இன்றைக்கு தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் அனைத்தையும் தொலைக்காட்சி பெட்டிகள் தின்றுவிடுகின்றன. ஊர்களில், தெருக்களில் கொண்டாடப்பட்ட விழாக்கள் அனைத்தும் வீட்டுக்கூடத்திற்குள் முடங்கிவிடுகிறது. நடிகைகள் பட்டாசு வெடிக்கிறார்கள். நடிகர்கள் இனிப்பு சாப்பிடுகிறார்கள். நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

 இந்த ஆண்டு தீபாவளி அன்றே ஏழாம் அறிவு படத்தை பார்க்க முன்பதிவு செய்துவிட்டதாக என் மகன் கூறினான். கடந்த ஒரு மாத காலமாக ஏழாம் அறிவு என்ற படத்திற்கான விளம்பர முன்னோட்டங்கள் தொலைக்காட்சிகளில் தூள் கிளப்புகிறது. அந்த படத்தின் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இந்தப் படம் வந்தபிறகு ஒவ்வொரு தமிழனுக்கும் திமிர் வரும் என்று அலறிக்கொண்டே இருக்கிறார். தமிழனின் ஆறாம் அறிவை நம்பி இனி பயனில்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டார்கள் போலிருக்கிறது. அடுத்தகட்டமாக ஏழாம் அறிவு எட்டாம் அறிவு என்று தாவத் துவங்கிவிட்டார்கள்.

இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து லண்டன் தொலைக்காட்சியான சேனல்-4 ஒளிபரப்பிய காட்சிகளைப் பார்த்தபிறகு தமிழன் என்ற திமிர் கூட அல்ல உணர்ச்சி கூட முற்றாக வடிந்து வறண்டுவிட்டது. அதனால் என்ன ஏழாம் அறிவைப் பார்த்து திமிரை மறுபடியும் ரீ-சார்ஜ் செய்து கொள்ள வேண்டியதுதான்.

முன்பதிவு செய்து குறிப்பிட்ட நேரத்திற்குச் சென்று ஒரு படத்தைப் பார்ப்பதில் என்ன சுவராஸ்யம் இருந்துவிடப்போகிறது என்று கிராமத்துக்காரனான எனக்குத் தோன்றுகிறது. மதுக்கூரில் இரண்டு தியேட்டர்கள் உண்டு. இரண்டாண்டுகளுக்கு முன்னால் வந்த திரைப்படங்கள் தீபாவளி அன்று தான் எங்கள் ஊரில் ரிலீசாகும். அதற்கே பெரிய களேபரமாக இருக்கும். இந்தாண்டு தீபாவளிக்கு எந்தப்படம் வரப்போகிறதோ என்று ஒருமாதத்திற்கு முன்பே மனசு கிடந்து பரபரக்கும். தியேட்டர் வட்டாரத்திற்கு நெருக்கமான சில நண்பர்கள் வரப்போகும் படத்தைப் பற்றி தங்களுக்குத் தெரிந்த தகவல்களைக் கூறி பரபரப்பை அதிகப்படுத்துவார்கள். அநேகமாக அது அவர்களது யூகம் அல்லது விருப்பமாகத்தானிருக்கும்.

பெரும்பாலும் தேவர் பிலிம்ஸ் தயாரித்த பாம்பு அல்லது குரங்கு படங்கள் அல்லது எம்ஜிஆர், சிவாஜி நடித்து எங்கள் ஊர்க்காரர்களைத் தவிர மற்ற அனைத்து ஊர்க்காரர்களும் பார்த்த படங்கள்தான் தீபாவளிக்கு ரிலீசாகும். ஆட்டுக்கார அலமேலு, பாலாபிசேகம் ஆகிய படங்கள் ரிலீசாகி கிட்டத்தட்ட 50 நாட்களைத் தாண்டி ஓடியது. அந்தப் படங்கள் வெளியாகி இரண்டு ஆகியிருந்தன. ஒரு தீபாவளியன்று ரிலீஸ் செய்யப்பட்ட வருவான் வடிவேலன் படத்திற்கு டிக்கெட் வசூல் தவிர வாசலில் ஒரு உண்டியலும் வைக்கப்பட்டிருந்தது. டிக்கெட் வசூலில் பாதி உண்டியல் மூலமாகவும் வசூலானதாகவும் தகவல். அந்தத் தொகை யாருக்கு போனதோ தெரியவில்லை. நிச்சயமாக வடிவேலனுக்கு இல்லை. வெள்ளிக்கிழமை விரதம் படம் வெளிவந்தபோது பலர் விரதம் இருந்து அந்தப் படத்திற்கு போனார்கள். வாசலில் ஒரு நிஜப்பாம்பு படமெடுத்து ஆடும் வகையில் செட்டப் செய்யப்பட்டிருந்தது.

தீபாவளியன்று இரண்டு தியேட்டர்களிலும் சென்று படம் பார்த்துவிட்டு வருபவர்கள் படத்தின் ஹீரோ அளவிற்கு ஊரில் பேசப்படுவார்கள். ஏனென்றால் டிக்கெட் எடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

படத்திற்கு டிக்கெட் எடுக்க பெரிய கூட்டம் நின்றுகொண்டிருக்கும். முன்னால் நிற்பவர் விலாவில் குத்துகிற குத்தில் நெஞ்சுவலியே வந்துவிடும். காலில் குறைந்தது பத்துபேரிடமாவது மிதி வாங்கவேண்டியிருக்கும். தீபாவளிக்கு புதிதாக போட்டுக்கொண்டு போன சட்டை கசங்கினாலோ, கிழிந்தாலோ வீட்டில் தீபாவளி சிறப்பு பூஜை நடைபெறும். இதற்கு பயந்து சிலர் ஒரு மஞ்சள் பையில் பழைய கால்சட்டையும் மேல் சட்டையும் வைத்திருப்பார்கள். தியேட்டருக்கு பக்கத்தில் உள்ள மூத்திர சந்திற்குள் சென்று போர்க்களத்திற்கு செல்வதுபோல் போவார்கள்.

தீபாவளியன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளித்ததால் ஒருவகையான கிறக்கமாகவே இருக்கும். இந்த லட்சணத்தில் இரண்டு தியேட்டருக்கும் போய் மிதிவாங்கி படம்பார்த்தால் காட்சிகள் எல்லாம் சற்று மங்கலாகவே தெரியும். இடையிடையே சிலர் வெங்காய வெடியை வீசி பீதியூட்டிக்கொண்டிருப்பார்கள். அன்றைக்கு முறுக்கு விற்பவர்கள் வரமாட்டார்கள். வீட்டிலிருந்து கொண்டுசென்ற பலகாரங்களை வைத்து தின்றுகொண்டிருப்பார்கள். இடம்பிடித்த பெருமிதத்தோடு தூங்கிவிடுபவர்களும் உண்டு. என் நண்பன் ஒருவன் படத்திற்கு வந்தால் எழுத்து போட்டவுடன் தூங்கிவிடுவான். முக்கியமான கட்டம் வந்தால் எழுப்பிவிடு என்று பொறுப்பாக சொல்லிவிட்டுத்தான் தூங்குவான். முக்கியமான கட்டமென்று நாமாக ஒன்றை முடிவு செய்து, இருக்கட்டும் பாட்டுதானே, இருக்கட்டும் சண்டைதானே, இருக்கட்டும் அழுகைதானே என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டு நம்மையும் சமாதானப்படுத்திவிட்டு தூக்கத்தை தொடர்வான். கடைசிக்கட்டம் வந்தவுடன் யாரும் எழுப்பாமல் அவனே எழுந்துவிடுவான். கடைசியாகப் பார்த்த காட்சிகளை வைத்து அவனே திரைக்கதை வசனம் எழுதி ஒரு படத்தை ஓட்டுவான். நாம் நேரில் பார்த்த படத்தை விட சில சமயம் இந்தப்படம் நன்றாக இருக்கும்.

தீபாவளியன்று இரண்டு படம் பார்த்தவர்கள் நிலையும் இதுதான். இந்தப்படமும் அந்தப்படமும் சேர்த்துக் குழப்பி ஒரு கதையை சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

இந்த அனுபவம் கே. டிவியில் 24 மணிநேரமும் படம் பார்ப்பவர்களுக்கு இருக்குமா என்று தெரியவில்லை.

முறுக்கு சுடும் விழா தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே துவங்கிவிடும். இப்படி ஒவ்வொரு பலகாரமாக செய்துவைத்து சாப்பிடுவது தனிச்சுவை. ஏனென்றால் ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு வகையில் உழைப்பு அதில் இருக்கும். ஆனால் இன்றைக்கு பிளாஸ்டிக் கவரில் கட்டப்பட்ட இனிப்பில் அந்த சுவை இருப்பதில்லை.

கிரைண்டரும், பிரிட்ஜ்-ம் வந்தபிறகு இட்லி, தோசை என்பது சர்வசாதாரணமான விஷயமாகிவிட்டது. ஆனால் தீபாவளி மற்றும் கார்த்திகைகக்கு மட்டும்தான் இட்லி. அதற்கு மாவரைக்க முதல் நாளே சென்று காத்துக்கிடந்தால்தான் உண்டு.

சட்டை தைக்கிற அனுபவம் தனி. குறைந்தது 15 நாளுக்கு முன்னதாகவே துணி எடுத்துக்கொடுத்தால் தான் தீபாவளிக்கு முதல்நாள் இரவாவது சட்டை கிடைக்கும். அளவு கொடுக்கும்போது என்னுடைய அப்பா நல்லா விட்டு அளவு எடுப்பார், வளருகிற பையன் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். கால்சட்டை முழங்காலுக்கு கீழ் வந்துவிடும். மேல்சட்டை முட்டிக்கு கீழ் இறங்கியிருக்கும். ஒரு பத்து வருடம் கழித்து தைக்க வேண்டிய அளவிற்கு இந்தாண்டே அளவெடுத்து தைத்தது மாதிரி இருக்கும். என்னுடைய வளர்ச்சியின் மீது அவ்வளவு நம்பிக்கை அவருக்கு.

இப்போது எல்லாம் ரெடிமேட் தான். என் பையன்கள் ஜவுளிக்கடைக்கு என்னை அழைத்துச்செல்வதேயில்லை. நீ வந்தால் ஒழுங்கான சட்டை எடுக்கமுடியாது என்று கண்டித்து வீட்டிலேயே விட்டுவிட்டு போய்விடுவார்கள். ஏற்கனவே தைக்கப்பட்ட அளவுக்குள் நம்மை பொருததிக்கொள்ள வேண்டியதுதான்.

சட்டை மட்டுமல்ல நமக்கான வாழ்க்கையையும் கூட யாரோ எங்கிருந்தோ தயார் செய்துவிடுகிறார்கள். இதுதான் அளவு என்று நாமும் அதற்குள் சென்று பொருத்திக்கொள்கிறோம். அவ்வளவுதான்.

Pin It