படைப்பாளிகள் உலகில் ஆழம், உயரம் என்பன போன்ற வார்த்தைகளை சர்வசாதாரணமாகப் புழங்குவார்கள். எழுத்தில் இன்னும் ஆழம் வேண்டும் என்றும் சிந்தனையில் இன்னமும் உயரம் வேண்டும் என்றும் அறிவுரை கூறுவார்கள். சத்தியமாக எனக்கு இந்த ஆழமும் தெரியாது, உயரமும் தெரியாது. ஆனால், உண்மையில் கிணற்றின் ஆழத்தையும், மரத்தின் உயரத்தையும் அனுபவப்பூர்வமாக உணர்ந் திருக் கிறேன்.

எனக்கு அப்போது 10வயது இருக்கும். என் அம்மாவுடன் தென்னந்தோப்புக்குப் போயிருந்தேன். புதிதாக நடப்பட்டிருந்த தென்னம் பிள்ளைகளுக்கு எல்லாம் குடம் குடமாக தண்ணீர் எடுத்து ஊற்றினோம். அப் போது அந்தக் கிணற்றில் முற்றிய தேங்காய் ஒன்று விழுந்து கிடந்தது. அலக்கை வைத்து அந்தத் தென்னை நெத்தை எடுத்துக் கொண்டு வருமாறு சொல்லிவிட்டு என் அம்மா வீட்டுக்கு போய்விட்டார். கிணற்றில் குறுக் காகக் கிடந்த பனஞ் சப்பையில் காலை வைத்து பேலன்ஸ் செய்துகொண்டு தென்னை நெத்தை எடுக்க போராடிக் கொண்டிருந்தேன்.

திடீரென்று பனஞ் சப்பை புரண்டு கிணற்றுக்குள் விழுந்துவிட்டேன். அப்போது பகல் 12 மணி இருக்கும். பொதுவாக அந்தத் தோப்புக்கு யாரும் வரமாட்டார்கள். அது ஒரு மொட்டைக் கிணறு. வெளியே வருவதற்கு படி எதுவும் இல்லை. ஒரு மூணு ஆளு ஆழம் இருக்கும். அந்தக் கிணற்றில் நல்ல பாம்பு ஒன்று இருப்பதாக செவி வழிச் செய்தி. கிணற்றுத் தண்ணீரில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு, கையை காலை ஆட்டி மிதந்து கொண்டே இருந்தேன். அங்கே இருந்து பார்த்தால் ஆங்காங்கே நீட்டிக்கொண்டிருக்கும் வேர் எல்லாம் நல்ல பாம்பு தலையை நீட்டுவதைப்போலவே தோன்றும். துணிந்து ஒன்றிரண்டு வேரை பிடித்து ஏற முயன்றபோது அறுந்துகொண்டு உள்ளே விழுந்தது தான் மிச்சம்.

ஜீவ மரணப் போராட்டம் என்று பகுமானமாக எழுதிவிடுவது சுலபம். ஆளே வராத தோப்புக்குள், படியே இல்லாத கிணற்றுக்குள் விழுந்தால்தான் தெரியும்...

அப்போது யாராவது வந்து காப்பாற்ற மாட்டார் களா? என்ற எண்ணத்தில் ஏதேதோ கத்திக் கொண்டே யிருந்தேன். அது வார்த்தையா, சத்தமா என்றெல்லாம் இப்போது தெளிவாகச் சொல்லத் தெரியவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக சூரியன் மங்கத் துவங் கியது. செத்து, ஊதி காலையும் கையையும் பப்பரப்பா என்று பரப்பிக்கொண்டு தவளையைப் போலத்தான் மிதக்கப்போகிறோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

சாயந்திரம் ஆறு மணி சுமாருக்கு எங்க அத்தாச்சி தோப்புக்கு வந்திருக்கிறார். அப்போது எனக்கு சத்தம் போடுகிற சக்தியெல்லாம் இல்லை. செத்துப்போன எங்க அப்பா, தென்னை மரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு அழைப்பது போல இருந்தது.

இந்த நேரத்தில் எதேச்சையாக கிணற்றுக்குள் எட்டிப்பார்த்த அத்தாச்சி சத்தம்போட, பிறகு பக்கத்தில் இருந்தவர்கள் வந்து ஒரு கயிற்றைத் தூக்கிப் போட்டார் கள். அதைப்பிடித்துக்கொண்டு ஏற சக்தி இல்லை. பிறகு இரண்டு பேர் உள்ளே இறங்கி, கூடையில் தூக்கி வைத்து காப்பாற்றினார்கள். காணாமல் போய்விட்ட தாக எங்கள் குடும்ப வரலாற்றுக் குறிப்பில் இடம் பெற்றிருந்த சில்வர் குடம் ஒன்று இந்த எனது ‘அகழ்வாய்வின்’ மூலம் கண்டறியப் பட்டு மீட்கப் பட்டது என்பது கிணற்றில் விழுந்ததால் கிடைத்த லாபங்களில் ஒன்று.

இப்போதும்கூட ஏதாவது கிணற்றை எட்டிப் பார்த்தால், ஏறி வருவதற்கு படி இருக்கிறதா? என்று தான் என்னை அறியாமல் பார்க்கத் தோன்றுகிறது. இதுதான் நான் ஆழம் பார்த்த கதை.

உயரம் பார்த்தது தனிக்கதை. எங்க ஊர் விக்கிரமத் திலிருந்து மூணு கிலோமீட்டர் நடந்து போய் மதுக்கூரில் ஹைஸ்கூல் படிக்கவேண்டும். நாவப்பழ சீசன் என்றால் வருகிற வழியில் மரத்தில் ஏறி குரங்குபோல பழம் பறித்து தின்று விட்டுத்தான் திரும்புவோம். மேலே சென்று ஒருவர் உலுப்ப கீழே உள்ளவர்கள் பழத்தை பொறுக்குவார்கள். பிறகு சம பங்கீடு நடக்கும். யார் மரத்தில் ஏறுவது, யார் கீழே நிற்பது என்பதற்கு எழுதப் படாத ஷிப்ட் முறை உண்டு. அன்றைக்கு நான் மரத்தில் ஏற வேண்டிய முறை.

கீழே நின்ற என் சேக்காளிகள் ஒவ்வொரு கிளையாக காட்டி நல்லா காச்சிருக்குப்பா என்று உசுப்பி விட்டு, உச்சிக்கிளைக்கு ஏற்றிவிட்டார்கள். அந்தக் கிளை கனம் தாங்காமல் முறிந்துகொண்டு விழுந்தது. கீழே விழுகிறோமா மேலே போகிறோமா என்றறியா மயக்கத்தில் சில நொடிப் பயணத்தில் கீழே வந்து விழுந்தேன். கீழே தரை புழுதியாக இருந்ததால் பெரிய சேதாரம் எதுவும் இல்லை. இருந்தாலும் கையை ஊன்றியதில் மூட்டு நழுவி கட்டுப்போட வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் வந்த அரைப்பரீட்சையை எழுத வேண்டாம் என்று வாத்தியார் சொல்லிவிட்டார். எல்லா பாடத்திலும் 35 மார்க் போட்டு பாசாக்கி விட்டார். எழுதியிருந்தால் சந்தேகம்தான். இப்போதும் அடிக்கடி மரத்திலிருந்து கீழே விழுவதுபோலக் கனவு வரும்.

ஈசனின் அடியைத் தேடி பிரம்மனும் முடியைத் தேடி விஷ்ணுவும் பயணப்பட்டு தோல்வியடைந்ததாக புராணக் கதை. பிரம்மனை நாவல் மரத்திலிருந்து கீழே தள்ளிவிட்டும், விஷ்ணுவைப் படியில்லாத மொட்டைக் கிணற்றில் தள்ளி விட்டும் பிறகு கேட்டால் சொல்வார்கள் அடியையும், முடியையும் பற்றி.

Pin It