பாகிஸ்தான் பெசாவரில் 150க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்ற சம்பவம் நமக்கு எதைக் காட்டுகிறது?
பாகிஸ்தானில் பள்ளிக்குள் நடந்த குழந்தைகளின் படுகொலை படு காட்டுமிராண்டித்தனமானது. பள்ளிக்குள் எங்கு பார்த்தாலும் பிணங்கள். ஓடி ஒளிந்த குழந்தைகளைக்கூட தேடிப்பிடித்துச் சுட்டுக் கொன்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தினரின் குழந்தைகள் படிக்கும் பள்ளியாம். இராணுவத்தினர் அல்லாதவரின் குழந்தைகளும் படிக்கிறார்களாம். இராணுவத்தினரின் அடாவடித் தனத்திற்கு எதிரான பதிலடி என்று. தாக்குதல் நடத்திய அமைப்பு சொல்லியுள்ளது. யாருடைய தாக்குதலுக்கு யாரைப் பழிவாங்குவது? மதவெறி காட்டுமிராண்டிகள். மதவாதமில்லையாம்.
இசுலாமிய அமைப்பு இசுலாமிய மாணவர்களைக் கொன்றதால் இது மதவாதமில்லையாம். உளறல். மதவாத அடிப்படைவாத அரசியலுக்கு இலக்கு பிற மதத்தினர் மட்டுமல்ல, சொந்த மதத்தினர், குழந்தைகள் கூட என்பதற்கு நேற்று மலாலா, இன்று பள்ளி குழந்தைகள் கொலைச் சம்பவம். மதம் தனிநபர் பிரச்சனை. அரசியலை மதத்திடமிருந்து பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. மதச்சார்பற்ற அரசியல் என்பது அனைத்து மதங்களையும் சார்ந்திருப்பது என நமது நாட்டில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
மதச்சார்பற்ற அரசாக இருக்கும்போது அரசு அலுவலகங்கள், காவல்நிலையங்கள், நீதிமன்றங்கள், பாடசாலைகள் ஒருமதம் சார்ந்த அடையாளங்களுடன் திகழ்கிறது. மதச்சார்புள்ள நாடாக மாற்றப்படுமானால் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் நடைபெறும் இதே சம்பவங்கள் நமது நாட்டிலும் நடைபெறும். பாகிஸ்தான் சம்பவத்தைக் கேள்விப்படும்போது 2002 குசராத் படுகொலைகள் நினைவுக்கு வருகிறது. மக்கள் நலனுக்கான அரசியலற்ற ஆயுதம் குழந்தைகளையும் கொல்லும். ஆயுதம் தாங்கிய இராணுவத்திற்கும், ஆயுதம் தாங்கிய அமைப்புகளுக்குமிடையில் நடந்தால் அது யுத்தம். நிராயுதபாணிகள் மீது, அதுவும் குழந்தைகள் மீது ஆயுதம் பாய்ந்தால் அது கோழைத்தனம்.
பகவத் கீதையைத் தேசிய புனித நூலாக்க வேண்டும் என்ற மோடி கும்பலின் கருத்து மதச்சார்பற்ற அரசில் பொறுப்பில் இருப்பவர்கள் பகிரங்கமாகப் பேசுவது சரியா?
மகாபாரதத்தின் இடையில் வரும் துணைக்கதை போல பகவத் கீதை. யுத்தம் இதுவே கீதையின் உபதேசம். பாண்டவர் - துரியோதனர் யுத்தத்திற் கிடையில் உறவைப் பார்க்காதே எனப் போதித்தது மகாபாரதமும், இதன் நீட்சியான பகவத் கீதையும். ‘சதுர் வர்ணம் மயா சிருஷ்டி‘ என கிருஷ்ணன் பகவத்கீதையில் சொல்கிறார். அதாவது ‘நான்கு வர்ணத்தை நானே படைத்தேன்‘ என்கிறார். படைப்புக் கடவுளான பிரம்மனின் நெற்றியிலிருந்து - பிராமணனையும், தோளிலிருந்து -ஷத்திரியனையும், தொடையிலிருந்து - வைசியனையும், பாதத்திலிருந்து - சூத்திரனையும் என பிறப்பு குறித்த விஞ்ஞானப்பூர்வமற்ற கருத்துக்களைச் சொல்வதுடன், மேல் - கீழ் எனும் படிவரிசையைப் படைத்ததாகக் கூறுவது சனநாயக விரோதத் தன்மை கொண்டதாகும்.
பஞ்சமர்கள் எங்கிருந்து பிறந்தார்கள் எனக் கேள்வி வரும்போது கவிஞர் பாரதியும், தந்தை பெரியாரும் அவர்கள் தான் உண்மையாக அவரது தாய் தந்தையருக்குப் பிறந்திருப்பார்கள் என்றனர். ஒரு மதம் சார்ந்த கற்பனையான இலக்கியத்தை மதச்சார்பற்ற நாடான இந்தியாவில், இசுலாமியர்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், சமணர்கள் வாழும் நாட்டில் தேசிய புனித நூலாக்க வேண்டும் எனக் கூறுவது சனநாயக விரோதமானது. அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. உடனே எதிர் வினையாக திருக்குறளையும் எனச் சொல்வதும், அரசியல் சட்டத்தை எனச் சொல்வதும் அதே தவறைச் செய்யும் செயலாகும். இதுபோன்ற ‘புனிதங்களுக்கு எதிராக‘ கருத்தியல் ரீதியாகப் போராட வேண்டிய அவசியம் உள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு இடையிலான சாதாரண சண்டைகள் கொலையிலும், கடும் தாக்குதலிலும் முடிவதற்கு கல்வி முறை பிரச்சனையா? கலாச்சாரப் பிரச்சனையா?
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் இன்று உருவாக்கப்படும் வன்முறை மனோபாவம், தனிநபர் சாகச மனோபாவம், சாதிச் சங்கங்களின் செல்வாக்கு, திரைப்படக் கதாநாயகர்களின் பாலங்கள் பரவலாக மாணவர்கள் மத்தியில் வன்முறைத் தாக்குதல் நடைபெறுகிறது. முதன்மையாகத் திரைப்படங்களின் தாக்கம், ரௌடி, தாதா போன்ற கதாபாத்திரங்கள் நாயகர்களாக முன்நிறுத்தப்படுகின்றனர். நல்லது - கெட்டது, சரி -தவறு, சமூக அக்கறை - சுயநலம் என முரண்களில் உருவாக்கப்பட்ட திரைப்படப்போக்கு இன்றைய காலங்களில் திறன், சாதுர்யம், சாகசம் எனும் பெயரில் எதிர்குணாம்ச, வில்லன் கதாபாத்திரங்களே திரைநாயகர்களாக உருவாக்கப்படுகின்றன.
பள்ளி மாணவர்கள் மத்தியில் கட்டமைக்கப்படும் உளவியல் இந்த நாயக மனப்பான்மை இயல்பிலேயே ஆயுதந் தாங்குதல், தாக்குதல் மனோபாவம், தனக்கு அடங்கிப் போக வேண்டும் எனும் தாதா மனோபாவம் இவைகளுக்கு திரைப்படக் கட்டமைப்புகளே பிரதான காரணம். சமூகம் சாதியக் கட்டமைப்பு பள்ளிகளிலும் பிரதிபலிக்கிறது. கிராமங்களில் நிலவும் சாதி ஆதிக்கமும், தலித் எழுச்சியும் பள்ளிகளிலும் பிரதிபலிக்கிறது. சாதிச்சங்கங்கள் பள்ளி மாணவர்கள் தொடங்கி, கல்லூரி மாணவர்கள் வரை செல்வாக்கு செலுத்துவதால் மாணவர்கள் மத்தியில் சாதி அடிப்படையிலான குழுக்கள் உருவாகின்றன.
இது ஏற்கனவே மாணவர்கள் மத்தியில் கட்டமைக்கப்பட்டுள்ள சாகச மனோபாவத்தை சாந்தப்படுத்தும் விதமான, மாணவர்கள் மத்தியில் பொது அக்கறைக்கான கல்வி, சாதி, மதப் பிரிவு மனோபாவங்களுக்கு எதிரான மனோநிலையை உருவாக்குவதற்கான கல்வி முறை கிடையாது. இது உருவாக்கப்படவேண்டும். சாதி அரசியலும், மதவெறி அரசியலும் பெருகி வரும் இன்றைய சூழலில் வருங்காலத்தில் கூடுதலாக வன்முறைகளுக்கான களம் உருவாக வாய்ப்பிருக்கிறது. அரசும், மாணவர் இயக்கங்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
சமீபத்தில் ஆக்ராவில் 200 முஸ்லீம்கள் இந்து மதத்திற்கு மாறிவிட்டதாக சங்பரிவார் கும்பல் அறிவித்துள்ளதும் கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் கொண்டுவர மோடி அரசு முயற்சிப்பதும் என்ன வெளிப்பாடு?
தனிப்பெரும்பான்மையுடன் பி.ஜே.பி அரசு ஆட்சியேறிய பின்னர் மோடியின் பெயரால் ஆர்.எஸ்.எஸ் ஆட்சி நடக்கிறது. மோடி முகம் ஆனால் ஆர்.எஸ்.எஸ் ஆட்சி என்பது தவறு. மோடியே ஆர்.எஸ்.எஸ் தான். பதவியேற்ற நாள் தொடங்கி தனது உரை மூலம் இசுலாமிய எதிர்ப்பு மனோபாவத்தை வெளிப்படுத்தி வருகிறார். தனது முதல் உரையிலேயே ‘1200 ஆண்டுகளாக இருந்து வந்த அந்நியர் ஆட்சியை அகற்றினோம்‘ எனக் கூறுகிறார். பிரிட்டன் - ஆங்கிலேயர் ஆட்சி 200 ஆண்டுகள் தான். பின் எதைக் குறிப்பிடுகிறார் மோடி? தில்லி சுல்தான்களின் ஆட்சியை, இசுலாமியரின் ஆட்சியைத் தான் குறிப்பிடுகிறார்.
நமது நாட்டில் நிலவிய சாதி. சாதி ஒடுக்குமுறை இயல்பிலேயே வேற்று மதங்களை நோக்கி மாறியுள்ளதைக் காணலாம். நமது நாட்டிலேயே உருவாக பௌத்தம் செல்வாக்குள்ள நெறிமுறையாக இருந்து வந்துள்ளது. இந்து எனும் ஒரே அடையாளம் உருவாகுவதற்கு முன்பே பெரும்பான்மை மக்கள் தங்களது கிராம - குடும்ப வழிபாட்டு முறைகளைக் கொண்டவர்களாக இருந்துள்ளனர். தமிழகத்தில் நிலவிய சாதிய ஒடுக்குமுறை சாணார்களை, பட்டியலின மக்களை கிறிஸ்துவ, இசுலாமிய மதங்களை நோக்கி இன்றுவரை மதம் மறுப்பு நெருக்கடியை உருவாக்கி வருகின்றன.
அதிகாரத்தில் உள்ள ஆளும் கட்சித் திமிர் காவிப்படை இயக்கங்களுக்கு உற்சாகமளித்துள்ளது. ‘தாய் மதத்திற்கு வாருங்கள்‘ எனும் அறைகூவல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் காவிப்படை பரிவாரங்களின் குரலாக வெளிப்படுகிறது. இந்து மதத்தில் இணைந்தால் சாதியை ஏற்றுக்கொண்டுள்ள இந்து மதம், வர்ணாசிரம் அடிப்படையில் வரிசைப்படுத்தியுள்ள இந்து மதம், எந்த வர்ணத்தில், எந்த சாதியில் மதம் மாறும் மக்களை இணைத்துக் கொள்ளும்.
பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் அல்லது நால் வருணத்தில் அடங்காத பஞ்சமர் எதில் இணைத்துக் கொள்வர். சாதிய ஒடுக்குமுறை தலைவிரித்தாடும் இன்றைய காலங்களில் கிறிஸ்துவ, இசுலாமிய, பௌத்த மதங்களுக்கு மதம் மாறிச் செல்லும் மக்களை தடுப்பதற்கு மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவர மோடி அரசு, திட்டமிட்டுச் செய்யும் செயலே ஆகும். இச்சதிச் செயலுக்கு எதிரான சனநாயக அமைப்புகளின் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
கச்சா எண்ணெய் உயர்ந்த ஒருசில நாளில் உடனே டீசல், பெட்ரோல் விலையை உயர்த்திய அரசு, சமீபகாலமாக தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்தபிறகு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முக்கிய முனகுவது ஏன்?
முன்னாள் ஆட்சியாளர் காங்கிரஸ் கூட்டணி மன்மோகன் ஆட்சியிலும், இந்நாள் ஆட்சியாளர் தேசிய முன்னணி பா.ச.க கூட்டணி மோடி ஆட்சியிலும் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்தையொட்டி அடிக்கடி டீசல், பெட்ரோல், எரிவாயு, மண்ணெண்ணெய் விலை ஏற்றப்பட்டது. ரூ.150 விலை நிலையிலிருந்து கச்சா எண்ணெய் 50 விலைக்கு குறைந்து உள்ளது. உள்நாட்டில் மூன்றில் ஒரு பங்கு தான் விலை இருக்க வேண்டும். ஆனால் ஓரிரண்டு ரூபாய்கள் விலைக்குறைவு மட்டுமே குறைத்து விட்டு விலையை பன்னாட்டு விலைக்குறைவுக்கு ஏற்றவாறு குறைக்கவில்லை. இந்திய அரசு வரி விதிப்பின் மூலம் டீசல், பெட்ரோல் விலையை அதே விலையில் தக்க வைத்துள்ளது. தேர்தலுக்கு முன்பு விலையைக் குறைப்பேன் எனும் மோடியின் சவடால் நிறைவேறவில்லை. ஆம் இது மோடி மஸ்தான் ஆட்சி.
கூடங்குளத்தில் மேலும் பல அணுஉலைகளை நிறுவ ஒப்பந்தம் போட்டு வேலைகள் நடக்கின்றன. முதல் அணு உலைக்கு நடந்ததுபோல் போராட்டம் நடைபெற என்ன செய்வது?
1987 இரகசிய உதவியுடன் கூடங்குளத்தில் அணுஉலை என்ற அறிவிப்பு வந்த நாள் முதல் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. பகுதி வாரிக் கூட்டமைப்புகள் மூலம் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் அணுஉலை எதிர்ப்புப் பேரணிகள், பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. புரட்சிகர கம்யூனிஸ்ட் அமைப்புகள், திராவிடர் கழகம் போன்ற அமைப்புகளின் எதிர்ப்பு இயக்கங்கள் நடைபெற்றன. 1989 அணுஉலை எதிர்ப்பு சைக்கிள் பிரச்சாரப் பயணம் தூத்துக்குடியிலிருந்து இடிந்தகரை, கூடங்குளம், நாகர்கோவில் வழியாக நெல்லை வரை இந்திய மக்கள் முன்னணி சார்பில் நடத்தப்பட்டதில் தாக்கப்பட்ட தோழர்கள் இன்றும் கம்யூனிஸ்ட் கட்சி (மா- லெ) மக்கள் விடுதலை சார்பில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பில் இயங்குகின்றனர்.
1992 சோவியத் இரசிய வீழ்ச்சியையொட்டி அணுஉலை கட்டமைப்பு முயற்சிகள் அரசால் கைவிடப்பட்டது. பின்னர் மீண்டும் முயற்சி என முன்னெடுக்கப்பட்டது. 2007 மீண்டும் முயற்சி எனக் கட்டுமான முயற்சிகள் நடைபெற்றன. கூடங்குளம் பகுதி முயற்சியாக தொடர்ந்து இருந்து வந்த எதிர்ப்பியக்கம் சப்பான் புகுஷிமா அணுஉலை வெடிப்பின் விளைவாகவும், கூடங்குளத்தில் வெடித்தால் என்ன செய்வது? எனும் பரிசோதனை முயற்சியின் விளைவாக 2011 செப்டம்பர் 11 இடிந்தகரையில் அடையாள உண்ணாவிரதமாகத் தொடங்கி தொடர் உண்ணாவிரதமாக மாறியது. உதயகுமார், புஷ்பராயன், மனோதங்கராஜ், ஆண்டன் கோமஸ் மற்றும் கூடங்குளம், இடிந்தகரை மக்கள் தலைவர்கள் உள்ளடக்கி போராட்டக்குழு தலைமையில் போராட்டம் மீண்டும் துடிப்பு நிலைக்கு தமிழகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் நிலைக்கு வந்தது.
அணுஉலை எதிர்ப்பு நிலைப்பாடு கொண்ட தமிழக அரசியல் இயக்கங்களின் ஒன்றிணைப்பில் ‘கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு‘ திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு தொடங்கப்பட்டது. அணுஉலை எதிர்ப்பு 2012 பிப்ரவரி சென்னை பேரணி, பொதுக்கூட்டம் நடத்தி அரசியல் தளத்திற்கு வந்தது. 2012 மார்ச் 19 காவல்துறை இடிந்தகரையில் இறங்கித் தாக்கியதற்கு எதிராக 2012 மார்ச் 23 மாவீரன் பகத்சிங் தூக்குமேடை நாளன்று பாளை மைதானத்திலிருந்து இடிந்தகரை நோக்கி செல்வது என கிளம்பி கைதாகும் போராட்டத்தை ஒருங்கிணைத்தது தொடங்கி தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி எனப் போராட்டக்களத்தை விரிவுபடுத்தி அணுஉலை எதிர்ப்பு அரசியல் அமைப்புகளை ஒருங்கிணைத்தது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அணுஉலை இயங்குவதாக அறிவிக்கப்பட்டதும், போராட்டக்குழு தேர்தல் களம் நோக்கி தமிழகம் சாராத அரசியல் அமைப்பு நோக்கி அடியெடுத்து வைத்ததும், பகுதியிலும், போராடும் சக்திகள் மத்தியிலும் சோர்வைக் கொடுத்தது. அணுஉலை எதிர்ப்பு நிலைப்பாடுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் அணுஉலை ஆதரவுக் கூட்டணிகளில் பங்கெடுத்ததும் அரசியல் சோர்வை உருவாக்கியது. தேர்தல் கடந்தும் ‘கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு‘ மீண்டும் தனது ஒருங்கிணைப்பைத் தொடங்கியுள்ளது.
தமிழகம் தழுவிய அணுஉலை எதிர்ப்பாளர்கள் மத்தியில், அமைப்புகள் மத்தியில் எதிர்ப்பியக்கங்களைக் கட்டமைக்க கூடங்குளம், கல்பாக்கம், நியூட்ரினோ உள்ளிட்ட அணுத்திட்டங்களை உள்ளடக்கி ‘அணு சக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு‘ எனும் பெயரில் தொடரியக்கம் முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்டி முடிவது வரை இருந்து விட்டு இப்போது எதிர்க்கலாமா? என்று கேள்வி எழுப்பிய அரசியல் கட்சிகள் சில மேலும் அணுஉலைகள் வந்தால் எதிர்க்கலாம் என்றனர். காங்கிரஸ், பா.ச.க ஆட்சிகளில் அணுஉலைகள் கட்டமைக்கத் தொடங்கி, தி.மு.க, அ.தி.மு.க ஆதரவு நிலைப்பாட்டைக் காத்தன. இரசிய அணு உலை என்பதால் 1988லும் 2011லும் ஆதரவு நிலைப் பாடு எடுத்த சி.பி.ஐ, சி.பி.ஐ (எம்) கட்சிகள் 3வது 4வது அணு உலை ஒப்பந்தத்தை எதிர்ப்பதாகச் சொல்லியுள்ளனர்.
தேர்தல் தோல்விக்குப் பின் தி.மு.க கூட தாங்கள் கடந்த காலத்தில் எதிர்த்ததாகக் கூறி வருகின்றனர். இந்தக் கட்சிகள் பா.ச.க வின் கூடங்குளம் அணுஉலைப் பூங்கா முயற்சிக்கு எதிராக களமிறங்கினால் போராட்டம் வலுவடைய வாய்ப் புள்ளது. இல்லையென்றாலும் கடற்கரையோர மக்கள் மத்தியிலும், தமிழகம் தழுவிய அளவிலும், புரட்சிகர இயக்கங்களும், அணு உலை எதிர்ப்பு அமைப்புகளும் தொடர்ந்து பணியாற்றி நம்பிக்கை அளிப்பதன் மூலம் போராட்டத்தை வலுப்படுத்த முடியும். தமிழ்நாடு, அணுத்திட்டங்களின் சோதனைச் சாலையாக மாற்றப்படுவதைத் தடுக்க முடியும்.
காவிரியின் குறுக்கே கர்நாடகா மேலும் அணைகளைக் கட்டுவது கர்நாடகத்தின் நலனை மட்டும் காட்டுகிறதா? இல்லை தமிழகத்தின் உரிமையை மறுப்பதாக வெளிப்படுகிறதா?
ஓரிரு மாநிலங்களுக்கிடையில் பாயும் நதிகளின் பயன்பாடு எந்த ஒரு மாநிலத்திற்கும், தேசிய இனத்திற்கும் சொந்தம் கொண்டாட முடியாது. கர்நாடகா பகுதியிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வந்து முடியும் காவிரி ஆறு வெள்ளப் பெருக்கெடுத்தால் பாதிப்பைச் சந்திக்கும் பகுதிகளைக் கொண்டதாகும். எனவே நீர் அளவுக்கு அதிகமாக கர்நாடகப் பகுதி அணையில் நிரம்பி விட்டால் கர்நாடகப்பகுதி பாதிக்கப்படாமல், அணை உடைந்து விடாமலிருக்க நீரைத் திறந்துவிடுவதைத் தவிர வேறு வழியில்லை. அப்படி நீரைத் திறந்து விடும்போது தமிழகப்பகுதி காவிரி அழிவை உருவாக்கினாலும் சந்திக்க, சமாளிக்க வேண்டிய கடமை தமிழ்நாட்டைச் சேர்ந்ததாகும்.
எனவேதான் இரு நாட்டிற்கிடையே ஓடும் நதியாக இருந்தாலும், இரு மாநில தேசிய இனப்பகுதிகளுக்குள் ஓடும் ஆறாக இருந்தாலும் பாதிப்படையும் பகுதிக்குக் கூடுதல் உரிமை உள்ளது. ஆறு ஓடி முடியும் பகுதியின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சைசயாக முடிவெடுக்க எந்த மாநில தேசிய இனத்திற்கும் உரிமை இல்லை. கர்நாடக அரசியலாளர் மத்தியில் வாக்கு வங்கி அரசியலுக்காக தூண்டிவிடும் போக்கு தொடர்ந்து உள்ளது.
இதில் தேசியக் கட்சிகள் எனத் தங்களை அழைத்துக் கொள்ளும் காங்கிரஸ், பா.ச.க , இடதுசாரி கட்சிகளும் உள்ளடங்கும். முல்லைபெரியாறு குறித்த வழக்குகள் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கேரளாவின் காங்கிரஸ், பா.ச.க, சி.பி.ஐ (எம்) உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களை பீதியூட்டியும் ஒன்றும் செய்ய முடியாமல் நீதி தமிழக மக்கள் பக்கமே இருந்தது. இதைப் பார்த்த கர்நாடக அரசியல் கட்சிகள் அணை கட்ட தமிழகம் தடையாக இருக்கிறது என நியாயத்திற்கு புறம்பாகப் பிரச்சனை செய்வதும், கர்நாடகத்தில் உள்ள இதர நீர் ஆதாரங்களைப் பற்றி அக்கறை இல்லாமலிருப்பதும் திட்டமிட்ட அரசியலே. பல தேசிய இனங்கள் இருந்தாலும், இருநாடுகளாக இருந்தாலும் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளே தீர்மானிக்கும். இதைச் சாத்தியப்படுத்த வேண்டியது இந்திய அரசு.
பிரச்சனைகளின் தீவிரம் தெரிந்தும் உடனடியாகத் தலையீடு செய்யாமல் இழுத்தடிப்பதும், கர்நாடக, தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் முரண்பாடு கூடுதலாவதற்கான அரசியல் சூழலைத் திட்டமிட்டு வளர்ப்பதும் வழக்கமாக உள்ளது. தமிழக அரசியலில் காவிரியை நம்பி விவசாயம் செய்யும் மாவட்டங்களின் இதர நீராதாரங்களைப் பற்றி முயற்சி கொள்ள அரசும், கோரிக்கைகளுக்கு அழுத்தமில்லாத அரசியல் கட்சிகளும் ‘காவிரி உரிமையை‘ அரசியல் கூச்சலாக மாற்றுகின்றன. ஒருபுறம் காவிரி நீர் உரிமைப் பிரச்சனையும், மறுபுறம் மீத்தேன் எடுப்புத் திட்டம் எனவும் காவிரிப் படுகை மாவட்டங்களில் விவசாயம் அழிந்து பாலைவனமாகும் அபாயச் சூழல் உருவாகியுள்ளது.
திருச்சி, புதுகை, தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களின் உணவு உற்பத்தியும் மேலும் பல மாவட்டங்களின் குடிநீர்த் தேவையையும் நிறைவேற்றி வரும் காவிரி உரிமை தமிழ்நாட்டின் உயிர்ப்பிரச்சனை. கர்நாடகாவிற்கு கூடுதலான விவசாயம் செய்ய புதிய அணை கட்டுவது தேவை என முன்வைக்கப்படும் சூழலில் எது அத்தியாவசியம் என்பது வெளிப்படையானது. கர்நாடக, தமிழ்நாட்டு வாக்கு வங்கி அரசியலுக்கு எதிராக இயங்க வேண்டும். கர்நாடக, தமிழ்நாட்டு நிலத்தடி நீர், நீராதார அமைப்புகளின் பாதுகாப்பு குறித்தும் இயக்கங்களை முன்னெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.
மேற்கு த் தொடர்ச்சிமலைகளில் உருவாகி பயனில்லாமல் வீணாகக் கடலில் கலக்கும் 90 ஆறுகள் கேரளாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேற்கே பாயும் ஆறுகளை கிழக்கே திருப்பினால் தென்மாவட்டங்களில் விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பயனடைய வாய்ப்புள்ளது. இவைகளையெல்லாம் நடைமுறைப்படுத்த தேவை மக்கள் நல அரசு. ஆனால் நடப்பதோ தேசிய இனங்களை மோதவிடும் மோடி மஸ்தானின் இந்துக் கனவு இந்திய அரசு.