ஜி. ராஜாமணி, சென்னை-87

சாகுபடியில் சம்பா,குறுவை, தாளடி, தார், சொர்ணவாரி, கார், நவரை போன்ற சொல்லாடல்கள் எதை உணர்த்துகின்றன என்பதை விளக்க முடியுமா?

இத்தனை ஆண்டு அனுபவத்தில் இப்படியொரு கேள்வியை இப்போதுதான் சந்திக்கிறேன். நம்மைப் போன்ற நகரவாசிகளுக்கு இவையெல்லாம் புதிய சொற்கள். கிராமவாசிகளுக்கோ இவை வாழ்வின் இயல்பான கூறுகள் என்பது நிச்சயம். ("சொல்லாடல்கள்" எனும் வார்த்தைதான் அவர்களுக்குப் புதியது!) அந்தந்தப் பருவத்துச் சாகுபடியைக் குறிக்கும் சொற்களாக இவை தெரிகின்றன. எல்லாமே அப்படித்தானா என்பதை விவசாயம் சம்பந்தப்பட்ட பத்திரிகைக்கு எழுதிக் கேட்பது உத்தமம். இளமதி என்ன எல்லாம் தெரிந்த ஏகாம்பரமா?

ஆர். கே. எஸ். சம்சுகனி, டி. மாரியூர்

எல்லா மதங்களிலும் ஆண்களுக்குச் சாதகமாகவும் பெண்களுக்குப் பாதகமாகவும் எழுதப்பட்டுள்ளதே ஏன். . ?

நிறுவனமயப்பட்ட மதங்கள் எல்லாம் அடிமைச் சமுதாயம் அல்லது நிலப்புரபுத்துவ சமுதாயத்தில் தோன்றியவை. அடிமைகள் மற்றும் பண்ணையடிமைகளை ஒடுக்குவது மட்டுமல்லாது பெண்களை ஒடுக்குவதாகவும் அந்தச் சமுதாயங்கள் இருந்தன. ஆகவே, மதங்களும் அப்படியாகவே இருந்தன. ஆளும் வர்க்கங்கள் அரசு அதிகாரத்தைக் கொண்டு மட்டுமல்லாது மதங்கள் போன்ற சமூக அதிகாரத்தைக் கொண்டும் தங்கள் ஆளுகையை நடத்தின. சமூக அதிகாரம் வலுவாக ஸ்தாபிக்கப்பட்ட போது அரசு அதிகாரம் கூடக் குறைவாகவே தேவைப்பட்டது. இந்தியாவில் எத்தனையோ ஆட்சிகள் மேல்மட்டத்தில் வந்து போனாலும் கீழ்மட்டத்தில் ஆணாதிக்கம் இயல்பானதாக மாற்றப்பட்டதற்கு பிராமணிய மதத்தின் செல்வாக்கே பிரதான காரணம். முதலாளித்துவ சமுதாயம் வந்த பிறகும் நிலப்பிரபுத்துவத்தின் மிச்ச சொச்சங்களாக சாதியமும் ஆணாதிக்கமும் இங்கே தொடர்கின்றன. இவற்றை எதிர்த்த போராட்டமும் அரசியல் மற்றும் சமூகம் எனும் இரு தளங்களிலும் ஒருங்கே நடத்தப்பட வேண்டும்.

ஏ. சி. எஸ். மணி, மதுராந்தகம்

கலைஞர்-மன்மோகன்சிங் இடையே 2 ஜியில் ஒற்றுமை என்ன? வேற்றுமை என்ன?

ஒற்றுமை-இருவருக்கும் அந்த ஊழலில் குறைந்தபட்சம் தார்மீகப் பொறுப்பு உண்டு. அதிகபட்சம் என்னவோ? வேற்றுமை ஆ. ராசாவையும் கனிமொழியையும் காப்பாற்ற முடியவில்லை கலைஞரால். அப்படி இப்படிப் பேசி சிதம்பரத்தை இதுவரைக் காப்பாற்றி விட்டார் மன்மோகன்சிங்! அந்த வகையில் கலைஞரைவிட சிங் கில்லாடி!

ரெ. சுப்பிரமணியசாமி, கோவில்பட்டி

ஒரு சந்தேகம் மட்டுமே, விளக்கவும். மார்க்சிஸ்ட் கட்சியானது தலித் தொடர்பான பார்வைகள், பெரியார் - அண்ணா பற்றிய மதிப்பீடுகள், சாதியப் பிரச்சனைகளில் சற்றே விலகியிருந்து மவுனப் பார்வையாளராக இருத்தல், ஈழப் பிரச்சனைகளில் (மட்டும்) மிகக் கடுமையான, யதார்த்த நிலைக்கும் சர்வதேச விடுதலைப் போராட்டப் பார்வைகளுக்கும் எதிரான நிலைபாடுகள், திராவிட இயக்கங்களின் இலக்கியங்கள் குறித்த (சற்றே நியாயமில்லாத) நிலைபாடுகள் ஆகியவற்றிலிருந்து தற்போது தனது பழைய பார்வைகளை, மதிப்பீடுகளை ஓரளவு மாற்றிக்கொண்டு வருவது எதனால்? கருத்துப் பரிணாமமா அல்லது காலத்தின் சூழலில் விளைந்த சமரசமா?

அடேங்கப்பா! எவ்வளவு பெரிய விஷயங்களை ஒரே கேள்விக்குள் அடக்கிவிட்டீர்கள்! எதிரிகளின் கூற்றுக்களையும் இயல்பானது போலக் கேட்கிறீர்கள்! உண்மை என்னவென்றால், நீங்கள் குறிப்பிடுகிற சகல விஷயங்களிலும் எடுக்கப்பட்ட அடிப்படையான நிலைபாடுகளே இப்போதும் தொடர்கின்றன. எடுத்த அதே வீணைதான், மீட்டிய அதே ராகம் தான். ஆனால், எந்த ராகமும் மீட்ட மீட்ட மேலும் சுத்தப்படுகிறது, மெருகு கூடுகிறது, அவ்வளவே. இவ்வளவு கேட்கிறீர்களே, அந்தத் திராவிட இயக்கமும் சரி, இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை பற்றி அது எடுத்த நிலைபாடும் சரி இன்று எப்படி இருக்கின்றன என்று நினைத்துப் பார்த்தீர்களா? ஒரு கோடியில் நின்று பேசுவது உடனடிக் கவர்ச்சியைத் தரும். ஆனால் உருப்படியான பலனைத் தராது. நிதானமான நிலைப்பாடோ ஆரம்பத்தில் சந்தேகத்தைத் தரும், ஆனால் முடிவில் ஏமாற்றத்தைத் தராது. இதுதான் மார்க்சிஸ்டு கட்சியின் அன்றிலிருந்த இன்று வரையிலான ஒரே பார்வை, உறுதியான மதிப்பீடு.

கே. எல். சதானந்தம், கடலூர்

ஆன்மிகம் கலவாத பொருளாதார முறையே அமெரிக்கப் பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு காரணம் என்று அரசியல் விமர்சகர் எஸ். குருமூர்த்தி கூறியிருக்கிறாரே. . ?

இந்தியாவில் குடும்ப அமைப்பு பாதுகாக்கப்படுவதால் சேமிப்புப் பழக்கமும் பாதுகாக்கப்படுகிறது. உள்நாட்டில் உருவாகும் சேமிப்பு உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் சரிவுகளைச் சமாளித்து நிற்க ஓரளவு உதவுகிறது. இந்த அளவுக்கு அவர் கூறுவத சரியே. ஆனால், இதையே "ஆன்மிகம் கலந்த பொருளாதாரம்" என்று நீட்டி முழங்குவது அபத்தமானது, ஆபத்தானது. இந்த குருமூர்த்தி ஒருபுறம் ஆர். எஸ். எஸ். காரர், மறுபுறம் கோயங்கா பத்திரிகை முதலாளிகளின் அத்யந்த ஆலோசகர். அதாவது, இந்து மத வெறிக்கும் இந்திய முதலாளித்துவத்துக்கும் இடையே ஊடாடும் தரகர். சந்தேகம் இருந்தால் எல். கே. அத்வானி எழுதியுள்ள "என் நாடு, என் வாழ்வு" எனும் சுயசரிதையைப் பாருங்கள். 1989-1990ல் இந்த மனிதர் எப்படி இந்தத் தரகு வேலையைப் பார்த்தார் என்பதை அதில் விரிவாகக் காணலாம். இப்போதும் அதே கைங்கர்யத்தைத்தான் செய்து வருகிறார். "ஆன்மிகம் கலந்த பொருளாதாரம்" என்று இவர் சொல்வது உண்மையில் இந்து மதவெறியோடு இந்திய முதலாளித்துவம் சமரசம் செய்துள்ள ஏற்பாடாகும். இதையே அமெரிக்காவுக்கும் பரிந்துரைக்கிறார். அந்த முதலாளித்துவம் ஏற்கனவே உடுக்கு இல்லாமலே ஆடிக் கொண்டிருக்கிறது, கூடவே கிறிஸ்துவ மதவெறியை இன்னும் நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும் என்கிறாரோ? இது உலக அமைதிக்கு மேலும் கேடு செய்கிற காரியமின்றி வேறில்லை.

எஸ். சூரிய பிரகாஷ், சென்னை

பாரதி மகாகவி அல்ல என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளாரே, படித்தீர்களா?

இப்படி எதையாவது சொல்லி தான் பெயர் பத்திரிகையிலும் வலைத்தளத்திலும் அடிபட வேண்டும் என்று நினைக்கிறவர் அந்த எழுத்தாளர். தமிழில் நாவலே இன்னும் எழுதப்படவில்லை என்று சொன்ன மகானுபாவர்தான் அவர். பாரதி மகாகவியா இல்லையா என்கிற விவகாரம் கல்கி காலத்திலேயே எழுந்து ஓய்ந்து போனது. அதைத் தூசி தட்டி எடுத்துப் போட்டு படம் காட்டுகிறார். "திருவள்ளுவர், இளங்கோ, கம்பர், சேக்கிழார் அளவுக்கு சிறந்த கவிஞர் இல்லை பாரதியார்" என்று கூறியிருப்பதன் மூலம் இவரின் மகாகவி பற்றிய அளவுகோலைத் தெரிந்த கொள்ளலாம். பக்கா பிராமணிய மதவெறியோடு பெரிய புராணம் படைத்த சேக்கிழாரை திருவள்ளுவர், இளங்கோ வரிசையில் சேர்த்திருக்கிற லட்சணத்தை நோக்குங்கள்! சேக்கிழாரைப் போற்றுகிறவர் பாரதியாரை மகாகவி இல்லை எனச் சொல்வதில் ஆச்சரியம் என்ன? அதுமட்டுமல்ல, இன்று சமத்காரமான உரைநடைஎல்லாம் கவிதை என்று இவரைப் போன்ற அதிநவீனவாதிகளால் கொண்டாடப்படுகிறது. இவர்களுக்கு சந்தநயமிக்க பாரதியின் கவிதைகள் பிடிக்காமல் போனதிலும் ஆச்சரியம் இல்லை. பாரதியின் உள்ளடக்கம், உருவம் இரண்டையும் ஜெயமோகன் கூட்டம் வெறுக்கிறது என்பதை மனதில் வையுங்கள். இதுபற்றி பாவேந்தர் பாரதிதாசன் "ஐயர் கவிதைக்கு இழுக்கும் கற்பிக்கின்றார். அழகாக முடிச்சவிழ்த்தால் விடுவார் உண்டோ?" என்று அந்தக் காலத்திலேயே பாடிவிட்டார்.

என். கே. பி. மார்த்தாண்டன், நாகர்கோவில்

சமீபத்தில் தாங்கள் ரசித்துப் படித்தப் புத்தகம் என்னவோ?

முன்னாள் பிரதமர் ஐ. கே. குஜ்ரால் எழுதிய சுயசரிதை. இதைப் படித்ததும் 1980-90 களின் டில்லி அரசியல் பற்றிய சில புதிய கோணங்கள் பிடிபட்டன. ஒவ்வொரு பெரிய அரசியல் தலைவரும் தங்கள் வாழ்க்கைக் கதையைக் கட்டாயம் எழுதவேண்டும் என்ற சட்டம் போட்டால் கூட நல்லது என்று பட்டது! சமகால வரலாற்றைப் புரிந்து கொள்ள சம்பந்தப்பட்ட தலைவர்களின் சொந்த அனுபவ விவரிப்பும் மிக அவசியம். நிற்க. குஜ்ரால் பிரதமராவதற்க முன்பு சோவியத் நாட்டில் நமது தூதராகவும் இருந்தார். தூதரகப் பதவி ஏற்க மாஸ்கோ சென்றவர் அதற்கான அதிகாரப்பூர்வ பத்திரத்தை டில்லியிலிருந்து எடுத்துவரவில்லை அதிகாரிகள் என்பதைக் கடைசி நேரத்தில் கண்டு திடுக்கிட்டுப் போனார். நிலைமையை எப்படிச் சமாளித்தார்? "பிரச்சனையை சோவியத் அதிகாரி வி. நிக்கிபோரவ் சட்டென்று தீர்த்து வைத்தார். வெறும் வெள்ளைத் தாளை மட்டும் கொண்ட உறையை நான் (ஜனாதிபதி நிக்கோலாய் போட்கர்னியிடம்) ஒப்படைப்பேன். டில்லியிலிருந்து ஒரிஜினல் பத்திரம் வந்ததும் வெள்ளைத் தாளின் இடத்தில் அது ரகசியமாக வைக்கப்படும்! அந்த அளவுக்கு இந்திய-சோவியத் உறவுகள் நெருக்கமாக இருந்தன. இந்தப் பெருந்தவறு பற்றி ஒரு வார்த்தை கூட டில்லியிலும் சரி அல்லது மாஸ்கோவிலும் சரி கசியவில்லை".

ஜி. முத்துராமன், தஞ்சாவூர்

லிபியா அதிபர் கடாபியை ஒரு வழியாகப் புரட்சிப் படைகள் தீர்த்துக்கட்டி விட்டனவே. . ?

இந்திய ஊடகங்கள் "புரட்சி" என்பதைத் திட்டமிட்டு மலினப்படுத்தி வருகின்றன. ஒரு நாட்டு அரசுக்கு எதிராகச் செயல்படும் சக்தி எல்லாம் "புரட்சிப் படைகள்" ஆகிவிடாது. அவற்றின் அரசியல் கோட்பாடு மற்றும் நோக்கம் என்பவையும் முக்கியம். லிபியாவில் இயங்கும் அரசு எதிர்ப்புப் படைகள் நேட்டோ ஆதரவுடன் இயங்குகின்றன என்று இதே ஊடகங்கள் தெரிவிக்கின்றன. "இண்டியன் எக்ஸ்பிரஸ்" (21-10-11) ஏடும் "ஒரு கட்டத்தில் அந்தப் பகுதியிலிருந்து சில வண்டிகள் தப்பியோட முயன்றன. அவற்றின் மீது நேட்டோ விமானங்கள் குண்டு வீசின. அந்த வண்டிகளில் கடாபி இருந்தாரா என்று தெளிவாகவில்லை" என்று கூறுகிறது. நேட்டோ என்றால் அமெரிக்க ஏகாதிபத்தியப் படை என்று பொருள். லிபியா அதிபரை எதிர்த்து அந்த நாட்டு மக்கள் போராடுகிறார்கள் என்றால் புரிந்து கொள்ளலாம். அது அவர்களது உள்நாட்டு விவகாரம். அதில் அமெரிக்கா ஏன் தலையிடுகிறது? ஏகாதிபத்திய உதவியோடு நடத்தப்படும். எதிர்ப்பியக்கமும் "புரட்சி" தானா? முதலாளித்துவ ஊடகங்களின் சொல்லாடலை அப்படியே நாமும் எதிரொலிக்க வேண்டுமா? யோசியுங்கள்.

Pin It