கருஞ்சட்டை சிறுவனாக உசிலம்பட்டி அருகிலுள்ள பன்னியான் கிராமத்தில் உலவிக் கொண்டிருந்த ஏகாதசி, திருப்பரங்குன்றம் கலை இலக்கிய இரவு பிரமாண்டத்தாலும், கருத்துவளப் புதுமைகளாலும் ஈர்க்கப்பட்டு முற்போக்கு இயக்கத்துக்குள் பிரவேசித்தவர். மண்வாசனைக் கவிஞர். புதுக்கவிதைக்குரிய தெறிப்பும் செறிவும் பொருந்திய தெம்மாங்கு மொழிக் கவிதைகள் எழுதுவதில் தனித்துவ ஆற்றல்மிக்கவர்.

கலைப் பயணப் பரப்புரைக்காக தமுஎச தயாரித்த இசைப்பாடல் குறுந்தகட்டில் இவருடைய பாடலும் பங்கெடுத்திருந்தது. இவர் எழுதிய பல பாடல்கள் கலை இலக்கிய இரவுகளின் அனைத்து மேடைகளிலும் ஒலிக்கும். இதயங்களை நெகிழ்த்தும். "ஆத்தா ஓஞ் சேலை" என்ற பாடல் தமிழ்நாட்டு மேடைகள் தோறும் தாய்ப்பாசச் சாரலால் மக்கள் மனசை நனைக்கும்.

"மைனா" பிரபு சாலமன், தருண் கோபி, "மாயாண்டி குடும்பத்தார்" ராசு மதுரவன் போன்ற ஆற்றல்மிக்க இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றிய பயிற்சி அனுபவச் செறிவுடன் இவர் இயக்கி வெளிவந்திருக்கிற புதிய திரைப்படம், "கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை". கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியதுடன் கதாநாயகியை திருமணம் செய்து சென்னைக்கு அழைத்துச் செல்கிற கணவன். காசிமாயன் பாத்திரத்தில் நடித்திருக்கவும் செய்கிறார்.

அறிமுக நடிகர் தேஜா, அறிமுக நடிகை நட்சத்திரா, புதுமுக இயக்குநர் ஏகாதசி என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல், வலுவான கதையையும், காட்சிப்படுத்துகிற கலை நேர்த்தியையும் மட்டுமே நம்பி தயாரித்திருக்கிறார் 'துவார்' ஜி.சந்திரசேகர். மைனா படத்திற்கு ஒளிப்பதிவு செய்த அதே சுகுமார் தான் இந்தப் படத்தின் கிராமீயக் காட்சிகளை யதார்த்தமாக படம்பிடித்திருக்கிறார். இசையமைப்பாளர் பரணியின் வார்ப்பில் ஏகாதசியின் அத்தனை பாடல்களும் மனசை வருடி, உயிருக்குள் உரசுகின்றன. மண் வாசனைக் கவிஞரின் கதையிலும் வசனங்களிலும் அச்சு அசலான மண்வாசனை.

உலக மொழித் திரைப்பட டி.வி.டி களையெல்லாம் போட்டுப் பார்த்து அலசித் தேடினாலும், இணையதளத்தின் எல்லா மூலைகளிலும் உள் நுழைந்து துழாவித் தேடினாலும் "இந்த மொழிப் படத்தின் நகல்" என்று உல்டா பண்ணிக் கூட ரீல் விட்டுவிட முடியாது. ஏனெனில், இந்தப்படத்தின் கதை, இந்த மண்ணின் கதை. பகைவெக்கையும், வன்முறைக் கத்திப்புழக்கமும் உள்ள யதார்த்த மண்ணின் வாழ்வு.

வன்முறைக் குரூரமும் ஆயுதப் பிரயோகிப்புப் பழக்கமுமுள்ள கிராமங்களிடையே எழுகிற ஊர்ப்பகைத் தீயில் கருகித் தீய்கிற காதல் நந்தவனம் ஒன்றின் கண்ணீர் என்றும் ஒரு வரிச் செய்தியாக கதையை சொல்லி முடிக்கலாம்.

செய்தி மட்டுமல்ல கதையும் கலையும். கதையின் விவரிப்புகளிலும் கட்டுமானப் புதுமையிலும் தான் கலையின் மலர்ச்சி இருக்கிறது.

கதையின் துவக்கமே புதிர் மீகு நீள்சம்பவ அடுக்குகள் வர இருப்பதை ஊகிக்கச் செய்கிற துவக்கம்.

சென்னை செல்ல இருக்கிற பேருந்தில் உட்கார்ந்து உறங்குகிற கணவன். கதாநாயகியின் கணவன். பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற மனைவியை அங்கும் இங்கும் பார்த்தாலே சந்தேகப்படுகிற கணவன். பேருந்தில் உட்கார்ந்திருக்கிற கதாநாயகி கோமதி, தூரத்தில் ஒரு கடையின் கூட்டத்தில் காதலன் மகியை பார்த்து, பதைப்பும் அவசரமுமாக இறங்கி அவனைத் தேட, இவளைத் தேடி வந்து பிடிக்கிற கணவன்.

சென்னைக்கு நகர்கிற கதை. சென்னை வீதிகளில் கொஞ்சமாகவும், பெரும் பகுதி உசிலம்பட்டியை சுற்றியுள்ள கிராமத் தெருக்களிலும் கொந்தளிக்கும் வாழ்க்கையாக பயணப்படுகிறது.

மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழாவுடன் கதை கிராமத்தில் துவங்கி, மகேந்திரனுக்கும் கோமதிக்கும் இடையில் முகிழ்க்கிற காதல். கம்மங்காடு, மக்காச்சோளக்காடு என்று செங்காட்டு மண்ணிலேயே காதலுக்கான நிகழ்வுகள் நடக்கின்றன. புகைப்படம், கடிதம் கபடி என்று இரண்டு சிறிசுகளின் காதல் பூ மலர்வில் கவித்துவமான குறும்புகள் நிறைய. விளையாட்டுகளும் வேடிக்கைகளும் வெடிச் சிரிப்புகளுமாக நிறைய சம்பவங்கள். அப்படியே கிராமத்து மண்ணின் பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள்.

பகையுள்ள இரு ஊர்களுக்குமிடையே பகையை வளர்க்கிற பல்வேறு சம்பவங்கள். கோவில் திரு விழாவில், மேடை நாடக நிகழ்வில், ஜல்லிக்கட்டில் கந்துவட்டிக்காரன் செயலில், அவனது கொலையில், மகியின் சித்தப்பா சாவில் பகைத் தீ சுவாலை விட்டெரிகிறது.

காதல் கடிதத்தை இருவரும் ஒளித்து வைக்கிற இடமும், தனித்து சந்தித்துக் கொள்கிறபாழ் மண்டபமும் கிராமத்துக்கேயுரிய தனித்துவம்.

கம்பங்காடே ஊர்ப்பகையில் தீப் பற்றி எரிகிற காட்சியில் மனசு கிடந்து பதைக்கிறது.

காதலன் மகிக்கு கோமதி மீது வெறுப்பும் விரக்தியும் ஏற்படுகிற ரகசியத்தை யதார்த்தம் குன்றாத விதத்தில் மறைத்து வைக்கிற நேர்த்தி, கதையை நிமிர்த்தி நிறுத்துகிறது.

பேயாடுகிற கோமதி, உடுக்கடிக்கிற கோடாங்கி பாழ்மண்டபக் கதை யாவுமே கிராமத்து யதார்த்தம் நழுவாத மூட நம்பிக்கை எதிர்ப்புகள்.

கோமதியின் கணவனாக நடிக்கிற ஏகாதசி, அந்தப் பாத்திரத்துக்கு சாகாவரம் தருகிறார்.

மீசையும், பெல்ட்டும், ஜிப்பாவும், மைனர் செயினும் மகத்தான அலட்டலுமாக அலப்பரை பண்ணுகிற அந்தப் புருஷன், ஆண்மையற்றவன் என்பதுவும், அவனது சந்தேகக் கத்தி கோமதியை ஓயாமல் குத்திக் கிழிப்பதுவும் கதைக்கும் ஒரு புதுமை சேர்க்கிறது. அந்தப் பாத்திரத்தில் நடிக்கிற ஏகாதசி அந்தப் பாத்திரத்துக்கு உயிர்ப்பும் உணர்ச்சியுமான நம்பகத் தன்மை தருகிறார்.

காதலின் முகிழ்ப்பில் எத்தனை கலகலப்பும், துள்ளலும், மனக்குளுமையும் ஏற்படுகிறதோ அதே அளவுக்கு காதலின் பிரிவு தருகிற வலிகளும், சோகமும், துயரார்ந்த உணர்வுகளும் செம்போத்துப் பறவையின் ஏக்கக் கீதமாக ஒலிக்கிறது.

கிராமத்து திருவிழா, மேல்நிலைப்பள்ளி நிகழ்வுகள், கிராமத்து மனிதர்களின் பாச உணர்வுன்னதங்களும், கோபதாப கொலைபாதகங்களும் என்று நீள்கிற சம்பவங்கள் ஒரு கிராமத்துக்குள் வாழ்கிற பேரனுபவத்தைத் தருகிறது.

தாய்மாமன் சதி வலைகளும், மூர்க்கமும் ஆத்திராவேசமும் சித்தரிக்கப்பட்டிருக்கிற நேர்த்தியில், அவனது செயலுக்கு அடி நாதக் காரணமாக ஊர்ப்பகை இருக்கிறது என்பதில் போதிய அளவுக்கு சித்தரிக்கப்படவில்லை.

சந்தேகப்பட்டு ராட்சஸ மூர்க்கம் காட்டி கொடுமை செய்கிற கணவனின் கொடூரத்தால் துயரப்படுகிற கோமதியின் சோகத்தையும், காதல் வயப்பட்ட கோமதியின் துள்ளலையும் முழுசாக அற்புதமாக சித்தரிக்கிற திரைப்படம், காதல் பிரிவுக்கெதிரான கதாநாயகனின் செயலின்மையை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறது.

இப்படி ஒன்றிரண்டு பலவீனங்கள் இருந்த போதிலும் இதையெல்லாம் நினைக்க விடாத சுவாரஸ்யங்களும், நெஞ்சுக்கு நெருக்கமான கிராமத்து வாழ்வின் யதார்த்தங்களும், ஊர்ப்பகையின் மூர்க்கத்தில் காதலையும், வாழ்வையும் இழக்கிற இரண்டு ஜீவன்களின் துயரமும், படத்தின் துயரார்ந்த முடிவின் யதார்த்தமும் நெஞ்சில் நிலைக்கின்றன.

ஒரு புதிய கிராமத்துக் காதல் கதையை யதார்த்தத்துடன் சமூக யதார்த்தத்தையும் இணைத்துச் சொன்ன ஒரு புதிய திரைப்படமாக முத்திரை பதிக்கிறது. ஏகாதசியின் மண் வாசனைச் சினிமாவான "கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை".

Pin It