2022 டிசம்பர் 19ல் கனடா, மாண்ட்ரீலில் நிறைவடைந்த காப்15 ஐநா உயிர்ப் பன்மயத்தன்மை மாநாட்டிற்குப் பிறகு இயற்கையைப் பாதுகாக்க உலக நாடுகள் வாக்களித்தது போல நடந்து கொண்டனவா? அடுத்த காப்16 மாநாடு கொலம்பியாவில் அக்டோபர் 21 முதல் நவம்பர் 1, 2024 வரை நடக்கவுள்ளது என்று அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் சுசானா முகம்மது (Susana Muhamad) அறிவித்துள்ளார். இந்நிலையில் காப்15 மாநாட்டின் தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
ஒப்புக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அம்சங்களை முழுமையாக நிறைவேற்ற அரசுகள் தயாராகவில்லை என்றால், மீண்டும் அழிவிற்கான ஒரு பத்தாண்டு காலத்தை ஆட்சியாளர்கள் உலக மக்கள் மீது திணிக்க வேண்டியிருக்கும் என்று ஐநா உயிர்ப் பன்மயத் தன்மைக்கான செயல் தலைவர் டேவிட் கூப்பர் (David Cooper) எச்சரித்துள்ளார். அடுத்த மாநாட்டிற்கான எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் போது, வரலாற்றுச் சாதனை என்று போற்றப்பட்ட மாண்ட்ரீல் கூட்டத்தின் உடன்படிக்கை இப்போது உறுதித் தன்மை இழந்துள்ளது.உலகிற்கு எடுத்துக்காட்டாகுமா கொலம்பியா மாநாடு?
கொலம்பியா மாநாடு, காலநிலை அவசர நிலையை சரிசெய்ய உடனடியாக செயலில் இறங்க வேண்டும் என்பதையும், உயிரினங்களின் வாழ்வு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் உலகிற்கு எடுத்துச் சொல்லும் என்று சூசன் முகம்மது கூறுகிறார். புவியில் வாழ்வை நிலைநிறுத்தும் சூழல் மண்டலங்களின் பாதுகாப்பு பற்றி மாண்ட்ரீல் மாநாட்டிற்கு முன்பு எந்த ஐநா மாநாடும் எந்த உடன்படிக்கையையும் நிறைவேற்றவில்லை.
காப்15 மாநாட்டின் 23 இலக்குகளில் பூமியின் 30% நிலப்பகுதியை இயற்கை பாதுகாப்பிற்கு ஒதுக்குதல், சூழலை சேதப்படுத்தும் திட்டங்களுக்கு வழங்கப்படும் பில்லியன் கணக்கான மானிய சலுகைகளை மறுசீரமைத்தல் மற்றும் வளமிழந்த சூழல் மண்டலங்களை மீட்டெடுத்தல் போன்றவை அடங்கும். கன்மிங்-மாண்ட்ரீல் ஒப்பந்தம் (Kunming-Montreal framework) என்று அழைக்கப்படும் உடன்படிக்கை சமீபத்தில் துபாயில் முடிந்த காலநிலை மாநாட்டின் இறுதி அறிக்கையில் இடம் பெற்றதால் புது உத்வேகம் அடைந்துள்ளது.
2025 பிரேசில் காலநிலை மாநாட்டில்
2025 பிரேசில் காப்30 மாநாட்டிற்கு முன்னதாக, மாண்ட்ரீல் உடன்படிக்கையை கருத்தில் கொண்டே நாடுகள் தங்கள் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். 2025 பிரேசில் காப்30 மாநாட்டில் ஒவ்வொரு நாடும் அவை இயற்கைப் பாதுகாப்பிற்கு மேற்கொண்ட செயல்கள் பற்றிய விவரங்களை (NDC) சமர்ப்பிக்க வேண்டும். உயிர்ப் பன்மயத் தன்மையும் காலநிலையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்பதை ஆட்சியாளர்கள் உணர இது ஓர் அரிய வாய்ப்பு.
துபாய் மாநாட்டின் இறுதி அறிக்கையில் 2030ம் ஆண்டிற்குள் வன அழிவை நிறுத்துதல், இயற்கைப் பாதுகாப்பில் ஆதிவாசி சமூகங்களின் முக்கியப் பங்கு ஆகிய அம்சங்கள் சேர்க்கப்பட்டன. தீமை தரும் மானிய உதவிகள், மாசுபடுதல் போன்றவற்றைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பூமியின் 30% நிலப்பகுதியை இயற்கைக்காக ஒதுக்குதல் என்பது மீண்டும் ஒரு தோல்விக்கே வழிவகுக்கும் என்று டேவிட் கூப்பர் கூறுகிறார்.
அழியும் ஆபத்தில் இரண்டு மில்லியன் உயிரினங்கள்
வாழிட இழப்பு, மாசுபடுதல், ஆக்கிரமிப்பு உயிரினங்கள், காலநிலை மாற்றம் மற்றும் நேரடி சுரண்டலால் இரண்டு மில்லியன் உயிரினங்கள் அழியும் ஆபத்தில் உள்ளன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பூமி தொடந்து சூடாவது உயிரினங்களின் வாழ்விற்கு முதன்மை அச்சுறுத்தலாக மாறியுள்ளது. வெப்ப உயர்வை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்தவில்லை என்றால் இழந்த உயிர்ப் பன்மயத் தன்மையை மீட்டு அதன் அழிவைத் தடுத்து நிறுத்த முடியாது.
மண், தாவரங்கள், புல்வெளிப் பகுதிகள் மற்றும் காடுகளில் கார்பன் சேமிப்பு என்பது சூழல் மண்டலங்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே உள்ளது. 2023ல் பிரேசில் மற்றும் கொலம்பியாவில் அமேசான் காடுகள் அழிக்கப்படுவதும், மலேசியா மற்றும் இந்தோனேஷியாவில் வன அழிவின் வேகமும் முதல்முறையாகக் குறைந்துள்ளது.
நன்மைகளைப் பகிர்ந்து கொள்ளுதல்
காப்15 மாநாட்டில் இயற்கைப் பாதுகாப்பிற்காக நிதி ஒதுக்கப்பட்டது. இயற்கை வளங்கள் மூலம் மருந்துகள் கண்டுபிடிப்பு, தடுப்பூசிகள், உணவுப் பொருட்கள் உருவாக்கப்படுதல் போன்றவற்றால் கிடைக்கும் பொருளாதார நன்மைகளை நாடுகளுக்கு இடையில் பகிர்ந்து கொள்ளுதல் பற்றி காப்15ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. “நாகரீக மனித சமூகம் உருவாக வேண்டும் என்றால் இயற்கை பாதுகாக்கப்பட வேண்டும்.
"1.5 டிகிரிக்குள் வெப்ப உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு சமமான உடன்படிக்கையே 30% நிலப்பகுதியை இயற்கைப் பாதுகாப்பிற்காக ஒதுக்க வேண்டும் என்ற மாண்ட்ரீல் ஒப்பந்தம்” என்று முன்னணி காலநிலை ஆய்வாளரும் பாட்ஸ்டம் (Potsdam) காலநிலை ஆய்வுக்கழகத்தின் இயக்குனருமான ஜோஹன் ராக்ஸ்ட்ரம் (Johan Rockström) கூறுகிறார்.
"படிப்படியாக நிலக்கரி, எண்ணை மற்றும் எரிவாயுவின் பயன்பாட்டைக் குறைப்பது மற்றும் புதைபடிவ எரிபொருட்களைத் தடை செய்யும் உடன்படிக்கைக்காக மற்ற நாடுகளுடன் இணைந்து கொலம்பியா வலியுறுத்துகிறது” என்று அதன் அதிபர் கஸ்ட்டாவோ பெட்ரோ (Gustavo Petro) காப் 28 மாநாட்டில் கூறினார்.
116 நாடுகள் தற்போது கையெழுத்திட்டுள்ள நிலையில் சீனா தன் கடல் மற்றும் நிலப்பகுதியின் 30 சதவிகிதத்தை இயற்கை பாதுகாப்பிற்காக ஒதுக்கியது. இதன் மூலம் இதற்கான குழுவில் சீனா புதிதாக சேர்ந்துள்ளது என்று இயற்கைப் பாதுகாப்பிற்கான உயர் குறிக்கோள் கூட்டமைப்பின் இயக்குனர் ரீடர் எல் சாக்ஃப்லாவ்ல் (Rita El Zaghloul) கூறுகிறார்.
எதிர்பார்ப்புகளுடன் கொலம்பியா மாநாடு
“போதுமான நிதியுதவி, உண்மையான அக்கறை மற்றும் உலகின் 80% உயிர்ப் பன்மயத்தன்மை செழுமையுள்ள இடங்களின் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றும் ஆதிவாசி மக்களின் மேம்பாட்டுக்கு காப்16 மாநாட்டில் நல்ல முடிவுகள் ஏற்படும்” என்று பன்னாட்டு இயற்கை வளச்சங்கத்தின் (IUCN) தலைவரும் காப்28 மாநாட்டின் காலநிலை சாம்பியனுமான ராஸன் அல் முபாரக் (Razan Al Mubarak) நம்பிக்கை தெரிவிக்கிறார்.
நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டதால் 2023ல் துருக்கியில் நடைபெற வேண்டிய உயிர்ப் பன்மயத் தன்மை மாநாடு நடக்கவில்லை. சரியான இலக்கு, போதுமான கவனம், நடைமுறைப்படுத்துவதில் அரசியல்பூர்வமான அக்கறை, நிதி ஒதுக்கீடு போன்றவற்றின் மூலம் இயற்கையைப் பாதுகாக்க முடியும் என்பதை பிரேசில் அதிபர் லூலா (Lula ) நிரூபித்துள்ளார். இந்தோனேஷியா இதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. ஆள்வோர் தங்கள் சுய நல நோக்கங்களை கைவிட்டு இயற்கையைப் பாதுகாக்க இந்நாடுகளை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட முன்வர வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
** ** **
மேற்கோள்கள்: https://www.theguardian.com/environment/2023/dec/18/cop15-montreal-has-world-lived-up-to-promises-aoe?
&
https://en.m.wikipedia.org/wiki/2024_United_Nations_Biodiversity_Conference
- சிதம்பரம் இரவிச்சந்திரன்