘நிற்க அதற்குத் தக’ என்ற கட்டளைச் சொற்றொடரை வைக்கிறார். கல்வியின் உள்பொதிவு, அறநெறிகளை, மாண்புமிகு பண்புகளை அடிப்படைக் கூறுகளாகவும் மேவுவதாகவும் இருத்தல் வேண்டுமென்று வரை யறையிட்டு அதன்படி வாழ்வதுதான் சிறப்பான வாழ் வாக அமையும் என பறைசாற்று முகமாகத்தான் ‘நிற்க அதற்குத் தக’ என்ற சொற்றொடரை குறளின் முற்று ரையாக வைத்துள்ளார் வள்ளுவர்.
இவ்விளக்கவுரையெல்லாம் கசடறக் கற்றால் தான் பொருள் பொதிந்ததாகக் கொள்ள முடியும். எவ்வாறு? இது தாய்மொழியில் கல்வி வழங்கினால் மட்டுமே முழுமையாக அய்யம் திரிபுரக் கற்றதாகக் கொள்ள முடியும்.
இத்தன்மைத்தே உலகளாவிய அறிஞர்களின் கல்வி குறித்த கருத்துகளானவை. அதாவது கல்வியின் நோக்கம் மாண்புடைய அறப்பண்புகளைப் பெறுவது என்றும் அறம்சார் வாழ்முறையைக் கடைப்பிடிக்க வழிகாட்டும் கருவிதான் கல்வி எனவும் பலவாறான கருத்துகள் காலம் நெடுகிலும் சொல்லப்பட்டு வருபவை யாகும். இதேபோன்று தாய்மொழிவழிக் கல்வியின் மேன்மையையும், இன்றியமையாமையையும் காரல் மார்க்சு, காந்தி, நேரு போன்ற மலரும் வலியுறுத்தி யுள்ளனர்.
தாய்மொழிக்கல்வியின்றி மாற்று மொழியில் படிப்பு குறிப்பாக, மழலையர்க்கு வழங்கப்படின் அது அறியாதவற்றைப் பற்றிப் படிக்க வைப்பதாகும். எனவே அது எவ்வித புரிதல் அடித்தளமின்றி இருக்கும். அவர் கள் மனதிற்குள் திணிப்பதற்கு ஒப்பாகும். இது இளம் தளிர் ஒத்த மழலையர்களின் மனதை கருக்கி விடுவது போலாகும். அவ்வகையில் அது மனனம் செய்து கொள்வதற்கு மட்டுமே அடிகோலும். எனவே அப்படிப்பு கசடறக் கற்க இயலாதவை, அப்படியான படிப்பு மென் மேலும் அளிக்கப்படுவது அவர்களின் தேடல் அறிவு உணர்வை அறவே அழித்தொழித்துவிடும்.
மொத்தத்தில் தாய்மொழிவழிக் கல்வி அன்றி மாற்று மொழிவழிக் கல்வி அளிப்பது, இளம் மழலையர், குழந்தைகளின் இயல்பான எண்ண அலைகளைச் சிதறடிக்கும்; சிந்தனை ஊற்றை தூற்று கேடு விளை விக்கும்.
தாய்மொழிக்கல்வி மறுக்கப்பட்டு, வேற்றுமொழிப் படிப்பு அளிக்கப்பட்டு வருவது சமூக நலன்களை மேம்பாட்டை புறந்தள்ளவது போலாகி ஒட்டுமொத்த சமூகத்தைக் கடும் கொடிய நோயுற்ற சமூகமாக மாற்றி விடும். காட்டாக, நீரிழிவு குறைபாடுடுடைய ஒருவர் முறையான மருத்துவம் செய்துகொண்டு அதனைக் கட்டுக்குள் வைத்திடாவிடின் பல் வழிகளில் உடல்நலன் கெடும்; இறுதியில் மீளாத் துயரத்திற்கு இட்டுச் செல்லும். நீரிழிவைக் குறைபாடு என்றுதான் குறிக்கின்றனர். அது நோய் என்ற இலக்கணத்துக்குள் வராது என நீரிழிவு மருத்து வல்லுனர்கள் தெளிவாக விளக்கு கின்றனர்.
அதாவது, கணையத்தின் பீட்டா செல்கள், முன்னோர் வழியாக, முறையற்ற வாழ்முறைகள், உணவு முறைகள், நெறியற்ற செயல்பாடுகளால் உடம்புக்குத் தேவையான போதியளவு இன்சுலின் சுரக்க இயலாத வாறு செயலிழந்துவிடுகின்றன. எனவே இக்குறை பாட்டை நோய் என்று குறிப்பதில்லை.
அவ்வகையில் முறையான வாழ்வுமுறை, உணவு முறை, நல் செயல்பாடுகளுடன் மருத்துவம் செய்து கொண்டு இக்குறைபாடு கட்டுக்குள் வைக்கப்பட்டு விட்டால் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்காது. வெறும் காய்சல், சளித் தொல்லை போன்றதுதான். அன்றேல் கட்டுப்பாடு இழக்க நேரிடின் இந்த நீரிழிவுக் குறைபாடு பலவாறான நோய்கள்-கண் பாதிப்பு, காது கேளாமை, சிறுநீரகக் குறைபாடு, கல்லீரல் செயல்பாட்டுக் குறைவு, ஈரக்குலை பகுதி செயலிழப்பு, மிகைக் குருதி அழுத்தம், குருதியோட்டக் குறைபாட்டால் நரம்பு மண்டல நலிவு, மூளைக்குப் போதுமான உயர் வளி கிடைக்காமை யால் தற்காலிக இயக்கமின்மை போன்ற பல்வேறு வகையான இன்னல்கள், சிக்கல்கள் அனைத்தையும் சிலவற்றாலும் ஒரே ஒரு குறைபாட்டாலும் அதனை யடுத்து பற்பல உடல்நலிவுகள் என ஏற்படக்கூடும்.
முழுமையும் இத்தன்மைத்தே தமிழ்வழிக் கல்வியன்று வேற்று மொழி படிப்பு அளிப்பதினால் தனி மனித வாழ்சிதைவு, தனிமனித பொதுவெளி எண்ண மின்மை, ஒப்புரவின்மை, கூடிவாழும் ஒருங்கிணைந்த (inclusiveness) மனபான்மையற்ற தனித்துவ மனப்பான்மை (exclusiveness) போன்றவையால் சமூக நலன் கெடல், சமூகச் சீரழிவு என தனிமனித மேம்பாடும் சமூக மேம்பாடும் முற்றிலுமாகச் சிதைய நேரிடும்.
மேலும் இன்னொரு வகையில் முற்றும் தாய் மொழியே தெரியாமல், கற்பிக்கப்படாமல் முற்றும் மாற்று மொழிப் படிப்புடன் படிப்பை முடிக்கும் ஒருவன் புற்றால் பற்றப்பட்டு அது பாதித்த உறுப்பை முற்றிலு மாக அழித்து அடுத்தடுத்து பரவி முற்றிலுமாக அவனைச் சிதைத்து சிதைக்கு இட்டுச் செல்வது போன்ற நிலைக் குத்தான் ஆளாக நேரிடும். இதுபோன்று ஒப்பீடு செய் துள்ளது சற்று கடுமையாக இருப்பினும் தற்போதைய நிலையில் இவ்வாறான படிப்புப் படித்துள்ள அனை வரும் அந்த இழிநிலையை அடைந்து வருவது போன்று வருங்காலங்களில் இந்த மாற்று மொழிப் படிப்பு மாயை மறையாது தொடருமெனில் தனிமனித சமூக நலன் கடிதே கெட்டொழிந்து மனிதமற்ற மனத்தோராய் விலங் கினும் கீழான இழிநிலையைத் தான் அடைய நேரிடும்.
இது ஏதோ தாய்மொழிவழிக் கல்வி பெற வழிவகை ஏற்படுத்தப்படாத சூழலில் மாற்று மொழிவழிக் கல்வி பெற்றோர், பெறவிரும்புவோர் மீதான வெறுப்பின் வெளிப்பாடல்ல. உண்மையில் மனச்சான்றுடன் இவ் வாறான படிப்புப் பெற்றுள்ள இந்தத் தலைமுறை யினர், இளந்தலைமுறையினரின் சமூகத்தின் மீதான உள்ளார்ந்த அக்கறை, பொதுவெளி, சமூக நலன் சார்ந்த உணர்வுகள் ஏதுமின்றி பிழைத்து வருவதை மனமாற உணர முடிகிறது. இதிலிருந்தே தாய்மொழி வழிக் கல்வி அளித்திட பாடம் பெற வேண்டியுள்ளது என்பதுதான் உண்மை.
இங்கு கல்வி என்ற சொல் மாற்றுமொழிக் கல்வி படிப்பைக் குறிப்பிடுவதல்ல என்பதுடன் அது தாய் மொழிக் கல்வியை மட்டும் குறிப்பதாகும். சென்ற நூற்றாண்டின் பின்பகுதியிலிருந்து நாடுகளின் பொருளாதார வளர்ச்சி என்பது உண்மையான வளர்ச்சியைக் குறிக்க ஏற்றதல்ல எனவும் அதற்கு நாட்டின் மேம்பாடுதான் அளவுகோலாகக் கொள்ளப்பட வேண்டுமென்று தீர்மானிக் கப்பட்டது. கல்வி, மக்கள் மருத்துவம், வேலை வாய்ப்பு, பெண்களின் சமூக நிலை போன்ற பல்வேறு துறைகளின் துறைவாரி வளர்ச்சியைக் கணக்கிட்டு மக்கள் மேம் பாட்டுக் குறியீடு (Human Development Index - HDI) அளவிடப்படுகிறது. இதில் நாட்டின் கல்வி நிலை முதன்மை இடம்பிடிக்கிறது. அடுத்து மருத்துவம் இடம் பெறுகிறது. அவ்வகையில் இந்தியா 137ஆம் இடத்தில்தான் உள்ளது. இதற்கான முக்கிய காரணம் இங்கு கல்விநிலை தாழ்நிலையிலுள்ளது என்பதுதான்.
எனவே, கல்வியளித்து மேம்பாடு பெற்ற சமூகமாக உயர்த்திட உண்மையாக முயலாமல் வெறும் வெற்றுப் பிதற்றலாக நாட்டை வல்லரசாக்குவோம் என்ற கழிசடைத் தனம் ஏன்?
இந்த நிலையை இன்னும் சற்று தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தாய்மொழித் தமிழ்வழிக் கல்விதான் பன்முகத் தன்மைகொண்ட சமூகத்தை ஒன்றிணைப்பதற்கான கருவியாக அமையும். ஆனால் மாற்றுமொழியான ஆங்கில வழிப் படிப்பு அதைப் பெற்றுள்ளோர், பெற்று வருவோரின் மனநிலை பிறரை வெறுத்தொதுக்கும் குறுகிய மனப்பான்மை கொண் டோராக மாற்றி சமூகத்தின் நல்லிணக்கச் சிந்தனை யைக் குலைத்துவிடும்.
காட்டாக, அறிவியல், ஏன் கலைப்பட்டம், முதுநிலை பட்டம் பயின்றோர் தாய்மொழியிலின்றி மாற்று மொழிவழி படித்திருப்பின் அவர்கள் படித்த பாடம் தவிர வேறு பாடம் படித்தோரை ஏதும் அறியாதாராக எண்ணத் துணிபர். அந்தத் தன்மையில்தான் அவர்கள் நடந்து கொள்வர். இது இவர் தனித்துவமானவர் என்றும் பிறர் வெறுக்கத்தக்கவர் என நினைக்கக்கூடும். இன்னும் அழுத்தமான எடுத்துக்காட்டாக ஆங்கில வழியில் சட்டம் பயின்றோர் ஆங்கில வழியிலேயே வேறு பாடம் படித்தோர் அனைவரும் சட்டத்தைப் பொறுத்தவரை ஏதும் அறியாதோர் என்று எண்ணித்தான் நடத்துவர். பொது மக்கள் எவ்வாறு நடத்தப்படுவர், நடத்தப்படு கின்றனர் என்பதை கட்டுரையைப் படிப்போரின் கருத்துக்கே விடுகிறேன். இதில் நம் நாட்டின் சட்டக் கூற்று. சட்டத்திற்கெதிராகத் தவறு, தப்பு சட்டம் தெரியாது இழைத்துவிட்டேன் எனச் சொல்லி சட்டத்தின் பிடியி லிருந்து தப்பமுடியாது (Ignorance of Law is not anexcuse). கொடுமை என்னவெனில் நம் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தையும் ஏனைய சட்டங்களையும் ஒன்றிய அரசுடன் மாநில அரசுகளும் ஆங்கில மொழி யிலின்றி அவ்வப்பகுதி மொழிகளில் பெயர்த்து பரவ லாகக் கொண்டு செல்லவில்லை என்பதுதான் நகை முரணானது.
ஆனால் தாய்மொழிவழியில் அனைத்துக் கல்வியும் அளிக்கப்பட்டிருப்பின் எவராலும் சட்டங்கள் உள்ளிட்டு எதையும் எளிதில் புரிந்துகொள்ளும் இயல்பான திறன் உண்டு என்றெண்ணி இணக்கமான ஒன்றிணைந்த உணர்வுகளுடன் வெறுத்தொதுக்கும் குறுகிய மனப் பான்மையின்றி அனைவரும் சமூக மேம்பாடு பெற்று வாழ முடியும்.
தமிழகத்தில் தமிழ்வழிக் கல்விக்காகச் சென்ற அரை நூற்றாண்டுக்கும் மேலாக அண்ணா தி.மு.க. தவிர்த்த அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் இயக்கங்களும் குரல் கொடுத்து வந்துள்ள நிலையில் கழுதை கெட்டால் குட்டிச்சுவரான கதையாக இங்கு தன்மானமற்ற தமிழக அரசு 2500 மழலையர் பள்ளிகளை அங்கன் வாடிகளில் 2019-2020ஆம் கல்வி யாண்டிலிருந்து தொடங்க உள்ளது என அறிவித்து விட்டது.
ஏற்கெனவே முதல் வகுப்பிலிருந்தே கணிசமான அரசுத் தொடக்கப் பள்ளிகளின் தமிழ்வழிக் கல்வி யின்றி ஆங்கில வழிக் கல்வியைப் புகுத்தி 70 இலக்கம் இளம் தளிர்மனங்களை படிப்பு என்ற பெயரில் துடிக்கத் துடிக்கக் கருகடித்துக் கொண்டிருப்பதோடு இன்னும் மழலையர் மனங்களையும் கருகடிக்க முற்பட்டுள்ளனர்.
இது நாட்டிற்கும் மக்களுக்கும் இழைக்கப்படும் வன்கொடுமை. இது ஓர் அரச பயங்கரவாதம். எனவே தமிழ்வழிக் கல்வி மட்டுமே தமிழகத்தில் அளித்திடப் பட வேண்டுமென்று அரசுக்கு நெருக்குதல் கொடுத்து மேற்சொன்ன அரசின் திட்டத்தை கைவிடச் செய்ய வேண்டுவது நாட்டிலுள்ள மக்கள் பற்றுள்ளோர் அனை வரின் கடமை.
இதற்கு, அரசுக்கெதிரான போராட்டம்தான் ஒரே வழி. போராட்டப் பாதையில் மக்களை அணிதிரட்டி அனைத்து முற்போக்கு அமைப்புகளும் ஒன்றிணைந்து ஓரணியாய் போர்க்களம் கண்டு வென்றெடுப்போம், தமிழ்வழிக் கல்வியை.