"மூணு மணிக்கெல்லாம் தூக்கிருவோம்" -னு சுந்தரம் சொன்னான். அடுத்த வண்டிக்குப் போனா நேரமாகும்னு சொல்லிக் கொண்டே படிக்கட்டு வரை நின்று கொண்டிருந்த ஜனத்தை தள்ளிக் கொண்டு ஏறினான் பாலு. அவன் மனைவி சுகந்தியும் ஒரு வழியாய் படியைத் தாண்டி உள்ளே சென்றாள்.

ம்... மதுரை வரை நின்னுக்கிட்டே தான் போகணுமா? கம்பியை பிடித்தவாறு முன்னோக்கி நகர்ந்தாள்.

ஜன்னலருகில் அமர்ந்திருந்த பெண் சுகந்தியைப் பார்த்து

ஏம்மா.. நீங்க இரெட்டியபட்டி காரவீட்டம்மா பேத்திதானே?

ஆமாம்...

ஏய்யா... எழுந்திருச்சு அம்மாவுக்கு எடம்குடு. தம்புருசனை எழுப்பி விட்டாள்.

ஏம்மா... ஐயாவும் வந்துருக்காங்களா? என தானும் எழ முயன்றாள்.

பாலு வேண்டாம் என கையமர்த்தினான். சுகந்தி மட்டும் உட்கார்ந்து கொண்டாள்.

ஏம்மா... ஆச்சி சாகும் போது எத்தனை வயசிருக்கும்? ஒரு எழுபதிருக்குமா?

எழுபத்தி ஆறு.

இரெட்டிய பட்டியில் அதுதான் முதல் தார்சு குத்துன மச்சு வீடு. இலச்சுமி அம்மாவின் மாமனார் கட்டியது. ஊரில் அனைவரும் லச்சுமி அம்மாளை காரவீட்டாச்சி, காரவீட்டுப் பெரியம்மா என்று தான் அழைப்பார்கள். ஆச்சிக்கு சுகந்தியின் அப்பாவும், அத்தையும் இரண்டே குழந்தைகள் தான் தாத்தா சாகும்போது ஆச்சிக்கு இருபத்திரெண்டு வயது. அப்பாவுக்கு இரண்டரை வயது. சுகந்தியின் அத்தையோ ஆச்சியின் வயிற்றில் எட்டுமாதம். அன்றிலிருந்து ஆச்சி, பதினாறு முழம் வெள்ளைச் சேலை தான். ரவுக்கை கிடையாது. வெள்ளைச் சேலையும் முன் கொசம் வச்சுக் கட்டறதில்லை. சுத்துக் கட்டுதான். மாராப்போடு கழுத்தை சுத்தி இடுப்பில் சொருகியிருப்பாள். வலது கை மட்டும் வெளியே தெரியும். ஒரு குன்னி முத்து தங்கம் மேல போட்டுக்கிட்டது இல்லை. தலையில் எண்ணெய் வைத்து அள்ளி முடிந்திருப்பாள். நெற்றியில் பட்டையாய் திருநீறு. நல்ல உயரம். தோலுக்கும், நரம்புக்கும் சொந்தமில்லாமல் கை, முகம் எல்லாம் சுருக்கு விழுந்திருக்கும். வரிச்சுக் கட்டபோல மெலிந்த திரேகம். சுகந்தியின் மகன் கூட 'சட்டை போடாத தெரசா பாட்டி'...னு தான் சொல்லுவான்.

"ஆச்சி செத்து மூணு வருசமிருக்குமா?"-என்ற கேள்வியை கேட்டவுடன் ஆச்சி நினைவிலிருந்து திரும்பினாள் சுகந்தி.

"நாலு வருசமாச்சு"

"நாலாச்சா... நாளு ஓடறதே தெரியலை. நானும் அப்பப் போயி இரெட்டிய பட்டியில் ஒரு வாரம் இருந்தது தான். அப்புறமா போக முடியலை. எங்க... நமக்கு வருசமெல்லாம் பாடு சரியா இருக்கு." அப்ப ஊரே ஒரு வாரமாய் காரவீட்டுத் தின்ணையிலதான் இருந்தது.

ஆச்சிக்கு அஞ்சு நாளா ரொம்ப முடியலை. கை, கால் எல்லாம் போட்டது போட்டபடி. ஒரு சொட்டுப் பால் இறங்கலை.

"இன்னைக்கு நெறஞ்ச அம்மாவாசை எப்படியும் அடிச்சுரும்" கிராமத்து வயதான பெண்கள் கூறிக் கொண்டார்கள்.

வீட்டு வெளித் திண்ணை, உள் முற்றம், வெளி முற்றம், பட்டா சாலை, நடுக்கட்டு எல்லாம் ஆட்கள். மூணு நாளா சமையலுக்கு ஆள்வைத்து சாப்பாட்டு பந்தி ஒரு பக்கம். விடிய, விடிய சீட்டு, கடகம் நிறைய வெத்தலை, சந்தைக் கடை சேவு, கடுங்காப்பினு இராத் தூக்கமில்லாமல் ஊரே முழிச்சுக் கிடக்கு.

உள்ளூர்ல நாலு நாளா ஒரு சனம் வேலைக்குப் போகலை. வெளியூர்ல கட்டிக் கொடுத்த பெண்கள் கூட காரவீட்டாச்சிக்கு ரொம்ப முடியலையாம் எட்டிப் பாத்துட்டு வந்துருவோம்னு பிள்ளை, குட்டியோட வந்துவிட்டாக, பங்காளி, பகையாளி... ன்னு எல்லோரும் நுழையற ஒரே வாசல் காரவீட்டு வாசல் தான்.

இதெல்லாம் காரவீட்டாச்சி கையால பிள்ளைச் சோறு தின்னு வளர்ந்த உடம்புடா என இளவட்டங்கள் பெருமை பேசிக் கொண்டார்கள்.

"பெரிய திண்ணை வாசப்படிக்கு கீழ் ஓரமாய் தெக்குத் தெரு கிண்ணம். மேல இடப்பக்கம் மத்த சாதின்னு அவங்க அவங்களா வந்து கிண்ணத்தை வச்சுட்டுப் போயிருவோம். ஒரு மணிக்கெல்லாம் கிண்ணம் நிறைய சோறும். பருப்புமா வச்சுக்கிட்டு உக்காந்திருப்பா" என்றாள் மகமாயி.

"நாம பேசாம தெருவழியா போனாலும் 'ஏய், குருவம்மா உங்கப்பனுக்கு முடியலைன்னு சொன்னாங்களே?! இப்ப எப்படியிருக்கான்? எழுந்து நடமாடுற வரைக்கும் நாலு நாளைக்குச் சுடு சோறு வாங்கிக் குடுடீ!"-னு கூப்பிட்டு குடுப்பா இந்த ஆத்தா - என்றாள் குருவம்மா.

"தாம் பிஞ்சைல வேலைபாக்குறவுக, பாக்காதவுகங்ற கணக்கெல்லாம் கிடையாது. குடியானவுக வீட்ல ஒரு பொண்ணு சமையறதுக்கு முன்னாடி உளுந்தும், கருப்பட்டி வட்டும் உடனே வந்துரும்"- என்றாள் லிங்கம்மா.

"ஒரு நா இராத்திரி பத்து மணி இருக்கும். மழ 'சோ'-ன்னு ஊத்திக்கிட்டு இருக்கு.

"புதுரா... புதுரா..." சத்தங்கேட்டு வெளியே வந்து பாத்தா "இந்தம்மா". கையில லாந்தரோட, சாக்கப் பொத்திக்கிட்டு நிக்குறா.

என்னம்மா? -ன்னு கேட்டேன்.

"மத்தியானம் சாப்புட்டு ஆயாசமா வருதுன்னு ஊருக்குள்ள வந்த குறத்தியொருத்தி திண்ணைல படுத்திருந்தா. நெறமாசச்சூலி, தலப்புள்ளைனு சொன்னா. மேகம் இருட்டிகிட்டு வருது. காலைல போன்னு நாந்தான் சொன்னேன். இப்ப வலி வந்துருச்சுங்கறா. இடுப்புக்கு கீழே வென்னி வச்சு ஊத்தி, சீரகக் குடுணியும் குடிக்க குடுத்தேன். கேக்கலைங்கறா... செத்த நீ வந்து பாத்துட்டுப் போ". அப்படினு சொன்னாரு.

"இங்க வந்து பாத்தா. அது சூட்டுவலி இல்ல.. புள்ள வலி.. ராவே திண்ணைல ஏணிப்படி ஓரமா சாக்ககட்டி மறசல் போட்டு பேருகாலம் பாத்தேன். ஆம்பளப்புள்ள. இந்தப் புண்ணிய வாட்டி அஞ்சு நாளா வச்சிருந்து, துணிமணி அலசிப் போட்டு, பச்ச மருந்து அரச்சு ஊத்தி, வெள்ளப்பூடு போட்டு பத்தியக் கொழம்பு வச்சு, பெத்த தாயி கணக்கா கவனிச்சுக் கிட்டாரு. அஞ்சா நாளு வண்டி கட்டி விளாத்தி குளம் வைப்பாத்து பக்கம் இருந்த அவ கூட்டத்தோட கொண்டு விட்டாரு" மகராசி.... லச்சுமி ஆச்சியை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டாள் உள்ளூரு மருத்துவச்சி புதுரா.

"கருப்பா... எத்துப்பல்லா... ஒரு நரிக்குறத்தி அஞ்சாறு மாசத்துக் கொருதரம் ஊருக்குள்ள வருவாளே... அவளா..?" என்றாள் கிட்ணம்மா.

"ஆமா...ஆமா.. நா பேறுகாலம் பாத்த பையனுக்குக் கூட பொட்டப்புள்ள பிறந்துருச்சாம். பேரு லச்சிமி-னு வச்சிருக்கு-னு ஒரு தடவை சொன்னா."

"அதான்ன.. போன தடவை வந்தப்ப என்ன? இந்த பக்கம் அடிக்கடி வரய்யே? -ன்னு கேட்டேன்.

'இது என்னோட குலசாமி வூரு சாமியோவ்'-னு சொன்னா" என குறத்தி மாதிரியே கூவினாள் கிட்ணம்மா. இப்படி ஆளாளுக்கு லச்சுமியம்மா கதை பேசி இரவைக் கடத்தினார்கள்.

விடியாம நாகலாபுரம் மேஸ்திரி வேலைக்கு ஆள்தேடி இரெட்டிய பட்டி வந்தார். "

"ஏம்பா மேஸ்திரி சத்தம் போடுறார். என்ன செய்ய?" கருப்பன் தம் பெஞ்சாதியிடம் கேட்டான். "அப்படி ஒண்ணும் நீ வேலைக்குப் போயி கோட்டையை கட்ட வேணாம்!

சாரங்கட்டிறப்ப கால் ஒடிஞ்சு கெடந்தியே. அப்ப இந்தம்மாதான் காசக் குடுத்து "போயி விளாத்திகுளம் வைத்தியருக்கிட்ட கட்டுப் போடு, புள்ள குட்டிக்காரி ஆம்பளையாளு வேலைக்குப் போகலைன்னா என்ன செய்வே?"-னு சொன்னா. "வேல பாத்த கூலியில் கழிச்சுகோங்கமானு" சொன்னப்ப கூட 'போடி அங்கிட்டு ஒரு ஆத்திர அவசரத்துக்கு உதவுறதை எல்லாம் கணக்குப் பாத்துட்டு'னு சொன்னா. அந்த நன்னி இருந்தாத்தான் நாளைக்கு நம்ம புள்ளகுட்டிக நல்லாயிருக்கும்' என கருப்பனைச் சடைத்தாள்.

"ஆச்சி.. ஆச்சி.."-அழுதவாறு உள்ளே நுழைந்தாள் ஒரு பெண்.

"ஆச்சி.. ஆச்சி..." என அழைத்துக் கொண்டே ஆச்சியின் முகத்தை வருடிக் கொடுத்தாள்.

"யாரும்மா... அசலூரா..?

"நான் கொமட்டையா புரம்... ஒரு நா.. கடைசி வண்டிக்கு ஊருக்குத் திரும்புறப்ப இரட்டைப் போஸ்ட்கிட்ட வண்டி பஞ்சர்ன இறக்கி விட்டுட்டாங்க. நானும் என் வீட்டுக்காரரும் இங்க தின்ணைல படுத்துட்டு காலைல நடந்து போயிரலாம்னு வந்தோம். அப்ப இராத்திரி பதினொரு மணியிருக்கும்" எனக்கூறியவாறு ஆச்சியின் வலது கையை எடுத்து தன் உள்ளங்கையில் வைத்துத் தடவிக் கொடுத்தாள்.

"எம்... மக அப்ப கைப்புள்ள ஒரே அழுகை. ஆச்சி, வந்து ஏம்மா, சாப்பிட்டயாம்மா"னு கேட்டாக. இல்லைனு சொன்னேன். உடனே படுத்திருந்தவுக எந்திரிச்சு உள்ள போனவுகதான் பத்து நிமிசத்துல தட்டுநிறைய கோதுமைத் தோசையும், சட்னியும் கொண்டு வந்து கொடுத்து நீயும் உன் வீட்டுக்காரரும் சாப்பிடுங்கனு சொன்னாக. பாருங்க...

"இத்தன வயசுலேயும் அன்னியாரத்துல பருத்திமாரப் போட்டு எரிச்சு, தோசை ஊத்தி, அம்மியில சட்னி அரச்சுக் குடுக்கணும்னு என்ன இருக்கு. நாங்க அதுக்கு முன்னாடி ஆச்சியைப் பாத்தது கூட இல்ல.... "என ஆச்சியின் உள்ளங்கையைத் திருப்பி தன் கண்களில் வைத்து அழுதாள்.

காரவீட்டு படியேறியவர்களின் பசியைப்போக்கிய அந்தக் கை எந்த உணர்ச்சியுமின்றி கொமட்டையாபுரத்தாளின் கண்ணீரால் நனைந்து கொண்டிருந்தது.

"ஆமா... ஆமா... இப்ப உள்ள காலத்துல பெத்தபுள்ள வீட்டுக்கு போறதுனாலும் சாப்பாட்டுக்கு வர்றோம், சாப்பிட்டு வர்றோம்னு விபரம் சொல்லித்தான் போக வேண்டியிருக்கு" என்றாள் லிங்கம்மா.

சாயங்காலம் ஆறுமணி இருக்கும் லச்சுமி ஆச்சியின் வாயிக்கும், நெஞ்சுக்கும் வெட்டி, வெட்டி இழுத்தது. பேரன் பேத்தி எல்லோரும் பால் ஊத்தினார்கள். ஆச்சியின் வலதுகை விரல்களில் திருநீறு வைத்து ஊரே தங்கள் நெற்றியில் இட்டுக் கொண்டது.

"நம்ம ஊர விட்டே லச்சுமி போயிருச்சே" பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதார்கள்.

சுகந்தி, ஸ்டாப் வந்துருச்சு இறங்கும்மா என்ற கணவனின் குரல் கேட்டு படக்கென எழுந்தாள். வர்ரேங்க... இடம் கொடுத்த பெண்ணைப் பார்த்து கும்பிட்டாள். "காரவீட்டு பிள்ளைகளுக்கு அந்த ஆண்டவன் என்னைக்கும் குறை வைக்க மாட்டான்." அந்தப் பெண் கூறியது சுகந்தியின் காதில ஒலித்துக் கொண்டேயிருந்தது.

கால் வைக்கவே கூசும் அளவிற்கு பளிச் சென்றிருந்தது பளிங்குத் தரை. சுகந்தி வீட்டுக்குள் நுழைந்தாள். பெரிய பத்தி உள்ள அங்குமிங்குமாய் ஒரு பத்துப் பதினைந்து பெண்கள். ஒரு மூலையில் கண்ணாடிப் பெட்டியினுள் பாக்கியத்தம்மாள்.

பாக்கியத்தம்மாள் முன்னாள் ஆசிரியை. கிராமத்தில் வேலை பார்த்தவர். ஓய்வுக்குப் பின் மதுரை வந்து பத்து வருடங்கள் இருக்கும். சுந்தரம் ஒரே பையன் மற்றும் மூன்று பெண்கள் என சொன்ன ஞாபகம். சுந்தரமும், பாலுவும் சிநேகிதர்கள். சுகந்திக்கு சுந்தரத்தின் மனைவியைத் தவிர வேறு யாரையும் தெரியாது. அவளையும் ஒரே தடவை தான் பார்த்திருக்கிறாள். கண்ணாடிப் பெட்டியினருகில் சிறிது நேரம் நின்றாள். உள் அறையிலிருந்து வந்த சுந்தரத்தின் மனைவி கையைப் பற்றினாள்.

"எப்படிம்மா... ஆச்சு..?"

"ஒரு மாதமாய் ரொம்ப முடியலை. எல்லாம் படுக்கைலதான். இன்று காலைல ஆறுமணி இருக்கும் இறந்துட்டாங்க" என்றாள்.

"உக்காருங்க அக்கா"

"மகன எங்கம்மா?"

"உள்ளே தூங்குறான்"

"அவரோட அக்காவெல்லாம் வந்துட்டாங்களா?"

"காலைல உசுருபோனவுடன் சொல்லியாச்சு. எல்லாரும் மதுரைலதான் இருக்காங்க, இன்னும் ஒருத்தர் கூட வரலை". குழந்தையின் அழுகுரல் கேட்டவுடன் உள்ளே சென்று விட்டாள்.

சுகந்தி, கண்ணாடிப் பெட்டியினருகில் அமர்ந்தாள். அறையே அமைதியாய்.

"எப்ப தூக்குவாங்க.... ?" பக்கத்திலிருந்த பெண் கிசுகிசுத்தாள்.

"தெரியலையே..?!... மூன்றரை மணிக்குன்னு சொன்னாங்க.

இப்ப இரண்டுதானே..." ஆகுது.

"பிள்ளைக பள்ளிக் கூடம் விட்டு வந்துரும்" என்றாள் ஒரு பெண்.

"என் மகன டீயூசன்-ல கொண்டு போயி விடணும்" என்றாள்

மற்றொருத்தி. ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னார்கள். இருந்த பத்துப் பேரும் கடிகாரத்தின் மீது ஒரு கண்ணும் பாக்கியத்தம்மாள் கண்ணாடிப் பெட்டியின் மீது ஒரு கண்ணுமாய் அமர்ந்திருந்தார்கள்.

"என்ன வயசிருக்கும்?"

"எழுபத்தி ஆறாம்"

"எழுபத்தி ஆறு-ன்னாலும் கிழவி எக்கச்சக்கமாய்

சொத்து சேத்து வச்சிருக்கு. ஊர்ல உள்ள தோட்டம், வீடு வித்த பணம், ஓய்வூதியம் எல்லாம் வட்டிக்குக் கொடுத்து பெருக்கி வச்சிருக்கு... அதப் பாகம் பிரிக்கிறதில்தான பிரச்சனை. பிள்ளைக ஒருத்தருக்கொருவர் பேச்சுவார்த்தை கிடையாது."

"ஆமாம்...என்னத்த சேத்து என்ன செய்ய...?

இரண்டு மனுசங்களை சேக்கலை... இந்தம்மா..?" என்றாள் ஒரு பெண்.

சுகந்தி எழுந்து நின்று சுந்தரத்தின் மனைவியைத் தேடினாள்.

உள் அறையின் வாசலில் நின்றவாறு தன் மகனை இடுப்பில் வைத்துக் கொண்டு

"என்.... ராசாகுட்டில்ல.. ஆ... வாங்கு.

பாட்டியப் பாத்தியா... மாலைல்லாம் போட்டுருக்காங்க

ஆ... வாங்கு...

பாட்டி சாமிகிட்ட போயிருச்சு"

'ஆ காட்டு'

என் செல்லக் குட்டி

ஆ காட்டு"

கண்ணாடிப் பெட்டியினுள் இருந்த பாக்கியத்தம்மாளைக் காட்டி மகனுக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள் பாக்கியத்தம்மாளின் மருமகள்.

Pin It