ஜி.ராமகிருஷ்ணன், உளியம்பட்டி

விலைவாசி உயர்வுக்கு முக்கியமான ஒரே காரணம் அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வுதான். அதற்கு உச்சவரம்பு கொண்டுவராதவரை விலை உயர்வைத் தடுக்க முடியாது என்பது என் கருத்து. தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

விஷயத்தை தலைகீழாகப் பார்க்கிறீர்கள். விலைவாசி உயர்வுக்கு ஏற்பதான்- அது ஏற்பட்ட பிறகுதான் அரசு ஊழியருக்கும் ஆசிரியருக்கும் பஞ்சப்படி உயர்வு தரப்படுகிறது. விலைவாசியும் உயர வேண்டாம், பஞ்சப்படியும் உயர வேண்டாம் என்கிறார்கள் அவர்கள். உச்சவரம்பு வேண்டும் என்கிறீர்கள். அது ஏற்கெனவே இருக்கிறது. ஒவ்வொரு வகை ஊழியருக்கும் அதிகபட்சம் இவ்வளவுதான் என்று ஊதிய அளவுகோல் உள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் அது மாற்றப்படுகிறது. அதற்கும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். இதிலே கொடுமை என்னவென்றால் இப்படிப் போராடிப் பெற்ற ஊதிய உயர்வில் மூன்றில் ஒரு பகுதிக்கும் மேலே வருமானவரியாகப் போய்விடும். இந்த நாட்டில் ஒழுங்காக வரி கட்டுகிறவர்கள் இவர்களே. கட்டுவது என்ன, அரசாங்கமே சம்பளத்தில் பிடித்துக் கொள்ளும். ஒரு கையால் கொடுத்து மறு கையால் வாங்கிவிடுவார்கள். விலைவாசி உயர்வுக்கு அரசு ஊழியர்களைப் பழி சொல்லுகிறீர்களே? வாங்குகிற சம்பளத்திற்கு மக்களுக்காக உண்மையாக உழைக்க வேண்டும் என்று சொல்லுங்கள், நியாயம். அதைவிடுத்து இப்படி அநியாயமாகப் பேசாதீர்கள்.

ஆர்.கே.எஸ்.சம்சுகனி, டி.மாரியூர்

தமிழக அரசு கொண்டுவர உள்ள சமச்சீர் கல்வி கொள்ளையர்களுக்கு உகந்தது என்று ராமதாஸ் கூறுவது பற்றி...?

என்ன அர்த்தத்தில் அப்படிக் கூறினார் என்று விளங்கவில்லை. அரசு முன்மொழிந்துள்ள தற்போதைய சமச்சீர் கல்வி முழுமையானதல்ல. ஆனால், அதற்கே மெட்ரிகுலேசன் பள்ளி உரிமையாளர்களின் எதிர்ப்பு உள்ளது. அவர்களது எதிர்ப்பைத் தமிழக அரசு துணிவோடு எதிர்கொள்ள வேண்டும். அத்தோடு, சி.பி.எஸ்.சி.இ. எனப்படும் மத்திய அரசின் கல்வி முறைக்குத் தாவப் பார்க்கும் அவர்களது தகாத முயற்சியையும் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் சமச்சீர் கல்வி கானல் நீராகிவிடும். 

பொன்விழி, ஆன்னூர்

தமிழ்ப்புத்தாண்டை எந்த நாளில் கொண்டாடுகிறீர்கள்?

2010 ஜனவரி 14ல் என்னோடு பேசியவர்கள் எல்லாம் "பொங்கல் வாழ்த்து" என்றுதான் சொன்னார்கள். நான்தான் "புத்தாண்டு வாழ்த்து" என்றேன். பதினாறு வயதினிலே கமல்ஹாசன் நிலைதான். வெறும் அறிவிப்பு மட்டுமே நீண்டநாள் பழக்கத்தை மாற்றிவிடாது, அதற்கென்று தொடர் முயற்சிகள் அரசு தரப்பில் வேண்டும் என்பது நிச்சயமானது.

 

கே.அரங்கராஜன், பாதிரக்குடி

பாலா இயக்கத்தில் உருவான "நான் கடவுள்" படத்தைப் பற்றிய செம்மலர் விமர்சனத்தில் ஒரு அபாயகரமான படம் என்று கூறியிருந்தீர்கள். தற்போது அந்தப் பாடத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பது பற்றித் தங்கள் கருத்து என்ன?

ஒரு படத்தைப் பற்றிய மதிப்பீடு அந்தப் படத்தை வைத்து மட்டுமே செய்யப்படுகிறது. அதற்கு தேசிய விருது கிடைத்துவிடுவதால் மதிப்பீடு மாறுவதில்லை. படம் அதேதானே? மதிப்பீடு ஏன் மாற வேண்டும்? அரசாங்க விருதுகளோடு இடதுசாரிகளின் மதிப்பீடுகள் எல்லா நேரங்களிலும் ஒத்துப்போவதில்லை. காரணம் இவர்கள் இடதுசாரிகள். வாழ்வைப் பற்றியும், கலை இலக்கியத்தைப் பற்றியும் இவர்களுக்கென்று ஒரு சரியான பார்வை உண்டு. சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாவல்கள் பற்றிய செம்மலரின் மதிப்பீடு வேறாக இருந்தது நினைவுக்கு வருகிறது.

 

நடைபெற இருக்கும் உலகச் செம்மொழித் தமிழ் மாநாட்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் இலக்கிய கர்த்தாக்களின் பங்குப்பணி எப்படி உள்ளது? இதில் தமிழக அரசின் அணுகுமுறை எப்படி உள்ளது? மாநாட்டில் தமுஎகச சார்பாக சமர்ப்பிக்கப்படவுள்ள ஆய்வுகள் எத்தனை?

ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்க ஆர்வம் காட்டி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆய்வுச் சுருக்கங்கள் அனுப்பியுள்ளார்கள். இதில் ஆயிரத்து ஐந்நூறு ஆய்வுச் சுருக்கங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இனி இவர்களைக் கட்டுரைகள் எழுதி அனுப்பச் சொல்லுவார்கள். இனி அவற்றில் தகுதியானதைத் தேர்வு செய்வார்கள். இப்படி அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர். மெய்யாலும் மாநாட்டில் எத்தனை ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் படுமோ, யாருக்குத் தெரியும்? தமுஎகசவினரும் ஆய்வுச் சுருக்கங்கள் அனுப்பியிருக்கிறார்கள் என்பது மட்டுமே தெரியும். நிற்க. தமுஎகச மற்றொரு உருப்படியான காரியத்தைச் செய்துள்ளது. இந்த மாநாடு தமிழ் வளர்ச்சியில் மெய்யாலும் அக்கறை கொண்டது என்றால் அது எப்படி நடக்க வேண்டும், எத்தகைய எதிர்காலத்திட்டத்தை வகுத்துத்தர வேண்டும் என்பதைச் சொல்லும் வகையில் ஓர் அருமையான பிரசுரத்தைக் கொண்டு வந்துள்ளது. லட்சக்கணக்கான பிரதிநிதிகள் அச்சிட்டு ஊர்ஊராக விநியோகித்து வருகிறது. மாநாட்டுக்காரர்கள் முதலில் அதை வாங்கிப் படித்துக் கொள்வது உத்தமம்.

 

பா.மணி, திண்டிவனம்

முடியாட்சியில் இந்து, சமய அரசாட்சியை உருவாக்கியதில் மகாபாரத, இராமாயண இதிகாசங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. கிராமங்களில் இந்து சமயம் இன்றைக்கும் வேரூன்றி இருப்பதற்கு இதிகாசங்களின் கதையாடல்களைக் கொண்ட தெருக்கூத்துக்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இன்றைய தலைமுறையினர் தெருக்கூத்தைப் புறக்கணித்து இசைக் கச்சேரிகளை அரங்கேற்றி வருவது ஆரோக்கியமான மாற்றுச் சூழல் எனக்கருதலாமா?

 ஒரு வகையில் ஆரோக்கியமான மாற்றுச் சூழல்தான். ஆனால், இந்த இசைக் கச்சேரிகளிலும் ராமனின் புகழ்பாடும் புரந்தரதாசர், தியாகராஜர் கீர்த்தனைகளைத் தானே பாடுகிறார்கள். அல்லது மெல்லிசை என்ற பெயரில் சினிமா காதல் பாட்டுக்களைத்தானே பாடுகிறார்கள். முற்போக்குச் சிந்தனை கொண்ட பாடல்களைப் பாடுவார்களேயானால் அது முழுமையான மாற்றாக இருக்கும் கூத்துக் கலை நலிந்ததற்குக் காரணம் நவீன சமூகத்தை அதன் கருப்பொருள் ஆக்காதது அல்லது குறைந்தபட்சம் இதிகாசங்களை மறுவாசிப்புச் செய்யாதது. அப்படிச் செய்தால் கூத்தும் புனர்வாழ்வு பெறும். கலையில் வடிவமல்ல பிரச்சனை, அதன் வழியில் என்ன சொல்லுகிறீர்கள் என்பதுதான் விவகாரம்.

 

நா.கலைமதிராஜன், கோவை

செ சத்தியசீலன், கிழவன் ஏரி

ஆந்திரப்பிரதேசம் இன்று ஆத்திரப்பிரதேசமாக ஆனதற்கு யார் காரணம்?

சந்தேகம் என்ன, மத்திய அரசுதான். தனித்தெலுங்கானா தருகிறோம் என்று திடீரென்று அறிவிப்பார்கள். பிறகு அதன் மீது கல்லைத் தூக்கி (கமிட்டியைத் தூக்கி) போடுவார்கள். மக்கள் மோதிக் கொள்வார்கள், அரசு வேடிக்கை பார்க்கும். விளங்குமா நாடு? எனக்கென்ன படுகிறது என்றால் தெலுங்கானாவா இல்லையா என்பதைவிட ஏன் தனி மாநிலக் கோரிக்கை வந்தது என்பதை ஆராய வேண்டும். முதலாளித்துவத்தின் சமச்சீரற்ற வளர்ச்சியே இதற்குக் காரணம் என்கிற பொது உண்மையோடு தெலுங்கானாப் பகுதியின் இன்றைய பொருளாதார வாழ்வு பற்றி ஆராய வேண்டும், அதை மேம்படுத்துவதற்கான குறிப்பான திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதைக் கண்ணாரக் கண்டால் தனி மாநிலக் கோரிக்கை காற்றில் கரைந்து போகும்.

 

ம.கேசவன், மதுரை - 19

நடிகர் ஜெயராமன் தமிழ்ப்பெண்கள் குறித்துத் தவறாகப் பேசியதாக எழுந்த விவகாரம் பற்றி உங்கள் கருத்து என்ன?

நாகாக்க. காக்கத் தவறியதற்கு மன்னிப்பு கேட்ட பிறகு விஷயத்தை விட்டுவிடுக. தமிழ்ப்பெண்கள் என்பதைவிட ஓர் உழைப்பாளி பெண்மணி கேவலப்படுத்தப்பட்டார் என்பதே உண்மை. வர்க்க உணர்வால் துடிப்பதைவிட இன உணர்வால் துடிப்பதுதான் இங்கே அதிகமாக உள்ளது.

 

அ.நெடுஞ்செழியன், புதுச்சேரி

புதுசோ பழசோ உங்களுக்குப் பிடிச்ச ஒரு சினிமாவைச் சொல்லுங்களேன்?

இப்போ பிடித்தது இரண்டு படங்கள்- 1. நாடோடிகள் 2. பசங்க. ஆரம்பத்தில் எனக்கு ஈர்ப்பு வரவில்லை நாடோடிகள் படத்தில். காதலுக்கு உதவுகிற சாதாரண நண்பர்கள் கதை போல இருந்தது. ஆனால் பிற்பகுதியில் விஷயம் ஒரு புதிய கோணத்தில் அலசப்பட்டது கண்டு ஆச்சரியப்பட்டுப் போனேன், ரசித்துப் பார்த்தேன். பசங்க படம் தமிழ் சினிமா பற்றி புதிய மரியாதையைத் தந்தது. சின்னவயதில் வெறும் கையால் வண்டி ஓட்டாதவர்கள் யார்? அப்புறம் அந்த வாத்தியார். பசங்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்கிற வாத்தியார்! நாங்கள் யாரும் பெரியவர்களாகி லவ்டூயட் பாடப் போவதில்லை என்று துவக்கத்திலேயே சொல்லி விடுகிற அந்தத் தோரணை! இப்படிப் படம் எடுக்க நிரம்பத் துணிச்சல் வேண்டும். குறைந்த பட்ஜெட்டில் இப்படி நிறைவான படம் எடுத்தால் என்ன மோசம் வந்துவிடும் இந்தத் தயாரிப்பாளர்களுக்கு? திருட்டு வி.சி.டி. பிரச்சனையும் வராது. போலீசார் வேறு உருப்படியான வேலை பார்க்கலாம்.

எம்.மகேஸ்வரி, கோவை.

சமீபத்தில் தாங்கள் ரசித்துப் படித்த புத்தகம் எது?

அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய "இந்து மதம் எங்கே போகிறது?" எடுத்த உடனேயே "மகாப் பெரியவரின் நண்பர்" என்றிருந்தது. காஞ்சி சந்திரசேகரேந்திர சங்கராச்சாரியாரின் நண்பரிடமிருந்து அப்படி என்ன நல்ல கருத்து வந்துவிடப் போகிறது என்று சந்தேகத்துடனேயே படிக்க ஆரம்பித்தேன். ஆனால் முடிக்காமல் கீழே வைக்க முடியவில்லை. மகாப் பெரியவர் என்று சொல்லிக் கொண்டே அவரது தமிழ்வெறுப்பு, வருணாசிரமச் சிந்தனை ஆகியவற்றை மனிதர் அம்பலப்படுத்தியிருந்தது கண்டு அசந்துபோனேன். இதைவிட ஆச்சரியம் பெண்ணுரிமைக்காக தாத்தாச்சாரியார் வாதாடியிருப்பது. பெண்ணுக்குச் சொத்துரிமை என்றவுடன் சங்கராச்சாரியார் மிரண்டு போய்க் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தாராம். ஒப்புதல் வாக்குமூலம் போல அந்தக் காலத்தின் நேரடி சாட்சியாய் இருந்து சொல்லிக் கொண்டே வருகிறார். இதிலே எனக்குப்பட்ட ஓர் உச்சம் ராமானுஜர் பற்றி மிக அழுத்தமாகச் சொல்லப்படுகிற விஷயத்தையே தாத்தாச்சாரியார் கேள்விக்கு உட்படுத்தியிருப்பது. அதாவது கோவில் கோபுரம் மீதேறி அனைத்துச் சாதியினருக்கும் மோட்சம் கிடைக்க திருமந்திரத்தை உரக்கச் சொன்னார் என்பது. "இது ராமானுஜரின் வாழ்வில் நிகழ்ந்திருக்குமானால் தன் கிரந்தங்கள் எதிலும் இதுபற்றி அவர் குறிப்படவில்லையே ஏன்?" என்கிறார். மாறாக அவர் எழுதிய நூல்களில் "பிராமண ஸ்திரீகளும் சூத்திரர்கள்தான். எனவே அவர்கள் அடுத்த ஜென்மாவில் பிராமண புருஷனாக அவதரித்தால்தான் மோட்சத்திற்குப் பாடுபடுவதற்குரிய தகுதியே கிடைக்கும் என்கிறார் ராமானுஜர்" என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் பழுத்த வைணவரின் கருத்து ஆழ்ந்து ஆராயத்தக்கது என்று பட்டது எனக்கு.

 

என்.ரமேஷ், திண்டிவனம்

ஷாருக்கான் படத்தை எதிர்த்து சிவசேனை கலகம் செய்தது பற்றி...?

அந்த நடிகர் ஒரு முஸ்லிம் என்பதால்தான் இவ்வளவு எதிர்ப்பு. முஸ்லிம்கள் இரண்டாந்தரக் குடிமக்களாகத்தான் இந்துத்துவாவாதிகளால் கருதப்படுகிறார்கள் என்பதற்கு இதுவொரு சின்ன உதாரணம். இதற்கெல்லாம் பதிலடி தரும் வகையில்தான் முஸ்லிம்களில் பிற்பட்டோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10சதவீத இடஒதுக்கீடு தர முன்வந்திருக்கிறது மேற்குவங்கத்தின் இடதுமுன்னணி அரசு. மும்பை எங்கே, கல்கத்தா எங்கே?

Pin It