‘புவி நாளான’ கடந்த 22.04.2016 அன்று, நியூயார்க் ஐ.நா. அவை முற்றத்தில் 175 நாட்டுத் தலைவர்கள் பருவநிலை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட நிகழ்வு புவி காக்கும் முயற்சியில் ஒரு படி முன்னேற்றமாகும்.
தொழில் புரட்சி, பசுமைப் புரட்சி, நாகரிக வளர்ச்சி என்ற பெயரால் நிலக்கரி, எரி எண்ணெய் ஆகியவற்றை கண்மண் தெரியாமல் எரித்து, காற்று மண்டலத்தை கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்ற நச்சு வளிகளால் நிரப்பியது முதலாளியம். அதற்கு மாற்று என்று புரட்சிகர ஆற்றல்களால் உருவாக்கப்பட்ட நிகரமை நாடுகளும் அடிப்படையில் இதே வளர்ச்சிப் பாதையைக் கைக்கொண்டன.
இவற்றின் விளைவாக புவியிலிருந்து வெளியாகும் வெப்பம் வளி மண்டலத்திலேயே தங்கி விரைவாக இந்தப் புவிப்பந்து சூடேறியது. இதனால் தாறுமாறான பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டன. எதிர்பாராத வெள்ளம், தாங்க முடியாத நெடுநாள் வறட்சி, பனிமலை உருகுதல், கடல் மட்டம் உயருதல் ஆகியவை நிகழ்ந்தன. சிறியத் தீவுகள் கடலுக்குள் மூழ்கின. நீண்ட கடல்பரப்பைக் கொண்ட நாடுகள் தங்களது பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பை கடலுக்குள் இழந்தன.
தண்ணீர் தட்டுப்பாடு என்பது இன்று உலகின் பெரும்பாலான நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
இவற்றிலிருந்து இந்த புவிப்பந்தை பாதுகாக்க வேண்டுமானால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையை தொழில் புரட்சிக் காலத்தை ஒப்பிட, இந்த நூற்றாண்டு இறுதியில் 2 டிகிரி செல்சியஸ் அளவைத் தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவியல் உலகம் ஆய்ந்து சொன்னதை மிகத் தாமதமா கத்தான் உலக நாட்டுத் தலை வர்கள் ஏற்றுக் கொண்டார்கள். (1850 - 1900 இடைப்பட்ட 50 ஆண்டுகளில் நிலவிய வளி மண்டல சராசரி வெப்ப நிலை தொழில் புரட்சிக் கால வெப்ப நிலையாக கொள்ளப்படுகிறது).
பருவநிலை மாற்றம் குறித்து 1992-இல் கியோட்டோ வில் செய்து கொள்ளப்பட்ட ஐ.நா. உடன்பாடு இதன் ஓர் தொடக்கமாக அமைந்து, கடந்த 2015 திசம்பரில் பாரீசு மாநாட்டில் ஓர் முன்னேற்றகரமான ஒப்பந்தத் தில் நிறைவுற்றது. ஆனால், இந்த இடைப்பட்ட சுமார் கால் நூற்றாண்டில் வளி மண்டலத்தில் கரி உமிழ்தல் ஏறத்தாழ 63 விழுக்காடு அதிகரித்துவிட்டது.
ஆயினும், வரும் 2100-க்குள் புவி வெப்ப உயர்வை 2 டிகிரி செல்சியசுக்குள் நிறுத்துவதை உலக நாடுகள் அவசரக் கடமையாக ஏற்றுக் கொண்டன. இந்த உயர்வை 1.5 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள முயற்சி மேற்கொள்வதாகவும் அறிவித்தன.
இந்தக் குறிக்கோளை அடைவதற்கு ஒவ்வொரு நாடும் செய்ய வேண்டிய சூழல் காக்கும் செயல் திட்டங்களை அந்தந்த நாடுகள் தாங்களே முன்வந்து அளித்தன. இவைதான் இப்பொழுது பருவநிலை ஒப்பந்தமாக கையெழுத்தாகி இருக்கின்றன.
புவி நாளில் பெரும்பாலான பெரிய நாட்டுத் தலைவர்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட் டார்கள். அமெரிக்கக் குடியரசுத் துணைத் தலைவர் ஜான் கெர்ரி உள்ளிட்டு 19 நாட்டுத் தலைவர்கள் தங்கள் கைகளில் குழந்தைகளை ஏந்தி வந்து கையெழுத் திட்டனர். வருங்காலத் தலைமுறைக்கு இந்தப் புவிப்பந்தை பத்திரமாக ஒப்படைப்போம் என்பதற்கான அடையாளமாக இவ்வாறான ஓர் சடங்கு நிறைவேறி யது.
இவ்வாறு தானே முன்வந்து அளித்த திட்டத்தில் வரும் 2050-க்குள் தனது பெட்ரோல் - டீசல் - நிலக்கரிப் பயன்பாட்டை 2005-ஐ ஒப்பிட 40 விழுக்காடு குறைத்துக் கொள்வதாக இந்தியா அறிவித்திருக்கிறது. 300 கோடி டன் கரி உமிழ்தலைக் குறைப்பதற்கு நிகரான அளவிற்கு விரிந்த பரப்பில் இந்தக் கால இடைவெளியில் காடு வளர்க்கப் போவதாகவும் இந்திய அரசு அறிவித்திருக் கிறது. இது போன்று சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் போன்றவையும் அறிவித்திருக்கின்றன.
ஆயினும் இந்த ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா, பகரைன் போன்ற எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் கையெழுத்திடவில்லை. கையெழுத்திடுவதற்கான அறிகுறியும் இல்லை.
ஒவ்வொரு நாடும் திட்டங்கள் அளித்து ஒப்பந்த மாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள சூழல் காப்பு நடவடிக்கைகளை ஆய்ந்த அறிவியலாளர்கள் இதில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை இந்த நாடுகள் நூற்றுக்கு நூறு நிறைவேற்றினால்கூட புவி வெப்ப உயர்வு இந்த நூற்றாண்டின் இறுதியில் 2.9 டிகிரி செல்சியஸ் அளவை எட்டும் என அச்சம் தெரிவித் திருக்கிறார்கள்.
மூன்றாண்டுக்கு ஒருமுறை இதன் செயலாக்கத்தை திறனாய்வு செய்யும்போது, இத்திட்டங்களை மேம்படுத் தாமல் போனால் அறிவிக்கப்பட்டுள்ள வெப்ப உயர்வுக்குள் நிறுத்துவது இயலாத ஒன்றாகி விடும். ஆயினும், இத்திசை நோக்கிய ஒருபடி முன்னேற்ற மாகவே பருவநிலை ஒப்பந்தம் அமைந்திருக்கிறது.
ஆனால், நிலக்கரி, எரி எண்ணெய் ஆகியவற்றுக்கு மாற்றாக அறிவிக்கப்பட்ட திட்டங்களில் அணு மின்சாரம், பாறை (ஷேல்) எரி எண்ணெய், பாறை (ஷேல்) மீத்தேன், துருவப் பனிப்பாறைகளைக் குடைந்து எண்ணெய் எடுத்தல் போன்றவை புவி வெப்பமா தலைவிட மிக வேகமாக பெருமளவு அழிவைக் கொண்டு வரும் திட்டங்களாகும்.
இந்த அழிவானது வளர்ச்சி வாதத்தின் (Growthism) பிரிக்க முடியாத விளைவாகும். குறிப்பாக, நிதி மூலதனத்தால் வழிநடத்தப்படும் தாராளமய முதலாளியம் நீடிக்கும்வரை இந்த அழிவு தவிர்க்க முடியாதது. ஏனெனில், “விரிவடை அல்லது அழிந்துபோ’’ (Expand or Perish) என்பது முதலாளியத் தின் அடிப்படை விதி!
இந்த வளர்ச்சி வாதம் சந்தை விரிவாக்கம், இயற்கை சூறையாடல், வலுவற்ற மக்களின் தாயகப் பறிப்பு, அதற்கான இரக்கமற்ற போர் ஆகியவற்றோடு தவிர்க்க முடியாமல் இணைந்திருக்கிறது.
எனவே, தாராளமய முதலாளியத்திலிருந்தும், வளர்ச்சி வாதத்திலிருந்தும் மீளாமல், இருக்கிற சந்தைப் பொருளியலுக்குள்ளேயே சூழலியல் மாற்றுகளைத் தேடுவது மிக மிக வரம்புக்குட்பட்டதே ஆகும்.
அந்தந்த மண்ணுக்கேற்ப, மண்ணின் வரலாற்றுக் கேற்ப இயற்கையோடு இயைந்த தொழில் மற்றும் வேளாண்மைக் கொள்கைதான் இப்புவியைக் காக்க நிரந்தர மாற்றாக இருக்கும்.
ஆயினும், அதற்கிடையில் வாய்ப்புள்ள அத்தனை மாற்றுகளுக்கும் மக்கள் இயக்கங்கள் தொடர்ந்து போராட வேண்டும். இயற்கையின் குரலாக புவி காக்கும் மக்கள் இயக்கங்களே இருக்க இயலும்.
இல்லையென்றால் அழிவின் விளிம்பில் நிற்கும் மனித குலத்தைக் காப்பாற்ற முடியாது!
ஏனெனில், இயற்கை பேச்சுவார்த்தை நடத்துவ தில்லை. அது அதன் போக்கில் செயல்படும்